சிறப்புமிக்க தஞ்சைத்தரணி:
சோழநாடு தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்யப் பட்ட பகுதியாகும். தஞ்சை என்பதற்கு "குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி" என்று பொருள். பெருகி வரும் காவிரியாற்றால் இப்பகுதி வளம் மிக்கதாகத் திகழ்ந்தது. இவ்வூர் பற்றிய மிக பழமையான குறிப்புகள் திருச்சி மலைக்கோட்டை பல்லவமன்னன் சிம்ம விஷ்ணுவின் (கி.பி.555- 590) கல்வெட்டில் இடம் பெற்று உள்ளது. தஞ்சையில் பெரிய கோயில் கட்டப்படுவதற்குமுன் "தஞ்சை தளிக்குளத்தார் கோயில்' இங்கு இருந்ததாகத் தெரிகிறது. தற்போதும் தஞ்சபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலின் பெயராலேயே, இவ்வூர் "தஞ்சாவூர்” என அழைக்கப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது.
ராஜராஜனின் கலைக்கோயில்:
உலகிற்கு ஆன்மிகக் கருத்தையும், பண்பாட்டுச் சிந்தனையையும் வாரி வழங்கி வரும் தமிழகத்திலுள்ள தஞ்சை மண்டலத்தை கி.மு.,இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி., 13ம் நூற்றாண்டு வரை 1,500 ஆண்டுகள் பாரம்பரியமிக்க சோழ அரச மரபினர் ஆட்சி செய்து வந்தனர். அவர்களின் முதல் 400 ஆண்டு கால ஆட்சி சிறப்பை சங்ககால தமிழ் இலக்கியங்களிலிருந்து அறிய முடிகிறது. காவிரியில் கல்லணை கட்டி, காடு திருத்தி, நாட்டை வளம் பெறச் செய்த கரிகாற் பெருவளத்தான் என்ற சங்க காலச் சோழ மன்னன் கி.பி., முதலாம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்தான். தொடர்ந்து சோழப் பரம்பரையின் புகழ் சிறிது குன்றி யிருந்தாலும், ஆட்சி தொடர்ந்து நடந்தது. கி.பி., 850ம் ஆண்டு சாத்தன் பழியிலி என்ற முத்தரையர் குலச் சிற்றரசனிடம் போரிட்டு 90 விழுப்புண்களை பரகேசரி விஜயாலயச் சோழன் பெற்றான். இவன் தான் தஞ்சாவூர் நகரை கைப்பற்றி, தனது தலைநகராகக் கொண்டு, தஞ்சை சோழப் பரம்பரையை தோற்றுவித்தான். பிற்காலச் சோழமன்னர்களின் பரம்பரையில் தோன்றியவரே ராஜராஜ சோழன். இவர் சுந்தர சோழனுக்கும், வானவன் மாதே விக்கும் இரண்டாம் மகனாகப் பிறந்தார். இவன் ராஜகேசரி என்ற பட்டப்பெயருடன் மேலும் 42 சிறப்புப் பெயர்களையும் பெற்றவன்.
பெரிய கோயில் கட்டும் எண்ணத்துக்கு அஸ்திவாரம்:
காஞ்சிபுரத்தில் ராஜசிம்மனால் கட்டப்பட்ட கயிலாயநாதர் கோயில் ராஜராஜனின் மனதை மிகவும் கவர்ந்தது. அக்கோயிலை ""கச்சிப்பேட்டுப் பெரியதளி'' என்று போற்றி மகிழ்ந்தார். இக்கோயிலின் அமைப்பு அவருக்குள் உணர்ச்சி பெருக்கையும், பக்தியையும் ஏற்படுத்தியது. தானும் ஒரு சிவாலயத்தை அமைக்கவேண்டும் என்ற எண்ணத்தில், தஞ்சா வூரில் பெரியகோயில் திருப்பணியைத் தொடங்கினார். காஞ்சி கயிலாயநாதர் கோயிலைப் பார்த்ததன் விளைவே, தஞ்சைப் பெரிய கோயில் கட்டும் எண்ணத்துக்கு அஸ்திவாரமாக அமைந்தது.
