//சோழர், களப்பிரர், பாண்டியர், பல்லவர், முத்தரையர், விசயநகர அரையர், நாயக்கர், மராத்தியர், போர்த்துகீசியர், ஆலந்தர், ஆங்கிலேயர் என அனைத்து மக்களின் ஆட்சியையும் அனுபவித்த ஊர் இது.//
நாகூருக்கு ஏன் “நாகூர்” என்று பெயர் வந்தது? Miliion Dollar Question என்பார்களே அது இங்கு முற்றிலும் பொருந்தும். பெயர்க்காரணம் குறித்து வரலாற்றாசிரியர்கள் அவரவர்கள் தங்கள் ஆய்வுக்கேற்ப ஏராளமான கருத்துக்களை பதிந்துள்ளனர்.
நாவல்மரம் நிறைந்திருந்த நாவல் காடு
நாகர்களும் வசித்ததாக குறிப்பிடும் ஏடு
நாவலர்கள் வாழ்ந்ததினால் நா-கூர் என்று
நற்றமிழில் பெயர்வைத்தார் நல்லோர் அன்று
என்று நாகூரின் பெயர்க்காரணத்தை நானெழுதிய “அந்த நாள் ஞாபகம்” என்ற நூலில் கவிதை வரிகளில் வடித்திருந்தேன். “நாகூர்” என்ற பெயர் எதனால் வந்திருக்கக் கூடும் என்று ஆழ்ந்து ஆராயுகையில் பல்வேறு சுவாராசியமான தகவல்கள் நமக்கு அரிய பொக்கிஷமாக கிடைக்கின்றன.
தமிழக சுற்றுலா வரைபடத்தில் நாகூர் ஒரு புனித யாத்திரை ஸ்தலம் என்ற வகையில்தான் இதுவரை சித்தரிக்கப்பட்டு வந்திருக்கின்றதே அன்றி அதன் தொன்மையான வரலாறு, சங்ககால பெருமை இவற்றினை எடுத்துரைப்பார் எவருமில்லை.
சமயத்தால், வணிகத்தால், தமிழால், வளத்தால் புகழ்பெற்ற ஊர் இது. புகழ்பெற்ற ஆதிமந்தி, ஆட்டனத்தி கதை நிகழ்ந்த ஊர் இது. காவிரிப் பூம்பட்டினம் பேரலையால் சூழப்பட்டு கடலுக்கு இரையானபின், நாகூர் கடல் வாணிகத்தின் நுழைவாயிலாகத் திகழ்ந்ததற்கான சான்றுகள் நிறையவே உள்ளன. உரோமானியர், சீனநாட்டார், பர்மியர், சுமத்திரர், அரபியர் என பலநாட்டாரும் கடல் வாணிபம் மேற்கொண்ட தொன்மையான ஊர் இது.
இவ்வூரை நாகரிகத்தின் தொட்டில் என்றாலும் மிகையாகாது. நாகூரின் எல்லையில் ‘பார்ப்பனச் சேரி’ உள்ளது. இது சங்க காலத்திலேயே அங்கு பெருகியோடிய ஆற்றின் அக்கரையில் வந்திறங்கியோர் சேரி அமைத்து தங்கிய இடமாகும். அக்கரையகரங்கள்தான் பின்னர் அக்ரகாரம் என்று மருவின.
“பசுக்களையும் அந்தணர்களையும் காப்பாற்றுகின்றவரான
சிரீமத் சத்ரபதி மகாராசராச சிரீ பிரதாப சிம்ம மகாராசா சாகேப் அவர்கள்”
என்று மாராத்திய மன்னன் பிரதாபசிங்கை போற்றும் வகையில் உள்ள சொற்றொடரை நாகூர் மினாரா கல்வெட்டு ஒன்றில் காணமுடிகின்றது.
சோழர், களப்பிரர், பாண்டியர், பல்லவர், முத்தரையர், விசயநகர அரையர், நாயக்கர், மராத்தியர், போர்த்துகீசியர், ஆலந்தர், ஆங்கிலேயர் என அனைத்து மக்களின் ஆட்சியையும் அனுபவித்த ஊர் இது.
