முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,
தமிழ்நாடு - 614 701
தொலைப்பேசி: 0091-4373-255228
மின் அஞ்சல்: sanjai28582@gmail.com
வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/
ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582
Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.
Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,
we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics
In the State of Tamil Nadu
Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer
we are known:
We have No Unity
we are Not Educationist
we are not Known our History
Yes if you have any solution share with us...............
We have Solution Accept it.................................
WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....
MUTHARAIYAR
YOUNG LION ORGANIZATION
தலைமை ஒருங்கிணைப்பாளர்
புதன், 16 ஜூன், 2010
நம் தமிழ் வரலாற்று நூல்களில் 300 வருட வரலாறு என்பது ‘களப்பிரர் காலம் இருண்டகாலம் ‘என்ற ஒற்றை வரியால் க்டந்துசெல்லபப்டுகிறது
இந்த தளத்தில் புதிய ஆய்வுகள் ஏதேனும்செய்யப்பட்டுள்ளனவா? நூல்கள் ஏதேனும் உள்ளனவா? 300 வருடம் என்பது ஒரு வம்சம் அல்லது அரசாங்கம் முற்றிலும் வரலாற்றில் இருந்து மறைந்து போக முடியாத அளவுக்கு நீண்டது அல்லவா?
முகையூர்
அசதா
அன்புள்ள அசதா
களப்பிரர் காலத்தைப் பற்றி இப்போது அத்தகைய ஒற்றைவரி சொல்லப்படுவதில்லை– அதாவது அறிஞர் நடுவே. இப்போது ஏராளமான ஆய்வுகளும் புதிய ஊகங்களும் உருவாகி வந்துள்லன
ஆரம்பகாலத்தில் தமிழ்நாட்டில் வரலாற்றை எழுதியவர்கள் சைவ அறிஞர்கள். அவர்களுக்கு சமணம் மீது ஒரு கசப்பு எப்போதும் இருந்தது. தமிழ்நாட்டில் நடந்த சமண சைவ பூசல்கள் அதற்கு முக்கியமான காரணம். தமிழ்கச் சைவர்களில் பெரும்பாலானவர்கள் முன்னாள் சமணர்கள்.
ஆகவே அவர்கள் பொதுவாக இரு விஷயங்களைச் செய்தார்கள் ஒன்று, சமணநூல்களை சைவநூல்கள் என விளக்கும் பெரும் விளக்கநூல்களை எழுதினார்கள். சிறந்த உதாரணம் கா.சு.பிள்ளை எழுதிய திருக்குறள் உரைவிளக்க நூல் இரண்டாவதாக சமண மதத்தின் வரலாற்று பங்களிப்பை பெரும்பாலும் வெற்றிடமாகவே விட்டுவிட்டார்கள்
களப்பிரர்கள் சமணர்கள் என்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக சமணர்கள் அக்காலத்தில் பெரிய ஆலயங்களை எழுப்பியதோ அவற்றில் கல்வெட்டுகளை பொறித்ததோ இல்லை. ஆரம்பகால தமிழ் வரலாறு பெரும்பாலும் நிவந்தங்களைப்பற்றிய கல்வெட்டுகளை சார்ந்தே எழுதபப்ட்டது. ஆகவே களப்பிரர் வரலாறு என்பது அனேகமாக அறியப்படாத ஒன்றாகவே இருந்தது. அதாவது அன்றைய வரலாற்றாய்வின் வழிகளில் அதை அறிய முடியவில்லை. ஆகவேதான் களப்பிரர் காலம் இருண்டகாலம் என்ற வரி தோன்றியது
பின்னர் வரலாறு அரசியலுக்கான கருவியாக ஆகியது. தமிழர் என்ற அடையாள உருவாக்கத்துக்கு வரலாறு பயன்படுத்தப்பட்டது. அப்போது களப்பிரர்கள் மறக்கப்பட்டார்கள். மறுக்கவும் பட்டார்கள்
ஆனால் சமீப காலமாக பழைய சைவ ஆய்வாளர்களில் இருந்து முரண்படும் புதிய தலைமுறை ஆய்வாளர்கள் உருவாகிவந்தபோது களப்பிரர் குறித்த புதிய நோக்கு உருவாகி வந்தது. களப்பிரர் காலகட்டத்தை அறிய மிகச்சிறந்த ஆவணங்கள் அக்காலகட்ட இலக்கிய நூல்களே. பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நீதிநூல்கள் அக்காலகட்டத்தில் உருவானவை. திருக்குறளும் அவற்றில் ஒன்று
களப்பிரர் காலகட்டத்தைச் சேர்ந்த பல சமண குடைவரைக் கோயில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. உதாரணம் சிதறால் மலை [குமரிமாவட்டம்] அப்பாண்டநாதர் கோயில் [ உளுந்தூர்பேட்டை] . அவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு புதிய வரலாறு விரிவாக இனிமேல்தான் எழுதபப்டவேண்டும்
மேலும் நமது வரலாற்றாய்வு என்பது கடந்த ஐம்பதாண்டுக்காலமாக தமிழ் மொழிக்குள்ளும் தமிழ் நிலத்துக்குள்ளும் சுருங்கி விட்டது. பிறமொழியும் பிற பண்பாடும் அறிந்த வரலாற்றாசிரியர்கள் மிகவும் குறைவே. ஆகவே சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ல சமண மரபைச் சேர்ந்த நூல்களைக் கணக்கில் கொன்டு தமிழக வரலாறு இன்றுவரை எழுதப்படவில்லை
இருப்பினும் சில முக்கியமான நூல்கள் வந்துள்ளன. முனைவர் க.ப.அறவாணன் களப்பிரர் காலம் குறித்து சில முக்கியமான ஆய்வுகளைச் செய்திருக்கிறார். அவரது ‘களப்பிரர்காலம் பொற்காலம்’ என்ற நூல் முக்கியமான ஒன்று.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதிக்கு அருகிலுள்ள பூலாங்குறிச்சியில், இவர்களது கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்துள்ளனர். காலம் கி.பி 442 எனக் கருதப்படுகிறது. கோச்சேந்தன் கூற்றன் என்னும் மன்னனது பெயரில் இக்கல்வெட்டு உள்ளது.
மதுரை முதல் புதுக்கோட்டை வரை இவர்கள் ஆண்டிருந்த நிலப்பகுதி என்றும் இப்பகுதியில் உள்ள பல ஊர்பெயர்கள் சாதிகளின் ஆசாரங்கள் ஆகியவற்ரைக் கோன்டு களப்பிரர் வரலாற்றை ஆராயலாம் என்றும் சொல்கிறார்கள்.
சைவர்களின் வெறுப்பு எவ்வாறு இருந்தது என்றால் களப்பிரர் காலகட்டத்தில் ஏராளமான நீதி நூல்கள் எழுதப்பட்டதற்குக் காரணம் அக்காலத்தில் அவர்களின் கொடுங்கோல் ஆட்சியால் நீதி வழுவி சமூகம் சீர்குலைந்ததுதான் என மீண்டும் மீன்டும் எழுதியிருக்கிறார்கள்! அப்படியானால் பக்தி காலகட்டத்தில் ஏன் அத்தனை பக்தி நூல்கள் எழுந்தன? பக்தி வழுவி நாத்திகம் மேலெழுந்தமையாலா? என்ன அபத்தமான பேச்சு!
ஆனால் அப்படித்தான் நம் ஆரம்பகால வரலாறு முற்றிலும் அடிபப்டைகள் இல்லாமல் எழுதப்பட்டது. அதற்குக் காரணம் அப்போது வரலாற்றை காலவரிசைப்படி எழுதுவது என்ற அளவிலேயே வரலாற்றெழுத்து நின்றுவிட்டிருந்தது. வரலாற்றின் கோட்பாடுகள் எவையும் முன்வைக்கப்படவில்லை.
இந்திய வரலாற்றாய்வில் முக்கியமான கோட்பாட்டு சட்டகங்கள் அக்காலகட்டத்தில்தான் முன்வைக்கபப்ட்டன. டி.டி.கோசாம்பியின் மரபு உருவாகி வந்தது.ஆனால் தமிழ்க அறிஞர்கள் அவற்றை எல்லாமறிந்திருந்தார்கள் என்பதற்கான தடையமே இல்லை
களப்பிரர் காலத்தில் தமிழகத்தில் சமணம் செழித்தது. சமணம் பல்வேறு இனக்குழு மக்களை அகிம்சை வழியில் ஒன்றாகத் திரட்டிய மதம். தமிழ்நாட்டில் நாக வழிபாடு அதிகமாக இருந்திருக்கலாம். ஆகவே ஐந்துதலை நாகம் தலைக்குமேல் நிற்கும் தீர்த்தங்காரரான பார்ஸ்வநாதர் இங்கே சமணர்களால் முன்னிறுத்தப்பட்டார். மக்கள் அதிகமாக அவரையே வழிபட்டிருக்கிறார்கள்.
சம்ணம் மருத்துவம், கல்வி ஆகிய இரு வழிகளில் மக்களிடம் சென்றடைந்தது. ஆகவே மருத்துவநூல்கள், நீதிநூல்கள், இலக்கணநூல்கள் ஆகியவையே அவர்களால் அதிகமும் எழுதபப்ட்டன. தமிழகத்தில் கல்வி பரவலாக அவர்கள் பெரும்பங்கு வகித்தார்கள். சித்த மருத்துவத்தின் பிதாமகர்கள் அவர்களே.
சமணம் வணிகத்தின், வணிகர்களின் மதமும் கூட. தமிழகத்தை ஒன்றிணைக்கவும் விரிவான வணிக வழிகளை உருவாக்கவும் அது உதவியது. இது தமிழகத்தின் பொருளியல் வளார்ச்சிக்கு பெரும்பங்கு வகித்தது. பலநூற்றாண்டுக்காலம் தமிழ் பண்பாட்டின் முகமாக சமணமே விளங்கியது.
களப்பிரர்கள் எங்கும் செல்லவில்லை. அவர்கள் இங்குள்ள மக்களுடன் ஐக்கியமாகிவிட்டிருக்கக் கூடும். தமிழ்கத்தில் உள்ள பலசாதிகள் [குறிப்பாக முத்தரையர் போன்ற சாதிகள்] களப்பிரர் வழித்தோன்றல்களாக இருக்கலாம். அவர்களின் வரலாற்றை நாம் இன்று தெளிவாக பகுப்பாய்வுசெய்ய முடியாது. நெடுங்காலம் ஆகிவிட்டது.
ஆனால் அவர்களின் குலதெய்வங்கள் ஆசாரங்கள் ஆகியவற்றை வட இந்திய — குறிப்பாக ஆந்திர, கனன்டநாட்டு– குலதெய்வங்கள் ஆசாரங்களுடன் ஒப்பிட்டு ஆய்வுசெய்தால் புதிய வெளிச்சங்கள் கிடைக்கலாம்
களப்பிரர்காலகட்டம் தமிழகத்துக்கு முக்கியமான அரசியல்-பொருளியல்-பண்பாட்டுக் கொடைகளை வழங்கியது என்றே நான் எண்ணுகிறேன். வரும்காலத்தில் விரிவான ஆய்வுகள் வழியாக இது மேலும் நிறுவப்படக்கூடும்
ஜெ
கல்கி திரு.ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பொன்னியின் செல்வன் நாவலில் முத்தரையரைப் பற்றிய செய்தி.......!
புது வெள்ளம் - அத்தியாயம் 3
விண்ணகரக் கோயில்
சில சமயம் சிறிய நிகழ்ச்சியிலிருந்து பெரிய சம்பவங்கள் விளைகின்றன.வந்தியத்தேவன் வாழ்க்கையில் அத்தகைய ஒரு சிறிய நிகழ்ச்சி இப்போது நேர்ந்தது. சாலையோரத்திலே நின்று பழுவேட்டரையரின் பரிவாரங்கள் போவதை வந்தியத்தேவன் பார்த்துக் கொண்டிருந்தான் அல்லவா? அவன் நின்ற இடத்துக்குச் சற்றுத் தூரத்திலேயே அவனுடைய குதிரை நின்று கொண்டிருந்தது.
பழுவேட்டரையரின் ஆட்களிலே கடைசியாகச் சென்ற சிலரின் பார்வை அக்குதிரை மீது சென்றது.
"அடே! இந்தக் குருதையைப் பாரடா!" என்றான் ஒருவன்.
"குருதை என்று சொல்லாதேடா! குதிரை என் சொல்!" என்றான் இன்னொருவன்.
"உங்கள் இலக்கோண ஆராய்ச்சி இருக்கட்டும்; முதலில் அது குருதையா அல்லது கழுதையா என்று தெரிந்து கொள்ளுங்கள்!" என்றான் இன்னொருவன் வேடிக்கைப் பிரியன்.
"அதையும் பார்த்து விடலாமடா!" என்று சொல்லிக் கொண்டு, அந்த ஆட்களில் ஒருவன் குதிரையை அணுகி வந்தான். அதன் மேல் தாவி ஏற முயன்றான். ஏறப் பார்க்கிறவன் தன் எஜமானன் அல்ல என்பதை அந்த அறிவுக் கூர்மையுள்ள குதிரை தெரிந்து கொண்டது. அந்த வேற்று மனிதனை ஏற்றிக் கொள்ள மாட்டேன் என்று முரண்டு பிடித்தது!
"இது பொல்லாத குதிரையடா! இதன் பேரில் நான் ஏறக் கூடாதாம்! பரம்பரையான அரசகுலத்தவன்தான் இதன் மேல் ஏறலாமாம். அப்படியென்றால் தஞ்சாவூர் முத்தரையன் திரும்பி வந்துதான் இதன் மேல் ஏறவேண்டும்!" என்று அவன் சமத்காரமாய்ப் பேசியதைக் கேட்டு மற்ற வீரர்கள் நகைத்தார்கள்.
ஏனென்றால், தஞ்சாவூர் முத்தரையர் குலம் நசித்துப் போய் நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது சோழர்களின் புலிக்கொடி தஞ்சாவூரில் பறந்து கொண்டிருந்தது.
"குதிரையின் எண்ணம் அவ்விதம் இருக்கலாம். ஆனால், என்னைக் கேட்டால், செத்துப் போன தஞ்சாவூர் முத்தரையனைக் காட்டிலும் உயிரோடு இருக்கிற தாண்டவராயனே மேல் என்பேன்!" என்றான் மற்றொரு வீரன்.
"தாண்டவராயா! உன்னை ஏற்றிக் கொள்ள மறுக்கும் குதிரை நிஜக் குதிரைதானா என்று பார்த்துவிடு! ஒருவேளை, பெருமாளின் திருநாளுக்கு வந்த பொய்க்கால் குதிரையாயிருந்தாலும் இருக்கலாம்!" என்றான் மற்றொரு பரிகாசப் பிரியன்.
"அதையும் சோதித்துப் பார்த்து விடுகிறேன்" என்று சொல்லிக் கொண்டு குதிரை மீது ஏறப்போன தாண்டவராயன் அதனுடைய வாலை முறுக்கினான். ரோஷமுள்ள அக்குதிரை உடனே பின்னங்கால்களை நாலு தடவை விசிறி உதைத்துவிட்டு ஓட்டம் பிடித்தது.
"குருதை ஓடுகிறதடா! நிஜக் குருதை தானடா!" என்று அவ்வீரர்கள் கூச்சலிட்டு, "உய்! உய்!" என்று கோஷித்து, ஓடுகிற குதிரையை மேலும் விரட்டினார்கள்!.
குதிரை, திருநாள் கூட்டத்துக்கிடையே புகுந்து ஓடிற்று. ஜனங்கள் அதன் காலடியில் மிதிபடாமலிருப்பதற்காகப் பரபரப்புடன் அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டார்கள். அப்படியும் அவர்களில் சிலர் உதைபட்டு விழுந்தார்கள். குதிரை நெறிகெட்டு வெறி கொண்டு ஓடியது.