பிரம்மாண்டமான சிவலிங்கம்:
கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே மிக பெரியதாகும். ஆறு அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார், 13 அடி உயரமும், 23 அரை அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனிதனித் கருங்களனால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்தை சுற்றி வர இடமும் கருவறையை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. நமது பார்வையில் தென்படுவது சிவலிங்கத்தின் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. அபிஷேக ஆராதனைகளுக்கு வசதியாக இரு புறங்களிலும் படிகள் அமைக்கப்பட்டு உள்ளன. தஞ்சை கோயிலின் சிவலிங்க வழிபாடு மகுடாகம அடிப்படையில் செய்யப்படுகிறது. உச்சி காலம், சாயரட்சை, அர்த்த ஜாமம் என நான்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
பெரிய லிங்கப் பிரதிஷ்டையின் போது ஏற்பட்ட பெரும் சிக்கல்:
தஞ்சை பெரியகோயில் கட்டுமானப்பணியின் போது கருவறையில் லிங்கப் பிரதிஷ்டையில், ஆவுடையாரில் லிங்கத்தை நிறுவி மருந்து சாத்தினர். மருந்து இளகியபடியே இருந்ததால் லிங்கம் இறுகவில்லை. ஆதீனங்களை அழைத்து மருந்து சாத்தியும் கைகூடாமல் போனதால் ராஜராஜ சோழன் மனச்சோர்வடைந்தார். அப்போது, ""கருவூரார் வந்தாலன்றி, மாமன்னர் வெற்றியடைய முடியாது,'' என்று அசரீரி வாக்கு கேட்டது. உடனே மன்னர், "கருவூரார் எங்குள்ளார்? அவரை எப்படி தேடிக் கண்டுப் பிடிப்பது,' என கேட்டார். போகர் சித்தர், கருவூராரை அழைத்து வருவதாக கூறினார். ஒரு காகத்தின் காலில், ஓலையைக் கட்டி பறக்கவிட்டார். சிறிது நேரத்தில் கருவூரார் தஞ்சை கோயில் வந்தடைந்தார். கருவூரார் போகரிடம், ""எல்லா வல்லமையும் பெற்ற தாங்களே இதைச் செய்திருக்கலாமே!, அடியேனை அழைத்தது எதற்காக?'' என்று கேட்டார். போகர், "நீர் சிவயோகிகளின் தலைவர் என்பதை உலகுக்கு அறிவிக்க இவ்வாறு செய்தேன்,'' என்றார். மாமன்னர் ராஜராஜன் போகரையும், கருவூராரையும் வணங்கி லிங்கப்பிரதிஷ்டைக்கு உதவுமாறு வேண்டினார். கருவூராரும் சிவசிந்தனையுடன் கைகளால் அழுத்திப் பிடிக்க மருந்து இறுகிப் பிடித்துக் கொண்டது. மன்னரும் கருவூராரின் செயலுக்கு நன்றி செலுத்தும் முகமாக அவருக்கு ஒரு சன்னதியை ஏற்படுத்தினார்.
உயரமான கோபுரம்:
பெரியகோயிலின் கோபுரங்களில் உயரமானது கேரளாந்தகன் வாயில் கோபுரம். ராஜராஜன் கி.பி.,988 ம் ஆண்டு சேரமன்னன் பாஸ்கர ரவிவர்மனைப் போரில் வெற்றி பெற்றதைப் போற்றும் வகையில் இக்கோபுரத்திற்கு ""கேரளாந்தகன் வாயில் கோபுரம்'' எனப் பெயரிடப் பட்டுள்ளது. இக்கோபுரம் 90 அடி உயரமும் 54 அடி அகலத்தில் ஐந்து நிலையுடன் அமைந்துள்ளது. கோபுரத்தின் நிலைக்கால்கள் ஒவ்வொன்றும் நான்கு அடி நீளம், மூன்று அடி அகலம், 40 அடி உயரம் கொண்ட ஒரே கல்லால் ஆனவை. கோபுரத்தின் நாற்புறங்களிலும் நாயக்கர் மற்றும் மராட்டியர் காலச் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோபுரத்தை ஒட்டிச் செல்லும், சிவகங்கைக் கோட்டை உள்மதில், செவ்வப்ப நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. கேரளாந்தகன் வாயில் கோபுரத்தில் காணப்படும் சுதைச் சிற்பங்களில் சோழர்காலச் சிற்பங்கள் சில உள்ளன. மற்ற சிற்பங்கள் பிற்கால நாயக்கர், மராட்டியர் மன்னர்களின் காலத்தைச் சேர்ந்தவை. இதில் மகாசதாசிவமூர்த்தி என்னும் சிற்பம் குறிப்பிடத்தக்கதாகும். ஐந்து தலைகள் பத்து கைகள் கொண்ட மூர்த்தியாக பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் இவர், சிவாம்சம் கொண்டவர். இச்சிற்பம் சோழர் கால சிற்பத் திறனுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