நாகூர் என்ற பெயர் எதனால் வந்தது? நாவல் மரங்கள் நிறைந்திருந்த காரணத்தால் இவ்வூர் ஒருகாலத்தில் ‘நாவல் காடு’ என்று அழைக்கப்பட்டது என்கிறார்கள். இக்கூற்றுக்கு வலுச்சேர்க்கும் ஆதாரங்கள் அவ்வளவாக தென்படவில்லை.
முன்னொரு காலத்தில் நாகப்பாம்பு நிறைந்திருந்த காடு இது. அதனால்தான் நாகூர் (நாக+ஊர்) என்று அழைக்கப்பட்டது என்று வாதிடுகிறார்கள் வேறு சிலர். நாகூரில் இருந்த அரங்கநாதர் கோயிலை போர்த்துகீசியர் இடித்ததாக சரித்திரம் கூறுகிறது. “மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றாலும் சிறப்புற்று விளங்கும் திருத்தலமான இவ்வூரில் யாரையும் நல்லபாம்பு தீண்டியது கிடையாது’ என்கிறது ஸ்ரீ நாகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயில் வெளியிட்ட ஸ்தல வரலாறு. நாக வணக்கம் கொண்டிருந்த மக்கள் இங்கு வசித்து வந்தாதால் நாகூர் என்ற பெயர் வந்தது என்ற வாதமும் நமக்கு அவ்வளவாக திருப்தியைத் தரவில்லை.
கூர்மையான நா படைத்தவர்கள் வாழும் ஊர் நா+கூர் என்பது சிலரின் வாதம். அதாவது அறம் பாடத்தக்க புலவர் பெருமக்கள் இங்கு வாழ்ந்ததினால் இப்பெயர் வந்ததாம். பழங்காலந்தொட்டே இசைவாணர்களும் எண்ணற்ற தமிழ்ப் புலவர்களும் இங்கு வாழ்ந்ததினால் நாகூருக்கு “புலவர் கோட்டை” என்ற பெயர் பிற்காலத்தில் வழங்கப்பட்டது. “நாகூரில் தடுக்கி விழுந்தால் ஒரு கவிஞன் அல்லது பாடகன் காலில்தான் விழ வேண்டும்” என்ற சொல்வழக்கு வெறும் வேடிக்கைக்காக சொல்லப்படுவதன்று.
பதினெட்டாம் நூற்றாண்டில் மட்டும் புகழ்ப்பெற்ற முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் எண்ணிக்கையில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே காலத்தில் நாகூரில் வாழ்ந்திருக்கிறார்கள் எனும் செய்தி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
சென்ற நூற்றாண்டில் நாகூரில் வாழ்ந்த இஸ்லாமியக் கவிஞர் ஒருவர் மீது வேறொருவர் பொய்வழக்கை தொடர்ந்து விட, வெகுண்டுப் போன கவிஞர்
“செல்லா வழக்கை என்மீது தொடுத்தானோ?
அல்லா விடுவானோ அம்புவீர்
நில்லாமல் போகும் அவன் வாழ்வும்…”
என்று அறம் பாட, பாடப்பட்டவரின் சந்ததியே முழுவதுமாக அழிந்து சின்னா பின்னமாகி விட்டதாக முன்னோர்கள் கூற நான் கேட்டதுண்டு.
நாகூருக்கு மிகமிக அருகாமையில் இருக்கும் ஊர் திருமலைராயன் பட்டினம். விஜயநகர வேந்தர்களின் ஆட்சி காலத்தில் சிற்றரசன் இவ்வூரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான். காளமேகப் புலவன் சினமுற்று பாடிய அறத்தால் அவனது ஆட்சியே சரிந்து அவலத்திற்கு உள்ளானது என்பர்.
“கோளர் இருக்குமூர் கோள்கரவு கற்றவூர்
காளைகளாய் நின்று கதறுமூர் – நாளையே
விண்மாரி யற்றுவெளுத்து மிகக் கறுத்து
மண்மாரி பெய்கவிந்த வான்” என்று பாடிவிட்டுச் சென்றான் காளமேகம்.