இவ்வளவும் வந்தியத்தேவன் கண்ணெதிரே அதி சீக்கிரத்தில் நடந்து விட்டது. அவனுடைய முகத் தோற்றத்திலிருந்து குதிரை அவனுடைய குதிரை என்பதை ஆழ்வார்க்கடியான் கண்டு கொண்டான்.
"பார்த்தாயா, தம்பி! அந்தப் பழுவூர்த் தடியர்கள் செய்த வேலையை! என்னிடம் நீ காட்ட வந்த வீரத்தை அவர்களிடம் காட்டுவதுதானே!" என்று குத்திக் காட்டினான்.
வந்தியத்தேவனுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. எனினும் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையைக் கடைப்பிடித்தான். பழுவூர் வீரர்கள் பெருங்கூட்டமாயிருந்தனர். அவ்வளவு பேருடன் ஒரே சமயத்தில் சண்டைக்குப் போவதில் பொருள் இல்லை. அவர்கள் இவனுடன் சண்டை போடுவதற்காகக் காத்திருக்கவும் இல்லை. குதிரை ஓடியதைப் பார்த்துச் சிரித்து விட்டு, அவர்களும் விரைந்து மேலே நடந்தார்கள். குதிரை போன திசையை நோக்கி வந்தியத்தேவன் சென்றான். அது கொஞ்ச தூரம் ஓடிவிட்டுத் தானாகவே நின்று விடும் என்று அவனுக்குத் தெரியும். ஆகையால் அதைப் பற்றி அவன் கவலைப்படவில்லை. பழுவேட்டரையரின் அகம்பாவம் பிடித்த ஆட்களுக்கு புத்தி கற்பிக்க வேண்டும் என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் அழுத்தமாகப் பதிந்தது.
புளியந்தோப்புக்கு அப்பால், ஜன சஞ்சாரமில்லாத இடத்தில் குதிரை சோகமே வடிவாக நின்று கொண்டிருந்தது. வந்தியத்தேவன் அதன் அருகில் சென்றதும், குதிரை கனைத்தது.'ஏன் என்னை விட்டுப் பிரிந்து சென்று, இந்தச் சங்கடத்துக்கு உள்ளாக்கினாய்?' என்று அந்த வாயில்லாப் பிராணி குறைகூறுவது போல் அதன் களைப்புத் தொனித்தது. வந்தியத்தேவன் அதன் முதுகைத் தட்டிச் சாந்தப்படுத்தலானான். பிறகு அதைத் திருப்பி அழைத்துக் கொண்டு சாலைப் பக்கம் நோக்கி வந்தான். திருவிழாக் கூட்டத்தில் இருந்தவர்கள் பலரும் அவனைப் பார்த்து, "இந்த முரட்டுக் குதிரையை ஏன் கூட்டத்தில் கொண்டு வந்தாய், தம்பி! எத்தனை பேரை அது உதைத்துத் தள்ளிவிட்டது?" என்றார்கள்.
"இந்தப் பிள்ளை என்ன செய்வான்? குதிரைதான் என்ன செய்யும்? அந்தப் பழுவேட்டரையரின் முரட்டு ஆட்கள் அல்லவா இப்படிச் செய்துவிட்டார்கள்?" என்று இரண்டொருவர் சமாதானம் சொன்னார்கள்.
ஆழ்வார்க்கடியான் இன்னமும் சாலையில் காத்துக் கொண்டு நின்றான். "இதேதடா சனியன்? இவன் நம்மை விடமாட்டான் போலிருக்கிறதே!" என்று எண்ணி வந்தியத்தேவன் முகத்தைச் சுளுக்கினான்.
"தம்பி! நீ எந்தப் பக்கம் போகப் போகிறாய்?" என்று ஆழ்வார்க்கடியான் கேட்டான்.
"நானா? கொஞ்சம் மேற்குப் பக்கம் சென்று, பிறகு தெற்குப் பக்கம் திரும்பி, சிறிது கிழக்குப் பக்கம் வளைத்துக் கொண்டு போய் அப்புறம் தென் மேற்குப் பக்கம் போவேன்!" என்றான் வந்தியத்தேவன்.
"அதையெல்லாம் நான் கேட்கவில்லை இன்று ராத்திரி எங்கே தங்குவாய் என்று கேட்டேன்."
"நீ எதற்காக அதைக் கேட்கிறாய்?"
"ஒருவேளை கடம்பூர்ச் சம்புவரையர் அரண்மனையில் நீ தங்குவதாயிருந்தால், எனக்கு அங்கே ஒரு வேலை இருக்கிறது.."
"உனக்கு மந்திரதந்திரம் தெரியுமா, என்ன? நான் கடம்பூர் அரண்மனைக்குப் போகிறேன் என்பதை எப்படி அறிந்தாய்?"
"இதில் என்ன அதிசயம்? இன்றைக்குப் பல ஊர்களிலிருந்தும் பல விருந்தாளிகள் அங்கே வருகிறார்கள். பழுவேட்டரையரும் அவர் பரிவாரமும் அங்கேதான் போகிறார்கள்."
அணிந்துரை
இந்நூலின் ஆசிரியர் டாக்டர். இரா.நாகசாமி இவர்கள் தமிழிலும் வடமொழியிலும் ஆங்கிலத்திலும் நல்ல புலமை பெற்றவர். கடந்த சில ஆண்டுகளாகப் பல நாளேடுகளில் இவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே "தவம் செய்த தவம்" என்ற இந்த நூல்.
டாக்டர். நாகசாமி காஞ்சி பரமாச்சாரியாரின் பரம பக்தர். தான் கண்டுபிடித்த ஒவ்வொரு செப்பேட்டையும் அப்பெரியவரிடம் படித்துக் காட்டி அப்பெரியவரின் கருத்துக்களைக் கேட்டு இன்புற்றிருக்கிறார். அது போன்ற ஒரு நிகழ்ச்சியைச் சுவைபட "மூவர் கண்ட செப்பேடு" என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு தொல்பொருள் துறையின் இயக்குனராக டாக்டர். நாகசாமி இருந்தபோது இவர் மேற்கொண்ட கரூர், அழகன்குளம் அகழாய்வும் கொடுமணல் அகழாய்வும் குறிப்பபிடத்தக்கவை. இவர் சங்ககால ஆய்விற்கு ஒளியூட்டிய இரண்டு கண்டுபிடிப்புக்களான அதியமான் கல்வெட்டும் கரூரில் கிடைத்த "கெல்லிப்புறை" நாணயமும் இத்துறை இயக்குனராக இருந்தபோது நடந்தவை. .
அதியமான் கல்வெட்டை முதலில் படித்தபோது ஏற்பட்ட மனநிலையைக் குறித்து அழகாக எழுதியுள்ளார். "குகைக்கு வெளியே ஓடிவந்தேன். மாணவர் செல்வராசைக் கட்டி அணைத்துக் கொண்டேன். மீண்டும் குகைக்குள் ஓடினேன் அந்தக் கல்வெட்டை எழுத்து எழுத்தாகப் படித்தேன். மீண்டும் வெளியே ஓடிவந்தேன்." என்று கூறியுள்ளது அவருக்குப் புதிய வரலாற்றுச் செய்திகளைக் கண்டுபிடிப்பதில் உள்ள ஆர்வத்தைக் காட்டுகிறது.
ஆசிரியர் முகவுரை
நூறு ஆண்டுகளாக தமிழகத்தைப் புண்ணிய பூமியாக மாற்றி உலகம் முழுவதற்கும் ஞான ஒளியும் அருள் ஒளியும் அளித்துவரும் மகாப்பெரியவர் அவர்கள் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய சுவாமிகள் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் திருவடிக் கீழ் நெருங்கி அமர்ந்து வரலாறு பற்றியும் கல்வெட்டுக்கள் பற்றியும் கலை பற்றியும் பேசும் பெரும்பேறு எனக்குப் பலமுறை கிட்டியுள்ளது. பல சமயங்ளில் மணிக்கணக்கில் என்னிடம் பெரியவர்கள் பேசிக் கெண்டிருந்திருக்கிறார்கள் ஒரு சமயம் இரண்டரை மணி நேரத்துக்கு மேல் அத்வைத சித்தாந்தத்தை எனக்குத் தெளிவாக எடுத்துப் புகட்டியுள்ளார்கள். அந்த மகானைப் பற்றிக் கட்டுரைகள் சில எழுதும் வாய்ப்பு பெற்றேன். அவற்றை இந்நூலில் முதலில் தொகுத்து அம்மகானின் திருவடிகளில் மலராகச் சூட்டுகின்றேன். அவரது பெருமையை எழுத்தால் வடிக்க ஒண்ணுமோ? ஆதலின் "தவம் செய்த தவம்" என்று அவரது வரலாற்றுக் கட்டுரையையே நூலின் தலைப்பாக இட்டுள்ளேன்.
இந்நூலில் எனது பல கட்டுரைகள் தொகுத்துக் கொடுக்கபட்டுள்ளன. இவை வெளிவருவதற்குப் பல அறிஞர்களும் அன்பர்களும் எனக்கு ஊக்கம் அளித்துள்ளனர். "தினமலர்" ஆசிரியர் தி.ரு. இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களும் தினமணி ஆசிரியராகப் பல்லாண்டு அரும்பணியாற்றிய நண்பர் ஐராவதம் மகாதேவன் அவர்களும் சிறப்பாக குறிக்கத் தகுந்தவர்கள் ஆவர். என்னை "எழுதுங்கள்" "எழுதுங்கள்" என்று ஊக்கிவித்ததோடல்லாமல் தங்கள் நாளிதழ்களில் தயங்காது வெளியிட்ட இப்பெருந்தகைகள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்நூலில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான கட்டுரைகள் இப்பெரியவர்களின் அன்பாலும் ஊக்கத்தாலும் மலர்ந்தவை எனக் கூறி கொள்வதில் பெருமைப் படுகிறேன். "அமுதசுரபி" ஆசிரியர் நண்பர் விக்ரமன் அவர்கள் என்பால் மிகுந்து அன்பு பூண்டவர்கள். எனது பல கட்டுரைகளை தமது அமுதசுரபியில் வெளியிட்டுள்ளார்கள். அவர்களுக்கு வரலாற்றில் அளவு கடந்த ஈடுபாடு உண்டு. அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். திரு. மணியன் வெளியிட்டுவரும் "ஞானபூமி" "கலைமகள்" முதலிய பத்திரிகைகளும் எனது கட்டுரையை வெளியிட்டுள்ளன. இவ்வனைவருக்கும் எனது நன்றியை எழுத்தில் வடிக்கிறேன். சில கட்டுரைகள் வெளிவந்த போது பல நண்பர்கள் கடிதம் எழுதிப் பாராட்டினர். "முத்தரையர்" என்ற கட்டுரைக்கு இருநூற்றுக்கும் மேற்ப்பட்ட பாராட்டுக் கடிதங்கள் வந்தன. ஒரு சில கடிதங்களையும் அக்கட்டுரையில் இணைத்துள்ளேன்.
இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிச் சிறப்புச் செய்துள்ள மதிபிற்குரிய "தினமலர்" ஆசிரியரான திரு. இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றி உரித்தாகும்.
இக்கட்டுரைகள் அனைத்தும் நூல்வடிவில் வர வேண்டும் என்று பெரிதும் விரும்பியவர் நமது அன்புச் சீடர் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள். அவரே முன்னின்று இந்நூலை உருவாக்கியுள்ளார். அவரது அன்புக்கும் ஆர்வத்துக்கும் கடமைப் பட்டுள்ளேன். அவருக்கு எனது ஆசிகள்.
இரா. நாகசாமி
மூவர் கண்ட செப்பேடு
இராஜேந்திர சோழனுடைய செப்பேடுகள் சமீபத்தில் தென் ஆற்காடு மாவட்டம் விழுப்புரம் வட்டம் ஏசாலம் என்ற கிராமத்தில் கிடைத்தமை அனைவரும் அறிந்ததே. இந்த ஏசாலம் என்ற கிராமத்திற்கு அருகில் எண்ணாயிரம் என்ற ஊர் உள்ளது. தமிழ்ப் புலவர்களில் சிறப்பு வாய்ந்த காளமேகப் புலவர் இந்த எண்ணாயிரம் கிராமத்தில் பிறந்தவர் என காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோயில் கோபுரத்தில் உள்ள ஒரு கல்வெட்டு கூறுகிறது. இந்த எண்ணாயிரம் என்ற கிராமத்தில் இராஜராஜன் காலத்தில் ஒரு பெரிய கோயில் எடுக்கப்பட்டிருந்தது. இப்பகுதியையே இராஜராஜ சதுர்வேதிமங்கலம் என்று இராஜராஜன் பெயரிட்டிருந்தான். இராஜேந்திரசோழன் இங்கு ஒரு பெரிய கல்லூரியை நிறுவி அங்கு வேதம் இலக்கணம் சாத்திரங்களை முறையாகப் படிக்க வழி வகை செய்திருந்தான். ஏசாலம் கிராமத்திற்கு அருகில் பிரம்மதேசம் என்ற ஊர் உள்ளது. அங்கும் சோழர் காலத்துக் கோயில்கள் இருக்கின்றன. எண்ணாயிரம் ஏசாலம் பிரம்மதேசம் ஆகிய இந்தப் பகுதிகள் முழுவதுமே சோழர் காலத்தில் மிகச் சிறந்த பகுதியாகத் திகழ்ந்திருக்கின்றன.
இச்சிறப்பு வாய்ந்த பகுதியில் சிவபெருமானுக்கு திருஇராமேச்வரம் என்ற பெயரில் ஒரு கோயிலை இராஜேந்திர சோழனுடைய இராஜகுரு சர்வசிவபண்டிதர் என்பவர் கட்டினார். இக்கோயிலுக்கு இராஜேந்திரசோழன் ஒரு ஊரை தானமாக அளித்துள்ளான். இந்த தானத்தை இராஜேந்திர சோழன் காஞ்சீபுரத்தில் தன்னுடைய அரண்மனையில் குளிக்கும் மாளிகயில் இருந்த போது தானம் செய்தான் என்று அறிகிறோம். இதனைக் குறிக்கும் செப்பேடுதான் இப்போது ஏசாலம் கிராமத்தில் இராமேச்வரம் கோயிலில் உள்ள பிராகாரத்தில் பூமிக்கடியில் இருந்து கிடைத்தது.
இந்தச் சிறப்பு வாய்ந்த செப்பேட்டை, ஆகஸ்ட் 22 ஆம் தேதி நான் காஞ்சி பரமாச்சாரியாள் இடத்திலும் காமகோடி மடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடத்திலும் பால பெரியவாள் சஙகர விஜயேந்திர சுவாமிகள் அவர்களிடத்திலும் காண்பிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன்.
பரமாசாரியாள் அவர்கள் இந்தச் செப்பேட்டினைப் பார்த்து ஓர் அருமையான செய்தியை எடுத்துரைத்தார்கள்.
"திருவிடைமருதூரில் ஓர் கல்வெட்டில் ஒரு சமஸ்கிருத ஸ்லோகம் இருப்பதாக என் வாத்தியார் எனக்குச் சொல்லியிருக்கிறார்கள்" என்று எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் தமது ஆசிரியரிடம் கற்ற கல்வெட்டுப் பகுதியை பளிச்சென்று எடுத்துரைத்தார். அக்கல்வெட்டு கரிகாலச் சோழனுடைய கல்வெட்டின் தொடக்கம். அந்த ஸ்லோகத்தில்
"பாத்ராகலித வேதானாம் சாஸ்த்ர மார்கானுசாரிநாம் ததேத் அரிகாலஸ்ய கரிகாலஸ்ய சாசனம்"
என்று எழுதியிருக்கிறதாக என் வாத்தியார் சொன்னார். அது எங்கு இருக்கிறது என்றும் இன்னும் ஒருவரும் சரியாகப் பார்க்கவில்லை. இந்த சாசனம் பார்ப்பதற்குச் சுலபமாக இருக்கும். ஆனால் அதற்கு அர்த்தம் கொஞ்சம் சிரமப்பட்டுத் தான் சொல்ல வேண்டும். "பாத்ராகலித வேதானாம்" என்றால் வேதம் கற்றவர்களைக் காக்கின்றவன் பரிபாலிப்பவன் என்று அர்த்தம். சாஸ்த்ர மார்க்கானு சாரிநாம் என்பது "அமார்க்க அனுசாரிநாம்" என்று பிரிக்கப்படவேண்டும். அறத்தின் வழியில் நிற்காதவர்களைத் தண்டிப்பவன் என்று இதற்குப் பொருள் கூற வேண்டும். அப்படிப்பட்டவன் அரிகாலன். "அரிகாலன்" என்றால் ஒனக்குத் தெரியுமோல்லியோ?" என்று பரமாச்சாரியாள் என்னைக் கேட்டார்கள். தெரியும் என்று சொன்னேன். "என்ன அர்த்தம்" என்று கேட்டார்கள். எதிரிகளுக்கு காலன் போன்றவன் என்று சொன்னேன். அந்த எதிரிகளுக்குக் காலனாகிய கரிகாலனுடைய சாசனம் இது என்று என் வாத்தியார் எனக்குச் சொல்லியிருக்கிறார் என்று பரமாச்சாரியாள் கூறிவிட்டு மேலும் தொடர்ந்தார்கள்.