முதல் தங்ககோபுரம்: தட்சிணமேரு என்னும் தஞ்சை பெரிய கோயில் விமானம் முழுவதும் செப்புத் தகடுகளைப் போர்த்தி அதன் மேல் பொன் வேய்ந்தான் ராஜராஜன் என்று கல்வெட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. 216 அடி விமானம் முழுவதும் தங்கத்தகடு வேய்ந்ததை ஒட்டக்கூத்தர் தக்கயாகப்பரணியில் குறிப் பிட்டுள்ளார். தட்சிணமேருவான தஞ்சை ராஜராஜேஸ்வரத்தை எப்படி ராஜராஜன் பொன் மயமாக அமைத்தானோ, அதுபோல, தில்லை நடராஜர் கோயில் விமானத்தை குலோத்துங்கன் அமைத்தான் என்ற செய்தி சிதம்பரம் வரலாற்றில் இடம்பெற்று உள்ளது. பிற்காலத்தில் நிகழ்ந்த படையெடுப்புகளில் இந்த விமானத்தில் வேய்ந்த பொன் முழுவதும் சூறையாடப்பட்டு விட்டது.
22 கிலோ தங்க வைர நகைகள்: தஞ்சை பெரிய கோயிலுக்கு 183 கிலோ தங்கப்பாத்திரங்கள், 22 கிலோ தங்க வைர நகைகள், 222 கிலோ வெள்ளிப்பாத்திரங்கள், 65 செப்புத் திருமேனிகள், ஒரு லட்சத்து 16 ஆயிரம் கலம் நெல் விளையக்கூடிய 44 கிராமங்கள், கோயிலின் 158 திருவிளக்குகள் நாள்தோறும் எரியும் வகையில் தினசரி 158 உழக்கு நெய் வழங்கும் வகையில் நான்காயிரம் பசுக்கள், நான்காயிரம் ஆடுகள் ஆகியவற்றை கொடையாக ராஜராஜசோழனும் மற்றவர்களும் வழங்கியுள்ளதாகக் கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது.
ராஜராஜனை வணங்கிய அலுவலர்: ராஜராஜசோழன் காலத்தில் பெரிய கோயிலில் நிர்வாக அலுவலராக இருந்தவர் தென்னவன் மூவேந்த வேளாளன். இந்தப் பணியை அக்காலத்தில் "ஸ்ரீகார்யம்' என்று கூறுவர். இவர் ராஜராஜசோழன் மற்றும் அரசி லோகமாதேவி ஆகியோருக்கு செப்புப்படிமங்கள் செய்து பெரியகோயிலில் பிரதிஷ்டை செய்தார். அந்தச் சிலைகளுக்கு தங்க ஆபரணங்களும் அளித்தார். மன்னனையே தன் தெய்வமாகக் கருதி விளக்கும் ஏற்றி வந்தார். அந்த படிமத்தின் முன் திருநீறு மடல் வைத்து வழிபட்டார். இச்சிலைகள் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் தஞ்சாவூரில் இருந்து குஜராத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆமதாபாத் கவுதம் சாராபாய் கலைக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
செப்புத்தகடு கொடிமரம்: நந்திமண்டபம் அருகில் மேற்குப் புறத்தில் செப்புத்தகட்டால் மூடப்பட்ட கொடிமரம் உள்ளது. இம்மண்டபம் சிறந்த கலை வேலைப்பாடுகளுடன் திகழ்கிறது. இது நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்டதாகும். இரண்டாம் சரபோஜி மன்னர் இந்த கொடிமரத்தூணுக்கு கொறடு (ஒட்டுத்திண்ணை என்னும் பிடிமானம்) ஒன்றைப் புதிதாக அமைத்துள்ளார். அத்து டன் நந்தி மண்டபத்தின் கிழக்கே ஒரு செங்கல் மேடை அமைத்து, அதில் சித்திரைத் திருவிழாவின் 9ம் நாள், "சரபேந்திர பூபால குறவஞ்சி' என்னும் நாடகம் நடக்கச் செய்துள்ளார். அதன் எதிரில் வட்டமான மேடை அமைத்து, அதில் அமர்ந்து கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்துள்ளார்.