அதாவது, கொலைகாரர்கள் வாழும் ஊர். கோள், மூட்டல், வஞ்சகம் செய்தல் முதலியன கற்றிருக்கும் ஊர். காளைமாடுகளைப்போல் கதறித் திரிவோர் நிறைந்த ஊர். நாளைமுதல் மழைபொய்த்து வறண்டு போய் மண்மாரி பெய்யட்டும் என்று அறம் பாடியதால் அந்த ஊரே செழிப்பற்று போனது என்பார்கள்.
புலவர்கள் பாடும் அறப்பாட்டுக்கு பலிக்கக் கூடிய வலிமை உண்மையிலேயே உண்டா இல்லையா என்பது விவாதத்திற்குரிய தலைப்பு. அது நமக்கு இப்போது தேவையில்லாதது.
அந்நாளில் நாகூரை வடநாகை என்றே பலரும் அழைத்து வந்தனர்.
“கற்றோர் பயில் கடல் நாகைக் காரோணம்“ என்ற ஞான சம்பந்தரின் பாடலிலிருந்து இப்பகுதி மக்களின் கல்வித்தறம் நன்கு புலப்படும்.
பாக்கு கொட்டைகள் வைத்து ‘கோலி’ விளையாட்டு ஆடிக்கொண்டிருந்த பாலகர்களிடம் பசியினால் வாடிய காளமேகப்புலவர் `சோறு எங்கு விக்கும்` என்று கேட்டதற்கு, அப்பாலகர்கள் ‘தொண்டையில் விக்கும்’ என்று பதில் கூறினார்கள். [விற்கும் என்பதை பேச்சுவழக்கில் இன்றளவும் “விக்கும்” என்று கூறக் கேட்கலாம்] உடனே புலவர் வெகுண்டு அவர்கள் மீது வசைபாடும் பொருட்டு “பாக்குத் தறித்து விளையாடும் பாலகர்க்கு“ என்பது வரை சுவற்றில் எழுதி விட்டு, பசியாறிய பிறகு எஞ்சிய பகுதியைப் எழுதி முடிப்பதற்கு அங்கு வந்தபோது அவர் வியப்புற்று போனார். காரணம்
“பாக்குத் தறித்து விளையாடும் பாலகர்க்கு
நாக்குத் தமிழுரைக்கும் நன்னாகை“ – என்று பாலகர்கள் தங்கள் தமிழாற்றலை வெளிக்காட்டியிருந்தார்கள்.
நாகூர் பகுதி மக்களின் நாவன்மையும், நவரசப் பேச்சும், நையாண்டிச் சாடலும், நகைச்சுவை உணர்வும் நானிலமும் அறிந்த ஒன்று.
நான்காம் தமிழ்ச்சங்கத்தின் நக்கீரர் என்று போற்றப்படும் மகாவித்துவான் நாகூர் வா.குலாம் காதிறு நாவலர் அவர்கள் நாகூரின் பெயர்க்காரணத்திற்கு கூறும் கருத்து இதிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது.
இந்த நிலத்தில் புன்னை மரங்கள் நிறைந்து காணப்பட்டதாம். புன்னை மரங்களுக்கு மற்றொரு பெயர் நாகமரம். மலையாள மொழியில் இதன் பெயர் ‘புன்னாகம்’ என்பதாகும். நாகவூர் என்ற பெயரே பின்னாளில் நாகூர் என்று மருவியது என்கிறார் இவர்.
“போக மாமரம் பலவகை உளவெனிற் புன்னை
யேக வெஒண்மர முதன்மைமிக் கிருத்தலி னிவ்வூர்
நாக வூரெனுந் தலைமைபற் றியபெயர் நண்ணி
யாக மற்றுநா கூரென மரீஇயதை யன்றே”
- (செய்கு யூசுபு நாயகர் உபாத்துப்படலம்: 6)
நாகூருக்கு கல்லெறி தொலைவில் இருக்கும் மேலநாகூரில்தான் அக்காலத்தில் குடியிருப்புகள் இருந்தன. இப்பொழுது குடியிருப்பு இருக்கும் பகுதிகளில் வெறும் புன்னை மரங்கள்தான் பெருகி அடர்ந்திருந்ததாம்.