"சோழ ராஜாவின் தலைநகரமான உறையூர் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ளது. அங்கு ஆட்சி புரிந்த சோழ இராஜாவுக்கு இரண்டு தேவிமார்கள். ஒரு சமயம் நாட்டில் கல்மாரி பொழிய ஆரம்பித்தது. நாட்டு மக்களெல்லாம் குடிபெயர்ந்து போனார்கள். அப்போது சோழராஜாவும் தன் தேவிமார்களோடு வெளியேறத் தொடங்கினார். கூட வந்தவர்கள் பலர் இறந்து போய்விட்டார்கள். இராஜாவுடைய முதல் மனைவி கர்ப்பமாக இருந்தாள். அவளால் இராஜாவோடு வேகமாக நடக்க முடியவில்லை. அதனால் இராஜா அந்தப் பெண்ணை வழியிலேயே தள்ளிவிட்டு மற்றொரு பெண்ணை அழைத்துக் கொண்டு நதியில் இறங்கி அக்கரை செல்வதற்காக போக ஆரம்பித்தார். ஆனால் தள்ளிவிடப்பட்ட முதல் பெண்ணின் அதிர்ஷ்டம் அங்கு கொஞ்சம் ஜலம் இருந்தது. அவள் அந்த ஜலத்தில் அடித்துச் செல்லப்பட்டு லால்குடிக்கு பக்கத்தில் ஓர் ஊரில் கரையில் வந்து சேர்ந்தாள். அப்போது ஆற்றங்கரைக்கு வந்த ஒரு பிராமணர் அந்தப் பெண் தனியாக இருப்பதைக் கண்டு தன்வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கே அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மற்றொரு தேவியோடு போன இராஜா மண்மாரியில் சிக்கி அப்படியே மறைந்து போனார்.
நாட்டில் ராஜா இல்லாததால் ஊர் ஜனங்கள் பட்டத்து யானை கையில் ஒரு மாலையைக் கொடுத்து அந்த மாலையை அது யார் கழுத்தில் போடுகிறதோ அவனையே தங்கள் இராஜாவாக ஏற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார்கள். அந்த யானை லால்குடிக்குப் பக்கத்தில் அந்தக் குழந்தை இருந்த ஊருக்கு வந்தது. அந்தக் குழந்தை அப்போது வளர்ந்து சிறுவனாக இருந்தான். அவன் கழுத்தில் யானை மாலையைப் போட்டது. மற்றவர்கள் எல்லோரும் அதைப் பார்த்து அதிசயித்தினர். அந்தச் சிறுவன் யானை மீது ஒரே தாவலில் ஏறி உட்கார்ந்து கொண்டான். அவனுக்கு ஐந்து யானை பலம் இருந்தது. அதனால் அவன் அம்மா அவனது காலில் கரியினால் நான்கு கோடு வரைந்து அவனுக்கு இருந்த பலத்தைக் குறைத்து விட்டாள். காலில் கரியினால் கோடு போட்டதால் அவனுக்கு கரிகாலன் என்று பெயர் என்று புராணம் கூறும்" என்று கரிகாலனைப் பற்றிய பழைய கதையைப் பரமாச்சாரியாள் கூறினார்கள்.
அதன் பின்னர் செப்பேடு வாசகம் முழுவதையும் ஒன்று விடாமல் படித்தார்கள். அதில் கரிகாலனை கூறும் இடத்தில் "அரிகாலன்" என்று திருவிடைமருதூர்க் கல்வெட்டு கூறியுள்ளதைப் போலவே ஒரு செய்யுள் வந்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. அதைப் படித்து விட்டு பரமாச்சாரியாள் "இதோ அதைப் போலவே இதிலும் வந்திருக்கிறதே" என்று கூறினார்கள்.
கரிகாலன் காலத்திலேயே அவன் பெயருடைய முத்திரைகளில் இது போல் சாசனங்கள் பொறிக்கப்பட்டன போலும்! அது வழி வழியாக வந்திருக்கிறது. அந்த கரிகாலனின் சாசனம் இப்போதிருக்கும் இடம் தெரியாவிட்டாலும் கரிகாலனின் ராஜமுத்திரையின் வாசகம் அது என்பதை பரமாசாரியாள் மூலமாக நாம் அறிய முடிகிறது. அது முற்றிலும் வரலாற்றுச் சாசனமாகவே இருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆயிரம் ஆம்டுகளுக்கு முன்னரே கரிகாலனின் சாசன வாசகம் வழக்கில் இருந்திருக்கிறது என்பதை இராஜேந்திர சோழனின் செப்பேட்டு ஸ்லோகம் தெளிவாகக் கூறுகிறது. இதை பரமாசாரியாள் அனுக்கிரகத்தாலேயே நாம் அறிகிறோம். ஒரு ஒப்பற்ற வரலாற்று செய்தி இதன் வாயிலாகக் கிடைத்தது எனப் பெரும் மகிழ்வு எய்தினேன்.
பரமாசாரியாள் செப்பேட்டை தன் அருகில் கொண்டு வரச் சொல்லி ஒவ்வொரு ஏட்டிலும் உள்ள வாசகங்களைக் குறிப்பாக கிரந்த எழுத்துக்களில் உள்ள வாசகங்களை முழுமையாகத் தாமே வாசித்தார்கள். அதை வாசிக்கும்போதே மேலும் ஒரு அரிய செய்தியை எடுத்துரைத்தார்கள். "கிரந்த எழுத்து இருக்கு பாரு. அது ஆயிரம் வருஷமா மாறவே இல்லை! அப்படியே இருக்கு! தமிழ் எழுத்து காலப்போக்கில் வளர்ச்சி அடைந்து இப்போது இருக்கிற நிலையை அடைந்து இருக்கு! இந்தச் செப்பேட்டிலே இருக்கிற கிரந்தத்தையும் தமிழையும் பார்த்தால் அது நன்னா தெளிவாக இருக்கு" என்று கூறினார்கள்.
தமிழ்நாட்டில் சமஸ்கிருதத்தை எழுதப் பயன்படுத்தப்பட்ட எழுத்துக்கு "கிரந்தம்" என்று பெயர். அண்மைக்காலம் வரையில் தமிழ் நாட்டில் சம்ஸ்கிருத நூல்கள் கிரந்த எழுத்து வாயிலாகவே படிக்கப்பட்டு வந்தன. ஆதலின் கிரந்தம் படிக்கத் தெரிந்தவர்கள் இன்றும் நம்மிடத்தில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே கல்வெட்டுக்களில் உள்ள கிரந்த எழுத்துக்களையும் பழைய தமிழ்க் கல்வெட்டுக்களையும் மிக விரைவாகப் படித்து விடலாம் என்று உண்மையும் புலப்பட்டது. சாதாரணமாக அச்சடிக்கப்பட்ட புத்தகத்தை நாம் எப்படி வாசிப்போமோ அப்படி இந்தச் செப்பேட்டை பரமாசாரியாள் வாசித்ததை நான் அருகிலேயே இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடன் என் பெண் உமாவும் கூட வந்திருந்தாள். அவளும் என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். அவளைக் காண்பித்து பாதி படித்துக் கொண்டிருந்த ஆசாரியாள் "இவளுக்கு இதெல்லாம் படிக்கத் தெரியுமா" என்று கேட்டார். "கொஞ்சம் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்" என்று சொன்னேன். அவளுக்கு இதையெல்லாம் நன்னா சொல்லிக்கொடு என்று ஆசி கூறி மேலே தொடர்ந்தார்.
குறிப்பாக தஞ்சாவூரில் இராஜராஜ சோழன் பெரிய கோயிலைக் கட்டிய பகுதிகளையும் கங்கை கொண்ட சோழபுரத்தில் இராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழீச்சவரம் என்னும் பெரிய கோயிலைக் கட்டியதையும் இந்தச் செப்பேடுகள் குறிக்கின்றன. இந்தச் செப்பேட்டில் இவை இரண்டும் மிகவும் அருமையாக குறிக்கப்பட்டுள்ள செய்திகளாகும். அப்பகுதியை குறிக்கும் இடத்தை இரண்டு மூன்று தடவை திருப்பித் திருப்பி படித்தார்கள். அத்துடன் இராஜேந்திர சோழன் காஞ்சிபுரத்து மகாசாலையில் இருந்த அறிஞர்களுக்கு ஏராளமான தானம் அளித்த பகுதியையும் காஞ்சிபுரத்தில் அரசனுடைய அரண்மனை இருந்த பகுதியையும் படித்தார்கள். அவ்வாறு ஆசாரியாள் படித்துக் கொண்டு வரும்போதே நான் படித்திருந்த சில வாசகங்களைக் திருத்திக் கொடுத்தார்கள். அந்தப் பெருமையை எப்படி சொல்வதென்றே தெரியவில்லை.
செப்பேட்டில் முதல் பகுதியில் குறிப்பிட்டுள்ள அரசர்கள் எல்லாம் புராண அரசர்கள் என்றும் விஜயாலயன் தொட்டு குறிப்பிடப்பட்டவர்கள் தான் வரலாற்று அரசர்கள் என்றும் ஆசாரியாள் குறிப்பிட்டது அவர்களுக்கு வரலாற்றில் எவ்வளவு ஆழ்ந்த ஈடுபாடு உள்ளது என்பதைப் புலப்படுத்தியது. ஆசாரியாள் இந்த ஏசாலம் இராஜேந்திர சோழனுடைய செப்பேட்டை சுமார் 11/2 மணி நேரம் படித்து அதில் உள்ள செய்திகளைப் பற்றி பேசியபோது தெய்வமே நமக்கு அரும்செய்திகளை எடுத்துப் புகட்டுவது போல் என் உள்ளத்தில் உணர்வு நிறைந்தது. இதை முற்றிலும் படித்துவிட்டு பரமாச்சாரியாள் "நீ இதை புது பெரியவாளிடத்தில் காண்பித்துவிட்டு அந்தக் கோயிலைப் பற்றியும் சொல்லிவிட்டு போ. அவர் அதுக்கு ஏற்பாடு செய்வா" என்று அருள் பாலித்தார். காஞ்சி பெரியவரே படிக்கும் பேற்றினை இச்செப்பேடு பெற்றது என்பதால் அச்செப்பேடு வரலாற்றில் மேலும் சிறப்பிடம் பெறுகிறது என்பதில் ஐயமில்லை.
இராஜேந்திர சோழன் காஞ்சீபுரத்தில் தனது அரண்மனையில் தனது குளிக்கும் சாலையில் இருந்த சமயம் ஏசாலம் கிராமம் கோயிலுக்கு நிலம் தானம் செய்தான் என்று செய்தியை ஏசாலம் செப்பேடு கூறுகிறது. அரசன் இட்ட ஆணையை அவனது ஒலை எழுதும் மும்முடி சோழன் என்பவன் எழுதினான். அவன் எழுதிய வாசகம் சரியாக இருக்கிறதா? இல்லையா? என நான்கு அதிகாரிகள் ஒப்பிட்டுப் பார்த்தனர். சாவூர் பரஞ்சோதி, அணிமூரி நாடாழ்வான், உத்தமசோழ பிரும்மாதிராயன், உத்தமசோழ சோழகோன் என்று அந்நால்வரின் பெயரும் குறிக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பிட்டுள்ளபடி நடக்க வேண்டும் என இராஜேந்திர சோழ பிரும்மாதிராஜன் ஆணையிட்டான். இவன் அரசனுக்கு மந்திரியாகவும் சேனைத் தலைவனாகவும் திகழ்ந்தான். இவன் ஆணைப்படி ஓலையை எடுத்துக் கொண்டு அரங்கன் பனிச்சை என்பவனும் கிருஷ்ணபட்டன் என்பவனும் அரண்மனையிலிருந்து ஏசாலம் என்ற ஊருக்குச் சென்றனர். அந்த ஓலையில் அரசனுடைய மெய்க்கீர்த்தியும் அவன் கொடுத்த தானமும் ஊரார் என்ன செய்ய வேண்டும் என்பதும் எழுதப்பட்டிருந்தது. அந்த ஓலையை "திருமுகம்" என்று அழைத்தனர். அவ்வோலை அவ்வூருக்கு வந்ததையும் ஊரார் அதை எப்படி பெற்றார்கள் என்பதையும் என்ன செய்தார்கள் என்பதையும் செப்பேடு அழகாகக் கூறுகிறது. அந்த செப்பேடு வாசகத்தை அப்படியே பார்ப்போம்.
"நாட்டோ முக்கு பிரசாதஞ் செய்தருளிவர நாட்டோ மும் திருமுகம் கண்டு எழுந்து எதிர் சென்று தொழுது வாங்கி தலைமேல் கொண்டு எல்லை தெரித்துக் காட்டி பிடிசூழ்ந்து பிடாகை நடந்தது கல்லும் கள்ளியும் நாட்டி அறவோலை செய்தோம்" என்று ஏசாலம் நாட்டு மக்கள் அரசனின் ஆணையை மரியாதையாக எதிர் சென்று தொழுது பெற்று தலைமேல் கொண்டு வலம் வந்தனர். யானை மேல் ஏறி, கொடி ஒன்று கையில் ஏந்தி புதியதாக வகுக்கப்பட்ட ஊரை வலம் வந்து அவ்வூருக்கு எல்லையை வகுத்து, எல்லயைக் குறிக்க எல்லைக் கற்களையும் பால் கள்ளிகளையும் எல்லைகளாக நட்டனர் என்பதையும் இதனால் அறிகிறோம். இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி. இது போலவே பிற செப்பேடுகளும் கூறுகின்றன.