மிக உயரமான மதிற்சுவர்: கோயிலை சுற்றி சுமார் 28 அடி உயரத்தில் அமைந்துள்ள மதில் ராஜராஜனின் தலைமை அமைச்சரான சோழ மண்டலத்து உய்யக் கொண்டார் வளநாட்டு வெண்ணாட்டு அமன் குடியான கேரளாந்தகச்சதுர்வேதி மங்கலத்து கிருஷ்ணன் ராமன் என்னும் மும்முடிச் சோழ பிரம்மராயன் என்பவரால் மன்னனின் ஆணைப்படி கட்டப்பட்டது. மதிற்சுவர் மீது வரிசையாக நந்தி உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மதிற்சுவரின் வெளிப்புறத்தின் கீழ்பகுதியில் சோழர் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கிழக்கு மேற்காக 800 அடி நீளமும், தெற்கு வடக்காக 400 அடி அகலமும் கொண்டுள்ளன. கோயிலின் பிரகாரச்சுற்றில் கருங்கற்களினாலும், செங்கற்களினாலும் தஞ்சை மன்னர் இரண்டாம் சரபோஜி கி.பி., 1803ல், தளம் அமைத்தார். மிகப்பெரிய சண்டிகேஸ்வரர்: புகழ்மிக்க இப் பெரிய கோயிலில் எல்லாமே பெரியவை என்ற வகையில் விமானத்தின் வடபுறத்தில் அமைந்துள்ள சண்டிகேஸ்வரர் சன்னதியும் மிகப்பெரிதாக உள்ளது. இந்த சன்னதியின் வெளிச்சுவர்களிலும், தூண்களிலும் சோழர் காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.லிங்க வடிவில் நவக்கிரகங்கள்: பெரிய கோயிலின் மேல்புற வடபகுதியில் லிங்கவடிவில் நவக்கிரங்கள் உள்ளன. இவற்றை அடுத்து 108 லிங்கங்களும், அடுத்து வரிசையாக லிங்கங்களும் மன்னர் இரண்டாம் சரபோஜியால் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 252 லிங்கங்கள் உள்ளன. திருச்சுற்று மாளிகையின் மேற்குப் புறத்தின் தென்பகுதியில் "பரிவார ஆலயத்து கணபதியார்' சன்னதி உள்ளது. இங்குள்ள விநாயகருக்கு ராஜராஜனும், மற்ற மன்னர்களும் அதிக அளவில் நன்கொடை வழங்கியுள்ளனர்.தங்க மலர்: ராஜராஜ சோழன் வழிபாடு செய்துவந்த செப்புத் திருமேனிக்கு "தெட்சிணமேரு விடங்கரான ஆடவல்லார்' என்று பெயர். மேலை சாளுக்கிய மன்னர்களை வென்றபோது இந்த ஆடவல்லாரின் திருப்பாதத்தில் தங்கத்தாலான மலர்களை இட்டு பூஜை செய்து தன் நன்றியை தெரிவித்தான்.ராஜராஜன் உருவாக்கிய நந்தி எது?: நந்திமண்டபத்திற்கு தெற்கே உள்ள திருச்சுற்று மாளிகையில் வடதிசைநோக்கியபடி உள்ள நந்தியே ராஜராஜன் காலத்தைச் சேர்ந்ததாகும். இதுவே முதலில் பெருவுடையாருக்கு எதிரில் இருந்தது. பின்னாளில் நாயக்கர்கள் மூலவருக்கு இணையான பெரிய நந்தியை நிறுவினர். முதலில் அமைக்கப்பட்ட நந்தி, கேரளாந்தகன் மற்றும் ராஜராஜன் வாயில்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இருந்தது. பிற்காலத்தில் திருச்சுற்று மாளிகைக்கு மாற்றப்பட்டது. 25 டன் எடையுள்ள நந்தி: தஞ்சாவூர் கோயில் என்றாலே அங்குள்ள விமானமும், நந்தியும் தான் எல்லோர் நினைவிலும் வரும். ஒரே கல்லினால் செய்யப்பட்ட மிகப் பெரிய நந்திகளுள் இதுவும் ஒன்றாகும். (திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயிலில் உள்ள கல்நந்தி தஞ்சாவூர் நந்தியை விடப் பெரியது. தமிழகத்தின் மிகப்பெரிய நந்தியும் இதுதான்) திருச்சி அருகிலுள்ள பச்சை மலையிலிருந்து கொண்டு வரப்பட்ட கருங்கல்லால் செய்யப்பட்ட இந்த நந்தி 25 டன் எடை உடையது. 