காவிரியில் கர்நாடகம் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து டெல்டா மாவட்டங்களில் அனைத்து கட்சியினர் மற்றும் விவசாயிகள் பஸ், ரெயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதில் சுமார் 15 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
அணை கட்ட எதிர்ப்பு
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் 2 அணைகள் கட்டி 48 டி.எம்.சி. தண்ணீரை தேக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த அணைகள் கட்டப்பட்டால் தற்போது வரும் உபரிநீரும் தமிழகத்திற்கு கிடைக்காமல் பாலைவனமாகும் நிலை உருவாகும். கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சியை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டுக்குழுவை உடனே அமைக்க வேண்டும். தமிழக அரசு அனைத்து கட்சியினர் மற்றும் அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பிரதமரை சந்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ரெயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டம் காவிரி டெல்டா மாவட்டங்களில் நேற்று நடைபெற்றது.
ரெயில் மறியல்
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள், தி.மு.க., திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ஆம் ஆத்மி கட்சி, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் உள்பட பல்வேறு சங்கத்தை சேர்ந்தவர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தஞ்சை ரெயில் நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தலைமையில் நடந்த ரெயில் மறியல் போராட்டத்தில் தி.மு.க. முன்னாள் மத்திய மந்திரி பழனிமாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். ரெயில் மறியலில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 310 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சை, நாகை, திருவாரூர்
தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே சாலை மறியல் நடைபெற்றது. இதில் இரு கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். தஞ்சை மாவட்டத்தில் 6 இடங்களில் ரெயில் மறியல் போராட்டமும், 89 இடங்களில் சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது. இதில் மொத்தம் 3,903 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகை தோணித்துறை ரோடு ரெயில்வே கேட் அருகே தி.மு.க. மாவட்ட செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் தலைமையில், கம்யூனிஸ்டு கட்சிகள், விவசாயிகள், விவசாய சங்கங்கள் பங்கேற்ற ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. நாகை மாவட்டத்தில் நேற்று 2 இடங்களில் ரெயில் மறியலும், 37 இடங்களில் சாலை மறியலும் நடைபெற்றது. இந்த போராட்டங்களில் கலந்து கொண்ட 5,632 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 5 இடங்களில் ரெயில் மறியலும், 60 இடங்களில் சாலை மறியலும் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தி.மு.க., இரு கம்யூனிஸ்டு கட்சிகள், த.மா.கா. மற்றும் விவசாய சங்கங்கள் கலந்து கொண்டன. மறியலில் ஈடுபட்ட 697 பெண்கள் உள்பட 5,245 பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மொத்தம் 1,285 பெண்கள் உள்பட 14,199 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சியில் போராட்டம்
ரெயில் மறியல் போராட்டத்துக்காக திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டு இருந்தனர். மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.என்.நேரு தலைமையில் அவர்கள் ரெயிலை மறிக்க ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். ஆனால் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை அங்கேயே தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
தொடர்ந்து ரெயில் மறியலுக்காக ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்த ம.தி.மு.க., காங்கிரஸ், த.மா.கா., எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சியினரும் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தில் அரசியல் கட்சியினர், விவசாய சங்க நிர்வாகிகள் உள்பட சுமார் 1,500 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் ரெயில் நிலையத்தில் நுழைய முயன்ற விவசாயிகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ரெயில் நிலையத்திற்குள் 20 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டதால் அவர்கள் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். அதேபோல காட்டுமன்னார் கோவிலில் சாலை மறியல் நடந்தது. இந்த போராட்டங்களில் சுமார் 270 பேர் கைதானார்கள்.
News Source : http://www.worldtamils.com/?p=132592