இந்தப் பண்பு அக்காலத்தே நடைபெற்றது என அறிவோம். அது இன்றும் நம்மிடையே நடைமுறையில் உள்ளது என்ற செய்தியை காஞ்சி காமகோடி பீட பாலபெரியவாள் என்னிடத்தில் கூறியபோது நான் வியப்பில் ஆழ்ந்தேன். ஆம்! இன்றும் இது போன்ற நிகழ்ச்சி காஞ்சியில் நடைபெறுகிறது. ஆன்மிகத் துறையில் இப்பண்பு உள்ளது. ஏசாலம் செப்பேடுகளை பால பெரியவாள் பார்த்துப் படித்து போதுதான் இச் செய்தியைக் கூறினார்கள். காஞ்சி காமகோடி பீடம் மடத்திலிருந்து ஆச்சார்ய சுவாமிகள் வியாசபூஜைக்கு முதல் நாள் ஒரு "ஸ்ரீமுகம்" அனுப்பும் மரபு உண்டு. இந்த ஸ்ரீமுகத்தை மடத்தைச் சார்ந்த ஒருவர் காமாக்ஷி அம்மன் கோயிலில் கோபுர வாயிலில் நின்று படிக்கிறார். இதைக் கேட்க நகரப் பெருமக்கள் திரண்டு கூடுகிறார்கள். அவர்களுக்கு ஸ்ரீமுகம் வாசித்துக் காட்டப்படுகிறது. இதன் பின்னர் இவ்வோலையை நகரப் பெரியோர்கள் வணங்கி வாங்கி ஒரு பல்லக்கில் வைத்து நாத ஒலிகள் இசைப்ப நகரில் வலமாக எடுத்து வருகின்றனர். இது ஆண்டாண்டு தோறும் நடைபெறுகிறது. என்று பாலபெரியவாள் சொன்னார்கள். செப்பேட்டில் வந்துள்ள வாசகப்படி அப்படியே நடைபெறுகிறது என்று பாலபெரியவாள் கூறியபோது நம் நாட்டின் பண்பை எண்ணி எண்ணி மகிழந்தேன். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பெரியோரின் ஆணையை எவ்வாறு மதித்தனர் நம் நாட்டோ ர். இது போல் நம்மிடையே போற்றத்தகும் பண்புகள் இன்னும் எவ்வளவு இருக்கின்றனவோ அவற்றை நாம் தான் இன்னும் சரிவரக் கண்டு கொள்ளவில்லை என்று தோன்றியது. இச் செய்திக்காக பால பெரியவாளை மனதாரப் போற்றி வணங்கினேன். அரசனது ஆணையை செப்பேடு திருமுகம்" என்று கூறுகிறது. காஞ்சி மடம் அனுப்பும் ஆணையை "ஸ்ரீமுகம்" என்று அழைக்கின்றனர். என்னே ஒற்றுமை!
இச்செப்பேட்டையும் இதில் உள்ள இராஜேந்திர சோழனது ராஜமுத்திரையையும் வெகுவாக ரசித்துப் பார்த்தார்கள் புதுப்பெரியவாள் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். அத்துடன் அவ்வூர் கோயில் திருப்பணிகளுக்குக் காஞ்சி காமகோடி மடம் பொருளுதவியும் அளிக்கும் என்றும் அவ்வூர் கோயில் திருப்பணிக் குழவினரைத் தம்மைக் காண வரும்படியும் அழைப்பு விடுத்தார்கள். அப்போது என்னுடன் வந்திருந்த என் மைத்துனர் நாகராஜன் அக்காட்சியை அவசரம் அவசரமாக நிழற்படம் எடுத்தார்.
இக்காட்சி ஒரு வரலாற்றுச் சிறப்பான காட்சியாக அமையும் என நான் அப்பொழுது கருதவில்லை. இப்படம் எடுத்தபோது ஆகஸ்டு 22 ஆம் தேதி பிற்பகல் இரண்டு மணியிருக்கும். பிறகு மாலை நான்கு மணி வரையில் நான் ஸ்ரீமடத்திலேயே இருந்தேன். பின்னர் சென்னை திரும்பினேன். அன்று அதற்குப் பின்னர் யாரும் நிழற்படம் எடுத்ததாகத் தெரியவில்லை. அன்று இரவு தான் புதுப்பெரியவாள் ஜயேந்திரர் காஞ்சிபுரத்தை விட்டுப் புறப்பட்டு தலைக்காவேரி சென்றார்கள்.
காஞ்சி புதுப்பெரியவாள் ஜயேந்திரர் ஏசாலம் செப்பேட்டைப் பார்த்துக்கொண்டிருந்த போது பாலபெரியவாளும் உடனிருந்தார்கள். ஜயேந்திரர் பாலபெரியவாளிடம் செப்பேட்டு முத்திரையில் உள்ள புலி மீன் வில் வராகம் போன்ற சின்னங்களைப்பற்றி சிரிக்கப் சிரிக்கப் பேசி கொண்டிருந்தது இன்னம் மனத்தகத்தே நிலைத்து நிற்கிறது.
சோழர் கல்வெட்டில் ஆதிசங்கரர்
திருச்சிக்கருகில் திருவெறும்பூருக்கு அண்மையில் சோழமாதேவி என்னும் ஊரில் கைலாயமுடையார் கோயிலில் பொறித்துள்ள ஒரு கல்வெட்டு தமிழ்நாடு தொல்லியல் துறையைச் சேர்ந்த அதிகாரி அண்மையில் கண்டுபிடித்தார். முதலாம் இராஜராஜனின் பெயரனும் இராஜேந்திர சோழனின் மகனுமான வீரராஜேந்திர சோழனின் கல்வெட்டு அது. அவனது மெய்கீர்த்தியுடன் தொடங்குகிறது. கி.பி. 1065ஐச் சார்ந்தது. கல்வெட்டு தமிழில் உள்ளது. ஒரு சில சமஸ்கிருத சொற்கள் கிரந்த எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளன.
சோழமாதேவி ஊர்ச்சபையார் சங்கர பகவத்பாதர் அருளிய பாஷியத்துக்கு சிதாநந்தபட்டர் என்பவர் எழுதிய பிரதீபகம் என்னும் உரையை இவ்வூரில் விரித்து உரை நிகழ்த்துபவர்களுக்கு நிலம் தானமாகக் கொடுத்திருக்கிறார்கள். அதற்கு அளித்த சாஸனப்பத்திரம் அந்தக் கல்வெட்டு.
கல்வெட்டின் தொடக்கப் பகுதி பின்வருமாறு:
"பாண்டியகுலாசனி வளநாட்டு பிரமதேயம் ஸ்ரீ சோழமாதேவி
சருப்பேதி மங்கலத்து பெருங்குறி சபையோம். திருமாதிரி
நல்சாலை ஆழ்வார் திருமுற்றத்து கூட்டம் குறைவறக்
கூடியிருந்து பணிப்பணியால் பணித்து பகவத்பாதீயம் சாரீரக
பாஷ்யத்துக்கு சிதாநந்த பிடாரர் பண்ணிந பிரதீபகம் ஆகிற
வார்த்திகம் வாக்கணிப்பார்க்கு விருத்தியாக விட்ட நிலம்......"
என்று கூறுகிறது.
பகவத் பாதீயம்
வேதாந்தங்களான உபநிடதங்களின் தத்துவப் பொருளை ஆயும் சாஸ்திரத்துக்கு "சாரீரக மீமாம்ஸை" என்று பெயர். ஆதிசங்கர பகவத்பாதர் தாம் பிரும்ம சூத்ரத்துக்கு எழுதிய பாஷியத்தை "சாரீரக மீமாம்ஸை" என்றே கூறுகிறார். அதையே இக் கல்வெட்டு "பகவத் பாதீயம் சாரீரக பாஷ்யம்" என்று குறிக்கிறது.
ஆதி சங்கரரையும் அவரது பாஷ்யத்தையும் திட்ட வட்டமாக குறிக்கும் மிகவும் தொன்மையான ஆதார பூர்வமான கல்வெட்டு இதுவேயாகும். சோழ நாட்டல் கி.பி. 1065 க்கும் முன்பிருந்தே சங்கரரின் பாஷ்யம் பேணிப் படிக்கப்பட்டு வந்தது என்பதை இக்கல்வெட்டு உறுதி செய்கிறது. அந்த பாஷ்யம் "பகவத்பாதீயம்" என்று சோழர் காலத்தில் அழைக்கப்பட்டது என்பதையும் இக்கல்வெட்டு வாயிலாக அறிகிறோம்.
சிதாநந்தர்
இக்கல்வெட்டு மேலும் ஒரு செய்தியைத் தருகிறது. சங்கரபாஷ்யத்துக்கு சிதாநந்தர் என்ற ஒரு பெரியவர் விரிவுரை ஒன்று எழுதியிருக்கிறார். அதற்கு "ப்ரதீபகம்" என்றும் "வார்த்திகம்" என்றும் பெயர். அதைக் கல்வெட்டு "சிதாநந்த பிடாரர் பண்ணிந பிரதீபகம் ஆகிற வார்த்திகம்" என்று கூறுகிறது. சங்கரபாஷ்யத்துக்கு இதுகாறும் வந்துள்ள உரைகளின் பட்டியலை, நூல்களிலிருந்தும் சுவடிகளிலிருந்தும் திரட்டி காஞ்சி பரமாசார்யாள் ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறார். அப்பட்டியலில் கூட இப்பிரதீபகம் என்னும் உரை குறிக்கப்படவில்லை. ஆகையால் இந்நூல் தற்காலத்தில் கிடைக்கவில்லை என்றே கொள்ள வேண்டும். இதுகாறும் கிடைக்கபெறாத ஒர் உரையை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது என்பதும் இதன் ஒரு சிறப்பாகும்.
இந்நூல் இயற்றிய சிதாநந்தர் யார்? அவரது காலம் என்ன என்பதும் தெளிவாக இல்லை. எனினும் அவர் இக்கல்வெட்டுக்கு முன்னர் உரை எழுதி அது பிரபலமாக இருந்தது என்று இக்கல்வெட்டு வாயிலாகத் தெரிந்து கொள்கிறோம்.
காஞ்சி காமகோடி மட பாரம்பர்யத்தைக் குறிக்கும் நூல்களில் சித்சுகானந்தேந்திரர் என்று ஒரு பெரியவர் கி.பி. 8ம் நூற்றாண்டின் மத்தியில் காஞ்சி பீடத்தை அலங்கரித்ததாக ஒரு குறிப்பு உண்டு. அவருக்கு சிதாநந்தர் என்ற மறுபெயர் உண்டு என்றும் அவர் பாலாற்றங்கரையிலிருந்து ஓர் ஊரினர் என்றும் காஞ்சியில் சித்தியடைந்தவர் என்றும் குறிப்புகள் உள்ளன. கல்வெட்டில் குறிக்கப்பெறும் சிதாநந்தரும் காஞ்சி பீடாதிபதி சிதாநந்தரும் ஒருவரா வெவ்வேறானவர்களா என்று கூற இயலவில்லை.
சோழர் காலத்தில் சங்கரபாஷ்யம் சிறந்தது
முதலாம் இராஜராஜ சோழன், இராஜேந்திரன், வீரராஜேந்திரன் முதலிய சோழ மன்னர்களின் கல்வெட்டுகளிலிருந்து தமிழ்நாட்டில் கி.பி. 10 - 11ம் நூற்றாண்டுகளில் பல ஊர்களிலும் குறிப்பாக அரசர்கள் ஏற்படுத்திய புதிய ஊர்களில் வேதாந்த பாஷ்யங்பள் மிகவும் சிறப்பாக போதிக்கப்பட்டன என்று அறிய முடிகிறது. ஆனூர், எண்ணாயிரம், திருமுக்கூடல், திரிபுவனி ஆகிய ஊர்களில் அக் காலத்தில் கல்லூரிகள் இருந்ததையும் அங்கு வேதாந்தம் போதிக்கப்பட்டதையும் கல்வெட்டுகள் கூறுகின்றன.
சோழமாதேவி
சோழமாதேவி என்ற இவ்வூர் முதலாம் இராஜராஜ சோழனால் தோற்றுவிக்கப்பட்டது. அக்காலத்தில் ஊரின் மத்திய பகுதிக்கு "பிரும்மஸ்தானம்" என்று பெயர். இவ்வூரில் பிரும்மஸ்தானத்தில் ஒரு மண்டபம் இருந்தது. இதை "இராஜராஜன் அம்பலம்" என்றே ஒரு கல்வெட்டு கூறுகிறது. இதிலிருந்து இராஜராஜன் இவ்வூரைத் தோற்றிவித்த நாள் முதலே இங்கு வேதாந்தம் படிப்போர் இருந்திருக்கின்றனர் என அறியலாம்.
மேலும் பல அரிய செய்திகளை இந்திய நாட்டு வரலாறு அள்ளித்தரும் சோழமாதேவி கல்வெட்டு ஒரு வரலாற்றுக் கருவூலம் என்றே கூறலாம். இன்று பூஜையின்றி சிதிலமடைந்து கிடக்கும் இக்கோயிலைப் புதுப்பித்து மீண்டும் வழிபாடு நடத்த ஊர் மக்களும் தமிழக அரசும் ஆவன செய்யவேண்டும்.
முத்தரையர்
கி.பி. 850 இல் விஜயாலய சோழன் தஞ்சாவூரை முத்தரையர்களிடமிருந்து கைப்பற்றிச் சோழ சாம்ராஜ்யத்தை நிறுவினான் என்பர். "முத்தரையர்" என்பவர்கள் யார் எங்கிருந்து வந்தார்கள் எவ்வளவு காலம் ஆண்டார்கள் இப்பொழுதுள்ள முத்தரையர் என்ற பெருங்குடி மக்களுக்கும் அக்கால முத்தரையர்களுக்கும் என்ன தொடர்பு முத்தரையர் என்ற சொல் எதைக் குறிக்கிறது? என்றெல்லாம் மிக ஆர்வத்தோடு ஆராய்ச்சி செய்த ஆசிரியப் பெருமக்கள் உண்டு. இந்த ஆராய்ச்சியை அண்மையில் நான் மேற்கொள்ள நேர்ந்த போது தமிழக வரலாற்றில் இதுகாறும் தெளிவாராத பல உண்மைகள் வெளிப்பட்டன. அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.
மூன்று தரையர்
முத்தரையர்களைப்பற்றி அண்மையில் வந்த ஆராய்ச்சிக் கருத்துக்களின் சுருக்கம் பின்வருமாறு "முத்தரையர்" என்ற பெயர் மூன்று தரையர் என்ற சொல்லின் சுருக்கமே. அதற்குச் சேர சோழ பாண்டியர் ஆகிய மூவர் நாடுகளையும் ஆண்டவர்கள் என்பது பொருள். இவர்கள் வேங்கடத்தை ஆண்ட சங்ககாலக் கள்வர் வழியினர். இவர்களே களப்பிரர் என்பவர்கள். கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் பல்லவர் காஞ்சியைக் கைப்பற்றியபோது தென்னாடு பெயர்ந்து சோழநாட்டைப் பிடித்து ஆண்டனர். இவர்களிடமிருந்துதான் பல்லவ அரசன் சிம்ம விஷ்ணு சோழ நாட்டைக் கைப்பற்றினான் என்பது இதுகாறும் வந்துள்ள கருத்து.
முத்தரசர் என்ற சொல் முதன்முதலில் கி.பி. ஆறாம் நூற்றாண்டில்தான் காணப்படுகிறது. அதுவும் தமிழ்நாட்டில் இல்லை. பெங்களூர் கோலார் தலைக்காடு பகுதியில் அக்காலத்தில் ஆண்ட கங்கர் என்பவர்களின் செப்பேடுகளில்தான் முதன்முதலில் காணப்படுகிறது. இவர்களுக்குக் கொங்கணி கங்கர் என்று பெயர்.
ஏறக்குறைய 550 லிருந்து 600க்குள் ஆண்டவன் கங்க மன்னன் துர்விநீதன் என்பவன். மிகச் சிறந்த தீரனாகவும் அறிவாளியாகவும் திகழ்ந்தவன் இவன். கங்க துர்விநீதன் "முத்தரையர்" என்றால் என்ன பொருள் என்று தன் செப்பேட்டில் கூறியிருக்கிறான். இவனது செப்பேடு இருமொழிகளில் உள்ளது. முதல் பகுதி சமஸ்கிருதத்திலும் இரண்டாம் பகுதி பழைய கன்னடத்திலும் உள்ளது பழைய கன்னடம் என்பது பெரும்பாலும் தமிழாகவே இருக்கும். சமஸ்கிருதப் பகுதியில் துர்விநீதன் தன்னை கொங்கணி விருத்தராஜன் மத் கொங்கணி விருத்தராஜேன துர்விநீத நாமதேயேன என்று குறிக்கறான்.