19 அரை அடி நீளம், எட்டேமுக்கால் அடி அகலம், 12 அடி உயரம் கொண்டது. விஜயநகரக் கலைபாணியில் அழகும், கம்பீரமும் கொண்டு அமைந்துள்ள இந்த நந்தி தஞ்சை நாயக்க மன்னர்களால் நிறுவப்பட்டதாகும். நந்தி, நந்தி மண்டபம் ஆகியவற்றை கி.பி., 17ம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களான அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர் மற்றும் விஜயராகவ நாயக்கர் ஆகியோர் உருவாக்கினர். இவர்களது சிலைகள் இந்த மண்டபத் தூண்களில் உள்ளன. நந்தி மண்டபத்தின் மேல் விதானத்தில், மூன்றாம் சிவாஜி மன்னர் காலத்தில் பூக்களும், பறவைகளும் வண்ண ஓவியங்களாகத் தீட்டப்பட்டன.சித்திரக்கூடம்: தஞ்சாவூர் கோயில் கருவறையை அடுத்துள்ள உட்பிகாரத்தில் 13 சித்திரக்கூட பகுதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இப்பகுதிக்கு அந்தராளம் என்று பெயர். இந்த ஓவியங்களின் மூலம் சோழர் கால மக்களின் நாகரிகம், பண்பாடு, வாழ்க்கைமுறை, ஆடை ஆபரணங்கள், இசைக் கருவிகள், நாட்டியமுறைகள் ஆகியவற்றை அறிந்து கொள்ள முடிகிறது. தேவியருடன் ராஜராஜன்: பெரியகோயிலின் ஒன்பதாவது ஓவிய அறைப்பகுதியின் மேற்கு நோக்கிய சுவரில் சோழர்கால பாணியில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் சிறப்பானவை. ராஜராஜன் காலத்திய சிதம்பரம் நடராஜர் கோயிலின் நான்கு நுழைவாயில்கள், முதலாம் பராந்த கனால் பொன்வேயப்பட்ட மண்டபத்தின் நடுவில் சிவனின் ஆனந்த தாண்டவம், காலருகில் ஒரு புறம் காளி, மறுபுறம் காரைக்கால் அம்மையார் காட்சியளிக்கின்றனர். இந்த தொகுப்பிற்கு இடப்புறம் எளிய அடியவரைப் போல மாமன்னன் ராஜராஜன் மீசை, தாடி யுடன், கூப்பிய கரங்களுடன் நடராஜரை வணங்குவது போல ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. அருகில் மாமன்னனின் தேவியரில் மூவர் மட்டும் நின்ற கோலத்தில் உள்ளனர். அருகில் மெய்க் காவலர்கள் நிற்கின்றனர். ராஜராஜனின் விட்டுக்கொடுக்கும் குணம்: ராஜராஜ சோழனின் இயற்பெயர் அருள்மொழி என்பதாகும். இளம் வயதில் பெற்றோரை இழந்ததால் பாட்டி செம்பியன் மாதேவியார், சகோதரி குந்தவை ஆகியோரின் கண்காணிப்பில் வளர்க்கப்பட்டார். அவருடைய மூத்த சகோதரர் ஆதித்த கரிகாலன் பகைவர்களால் கொலை செய்யப்பட்டார். நாட்டுமக்கள் அனைவரும் இளையவன் அருள்மொழியே நாட்டை ஆளவேண்டும் என்று விரும்பினர். ஆனால், ராஜராஜனின் சித்தப்பா மதுராந்தக உத்தம சோழனுக்கு, தானே சோழநாட்டின் மன்னராகவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ராஜராஜனும் அரியணையை விட்டுக்கொடுத்து அவரை மன்னனாக்கினார். மதுராந்தகச் சோழன் 15 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அவருடைய மறைவுக்குப்பின், தஞ்சைச் சோழர் வரலாற்றில் பொற்காலத்தைப் பதித்தான் ராஜராஜசோழன். கி.