சாத்தம்பூதி எனும் இளங்கோவதி முத்தரையன் மற்றும் முத்தரையர் தலைவன் ‘சாத்தன் பழியிலி’ இவர்களால் தோற்றுவிக்கப்பட்ட குடைவரைகோவில்...
கிரானைட் நிறுவனங்களால் வெட்டி எடுக்கப்பட்டது போக எஞ்சியிருக்கும் ஒன்பது குன்றுகள், விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய எண்ணிக்கையிலான வீடுகள், பாறைகள் மீது வளர்ந்திருக்கும் சிறுசிறு புதர்கள், குன்றுகளில் ஆங்காங்கே காணப்படும் சுனைகள், அவற்றின் கரைகளில் செழித்து வளர்ந்திருக்கும் மரங்கள், எப்போதாவது வந்து செல்லும் ஒரு சில பேருந்துகள்... இவையே, 1100 ஆண்டு கால வரலாற்றுப் பழைமைக்கும் கலைச் செழுமைக்கும் அடையாளமாக விளங்கும் புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தா மலையின் தற்போதைய அடையாளங்கள்.
புதுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்லும் வழியில் சுமார் 20 - கி.மீ தொலைவில் மேல மலை, கோட்டை மலை, கடம்பர் மலை, பறையன் மலை, உவச்சன் மலை, ஆளுருட்டி மலை, பொம்மை மலை, மண் மலை, மற்றும் பொன்மலை என்று ஒன்பது வகையான மலைக் குன்றுகளால் சூழப்பட்ட கிராமம். கி.பி 9 - ம் நூற்றாண்டு காலத்தில் தஞ்சையிலிருந்து முத்தரையர்கள் ஆட்சி செய்தபோது அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டிலும் பிறகு சோழர்கள், பாண்டியர்கள் ஆகியோரின் கட்டுப்பாட்டிலும் இருந்த பகுதி.
இந்தக் கிராமத்தின் பழைய பெயர் ‘நகரத்தார் மலை’. நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள், என்று அழைக்கப்படும் வணிகர்கள் வாழ்ந்த பகுதி இது. ‘நகரத்தார் மலை’ பின்பு மருவி ‘நார்த்தா மலை’ ஆனது. முத்தரையர்கள், சோழர் மற்றும் பாண்டியர்கள் காலத்தில் இந்த நகரத்தார் மலைதான் வாணிபத்தின் முக்கியமான பகுதியாக விளங்கியது. ‘நானாதேசத்து ஐநூற்றுவர்’ எனும் வணிகக் குழுவினர் இங்கு தங்கித்தான் வாணிபம் செய்திருக்கிறார்கள்.
நார்த்தாமலையின் முக்கிய அடையாளம் ‘விஜயாலய சோழீச்சுவரம்’ கோயில். இந்தக் கோயில், நார்த்தாமலை முத்துமாரி அம்மன் கோயிலுக்கு அருகே மேலமலைக் குன்றின் மீது கம்பீரமாக அமைந்துள்ளது. மேலமலையின் அடிவாரத்திலிருந்து சுமார் அரை கி.மீ தொலைவுக்கு மேலேறிச் சென்றால் தலைவிரி சிங்கம் (தலையருவி சிங்கம்) என்ற சுனையைக் காணலாம். இந்தச் சுனையில் சுமார் 20 அடி ஆழத்தில் சிவபெருமானுக்காக வெட்டப்பட்ட குடைவரைக் கோயில் ஒன்று நீருக்குள் மூழ்கியிருக்கிறது. அதன் அருகிலேயே 1871 - ம் ஆண்டு தொண்டைமான் ராணியால் சுனைநீர் இறைக்கப்பட்டு சிவலிங்கத்தைத் தரிசித்த செய்தி கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது. நீருக்குள் மூழ்கியபடி அருள்பாலிக்கும் சிவபெருமானை வணங்கிவிட்டு, மேலேறிச் சென்றால் விஜயாலய சோழீச்சுவரத்தைக் காணலாம். இந்த ஆலயம் முற்காலச் சோழர்கள் காலத்தைச் சேர்ந்தது.
பிரதானக் கோயிலுக்கு வெளியே நந்தியெம்பெருமான் கம்பீரத்துடன் வீற்றிருக்க, நுழைவாயிலில் அழகான துவாரபாலகர்கள். உள்ளே கருவறையில் விஜயாலய சோழீச்சுவரர் அருள்பாலிக்கிறார். கோயில் மண்டபத்தில் அழகான வண்ண ஓவியங்கள் காணப்படுகின்றன. கருவறையில் வீற்றிருக்கும் சிவபெருமானைச் சுற்றி வருவதற்குச் சாந்தார அறை காணப்படுகிறது. கருவறை விமானம் வேசரக் கலைப்பாணியில் வட்டவடிவில் அமைந்துள்ளது. விமானத்தில் சிற்பங்கள் அழகுடன் காணப்படுகின்றன. தமிழகத்தில் முழுமையான வேசர பாணியில் அமைக்கப்பட்ட கோயில் இதுவெனக் கூறலாம்.