இதே பகுதியைக் கன்னடத்தில் கூறும் போது கொங்கணி முத்தரசரு" என்று கூறுகிறான். இதிலிருந்து முத்தரசர் என்ற சொல்லுக்கு நேர் சமஸ்கிருதச் சொல் விருத்தராஜன் என்று மொழிபெயர்ப்பு உள்ளது ஆதலின் முத்தரசர் என்ற சொல் மூத்தகுடி என்பதின் பெயரே. உண்மையில் முது அரசர் என்பதே முத்தரசர் என்று வந்துள்ளது. முத்தரசர் என்று குறிக்கப்படும் துர்விநீதன் முதுகுடியைச் சேர்ந்தவன். இதுபோல் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் ஆண்ட முதலாம் சிவமாறன் என்ற கங்கமன்னனும் 8 ஆம் நூற்றாண்டில் ஆண்ட கங்கன் புருஷன் என்பவனும் சமஸ்கிருத பகுதியில் "விருத்த ராஜா" என்றும் கன்னடப் பகுதியில் முத்தரசர் என்றும் அழைக்கப்படுகின்றனர். ஒன்று அல்ல இரண்டு அல்ல பல கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் கங்கர்களை முத்தரசர் என்று அரசப் பட்டயங்கள் குறிக்கின்றனர். இதிலிருந்து முத்தரையர் என்ற சொல் எவ்வாறு தோன்றியது என்றும் கங்க அரசர்களே முத்தரையர் என்றும் தெளிவாக்கப்பட்டுள்ளது.
முதுபெரும் வேளிர் கங்கர் இந்தக் கங்க மன்னர்கள் தம்மை ஏன் முத்தரையர்கள் என அழைத்துக் கொண்டனர்? கொங்கணி கங்க அரசர்களது வரலாற்றை எழுதுபவர்கள் கி.பி. 4 ஆம் நூற்றாண்டிலிருந்து தான் தொடங்குகிறார்கள். அவர்கள் கொங்கணம் கன்னடப் பகுதியை ஆண்டதால் கன்னட அரசர்கள் என்றும் கூறுவர். உண்மையில் கங்கர்கள் தமிழ் முதுகுடிமக்களே. முதுபெரும் வேளிர்களில் ஓருவரே கங்கர் எனச் சங்க இலக்கியங்கள் தெளிவாகக் கூறுகின்றன. அகநானூற்றில் உள்ள ஒரு பாடல் நன்னன் ஏற்றை நறும் பூண் அத்தி துன்னரும் கடுந்திறல் கங்கன் கட்டி அகம்44 என்று கங்க அரசனைக் கூறுகிறது. இவன் சோழ மன்னனோடு பொருது தோற்றுப் போயிருக்கிறான்? கொங்காணம் என்ற பகுதியின் தலைவன் நன்னன் என்றும் அவன் தமிழ்க் குடிமகன் என்றும்சங்க இலக்கியங்களிலிருந்து அறிகிறோம். கங்கர் குடியினர் சங்க காலத்திற்குப் பிறகு கொங்கணத்தைத் தமதாக்கிக்கொண்டு படிப்படியாகக் பெங்களூர் தலைக்காடு கோலார் பகுதிகளைப் பிடித்து ஒரு பேரரசை நிறுவினார்கள். இருப்பினும் தமிழகத்துடனேயே சிறந்த தொடர்புகொண்டிருந்தனர். சோழ அரசுடனும் பல்லவ அரசுடனும் இணை பிரியா நட்புப் பூண்டிருந்தனர். இவர்களில் சில அரசர்களுக்குப் பல்லவ அரசர்கள் முடி சூட்டியுள்ளார்கள்.
கன்னடமும் சம்ஸ்கிருதமும்
தமிழ்ப் பெருமன்னர்களான சேர மன்னர்களே சங்காலத்துக்குப் பின்னர் மேலைக் கடற்கரைப் பகுதியிலே தங்கி அங்கு மலர்ந்த மொழியால் மலையாள அரசர்களாகி விட்டது போன்று தமிழ் மன்னர்களான கங்கர்கள் கொங்கணப் பகுதியில் ஆட்சி புரியத் தொடங்கினர். கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் அங்கு தனித்தன்மை வாய்ந்ததாகக் கன்னட மொழி வளர மக்கள் மொழியான கன்னடத்தையும் சம்ஸ்கிருதத்தையும் இவர்கள் பயன்படுத்தினர். இருப்பினும் இவர்கள் தமிழையும் விட்டுவிடவில்லை. இவர்களது பல கல்வெட்டுகள் தமிழில் உள்ளன. கி.பி. 3 4 ஆம் நூற்றாண்டுகளில் பழைய கன்னடத்துக்கும் தமிழுக்கும் அதிக வேறுபாடு இல்லை என்பது ஆராய்ச்சியாளர்கள் அறிந்ததே.
அப்பகுதியில் பெருமன்னர்களாக மலர்ந்த இம் மன்னர்கள் தாங்கள் புதிதாக ஆட்சிக்கு வந்தவர்கள் அல்லர். மிகவும் தொன்மையான குடியைச் சேர்ந்தவர்கள் என்பதை வலியுறுத்தும் வகையில் தம்மை முதுகுடி முத்தரையர் விருத்த ராஜா என்று அழைத்துக் கொள்ளத் தலைப்பட்டனர். ஆதலின் கங்கர் "முத்தரையர்" என்றும் தமிழ் முதுபெரும் வேளிர் வழிவந்தவர் என்றும் தமிழ் வரலாற்றோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்றும் அறிகிறோம்.
கரிகால சோழ சூரிய முத்தரையர்
கரிகாலன் மைசூர் தலைக்காடு பகுதியை ஆண்ட கங்கர்கள் தம்மை விருத்தராஜா முத்தரைசர் என்று அழைத்துக் கொண்டார்கள் என முன்னே கண்டோ ம். இவர்கள் தமிழ் முதுகுடிமக்கள் எனக் குறிப்பதற்கே தம்மை முதுஅரசர்முத்தரசர் என்று கூறிக்கொண்டனர் எனக் கண்டோ மல்லவா? கங்க அரசர்களில் கி.பி. 550 லிருந்து 600 க்குள் ஆண்ட துர்விநீதன் என்ற சிறந்த மன்னனின் தேவி ஒருசோழ இளவரசியாவாள் அவள் "உரகபுரத்தை ஆண்ட கரிகால சோழனின் வழிவந்தவனும் பரம க்ஷத்திரியனுமான சோழ அரசனின் பெண்" என்று குறிக்கப்பெறுகிறாள். அதைக் குறிக்கும் செப்பேடு "உரகபுராதிப பரம க்ஷத்திரிய சோழகுலதிலக ஸ்ரீதக்தசரண சந்தான" தக்தசரண என்றால் தீயால் கருகிய காலை உடையவன். அவனது சந்தானம் வழித் தோன்றிய என்று பொருள். கரிகாலன் சிறுவனாக இருந்த போது தீயிலிருந்து தப்பினான். அப்பொழுது அவனது காலைத் தீ சுட்டதால் கரிகாலன் எனப் பெயர் பெற்றான் என்று பண்டைய தமிழ் வரலாறு கூறும். இத் தமிழ் மரபைக் கங்கர்களது செப்பேடுகள் உறுதி செய்கின்றன.
கங்க அரசன் துர்விநீதனுக்கு மகன் வயிற்று மகன் பெயரன் ஸ்ரீ விக்ரமன் என்று ஒருவன் இருந்தான். அவனும் பின்னர் கங்க அரியணை ஏறினான். அவனும் சோழ இளவரசியை மணந்தான். அவளைக் கூறும்போது கங்கர் செப்பேடு "காவிரிக்குக் கரை கட்டிய கரிகால சோழனின் குலத்து உதித்தவள்" என்று " காரித காவேரீதீர கரிகால சோழ குலவம்ச சோழ நிருபதி புத்ரீ" எனப் புகழ்கிறது. கங்கர்கள் தம்மைக் கரிகால சோழ குலப் பெண் வழி வந்தவர்கள் என்று கூறிப் பெருமைப்படுகிறார்கள்.
இருவரும் ஒரு குடியினர்
இப்பொழுது பாருங்கள்! எங்கேயோ மைசூர்ப் பகுதியை 1300 வருஷங்களுக்கு முன் ஆண்ட கங்க அரசர்கள் தம்மை முத்தரையர் என்றும் கரிகால சோழகுலத் தொடர்புடையவர் என்றும் தமது செப்பேடுகளில் கூறிக் கொள்கிறார்கள்.
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் ஒரு தமிழ்ச் செப்பேட்டில் முததரையர் கரிகால சோழகுலத் தொடர்புடையவர் என்று குறிக்கிறார்கள் என்றால் எவ்வளவு அரிய சான்றுடன் கூடிய வரலாற்று ஒற்றுமை. இவ்வொற்றுமையின் அடிப்படையில் இருவரும் ஒரு குடியினரே என்று வரலாற்று வல்லுநர் கொள்வது தவறாகாதல்லவா! சோழராட்சியிலும் பின்னர் பாண்டியராட்சியிலும் கி.பி. 10 ஆவது நூற்றாண்டு முதல் 1415 ஆவது நூற்றாண்டு வரை கங்கர்முத்தராசர் குடியினர் புதுக்கோட்டைப் பகுதியில் தானைத் தலைவர்களாகவும் வளநாட்டை ஆளும் தலைவர்களாகவும் கல்வெட்டுக்களில் குறிக்கப்படுகின்றனர்.
புதுக்கோட்டைப் பகுதியில் இன்று வாழும் முத்தரையர் இவ்வழித் தொடர்புடையவர்கள் என்பதில் ஐயமில்லை. இத் தொடர்பை நமக்குச் சான்றுகளோடு எடுத்து இயம்புவை நமது செப்பேடுகள் அல்லவா! இன்னும் நமது கிராமங்களில் உள்ள செப்பேடுகளில் எவ்வளவு வரலாற்று உண்மைகள் உள்ளனவோ! இவற்றை நம் கவனத்துக்குக் கொண்டு வருவோருக்கு நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்.
வாசகர் கருத்துக்கள்
முத்தரையர்
முத்தரையர் பற்றிய இரா.நாகசாமி அவர்களின் கட்டுரை முத்தரையர் ஆராய்ச்சியில் ஒருபுதிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.
முத்தரையர் என்ற சொல் தொடர் இரண்டு சொற்களால் ஆனது. திருமய்யம் கல்வெட்டு முத்தரையத் தலைவன் ஒருவனை அரைசன் என்று குறிக்கிறது. குன்னாண்டார் கோயில் கல்வெட்டில் பல்லவ நந்திவர்மன் காலத்தில் முத்தரையரின் பணியாளன் ஒருவன் அரையர்கள் அடியான் வாலிவடுகன் ஆன கலிமூர்க்க இளவரையன் என அழைக்கப்படுகின்றான். திருநெய்த்தானக் கல்வெட்டிலும் இவன் அவ்வாறே குறிக்கப்பட்டுள்ளான்.
தென் சிறுவாயி நாட்டாரும் இந்நாட்டு அராயர்களும்
தென்மலை நாட்டு வந்தாண்டார் கோட்டை அராயர்களில்
வாரப்பூர் அரையர்களில் ஒட்டையன் வாரப்பூர் நாடாழ்வான்
என நூற்றுக்கணக்கான கல்வெட்டுகளில் அரையர் என்ற சொல்லைக் காணுகின்றோம். புதுக்கோட்டை அரசர்களும் அவர்கள் முன்னோர்களும் அரையர் மக்கள் எனப்பட்டனர். கொங்கரையர் ஈழத்து அரையர் பல்லவரையர் விழுப்பரையர் கங்கரையர் கலிங்கரையர் என அரசியல் தலைவர்களும் அரசர்கள் அளித்த பட்டப் பெயர்களிலும் அரையர் என்ற பெயரைக் காணுகின்றோம். எனவே முத்தரையர் என்பதிலும் ஈற்றில் உள்ள சொல் அரையர் என்பதில் ஐயமில்லை.
சிலர் முதற் சொல்லை மூன்று என்று கொள்கின்றனர். தொல்காப்பியம் நன்னூல் போன்ற தமிழ் இலக்கண நூல்கள் கூறும் புணர்ச்சி விதிப்படி மூன்று+அரையர் =முவரையர் என்றே ஆகவேண்டும். அவர்கள் மூவரையர் என எங்கும் அழைக்கப்பட்டதில்லை முத்தரையர் என்றே குறிக்கப்பெறுகின்றனர். முத்து+அரையர் எனவும் வருவதற்கு இல்லை. இவர்கட்கும் முத்துக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. ஆகவே முதற்சொல்லை முது அல்லது மூத்த என்று கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. குடுமியாமலை போன்ற சில இடங்களில் இவர்கள் பெயரைக் கல்வெட்டுக்கள் மூத்த அரையர் எனப் பிரித்தே குறிக்கிறது. இதனை மூத்த+அரையர் எனப் படிக்க இயலாது. கல்வெட்டு மரபுப்படி இவ்விடங்களில் மூத்த அரையர் என்றே படிக்க வேண்டும்.
முத்தரையர் கர்நாடகத் தொடர்புடையவர்களே பகாப்பிடுகு முத்தரையன் பெரும்பிடுகு முத்தரையன் என்று முத்தரையர் பெயர்களில் காணப்படும். பிடுகு என்ற சொல் இடி என்னும் பொருளுடைய கன்னடச் சொல்லே.
பிற்காலத்தில் முத்தரையர் என்பது அரசர் அளிக்கும் பட்டப் பெயர்களில் ஒன்றாக மாறிவிட்டது. முத்தரையர் அல்லாதவர்களும் அரசன் அளித்த சிறப்புப் பெயராகப் பூண்டனர். கல்வெட்டுக்கள் இதனை மிகத் தெளிவாகக் குறிக்கின்றன.
புலவர். செ. இராசு
தமிழ்ப் பல்கலைக் கழகம் தஞ்சாவூர்
நான் 18 பட்டயங்களின் நகல்கள் எடுத்து வைத்துள்ளேன். கிட்டத்தட்ட எல்லாப் பட்டயமும் கானாடுகோனாடு சண்டையில் இறந்துபட்டவர்களுக்காக வழங்கப்பட்டுள்ளன. பலபிழைகள் உள்ளன. தமிழ் எண் எவுத்தாகவும் சமஸ்கிருதம் கலந்தும் உள்ளன. பல ஊர்களின் பெயர்கள் ஆலயங்களின் பெயர்கள் வளநாடுகளின் பெயர்கள் காணப்படுகின்றன. இவை போன்ற பல பட்டயங்கள் இதுவரை முத்தரைய நாட்டு அம்பலகாரர்களிடம் உள்ளன. ஆலயங்களில் கல்வெட்டாகவும் உள்ளன என்பதைப் பட்டயங்கள் நன்குபுலப்படுகின்றன.
இரா. திருமலைநம்பி திருமலைராய சமுததிரம் கைக்குறிச்சி 622 303 புதுக்கோட்டை மாவட்டம்
281088 தினமணி தொல்லியல் பகுதி முத்தரையர் கட்டுரையில் சில கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. விருத்தராஜ என்ற வட சொல் அடிப்படையில் முது அரசர் முத்தரசர் என்ற பெயர் கங்ககுல சில மன்னரிடம் காணப்படுவதால் கங்க அரசர்களே முத்தரசர் என்ற முடிவு கூறப்படுகிறது. தெலுங்குச் சோழர்களின் மிகப்பழைய 6ம் நூற்றாண்டுத் தெலுங்குக் கல்வெட்டுகளில் முதுராஜூ என்ற பெயர்களோடு துகராஜூ யுவராஜூ என்ற பெயர்களும் காணப்படுகின்றன. இதனால் முத்தரசு முதுராஜூ என்ற இரு சொற்களின் வழக்கு இச் சொல்லாக்கத்தின் விளக்கத்தில் ஒருபடியாகுமே அன்றி தமிழ்நாட்டு முத்தரையரின் தோற்றத்திற்கு உரிய முடிவாகாது. கங்கரெல்லாம் முத்தரையர் அல்லர். முத்தரையர் என்ற குடிப்பெயர் உடையார் ஒருவரேனும் தன்னைக் கங்கர் என்று கூறிக் கொள்ளவில்லை. மூத்த குடியினர் என்ற பொருள் கங்கர்க்கும் தெலுங்குச் சோழர்க்கும் பொருந்தும். எனினும் தமிழ்நாட்டு முத்தரையர்க்கு எவ்வாறு பொருந்தும் அவர்கள் எந்த முது குடியினர் தமிழ்நாட்டு முத்தரையர் எவ்வாறு களவரகளவர என்ற பட்டப்பெயர் கொண்டனர் அவர்களுக்கும் களப்பிரர்க்கும் உள்ள தொடர்பு மற்ற இருவர்க்கும் உண்டா இதுமேலும் ஆய்வுக்குரியது.