பி.,985ம் ஆண்டு தஞ்சைச் சோழ அரசுக் கட்டிலில் அமர்ந்த இவனுக்கு, பட்டம் சூட்டும் வரை அருள்மொழி என்ற பெயரே இருந்தது.மாமன்னனின் மாபெரும் குடும்பம்: ராஜராஜனுக்கு 10 மனைவியர் இருந்தனர். இவர்களில் தந்திசக்திவிடங்கி என்னும் லோகமாதேவியே பட்டத்தரசியாக இருந்தார். இவரைத் தவிர, சோழமாதேவி, திரைலோக்கியமாதேவி, பஞ்சவன் மாதேவி, அபிமானவல்லி, லாடமாதேவி, பிருதிவிமாதேவி, மீனவன்மாதேவி, வீரநாராயணி, வில்லவன்மாதேவி, வானவன்மாதேவி ஆகியோர் இருந்தனர். வானவன் மாதேவிக்குப் பிறந்த ஒரே பிள்ளையே புகழ்மிக்க ராஜேந்திரச் சோழன். இவனுக்கு ராஜராஜனால் இட்ட பெயர் மதுராந்தகன். இது ராஜராஜனின் சித்தப்பா நினைவாக வைக்கப்பட்டதாகும். மதுராந்தகனுக்கு இரு சகோதரிகள். மூத்தவள் மாதேவ அடிகள். இளையவள் குந்தவை. ராஜராஜன் தன்னை வளர்த்த பாட்டி செம்பியன் மாதேவியின் நினை வாக ஒரு மகளுக்கு மாதேவஅடிகள் என்றும், சகோதரி குந்தவையின் நினைவாக ஒரு மகளுக்கு குந்தவை என்றும் பெயரிட்டார். இதன்மூலம் அவருடைய பாசபந்தமும், நன்றியும் தெரிகிறது.ராஜராஜ சோழனின் புனைப்பெயர்கள்: அபயகுலசேகரன், அரிதுர்க்கலங்கன், அருண்மொழி, அழகிய சோழன், ரணமுக பீமன், ரவிகுல மாணிக்கம், ரவி வம்ச சிகாமணி, ராஜ கண்டியன், ராஜ சர்வக்ஞன், ராஜராஜன், ராஜாச்ரையன், ராஜகேசரி வர்மன், ராஜ மார்த்தாண்டன், ராஜவிநோதன், ராஜேந்திர சிம்மன், உத்தம சோழன், உத்துங்கதுங்கன், உய்யக்கொண்டான், உலகளந்தான், கீர்த்தி பராக்கிரமன், கேரளாந்தகன், சண்டபராக்ரமன், சத்ருபுஜங்கன், சிங்களாந்தகன், சிவபாத சேகரன், சோழகுல சுந்தரன், சோழ மார்த்தாண்டன், சோழ நாராயணன், சோழேந்திர சிம்மன், திருமுறை கண்ட சோழன், தெலிங்க குலகாலன், தைலகுலகாலன், நிகரிலிச் சோழன், நித்திய வினோதன், பண்டித சோழன், பாண்டிய குலாசனி, பெரிய பெருமாள், மும்முடிச் சோழன், மூர்த்த விக்ரமாபரணன், ஜனநாதன், ஜெயங்கொண்ட சோழன், க்ஷத்திரிய சிகாமணி. கல்வெட்டுகளில் இருந்து இந்தப் பெயர்களை அறிய முடிகிறது.திருப்புகள் பாடிய அருணகிரியார்: தஞ்சைப்பெரிய கோயிலில், ராஜராஜ சோழன் முருகப் பெருமானுக்கு தனிசன்னதி கட்டவில்லை. அவர் எழுந்தருளி இருக்கும் திருக்கோயில்களுக்குச் சென்று திருப்புகழ் பாடும் அருணகிரிநாதர் ராஜராஜன் கட்டிய பெரியகோயிலைக் காணும் ஆவலில் வந்திருக்கிறார். தனிசன்னதி இல்லாததால் கோபுரத்தில் இருக்கும் முருகனையே ""தஞ்சை மாநகர் ராஜகோபுரத்து அமர்ந்த பெருமாளே'' என்று பாடியுள்ளார். பிற்காலத்தில் முருகப்பெருமானுக்கு பெரியஅளவில் நாயக்க மன்னர்கள் சன்னதி அமைத்துள்ளனர். ராஜராஜன் திருவாயில்: கேரளாந்தகன் வாயிலை அடுத்து அமைந்துள்ளது ராஜராஜன் திருவாயில். இக்கோபுரம் மூன்று அடுக்குகளைக் கொண்டது. இந்த வாயிலின் இருபுறத்திலும் 18 அடி