மற்ற எந்த மரங்களுக்கும் இல்லாத அளவுக்கு புன்னை மரங்களுக்கு தமிழ் இலக்கியங்களில் ஒரு தனி இடம் உண்டு.
“உள்ளூர்க் குரீஇக் கருவுடைத் தன்ன
பெரும்போ தவிழ்ந்த கருந்தாட் புன்னை” என்ற நற்றிணை (231) பாடலில் புன்னைமரத்தைப் பற்றிய வருணனையை நாம் காணலாம்.
“பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச்
சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானே” என்ற திருஞான சம்பந்தரின் பாடலில் புன்னை மரத்தின் பூவானது சிட்டுக்குருவியின் பொரித்த முட்டை போல இருப்பதாக வருணனை செய்கிறார்.
நாக மரம் என்பது புன்னை மர இனங்களில் ஒன்றாகும். நாக மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்த நெடுவழியில் சென்றுகொண்டிருந்தபோது படரக் கொழுகொம்பு இல்லாமல் தவித்த சிறிய முல்லைக் கொடிக்குத் தன் பெரிய தேரையே படர்வதற்காக நிறுத்திவிட்டுச் சென்ற பாரிவள்ளலைப் பற்றி நாம் இலக்கியத்தில் படித்திருப்போம்.
“நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்கு வெள் அருவி வீழும் சாரல்
பறம்பிற் கோமான் பாரி” என்ற சிறுபாணாற்றுப்படை (88-91) பாடல் வரிகள் இச்சம்பவத்தை எடுத்துரைக்கிறது.
புன்னை மரங்கள் காட்சிக்கு மிக எழிலான தோற்றத்துடன் காணப்படும். இம்மரங்கள் ஏனைய பல இனத் தாவரங்கள் வளர முடியாத, வரண்ட மணற் பாங்கான கடற்கரையோரங்களில் வளரக்கூடியன. புன்னை மரத்தின் இலை, மொட்டு, பூ இம்மூன்றுமே காட்சிக்கு மிக அழகாக இருக்கும்.
தென்பகுதியான இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா இவை அனைத்தும் தரைமார்க்கமாக இணைந்து லெமூரியா கண்டம்/ குமரிக் கண்டம் என்று அழைக்கப்பட்டதாய் வரலாற்றாசிரியர்கள் நம்புகிறார்கள். அதற்கு ஆதாராமாக இந்த மூன்று இடங்களிலும் காணப்படும் மண்புழுக்களும், புன்னை மரங்களும் ஒரே இனத்தைச் சார்ந்தவை என்பது அவர்கள் எடுத்து வைக்கக்கூடிய ஆதாரங்களில் ஒன்று. நாகூர் போன்ற தென்னிந்தியக் கடற்கரையோரம் காணப்பட்ட புன்னை மரங்கள்தான் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவிலும் அடர்ந்திருந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
பெரும்பான்மையான வரலாற்றாசிரியர்கள் நாகர் இன மக்களின் இங்கு வாழ்ந்ததினாலேயே நாகர்+ஊர் = நாகூர் என்றானது என்கிறார்கள். இக்கூற்றுக்கு வலுச்சேர்ப்பதற்கு அவர்கள் எண்ணற்ற ஆதாரங்களை அடுக்கி வைக்கிறார்கள்.
நாகர்கள் என்றால் யார்? இதனை முதலில் தெரிந்துக் கொள்வது அவசியம். நாகர்கள் யார் என்பதிலேயே எண்ணற்ற கருத்து வேறுபாடுகள் வரலாற்றாசிரியர்களுக்கு இடையே நிலவுகின்றன.
நாகர் என்னும் சொல் வடமொழியிலும் உண்டு. தமிழிலும் உண்டு. சூழ்நிலைக்கேற்ப சொற்களின் பொருள் மாறுபடும். வடமொழியில் பாம்பு, ஒலி, கருங்குரங்கு, யானை, வானம். வீடு பேற்று உலகம், மேகம் என பொருள்களைத் தரும். தமிழ் மொழியில் மலை, சுரபுன்னை (புன்னாசம்) சங்கு, குறிஞ்சிப் பண்வகை, காரீயம் என்னும் பொருள்களைத் தரும்.