கே.ஜி. கிஷ்ணன் மைசூர்
முத்தரையரைப் பற்றிய ஆராய்ச்சி தமிழக வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துமளவுக்குச் சிறப்பாக அமைந்திருந்தது. வரலாற்றில் மறைக்கப்பட்ட பல உண்மைகளை நாகசாமி அவர்கள் வெளிக்கொணர்ந்து வரலாற்றிற்கு ஒரு புதிய ஒளியினை ஏற்படுத்தியுள்ளார். அதற்காகத் தினமணிக்கும் கட்டுரை ஆசிரியருக்கும் முத்தரை சமுதாயத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வி. சந்திரசேகரன் சென்னை17
கட்டுரை முத்தரையரைப் பற்றி சில தெளிவான விளக்கங்கள் தருகின்றது. கன்னடம் மலையாள மொழி இரண்டிலும் தமிழ்ச் சொற்கள் கலந்துள்ளதை நன்கு விளக்குகின்றது. களப்பிரர்களாகிய முத்தரையர்கள் தமிழர்கள்தாம் என்றும் இவர்கள் கர்நாடகத்தில் தங்கியதால் தமிழும் கன்னடமும் கலந்தன என்று கட்டுரை விளக்குகிறது. இதே போல் தமிழ்ச் சேரர்கள் மலையாளத்தை ஆண்டதனால் மலையாளத்திலும் தமிழ்ச் சொற்கள் வருவதின் காரணமும் நமக்குத் தெரிகின்றது. இக் கட்டுரையினால் முத்தரசர்கள் பல்வேறு இடங்களில் களப்பிரர் கங்கர் விருத்தராஜன் முத்துரசரு என்ற பெயர்களுடன் அழைக்கப்பட்டனர் என்ற கருத்தைக் கல்வெட்டுச் சான்றுகளுடன் திரு. நாகசாமி தெளிவாகக் கூறியுள்ளார்.
மு. திருப்பதி ஆத்திகுளம்.
தினமணி 281088 இதழில் இரா. நாகசாமி அவர்களின் முத்தராயர் கட்டுரை படித்து இன்புற்றேன். முது+அரையர் = முத்தரையர் என்ற விளக்கம் தக்க ஆதாரங்களுடன் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. முதுகுடிகள் வம்பவேந்தருடன் புதிய வேந்தர்களுடன் போரிட்ட நிகழ்ச்சிகள் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளன. தொல்தேவரு என அழைக்கப்பட்ட முதுகுடி அரசர் பற்றிச் செங்கம் பகுதி செங்கல் நடுகற்கள் தொடர் எண் 1971/62 தொல் பொருள் ஆய்வுத்துறை வெளியீடு ஆண்டு 1972 மேலும் கடப்பை மாவட்டம் திருப்பலூரைச் சேர்ந்த 7 ஆம் நூற்றாண்டைய கல்வெட்டு ஒன்றில் எரிகல் முதிராஜூ புண்யகுமாரன் என்ற ரேணாடுச் சோழ அரசன் ஒருவன் குறிப்பிடப்படுகிறான். அய்ய்ன்ஹப் தங்ல்ர்ழ்ற் ர்ய் உல்ண்ஞ்ழ்ஹல்ட்ஹ் 283/193738 அழ்ஸ்ரீட்ஹங்ர்ப்ர்ஞ்ண்ஸ்ரீஹப் நன்ழ்ஸ்ங்ஹ் ர்ச் ஐய்க்ண்ஹ மேலும் அளப்பரிய ஆதிராஜர் என்று வேள்விக்குடிச் செப்பேடு குறிப்பிடுவதும் இத்தகைய முதுகுடி அரசர்களையே என்பது தெளிவு. இத்துடன் ஊர்ப் பஞ்சாயத்தில் வழக்குதீர்க்கும் மூப்பன் மூப்பாடி போன்ற தலைவர்களின் பெயர்களும் எகிப்திய துருக்கிய கிராம நிர்வாகியின் பெயராகக் குறிப்பிடப்படும் மூதோர் என்ற சொல்லும் ஆராயத்தக்கவை. அரசு என்ற கண்ணோட்டம் தோன்றுவதற்கு முற்பட்ட தன்னாட்சி நிறுவனங்களாக இவற்றைக் கருதலாம்.
எஸ். இராமச்சந்திரன்
தொல்பொருள் ஆய்வுத்துறை தஞ்சாவூர்.
கரூர் அருகே முத்தரையர் வரலாற்றுக் கல்வெட்டு
First Published : 04 Oct 2009 05:25:18 AM IST
Last Updated :
கரூர், அக்.3: கரூர் அருகே முத்தரையர் வரலாற்றை அறிய உதவும் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கரூர்-திண்டுக்கல் சாலையில் பாளையம் அருகிலுள்ள வீரக்கணம்பட்டியில் குன்றின் மேல் பாழடைந்த சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலில் தொல்லியல் ஆய்வுத் துறையின் கல்வெட்டு ஆய்வாளர் சு. ராஜவேல், கரூர் ஆசிரியர் கே. பாலசுப்பிரமணியம், வி. பன்னீர்செல்வம், எஸ். அழகேசன் ஆகியோர் ஆய்வு செய்து அங்குள்ள கல்வெட்டைப் படி எடுத்தனர்.
இந்தக் கல்வெட்டு கி.பி. 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தெரியவந்துள்ளது. கல்வெட்டில், இப்பகுதியில் குறுநில மன்னராக விளங்கிய பாண்டி முத்தரையன் அரட்டவதி அரையனின் தாயார் பாண்டிப்பெருந்தேவி, பாண்டிமுத்தரையன் சோழிகஅரையனின் நினைவாக காள ஈசுவரம் என்ற கோயிலைக் கட்டிய செய்தி காணப்படுகிறது.
தற்பொழுது மலை மீதுள்ள பாழடைந்த கோயிலே இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட சிவன் கோயிலாகும். கல்வெட்டியின் இறுதியில் "இதைக் காப்பவர் அடி என் தலை மேலான' எனக் குறிப்பிட்டு அஷ்ட மங்கலச் சின்னங்களாக உடுக்கை, சங்கு, கோடாரி, அங்குசம், கவரி, குறுவாள்கள்-2, சூரியன் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன.
இக்கல்வெட்டு முத்தரையர்கள் குறித்த வரலாற்று ஆய்வுக்கு மிக முக்கியமான கல்வெட்டாகும். இக்கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ள பாண்டி முத்தரையன் என்ற பெயரிலிருந்து குறுநில மன்னர்களான கி.பி.8-9ம் நூற்றாண்டுகளில் இப்பகுதியை ஆட்சி புரிந்த முத்தரையர்கள், மதுரை பாண்டிய மன்னர்களுடன் திருமண உறவு பூண்டிருந்தமையை அறிய முடிகிறது.
இக்கோயிலை எடுப்பித்த பாண்டி முத்தரையன் அரட்ட அதியரையன் தாயார் பாண்டிபெருந்தேவி பாண்டிய அரச குலப் பெண்ணாக இருக்கக் கூடும். இவரே பாண்டி முத்தரையன் சோழிக அரையன் என்பவரின் நினைவாக இக்கோயிலை எடுப்பித்துள்ளார்.
சோழிக அரையன் என்ற குறுநில மன்னனைக் குறித்து இப்பகுதியில் வெள்ளியணை ஏரியில் உள்ள 6-ம் நூற்றாண்டு கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவனது பெயரால் இந்த ஏரி சோழிக அரையன் அகணிதன் குளம் என அழைக்கப்பட்டுள்ளது. எனவே, இக்கோயில் சோழிக அரையன் வழிவந்த குறுநில மன்னருக்காக எடுக்கப்பட்ட கோயிலாக இருக்கக் கூடும் என்பது புலனாகிறது.
பாழடைந்த நிலையிலுள்ள இக்கோயில் சதுர வடிவ கருவறை அதன்முன் முன்மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இறை உருவங்கள் எவையும் இக்கோயிலில் தற்போது காணப்படவில்லை. அதிட்டானம் முதல் முழுவதுமாக கற்றளியில் அமைக்கப்பட்டுள்ள இக்கோயில் தற்போது, கபோதம் வரை மட்டுமே விமானம் விழுந்து காணப்படுகிறது.
இக்கோயிலின் மேற்கு மற்றும் தெற்குச்சுவர் பகுதியின் குமுதவரியில் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றும் உள்ளது. அரச ஆணையைக் குறிக்கும் வகையில் கோனேரின்மைக் கொண்டான் எனத் தொடங்கும் இக்கல்வெட்டு திருக்குன்றத் தளி உடைய நாயனார் என இறைவன் பெயரைக் குறிப்பிடுகிறது.
இப்பகுதி சோழர் காலத்தில் தட்டையூர் நாட்டில் இருந்தது. இக்கோயிலின் முன் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று தனித் தூணில் இருப்பதும் கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ராஜவேல், கி. பாலசுப்பிரமணியன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் மேலும் கள ஆய்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மக்கள் போராட்டங்கள் மீது மிருகத்தனமான அடக்குமுறையை ஏவுவதும், முன்னணியாளர்களைப் பழிவாங்குவதும் மக்கள் விரோத ஆட்சியாளர்களின் வாடிக்கை. அதிலும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராகப் போராடும் மக்கள் மீதான அடக்குமுறையைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஒரிசா, சட்டிஸ்கர் மாநிலங்களே இதற்கு இரத்த சாட்சியங்களாக உள்ளன. உழைக்கும் மக்களின் போராட்ட நிர்பந்தத்தால், தற்காலிகமாக சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு நிலங்களைக் கையகப்படுத்துவதை ஆட்சியாளர்கள் நிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்படும்போது, போராடிய மக்களை எப்படியெல்லாம் பழிவாங்கி ஒடுக்குவார்கள், போராட்ட ஒற்றுமையை எப்படியெல்லாம் சீர்குலைப்பார்கள் என்பதற்கு தமிழகம் புதிய சாட்சியமாக விளங்குகிறது. கடந்த மே மாதத்தில், மதுரை மாவட்டம் வலையங்குளம் எலியார் பத்தி முதலான கிராமங்களில் போலீசும் அதிகார வர்க்கமும் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலே இதை நிரூபித்துக் காட்டுகிறது.
மதுரை தூத்துக்குடி நெடுஞ்சாலையில் விமான நிலையம் அருகில் உள்ள வலையங்குளம், எலியார்பத்தி, பாறைப்பத்தி, சோளங்குருணி ஆகிய கிராமங்களில் நிலங்களைக் கையகப்படுத்தி சிறப்புப் பொருளாதார மண்டலம் நிறுவ கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக அரசு முயற்சித்து வருகிறது. ஒப்பீட்டு ரீதியில் பின்தங்கிய பகுதியாக இக்கிராமங்கள் நீடித்த போதிலும், இக்கிராமங்களைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான சிறு விவசாயிகளுக்கு விவசாயமே வாழ்வுக்கான ஆதாரமாக உள்ளது. நிலக்கடலை, வாழை, காய்கறிகள், தென்னை, சப்போட்டா, நெல்லி முதலானவற்றோடு மல்லிகை இங்கு பெருமளவில் பயிரிடப்பட்டு வருகிறது.
இந்த விளைநிலங்களை தரிசு நிலங்கள் என்று அறிவித்துள்ள தமிழக அரசு, தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக் கழகம் (சிப்காட்) மூலம் நிலங்களைக் கையகப்படுத்தி சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவத் துடிக்கிறது. நிலங்கள் பறிக்கப்பட்டால் தமது எதிர்கால வாழ்வே இருண்டு விடும் என்பதை உணர்ந்த இவ்வட்டார சிறு விவசாயிகள் சங்கமாக அணிதிரண்டு போராடத் தொடங்கினர். விவசாயிகளின் போராட்டத்தைத் துச்சமாக மதித்த அரசு, விளைநிலங்களைக் கையகப்படுத்துவதற்கான குறிப்பாணைகளை விவசாயிகளுக்கு அனுப்ப ஆரம்பித்தது. வெகுண்டெழுந்த விவசாயிகள் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர்.
கடந்த ஆறு மாதங்களாக, நிலங்களைக் கையகப்படுத்தத் துடிக்கும் அரசின் முயற்சிகளுக்கு நீதிமன்றத்தின் மூலம் தடையாணை பெறவும், அன்றாடம் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், சாலைமறியல் முதலான போராட்டங்களில் ஈடுபட்டும், பல்வேறு அமைப்புகள் இயக்கங்களிடம் ஆதரவு திரட்டியும் இக்கிராமங்களின் விவசாயிகள் ஒற்றுமையை வலுப்படுத்தி தொடர்ந்து போராடினர்.
விவசாயிகளின் போராட்ட உறுதியைக் கண்ட மாவட்ட ஆட்சியர், வேறு வழியின்றி 2.5.08 அன்று பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். விவசாய சங்கப் பிரதிநிதிகளோடு மனித உரிமை பாதுகாப்பு மையம், குடியுரிமை பாதுகாப்பு நடுவம் ஆகிய அமைப்புகளின் முன்னணியாளர்களும் இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளை அரசுக்குப் பரிந்துரைப்பதாகக் கூறிய மாவட்ட ஆட்சியரான எஸ்.எஸ்.ஜவகர், போராட்டங்களைக் கைவிட்டு அமைதி காக்க வேண்டும் என்று விவசாயிகளை எச்சரித்தார். இக்கிராமங்களில் நிலங்களைக் கையகப்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் அரசு அறிவித்தது.
விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டத்தால் கிடைத்த இந்த முதற்கட்ட வெற்றியின் மகிழ்ச்சியை இக்கிராம மக்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதற்குள்ளாகவே, இடியென இறங்கியது போலீசு அடக்குமுறை. 6.5.08 முதலாக இக்கிராமங்களில் சாதிக் கலவரம் மூண்டு வன்முறை பெருகியதாகவும், அதைத் தடுக்கச் சென்ற போலீசாரை கிராம மக்கள் தாக்கி போலீஸ் ஜீப், மோட்டார் சைக்கிள்களைத் தீயிட்டுக் கொளுத்தியதாகவும், பல போலீசார் படுகாயமடைந்ததாகவும் நாளேடுகள் செய்திகள் வெளியிட்டன.
அதைத் தொடர்ந்து ஏறத்தாழ ஒருவார காலத்துக்கு இக்கிராமங்களைச் சுற்றி வளைத்து போலீசார் வெறியாட்டம் போட்டனர். ஆளுயர தடியுடன் வந்திறங்கிய கூடுதல் போலீசுப்படை வீடுவீடாகப் புகுந்து தாக்கத் தொடங்கியது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கூட கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டனர். பள்ளிகல்லூரிகளில் படிக்கும் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். சிறப்புப் பொருளாதார மண்டலத்தை எதிர்த்துப் போராடிய விவசாய சங்கத் தலைவர்களைக் குறிவைத்து போலீசுப் படை வீடு வீடாகத் தேட ஆரம்பித்ததால் அவர்கள் தலைமறைவாகித் தப்பியோடினர். அவர்களை ஒப்படைக்கும்படி குடும்பத்தாரை போலீசு வதைத்தது. இரவு நேரங்களில் திடீரென கிராமங்களில் புகுந்து தாக்கி அச்சுறுத்திய போலீசு, கிராம மக்களின் உடமைகளை நாசப்படுத்தி வெறியாட்டம் போட்டது. உண்மை நிலைமை அறிய இக்கிராமங்களுக்கு சென்ற மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் செயல்வீரர்களை ஊருக்குள் நுழைய விடாமல் விரட்டியடித்தது.