இந்தக் கோயிலை முதலில் சாத்தம்பூதி எனும் இளங்கோவதி முத்தரையன் என்னும் மன்னர் கட்டினார். பின்பு மழை மற்றும் இடியினால் ஆலயத்தின் சில பகுதிகள் சிதைந்துவிட விஜயாலயன் காலத்தில் மல்லன் விதுமன் எனும் தென்னவன் தமிழ்திரையன் என்பவனால் இந்தக் கோயில் மீண்டும் இப்போதிருக்கும் வடிவுடன் புனரமைக்கப்பட்டது.
ஆலயத்தில் ஆறு சிறு சிறு சந்நிதிகள் காணப்பட்டபோதும் இவற்றில் சிலைகள் எதுவும் தற்போது காணப்படவில்லை. சிலை திருடர்களின் திருட்டுக்குத் தப்பி கருவறையில் வீற்றிருக்கும் விஜயாலய சோழீச்சுவரரும், நந்தியும் மட்டுமே இப்போது எஞ்சியிருக்கிறார்கள்.
கோயிலுக்கு முன்பு, அதாவது நந்தியெம்பெருமானுக்குப் பின்புறத்தில் இரண்டு குடைவரைக் கோயில்கள் காணப்படுகின்றன. முதலாவதாக ‘பதிணென்பூமி விண்ணகரம்’ எனும் திருமால் குடைவரைக் காணப்படுகிறது. இது முதலில் சமணர் குடைவரையாக வெட்டப்பட்டுப் பிறகு திருமால் கோயிலாக மாற்றப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்தக் குடவரையின் மண்டபத்தை யானை, யாளி, சிங்கம் ஆகியவை வரிசையாகத் தாங்குவதைப் போன்று விண்ணகரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குடைவரைக் கோயில் கருவறையில் சிலைகள் எதுவும் காணப்படவில்லை.
இந்தக் குடைவரையின் அர்த்த மண்டபத்தில் 12 ஆளுயர திருமால் சிலைகள் காணப்படுகின்றன. தோற்றத்தில் இந்தத் திருமால் சிலைகள்
அனைத்தும் ஒன்று போலக் காட்சியளித்தாலும் உற்றுக் கவனிக்க இவை அசையும் காட்சி - மோஷன் பிக்சர் (Motion picture) வகைமை என்பதை அறிந்துகொள்ளலாம். திருமால் தனது சுதர்சன சக்கரத்தை ஏவும் காட்சிதான் இங்கே தத்ரூபமாக வெட்டப்பட்டுள்ளது. முதல் சிற்பத்தில் திருமாலுடைய கரத்தில் மேலிரு கரங்களில் சங்கு மற்றும் சக்கரம் இருக்கும். ஆனால், அடுத்தடுத்த சிலைகளில் திருமாலின் கரத்திலிருந்து சங்கு மற்றும் சுதர்சன சக்கரங்கள் கரத்திலிருந்து விலகிச் செல்வது தெரியும். அதாவது
திருமால் சுதர்சன சக்கரத்தை ஏவுவதைப் போன்று உருவாக்கப்பட்ட ’மோஷன் பிக்சர்’ சிலைகள் இவை. ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உருவாக்கப்பட்ட தமிழர்களின் கலைச்சிறப்பு நம்மை வியப்பில் ஆழ்த்தும்.
இதற்கு அருகே உள்ளது ‘பழியிலி ஈசுவரம்’ எனும் சிறிய
குடைவரைக் கோயில். இது ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவர்கள் கீழ் ஆட்சி செய்த முத்தரையர் தலைவன் ‘சாத்தன் பழியிலி’ என்பவனால் கட்டப்பட்டது. இங்கு லிங்கம் மற்றும் துவாரபாலகர்கள் சூழக் கருவறைக்குள் 'பழியிலி சிவனார்' அருள்புரிகிறார். இந்தக் குடைவரைக்கு அருகில் முடிக்கப்படாத இரண்டு குடைவரைக் கோயில்கள் காணப்படுகின்றன. இங்கு சிவலிங்கங்களுக்குத் தனியாக எந்த வழிபாடுகளும் நடத்தப்படுவது இல்லை. கிராமத்து மக்கள் வந்து விளக்கேற்றி வழிபட்டுச் செல்கிறார்கள். நகரத்தார் வருடத்துக்கு ஒருமுறை நார்த்தாமலை வந்து விஜயாலய சோழீச்சுவரரைத் தரிசித்து வணங்கிச் செல்கிறார்கள்.
நார்த்தாமலையில் உள்ள முத்துமாரியம்மன் கோயில், கடம்பர் கோயில் ஆகிய கோயில்களும் புகழ்பெற்றவை.