நாகர்கள் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அ|ஸ்ஸாம், நாகாலாந்து போன்ற இடங்களிலிருந்து வந்து குடிபெயர்ந்தவர் என்று சிலரும் நாகர்கள் தமிழகத்து பழங்குடியினர் என்று சிலரும் பகர்கின்றனர். நாகநாட்டவர் தமிழ்நாட்டுக் கடற்கரையூர்களான நாகூர், நாகப்பட்டினம் (நாகர்+பட்டினம்), நாகர்கோவில் வழியே தமிழகத்தில் வந்து குடியமர்ந்தனர் என்கின்றனர் வேறு சிலர்.
ஆரியர்கள் வருவதற்கு முன்பே இந்தியாவில் வாழ்ந்தவர்கள் நாகர்கள் என்றும், நாகர்களும் திராவிடர்களும் ஒரே இனத்தவர் என்றும் டாக்டர் அம்பேத்கர் கூறுகிறார். தாசால் அல்லது தாசர்கள் என்பவர்கள் நாகர்களே. இவர்கள் ஹரப்பா நாகரிகத்துக்கு உரியவர்கள் என்கிறார் ஒரு வரலாற்று ஆய்வாளர்.
முரஞ்சியூர் முடிநாகராயர், முப்பேர் நாகனார், மருதன் இளநாகனார்,தீன்மிதி நாகனார், வெண்நாகனார், அம்மெய்யன் நாகனார், வெண்நாகனார், நாகன் மகன் போத்தனார், எழூஉப்பன்றி நாகன் குமரனார், நாலக் கிழவன் நாகன் என்றெல்லாம் புலவர், புரவலர் பெயர்களை தமிழிலக்கியத்தில் நாம் காண முடிகின்றது.
சங்க காலத் தமிழகத்தில் நாகர், இயக்கர், திரையர், கந்தருவர் என்னும் இனத்தவர் பெருமளவில் வாழ்ந்தனர் என்றும், இயக்கரும், நாகரும் தமிழருள் ஒரு பிரிவினரே என்றும் அவர்கள் பிற்காலத்தில் தமிழரோடு கலந்து போயினர் என்கிறார் மயிலை சீனி வேங்கடசாமி.
நாகர் புத்த மதத் தொடர்புடன் நுழைந்தனர். ‘புத்தரும், மகாவீரரும் நாக இனப் பெரியோர்களே’ என்று சாதிக்கிறார் கா.அப்பாத்துரை. தமிழகக் கடற்கரை ஊர்களில் வாழ்ந்த ‘நாகர்கள்’ தம்மை ‘ஆரியர்’ என்று அழைத்துக்கொண்ட காரணத்தால்தான் தரங்கம்பாடி, நாகூர், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் வாழும் மீனவர் தெருக்கள் ‘ஆரிய நாட்டுத் தெரு’ என்று அழைக்கப்பட்டன போலும் என்கிறார் இவர். புத்தர் பிறந்த சாக்கியர்குடி மரபு, நாகமரபைச் சார்ந்தது என்றும், புத்தநெறி வங்கத்திலும், தென்னாடு, இலங்கை, பர்மா, சீனா முதலிய இடங்களில் பரவியதற்கு நாகூர் போன்ற இடங்களில் வசித்த நாகமரபினரே காரணம் என்றும் இவர் வாதிடுகிறார்.
புத்த துறவிகளின் நடமாட்டமும், புத்த விகாரமும் இப்பகுதியில் காணப்பட்டதற்கான போதுமான ஆதாரங்கள் கிடைக்கின்றன. சீனப் பயணி யுவான் சுவாங் (கி.பி.629-645) தன் பயணக் குறிப்பேட்டில் அசோகச் சக்கரவர்த்தியால் எழுப்பப்பட்ட புத்தவிகாரத்தை நாகையில் கண்டதாக எழுதி வைத்துள்ளார். கி.மு. 302-ஆண்டுக்கு முன் வந்த சிரியா நாட்டு மெகசுதனிசு முதல் எகிப்து தாலமி, சீன நாட்டுப் பாகியான், இத்-சிங் முதலியோர் இப்பகுதியை பற்றிய மிகச் சுவையான தகவல்களைத் தந்து உதவியுள்ளனர்.