சாதி வேறுபாடுகளைக் கடந்து சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிராக ஒன்றுபட்டுப் போராடிய இக்கிராமங்களில் சாதிக் கலவரம் ஏன்? ஏற்கெனவே இக்கிராமங்களில் சாதியப் பகைமையும் மோதல்களும் நடந்துள்ளனவா? இல்லை. இது சாதிக் கலவரமில்லை; சிறு வாய்த் தகராறையே ஊதிப் பெருக்கி சாதிக் கலவரமாகச் சித்தரித்து, போலீசும் அதிகார வர்க்கமும் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிராக ஒன்றுபட்டுப் போராடிய மக்களைப் பழிவாங்கவே திட்டமிட்டு இக்கொடிய தாக்குதலை நடத்தியுள்ளன. மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் (ஏகீகஇ) உண்மையறியும் குழுவினர் இக்கிராமங்களுக்கு நேரில் சென்று நடத்திய விசாரணையின் மூலம் இது நிரூபணமாகியுள்ளது.
எலியார்பத்தி கிராமத்தில் கடந்த 4.5.08 அன்று டீக்கடை ஒன்றில் போதையில் இருந்த இரண்டு பேருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தகராறு, அவ்வூர் பெரியவர்களால் சமரசம் செய்து தீர்க்கப்பட்டுள்ளது. இக்கிராமத்தில் சிறுபான்மையாகத் தாழ்த்தப்பட்டோரும் பெரும்பான்மையாக வலையர்கள் எனப்படும் பெரும்பிடுகு முத்தரையர் சாதியினரும் உள்ளனர். சாதிய இழிவு நீடித்தபோதிலும், இருதரப்புக்குமிடையே தகராறுகளோ மோதலோ நடந்ததில்லை. டீக்கடையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு தீர்க்கப்பட்ட போதிலும், முத்தரையர் சாதி சங்கத் தலைவர் இராசு தலைமையில் சில இளைஞர்கள் தலித் குடியிருப்புக்குள் புகுந்து அங்கிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பத்தை சேதப்படுத்தினர். அவர்கள் மீது சிறுத்தைகள் கட்சியினர் கூடக்கோவில் போலீசு நிலையத்தில் புகார் கொடுக்க, அதனடிப்படையில் முத்தரையர் சாதியைச் சேர்ந்த 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுபோன்ற ஆதிக்க சாதிவெறியர்களின் அடாவடிகளும் போலீசு நிலையத்தில் வழக்கு பதிவு செய்தலும் தமிழகமெங்கும் தொடர்கின்றன. ஆனால் போலீசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. வழக்குத்துக்கு மாறாக, எலியார் பத்தியில் அன்றிரவே பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
மறுநாள் காலை, எலியார்பத்தி கிராம நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த பெரும்பிடுகு முத்தரையர் உருவம் பொறித்த போர்டுக்கு செருப்பு மாலை போடப்பட்டிருந்தது. இதைக் கண்டித்து எலியார் பத்தியிலும் அதைச் சுற்றியுள்ள பாறைப்பத்தி, சோளங்குருணி, நெடுமதுரை, வலையப்பட்டி, வலையங்குளம் கிராமங்களிலும் முத்தரையர்கள் சாலை மறியல் செய்தனர். உடனே மதுரை மாவட்ட போலீசுத் துறை கண்காணிப்பாளர், தென்மண்டல போலீசுத் துறை இயக்குனர், துணை கண்காணிப்பாளர்கள் என போலீசு உயரதிகாரிகளும் பெரும் போலீசுப் படையும் குவிந்தன. முன்னணியாளர்களுடன் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நாடகமாடிக் கொண்டிருந்த போது, மக்களைச் சுற்றி வளைத்துக் கொண்ட போலீசு, காட்டுமிராண்டித்தனமாக தடியடியில் இறங்கியது. தப்பியோடிவர்களை துரத்திச் சென்று தாக்கியதோடு, வீடு புகுந்து பெண்கள் குழந்தைகளையும் அடித்து நொறுக்கியது.
முத்தரையர் போர்டுக்கு செருப்பு மாலை போட்டவர்கள் யார்? இந்த போர்டுக்கு முன்பாக சிந்துப்படி போலீசு ஆய்வாளர் தலைமையில் பெரும் படையாக போலீசார் இரவு முழுவதும் காவல் இருந்துள்ளனர். போலீசுக் காவலை மீறி போர்டுக்கு எப்படி செருப்பு மாலை போட்டு அவமதிக்க முடியும்? அப்படியே போட்டாலும் போலீசு ஏன் அவர்களைக் கைது செய்யவில்லை?
உண்மையில், போலீசு கும்பல்தான் செருப்பு மாலை போட்டு முத்தரையர்களை ஆத்திரமூட்டி, அதைச் சாக்காக வைத்து ஒடுக்கவும், சாதிக் கலவரமாகச் சித்தரித்து அடக்குமுறைக்கு நியாயம் கற்பிக்கவும் செய்துள்ளது. இதன்படியே, வலையங்குளம் கிராமத்தில் வீடுகள் கடைகள் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களுக்கு நள்ளிரவில் போலீசே தீ வைத்துக் கொளுத்தி விட்டு, கலவரத் தீ பரவுவதாக பீதியூட்டி, மேலும் பெரும்படையைக் குவித்து, வீடுவீடாகப் புகுத்து தாக்கியுள்ளது. பின்னர், ""போலீசாரைத் தாக்கினர்; போலீசு ஜீப்புக்கு தீ வைக்க முயன்ற கலவரக்காரர்களை துப்பாக்கியால் சுட்டு ஒரு போலீசு ஆய்வாளர் விரட்டினார்; வன்முறை பரவுவதைத் தடுக்க போலீசு தீவிர கண்காணிப்பு; வீடு வீடாக சோதனை; பலர் கைது'' என்று போலீசு கும்பலே கதை எழுதி செய்தியாக வெளியிட்டது. அவற்றுக்கு மசாலா சேர்த்து "நடுநிலை' நாளேடுகள் பரபரப்பாக செய்தி வெளியிட்டு தமது விசுவாசத்தைக் காட்டிக் கொண்டன.
மே.வங்கம் நந்திகிராமத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது கட்சிக் குண்டர்களை ஏவி ஒடுக்கியது போலி கம்யூனிஸ்ட் சி.பி.எம். அரசு. சட்டிஸ்கரில் சர்வகட்சி ஆதரவுடன் அரசே ""சல்வாஜுடும்'' எனும் ஆயுதமேந்திய குண்டர் படையைக் கட்டியமைத்து, போராடும் மக்கள் மீது பயங்கரவாதத்தை ஏவி ஒடுக்கி வருகிறது. இந்த உத்திகள் நாடெங்கும் அம்பலப்பட்டுப் போயுள்ள நிலையில், செயற்கையாக சாதிக் கலவரம் என பீதியூட்டி, போராடிய விவசாயிகளைப் பழிவாங்கி, போராட்ட ஒற்றுமையைச் சீர்குலைத்து அடக்குமுறையை ஏவும் புதிய உத்தியுடன் புறப்பட்டுள்ளது, கருணாநிதி அரசு. அதை விழிப்புடனிருந்து அம்பலப்படுத்தி முறியடிக்காமல், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கெதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதையே எலியார்பத்தி வலையங்குளம் கிராமங்களில் நடந்துள்ள அடக்குமுறை, புதிய படிப்பினையாக உணர்த்துகிறது.
தகவல்களும் படங்களும்:
மனித உரிமை பாதுகாப்பு மையம் (ஏகீகஇ), மதுரை கிளை.
முத்தரையர்கள் பற்றிய முதல் செப்பேடு கண்டெடுப்பு
டிசம்பர் 07,2009,00:00 IST
ஈரோடு: கோவை மாவட்டம் கணியூரில் கிடைத்த செப்பேடு முத்தரையர்கள் பற்றிய அரிய தகவல்களை கொண்டுள்ளது. கோவை மாவட்டம் கணியூரில் உள்ள பழனி முத்தரையர் மடத்தில் உள்ள செப்பேடு இதுவரை படித்து ஆய்வு செய்யப்படாமல் இருந்தது. முத்தரையர் தோற்றம், சமூக பெருக்கம், சோழர், பாண்டியர் தொடர்பு, தமிழகம் முழுவதும் அவர்கள் பரவியது,
அனைவரும் ஒன்று கூடி பழனியில் ஒரு மடம் ஏற்படுத்தி, அதற்கு கொடையளித்த விபரம் ஆகியவை அந்த செப்பேட்டில் விரிவாக கூறப்பட்டுள்ளது. செப்பேட்டை ஈரோடு கொங்கு ஆய்வு மையத்தலைவர் புலவர் ராசு ஆய்வு செய்தார். செப்பேட்டில் கூறியிருப்பதாவது:
தேவேந்திரன் முதலான தேர்வர்களும், தெய்வ ரிஷிகளும், முனிவர்களும், கின்னரர், கிம்புருடர், அஷ்ட பைரவர், சித்தி வித்யாதரர், ஆயிரத்தொரு சக்திகள், கருட கந்தருவர், அட்ட திக்குப் பாலகர்கள் ஆகியோர் கூடி சிவபெருமானுக்கு தேரோட்டினர். அப்போது பேரண்டப்பறவை ஒன்று தேரை தடுத்து நிறுத்திவிட்டது.
சிவபெருமான் வலது தோளில் ஒரு வியர்வை முத்து தோன்றியது. அந்த முத்தை பார்வதி பூமியில் விட, அது இரண்டு கூறாகப்பிரிந்து, அதில் இரண்டு வன்னிமுத்தரசர் தோன்றினர். அவர்கள் தேரை நிறுத்திய கண்டப்பேரண்டப் பறவையை கொன்றனர். பெரிய வன்னி முத்தரசன் தெய்வலோகக்
காவலுக்கும், சின்ன முத்தரசன் ஸ்ரீரங்கம் காவலுக்கும் நியமிக்கப்பட்டனர்.
கோப்புலிங்க ராஜாவின் மகளை திருமணம் செய்து கொண்ட சின்னமுத்தரசனுக்கு நல்ல நாச்சி என்ற மகளும், சென்னிய வளநாடன், சேமன், அகளங்கன், ராசாக்கள், நயினார் என்ற மகன்களும் பிறந்தனர். சகோதரி நல்ல நாச்சியைப் பாண்டியனுக்கு மணம் முடித்தனர்.
சோழரிடம் பணியாற்றிய இவர்கள் வீரத்தை மதித்த பாண்டியர், ஆட்சிப் பொறுப்பு கொடுத்தனர். வன்னி முத்தரசர்கள் பல்கிப் பெருகி தமிழகம் எங்கும் பரவி வாழ்ந்தனர். சேர, சோழ, பாண்டிய, தொண்டை, கொங்கு நாட்டை சேர்ந்த 300 ஊர்களை சேர்ந்த வன்னிமுத்தரசர்கள் அனைவரும் கி.பி., 1674ம் ஆண்டு தைப்பூசம் அன்று பழனியில் கூடினர்.
திருஆவினன்குடிக்கும் கீழ்புறம், சரவணப்பொய்கையின் தென்மேல்புறம் முத்தரையர் மடம் ஒன்றை நிறுவி, குழந்தைவேலு உடையான் என்பவரை மடத்து நிர்வாகியாக நியமித்தனர். பெரிய ஊருக்கு பத்து பணமும், சின்ன ஊருக்கு ஐந்து பணமும், பண்ணையத்துக்கு இரண்டு பணமும், ஆள்காரர் ஒரு பணமும், திருமணத்தில் மாப்பிள்ளை, பெண் வீட்டார் இரண்டிரண்டு பணமும், தேருக்கு ஒரு பணம் என மடத்துக்கு கொடுக்க ஒப்புக்கொண்டனர்.
குற்றத்துக்கு விதிக்கப்படும் அபராதப் பணத்தில், மூன்றில் ஒரு பங்கு மடத்துக்கு செலுத்த வேண்டும் என கூறப்பட்டது.
மடத்துக்கு வருவோருக்கு உப்பு, ஊறுகாய், நீராகாரம் கொடுக்க வேண்டும்.இவ்வாறு செப்பேட்டில் கூறப்பட்டுள்ளது.
புலவர் ராசு கூறுகையில்,செப்பேட்டை ராமசாமி கவிராயர் என்பவர் எழுதிய விபரமும், முத்தரையர்கள் வாழ்ந்த ஊர்கள், முக்கியமான தலைவர்கள் பற்றிய விபரமும் அதில் கூறப்பட்டுள்ளது. முத்தரையர் சிறப்புகளை பற்றி கூறும், இந்த செப்பேடு முத்தரையர் சமூகம் பற்றிய முதல் செப்பேடு,” என்றார்.
Regards,
ப.அனந்தகுமார்.
தமிழர் வாழும் இடமெல்லாம் இன்று தழைத்துப் பெருகியிருக்கும் பிள்ளையார் வழிபாடு, தமிழ்நாட்டில் எந்தக் காலத்தில் தோன்றியதென்பது குறித்துப் பல ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. எனினும், அவற்றுள் எந்த ஆய்வும் திடமான முடிவுகளை முன்வைக்காமை பெருங்குறையே.
தமிழர் வரலாறு போதுமான சான்றுகளைக் கொண்டு தொடங்குவது சங்க காலத்திலிருந்துதான். கி.மு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி இரண்டாம் நூற்றாண்டு வரை செழித்திருந்த இச்சங்க காலத் தமிழர் வரலாற்றைத் தெளிவுற அறிய இலக்கியங்களும் கல்வெட்டுகளும் அகழ்வாய்வுச் சான்றுகளும் நன்கு உதவுகின்றன. இக்காலகட்டத் தமிழர் சமய வரலாறு பல்துறை அறிஞர்களால் தொகுக்கப்பெற்றுள்ளது. சேயோன் (முருகன்), மாயோன் (திருமால்), வேந்தன் (இந்திரன்), வருணன்(1), பழையோள்(2) (கொற்றவை), முக்கண்ணன்(3) (சிவபெருமான்), பலராமன்(4), உமை(5) எனத் தமிழர் வழிபட்ட தெய்வங்களைச் சங்க இலக்கியங்கள் பல பாக்களால் அறிமுகப்படுத்துகின்றன. சங்க இலக்கியங்களுள் காலத்தால் பிற்பட்டனவாகக் கருதப்படும் கலித்தொகை, பரிபாடல் ஆகிய இரண்டும் இறை சார்ந்த பல தொன்மங்களை விளக்குகின்றன. சங்க காலத்திற்குச் சற்று முற்பட்டதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தொல்காப்பியமும் தமிழர் வழிபாட்டுச் சிந்தனைகளை முன்வைக்கிறது. இவ்விலக்கியங்களுள் ஒன்றுகூட, மறை பொருளாகவேனும் பிள்ளையார் வழிபாட்டைப் பற்றி யாண்டும் குறிப்பிடாமை நினைவு கொள்ளத்தக்கது.
'நல்லவுந் தீயவும் அல்ல குவியிணர்ப் புல்லிலை எருக்கமாயினும் உடையவை கடவுள் பேணேம் என்னா' என்னும் புறநானூற்றுப் பாடலடி (106) கொண்டு, அதன் பொருளை உணர்ந்தும் உணரார் போல சிலர் சங்க காலத்தில் பிள்ளையார் வழிபாடு இருந்ததாகக் கூறுவது பிழையாகும்(6). 'நல்லதென்றும், தீயதென்றும் வகைப்படுத்த இயலாத எருக்கம்பூ தரினும் தெய்வங்கள் அவற்றை மறுப்பதில்லை' எனும் பொருளமைந்த இப்பாடல், தெய்வங்களின் சார்பற்ற தன்மையைச் சுட்டுகிறதே தவிர, பிள்ளையார் வழிபாட்டை அல்ல. எருக்கம்பூ, சிவபெருமானால் விரும்பிச் சூடிக்கொள்ளப்பட்ட பூவாக அப்பர் பெருமானால் சுட்டப்படுவது நோக்க(7), பின்னாளிலேயே இது பிள்ளையாருக்கு உகந்த பூவாக மாற்றப்பட்டமை தெளிவாகும். எவ்வித அடிப்படைச் சுட்டலும் இல்லாத இப்பாடலடி கொண்டு, பிள்ளையார் வழிபாடு சங்க காலந்தொட்டே இருந்தது எனக் கூறுவார் கூற்று எவ்விதத்தானும் உண்மையாகாமை கண்கூடு.