உயரமுள்ள ஒரே கல்லால் ஆன துவாரபாலகர் சிலைகளும், 40 அடி உயரமுள்ள இரண்டு ஒற்றைக்கல் நிலைக்கால்களும் அமைந்துள்ளன. துவாரபாலக சிற்பங்களின் கீழ்ப்பகுதியில் சிவபுராணக்கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. திரிபுர தகனம், சண்டீசர் கதை, மார்க்கண்டேயன் வரலாறு, சிவபார்வதி திருமணம், வள்ளி திருமணம், அர்ஜுனனுக்கு பாசுபதம் அருளல், மன்மதன் தகனம், கண்ணப்பர் வரலாறு ஆகிய கதைகள் இடம் பெற்றுள்ளன. கோபுர நுழைவுவாயிலின் இருபக்கங்களிலும் சிறிய விநாயகர் சன்னதிகளும், கோபுரத்தின் உட்புறம் தென்திசையில் நாகராஜர் சன்னதியும், வடதிசையில் இந்திரன் சன்னதியும் உள்ளன. திருச்சுற்று மாளிகை தென்கிழக்கு மூலையில் மடைப்பள்ளி 2ம் சரபோஜி மன்னரால் அமைக்கப்பட்டுள்ளது.விக்கிரமச்சோழன் திருவாயில்: அர்த்த மண்டபத்தின் தெற்கு நுழைவு வாயில் ராஜேந்திரசோழனின் இயற்பெயரால் விக்கிரமச் சோழன் திருவாயில் என வழங்கப்படுகிறது. இவ்வாயிலின் இருபுறங்களிலும் துவாரபாலகர் சிலைகள் உள்ளன. வாயிலின் கிழக்கு புறத்தில் கஜலெட்சுமியும், மேற்கு புறத்தில் சூரிய மற்றும் விஷ்ணு அநுக்கிரக மூர்த்தி சிற்பங்களும் உள்ளன. இவ்வாயில் படிக்கட்டுகளின் வெளிப்புறங்களில் திருமால், துர்க்கை, திரிபுர அசுரர்களை வதம் செய்தல், சிவ பார்வதி திருமணம் ஆகிய புராணக் காட்சிகள் அழகிய படைப்பு சிற்பங்களாக உள்ளன.கோயிலை கட்டியவர் யார்?: கல்வெட்டில் தஞ்சைப் பெரியகோயில் ""ராஜராஜீச்சரம்'' என்று குறிக்கப்படுகிறது. இலக்கணப்படி ராஜராஜேச்சரம் என்பது சரியானதாக இருந்தாலும், கல்வெட்டுகளில் ராஜராஜீச்சரம் என்ற பெயரே இடம் பெற்றுள்ளது. இக்கோயிலை உருவாக்கியவர், வீரசோழன் குஞ்சரமல்லனான ராஜராஜப் பெருந்தச்சன். இவருடைய பணிக்கு உதவியாக மதுராந்தகனான நித்தவிநோதப் பெருந்தச்சன், இலத்திசடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன் என்பவர்களும் குஞ்சரமல்லனுக்கு துணையாக கோயில் திருப்பணிகளைச் செய்தனர்.
THANKS: indiranovelsdownload-agni.blogspot.com/2011/12/blog-post.html
தஞ்சை பெரியகோவிலைப்பற்றிய நல்ல தகவல் அளித்ததற்க்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்டுள்ள // போகர், "நீர் சிவயோகிகளின் தலைவர் என்பதை உலகுக்கு அறிவிக்க இவ்வாறு செய்தேன்,'' என்றார்.// இந்த வார்த்தைகளுக்கு கண்டிப்பாக ஆதரங்கள் இருக்கும் என நம்புகிறேன். மேலும், அது போகரின் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதா அல்லது வேறு ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா என அறிய விரும்புகிறேன். தயவுசெய்து கீழே குறிப்பிட்டுள்ள எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
பதிலளிநீக்குsenthil.vbm@gmail.com
எனது facebook profile முகவரி:
https://www.facebook.com/Senthil.vbm
நன்றி திரு.காந்தி முத்தரையர் அவர்களே...