“சுந்தர பாண்டியன் என்னும் தமிழ் மன்னன் நாகர் குலப் பெண்ணை மணந்தான். அதனால் இவன் சுந்தரநாகன் – சுந்தர பாண்டியநாகன் எனப்பெற்றான்” என்று மார்க்கோ போலோ தம் குறிப்பேட்டில் எழுதியுள்ளார்.
நாகரிகத்திலும், பண்பிலும், பண்பாட்டிலும் சிறந்து விளங்கியவர்கள் நாகர்கள் என்றால் அது மிகையல்ல. “நாகரிகம்” என்ற சொல்லே “நாகர்” என்ற சொல்லில் இருந்து பிறந்தது என்பர். நாகர்கள் வகுத்த எழுத்து முறையே தேவநாகரி என்ற பெயரிலும் அழைக்கப்பட்டது என்கிறார்கள். ராஜராஜன் காலத்து நாணயங்களில் ஒருபுறம் அரசர் உருவமும், மறுபுறம் ‘நாகரி’ எழுத்து பொறிப்பும் உள்ள செம்பு நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ‘நகரி’ என்றும் ‘நகரா’ என்றும் வழங்கப்பட்ட தோல்கருவியை கண்டுபிடித்தவர்களும் நாகர்கள்தான். [நாகூர் ‘நகரா மேடை’யில் முழங்கப்படும் அதே நகராவைத்தான் இது குறிக்கிறது]
நாகசுரம் (நாதஸ்வரம்) என்ற வாத்தியக்கருவி நாகூர் நாகை போன்ற இடங்களில் வாழ்ந்த நாகர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? நாகசுரம், தவில் போன்ற இசைக்கருவிகள் ஆரியப் பிராமணர்களுக்கே உரித்தான கலைகள் அல்லவா? இது என்ன புதுக்கதையாக இருக்கிறது என்று நீங்கள் முணுமுணுப்பதை என்னால் நன்றாகவே உணர முடிகின்றது.
ஆரியப் பிராமணர் இசை பயிலக் கூடாதென்று விதிவிலக்கு பண்டுதொட்டு இருந்து வருகிறதென்ற உண்மை பெரும்பான்மையான பிராமணர்களே அறிந்திராத உண்மை. மனுதர்ம சாத்திரம் 4-ஆம் அத்தியாயம், 15-ஆம் விதியில் பிராமணர் ‘பாட்டுப் பாடுவது, கூத்தாடுவது…. இதுபோன்ற சாத்திர விருத்தமான கர்மத்தினால் பொருளைத் தேடிக் கொள்ளக்கூடாது’ என்று தெளிவாகவே கூறப்பட்டுள்ளது..
வேதத்தை ஓதாது வரிப்பாட்டைப் பாடி, வேத ஒழுக்கத்தில் இருந்து தவறிய காரணத்தால் பார்ப்பனர் சிலர் ஊராரால் விலக்கப்பட்டு ஊர் எல்லைக்கு வெளியே போய்க் குடியிருந்தனர் என்னும் செய்தியினை சிலப்பதிகாரத்தில் நாம் காண்கிறோம்.
சங்க காலத்தில் இசைப்பயிற்சியில் கைத்தேர்ந்தவர்களாக இருந்த பாணர், நாகர் குலத்தினரே என்கிறார் மற்றொரு ஆய்வாளர். எடுத்துக்காட்டாக ‘நாகபாணர்’ என்று இலக்கியத்தில் நாம் காணும் பெயர் பாணர்கள் நாக குலத்தினரே என்பதை அறிய உதவுகிறது. சீவக சிந்தாமணியில் இடம்பெறும் “பாணியாழ்”, “பாண்வலை”, “பாணுவண்டு” என்ற சொற்களை ஆராய்ந்தால் பாண் என்னும் சொல், பாட்டு என்னும் பொருளிலேயே கையாளாப்பட்டு வந்துள்ளது. சிலப்பதிகாரத்திலும் “பாண்-பாட்டு” என்ற சொல்லைக் காண முடிகின்றது.
நாகூருக்கும் முத்தமிழில் ஒன்றான இசைத்தமிழுக்கும் சங்க காலத்திலிருந்தே நெருங்கிய தொடர்புண்டு. நுண்கலை வளர்ச்சியில் பேரார்வம் காட்டிய மகாவித்துவான் வா.குலாம் காதிறு நாவலர் அவர்கள் “இசை நுணுக்கம்” என்ற நூலைப்படைத்து நான்காம் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றம் செய்தார்.
நாடகத்துறையிலும், இசைத்துறையிலும் முடிசூடா மன்னராக கோலோச்சியவர் எஸ்.ஜி.கிட்டப்பா. (இவர் கே.பி.சுந்தரம்பாளின் கணவர்) இவருக்கு குருவாக இருந்து இசையை கற்றுத் தந்தவர் நாகூர்க்காரர், ஆம். செங்கோட்டை திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த கங்காதர ஐயர் தன் புதல்வர்களாகிய காசி ஐயர், கிட்டப்பா, இருவரையும் நாகூர் தர்கா ஆஸ்தான வித்வானாக விளங்கிய உஸ்தாத் தாவுத் மியான் அவர்களிடம்தான் இசை பயில அனுப்பி வைத்தார். அதனால்தான் கிட்டப்பாவின் பாடல்களில் சிற்சமயம் இந்துஸ்தானி சாயல் காணப்பட்டதாக விமர்சனம் எழுகிறது.
இந்துஸ்தானி மற்றும் கர்னாடக இசையில் பெரும் புலமை வாய்ந்த இசைக்கலைஞர்கள் வாழ்ந்த ஊர் நாகூர். உஸ்தாத் சோட்டு மியான், உஸ்தாத் நன்னு மியான்,உஸ்தாத் கவுசு மியான், உஸ்தாத் தாவூத் மியான் என்று எண்ணிலா இசைவாணர்களின் பெயர்களை எழுதிக் கொண்டே போகலாம்.
உஸ்தாத் தாவுத் மியானின் இன்னொரு மாணவர் . கர்னாடக இசையுலகில் ஒரு நிரந்தர இடத்தை தனக்கென தக்க வைத்துக் கொண்டவரான நாகூர் தர்கா வித்வான் எஸ்.எம்.ஏ.காதர் அவர்கள். இசைமணி எம்.எம்.யூசுப், இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபா போன்ற எத்தனையோ இசை வல்லுனர்களை பெற்றெடுத்த ஊர் நாகூர்.
நாகூரின் பெயர்க்காரணம் எதுவாக இருப்பினும் முத்தமிழுக்கும், ஆன்மீகத்திற்கும், பண்பாட்டிற்கும், கடல் வாணிபத்திற்கும் தொன்மையான இவ்வூரின் பங்களிப்பு அளவிட முடியாதது. கடல் கடந்து இவ்வூரின் பெயரில் சங்கம் வைத்து செயல்படும் அன்பர்கள் மார்தட்டி கொண்டாடும் அளவுக்கு அளவிடற்கரிய பெருமைகள் உள்ளன.
இங்குள்ள மக்களுக்கு வஞ்சக குணங்கள் இருப்பதில்லை. வறுமையில் வாடுவதில்லை. தூய்மையான நெறியில் செல்லும் அவர்கள் அச்சமற்ற தன்மை கொண்டவர்கள். நம் பெருமான் உறையும் நாகூரில் வாழும் இவர்கள் இரக்க குணம் கொண்டவர்கள். பாவங்கள் புரிவதில்லை.
இதை நான் சொல்லவில்லை. ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்து மறைந்த மகாவித்துவான் வா.குலாம் காதிறு நாவலர் அவர்கள் நாகூர் புராணம் என்ற தன் நூலில் (நகரப்படலம்:4) குறிப்பிடுகிறார்.
“பஞ்ச மற்றது படர்ப்பிணி யறது பவஞ்செய்
வஞ்ச மற்றது வறுமைமற் றற்றது, வாழ்க்கை
யஞ்ச மற்றது தீவினை யற்ரதன் றாகா
நஞ்ச மற்றது நம்பெரு மானுறை நாகூர்”