தமிழ்நாடு முழுவதுமாய் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் இக்காலகட்டச் சான்றுகளைப் பலவாய்த் தந்திருந்தாலும், பிள்ளையார் வழிபாட்டைக் குறிக்கும் எத்தகு அடையாளங்களையும் இன்றுவரை தரவில்லை. தமிழ்நாட்டின் இயற்கைக் குகைத் தளங்களில் காணப்படும் இக்காலகட்டத் தமிழிக் கல்வெட்டுகளும் இது குறித்து மௌனமாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது(.
சங்க காலத்தை அடுத்தமைந்த மூன்று நூற்றாண்டுகளில் (கி.பி 200 - கி.பி 5 தமிழ்நாடு தமிழர் கையிலிருந்து மாறிப் பல்லவர், களப்பிரர் வயமாயிற்று. இக்காலகட்ட வரலாற்றை அறிய பல்லவர்களின் பிராகிருத, வடமொழிச் செப்பேடுகளும் இலக்கியங்களும் உதவுகின்றன. பல்வேறு அறிவியல் பூர்வமான சான்றுகளின் அடிப்படையில் தமிழ்நாடு, இலங்கை, ஜப்பான் சார்ந்த அறிஞர் பெருமக்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள் முதலிய இலக்கியங்களை இக்காலகட்டம் சார்ந்தவை என அடையாளப் படுத்தியுள்ளனர். இவ்விலக்கியங்களுள், தமிழர் சமய வரலாறு குறித்து அரிய பல தரவுகளை உள்ளடக்கியிருக்கும் சிலப்பதிகாரம் புகாரிலும் மதுரையிலும் இருந்த இறைக் கோயில்களை வகைப்படுத்தியும் வரிசைப்படுத்தியும் காட்டுகிறது.
பிறவா யாக்கைப் பெரியோன் (சிவபெருமான்), அறுமுகச் செவ்வேள் (முருகன்), வாலியோன் (பலராமன்), நெடியோன் (திருமால்), இந்திரன், கொற்றவை, உமை, கதிரவன் எனப் பல்வேறு முதன்மைத் தெய்வங்களைச் சுட்டும் சிலப்பதிகாரம், தருக்கோட்டம், வெள்யானைக் கோட்டம், வேற்கோட்டம், வச்சிரக்கோட்டம் என இறை சார்ந்தவற்றிற்கு அமைந்த கோயில்களையும் காட்டுகிறது(9). சிறு தெய்வ வணக்கம் பற்றியும் விரித்துரைக்கும் இவ்விலக்கியத்தில் பேரூர் சார்ந்தோ சிற்றூர் சார்ந்தோ எவ்விடத்தும் பிள்ளையார் வழிபாடு பேசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு, கோயில்களைப் பற்றியும் இறைவழிபாடு பற்றியும் கூறினாலும் பிள்ளையார் பற்றிய குறிப்புகளைக் கொண்டிருக்காமை கருதத்தக்கது(10). இக்காலப் பகுதிக்கு உரியனவாக அடையாளம் காணப்பட்டிருக்கும் வட்டெழுத்துக் கல்வெட்டுகளிலும் பிள்ளையார் சுட்டல் இல்லை(11).
பிள்ளையாரை முதன்முதலாக அறிமுகப்படுத்தும் இலக்கியங்கள் அப்பர், சம்பந்தர் திருமுறைகளே. இந்த ஆறு திருமுறைகளிலும் அப்பரும் சம்பந்தரும் பிள்ளையாரைப் பற்றி மிகக் குறைவான இடங்களிலேயே குறிப்புத் தருகின்றனர். இப்பெருமக்களின் காலம் கி.பி ஏழாம் நூற்றாண்டின் தொடக்கம் என அறிஞர் கொள்வர். இக்குறிப்புகளால், பிள்ளையார் சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்டவர் என்பதையும் கயாசுரனைப் போரில் வென்றவர் என்பதையும் அறியமுடிவதுடன், அவரது தோற்றம் பற்றிய வண்ணனைகளையும் ஓரளவிற்குப் பெறமுடிகிறது.
உமை பெண் யானையின் வடிவம் கொள்ள, சிவபெருமான் ஆண் யானையின் வடிவம் கொண்டு இணைந்ததன் பயனாய்ப் பிறந்தவர் பிள்ளையார் என்பதை இரண்டு பதிகங்களால் விளக்குகிறார் சம்பந்தர். தம்மை வழிபடும் அடியவர்தம் இடர்களைத் தீர்ப்பதற்காக இறைவன் அருளிய கொடையே கணபதி என்று பிள்ளையாரின் பிறப்பிற்குக் காரணம் காட்டும் சம்பந்தர் (சம். 1: 123:5, 126:6), 'தந்த மதத்தவன் தாதை' (1:115:2), 'மறுப்புறுவன் தாதை' (1:117:, 'கரியின் மாமுகமுடைய கணபதி தாதை' (2:232:3) என்று சிவபெருமானைச் சிறப்புச் செய்யுமாறு பிள்ளையாரின் தோற்றம் காட்டுகிறார்.
நாவுக்கரசர், சம்பந்தரின் கூற்றைக் 'கைவேழ முகத்தவனைப் படைத்தார்' (6:53:4), 'வினாயகர் தோன்றக் கண்டேன்' (6:77:, 'ஆனைமுகற்கு அப்பன்' (6:74:7), 'கணபதி என்னும் களிறு' (4:2:5) எனும் பல்வேறு தொடர்களால் உறுதிப்படுத்துகிறார். கயாசுரனைக் கொல்லச் சிவபெருமான் பிள்ளையாரைப் பயன்படுத்திக் கொண்ட தகவலைத் தரும் நாவுக்கரசர், அதற்காகவே பிள்ளையார் பிறப்பிக்கப்பட்டார் எனக் கருதுமாறு பாடல் அமைத்துள்ளார் (6:53:4).
முருகப்பெருமானைப் பற்றி நாற்பத்தேழு இடங்களில் விதந்தோதும் இவ்விரு சமயக் குரவரும், பிள்ளையாரைப் பற்றி மிகக் குறைவான அளவிலேயே குறிப்புகள் தந்திருப்பதை நோக்க, இவர்தம் காலத்திற்குச் சற்று முன்னதாகவே பிள்ளையார் வழிபாடு தமிழ்நாட்டில் கால் கொண்டதாகக் கருதலாம்.
தமிழ்நாட்டில் இன்றைக்கும் காணப்படும் இறைக் கோயில்களுள் காலத்தால் பழமையானவை குடைவரைகளே. குன்றுகளைக் குடைந்தும், பாறைகளைச் செதுக்கியும் இத்தகு குடைவரைகள் அமைக்கப்பட்டன. வடதமிழ்நாட்டில் இத்திருப்பணியைத் தொடங்கியவர் பல்லவப் பேரரசரான முதலாம் மகேந்திரவர்மர். இவர் குடைவரைகள் எவற்றிலும் பிள்ளையார் சிற்பம் இடம்பெறவில்லை(12). திருக்கழுக் குன்றத்தில் உள்ள ஒருகல் மண்டபம் முதலாம் நரசிம்மவர்மரின் திருப்பணியாகக் கருதப்படுகிறது. இதிலும் பிள்ளையாரின் வடிவமில்லை. இராஜசிம்மரின் குடைவரைகளிலும் பிள்ளையாரின் சிற்பம் இறைவடிவமாகக் காட்டப்படவில்லை என்றாலும், மாமல்லபுரம் இராமாநுஜர் குடைவரையின் பூதவரியில் பிள்ளையார் இடம்பெற்றுள்ளார்.
இராஜசிம்மர் பணியான மாமல்லபுரம் தருமராஜர் ரதத்தின் பூதவரியிலும் பிள்ளையார் எனக் கொள்ளத்தக்க வடிவங்கள் இடம்பெற்றுள்ளன(13). இராஜசிம்மரின் கற்றளிகளில் கூடுகளிலும் கோட்டங்களிலும் பிள்ளையார் இடம்பெறத் தொடங்குகிறார். சிராப்பள்ளியிலுள்ள கீழ்க்குடைவரை(14), சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பட்டூர்க் கைலாசநாதர் கோயில்(15), செங்கற்பட்டு மாவட்டம் வல்லத்திலுள்ள கந்தசேனரின் குடைவரை(16), ஆகியவற்றில் பிள்ளையார் கோட்டத் தெய்வமாகக்(17) காட்டப்பட்டுள்லமை குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டத்தைக் கி.பி எட்டாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியாகக் கொள்ளலாம். இதனால் வடதமிழ்நாட்டு இறைக்கோயில்களில், பிள்ளையாரின் சிற்பங்கள் சம்பந்தர், அப்பர் காலத்திற்கு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டிற்குப் பிறகே இடம்பெறத் தொடங்கியமை தெளியப்படும்.
தென் தமிழ்நாட்டில் பாண்டியர், முத்தரையர் கைவண்ணமாகப் பிறந்த குடைவரைகள் பலவற்றில் பிள்ளை யாரின் சிற்பம் காணப்படுகிறது. அவற்றுள் குறிப்பிடத்தக்கது பிள்ளையார்பட்டி(18). அங்குள்ள பிள்ளையார் இன்றைக்கு முதன்மைத் தெய்வமாக வழிபடப்பட்டாலும், உருவான காலத்தில் சிவபெருமானுக் கான குடைவரையின் முன், பக்கவாட்டில் விரியும் சுவரில் கோட்டத் தெய்வமாகச் செதுக்கப்பட்டவரே ஆவார். இக்குடைவரையில் இடம்பெற்றுள்ள வட்டெழுத்துக் கல்வெட்டு, 'எக்காட்டூருக் கோன் பெருந்தசன்' எனும் பெயரைத் தருகிறது. இக்கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு இதை ஆறாம் நூற்றாண்டென்பர் அறிஞர்கள்(19).
இக்கருத்து ஏற்புடையதாயின் பிள்ளையர்பட்டிக் குடைவரையின் காலமும் ஆறாம் நூற்றாண்டாகிவிடும். எனில், தமிழ்நாட்டின் காலத்தால் முற்பட்ட பிள்ளையார் சிற்பமாகப் பிள்ளையார்பட்டிக் குடைவரைப் பிள்ளையாரையே கொள்ளவேண்டிவரும். குடைவரையின் அமைப்பு, சிற்பங்களின் செதுக்கு நேர்த்தி கொண்டு இக்குடைவரையின் காலத்தை ஏழாம் நூற்றாண்டாகக் கொள்வாரும் உண்டு. இரண்டில் எதை ஏற்பினும் இப்பிள்ளையாரே தமிழ்நாட்டின் காலத்தால் முற்பட்ட பிள்ளையார் என்பதில் ஐயமில்லை.
திருமலைப்புரம், செவல்பட்டி, தேவர்மலை, அரிட்டாபட்டி, மலையக்கோயில், திருக்கோளக்குடி, திருப்பரங்குன்றம், மலையடிப்பட்டி, குன்றக்குடி, கோகர்ணம் முதலிய பல பாண்டியர், முத்தரையர் குடைவரைகளில்(20) பிள்ளையார் சிற்பம் இடம் பெற்றுள்ளமையை நோக்க, தமிழ்நாட்டில் பிள்ளையார் வழிபாடு காலூன்றிய முதல் இடமாகப் பாண்டிய மண்ணையே கொள்ளவேண்டியுள்ளது. கி.பி ஆறு, ஏழாம் நூற்றாண்டுகளில் சிராப்பள்ளிக்குத் தெற்கே காலூன்றிப் பரவிய இப்பிள்ளையார் வழிபாடு எட்டாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில்தான் வடதமிழ்நாட்டிற்குள் குடிபுகுந்தது. எட்டாம் நூற்றாண்டிற்குப் பிறகும் தமிழ்நாட்டுச் சமய வரலாற்றில் முருகப்பெருமானுக்குக் கிடைத்த இடம் பிள்ளையாருக்குக் கிடைக்கவில்லை என்பதே உண்மை. பல்லவர், பாண்டியர், முத்தரையர் குடைவரைகளில் கோட்டத் தெய்வமாக இடம்பெற்ற பிள்ளையார், தொடக்கக் காலப் பல்லவக் கற்றளிகளில் ஆங்காங்கே இடம்பெற்றாலும், அபராஜிதர் காலக் கற்றளிகளில்தான் உள்மண்டபத் தென் கோட்டத் தெய்வமாக நிலைபெற்றார்(21). இந்நிலைபேறு சோழர் காலத்தில் உறுதியாக்கப்பட்டது.
சோழர் காலக் கற்றளிகளின் திருச்சுற்றில் சுற்றாலைக் கோயில்கள் உருவானபோது எண்பரிவாரத்துள் ஒன்றாகப் பிள்ளையாருக்கும் இடம் கிடைத்தது. திருச்சுற்றின் தென்மேற்கு மூலை பிள்ளையாருக்கு உகந்த இடமாக ஒதுக்கப்பட்டு அவருக்கெனத் தனித் திருமுன் அமைக்கப்பட்டது. இத்தகு பிள்ளையார் திருமுன்களைச் சோழர் கற்றளிகளிலும் பின்னால் வந்த பிற மரபுப் பேரரசுக் காலக் கற்றளிகளிலும் இன்றும் காணலாம்.
கோட்டத் தெய்வமாகவோ, சுற்றாலைத் தெய்வமாகவோ மட்டுமே அமைந்த பிள்ளையாருக்குத் தனிக்கோயில் அமைக்கும் பழக்கம் மிகப் பிற்பட்ட காலத்திலேயே ஏற்பட்டது. தமிழ்நாட்டுக் கோயில்களில் கிடைக்கும் பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுகளும் அதையே உறுதி செய்கின்றன.
கணவன், மனைவியை அடிமையாக நடத்தக்கூடாது என்று கூறிய பெரியார், ‘பிராமணர்’களுக்கு மற்றவர்கள் அடிமையாக இருக்க ஒத்துக்கொள்வார் என்று கருத இடமேது?
அதனால்தான் என்றைக்கும் பிராமணர்கள் மற்ற வகுப்பார் மீது குதிரை ஏறலாம்; அதற்குத் தமிழன் தோள் என்றைக்கும் தயாராக இருக்கும் என்று எண்ணிவிடவேண்டாம் என்றார்.
அப்படிப்பட்ட தந்தைப் பெரியாரவர்களைவிட நியாயப் புத்தி படைத்தவர்கள் வேறு யார் இருக்கிறார்கள்? வேறு யார் இருந்தார்கள்?
கலப்பு மணம் செய்யலாம் என்று சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் அவர்களே எழுதவில்லையா? கலப்பு மணம்; காதல் மணத்தைப்பற்றி ஒரு கட்டுரையிலே அவர் சொல்கிறார்;-
கலப்பு மணம் என்பது ஓர் இளைஞனும், ஓர் இளம் பெண்மணியும் ஏதோ ஓர் இடத்தில் தடீர் என்று சந்தித்து, சந்தித்த காரணத்தினாலே இயற்கை உணர்ச்சியால் காதல் தூண்டப்பட்டுக் காதலிலே அவர்கள் ஈடுபட்டு, பின்னர் ஒருவரை ஒருவர் காப்பாற்ற முடியாமல் போய்விடுகிற நிலைமை ஏற்பட்டு, மன உறுதி இல்லாமல் ஒருவரை ஒருவர் கைவிட்டுப் போய்விடக் கூடாது. ஒருவரை ஒருவர் பார்த்துப் பழகிப் புரிந்துகொண்டு, வருகிற கஷ்ட நஷ்டங்களை ஏற்றுக் கொள்ளலாம் என்று நம்பிக்கை ஏற்பட்டால், எந்த சாதிப் பெண் எந்த சாதி ஆணைத் திருமணம் செய்து கொண்டாலும் வரவேற்க்க்கூடியதுதான் என்று இராசாசி அவர்களே எழுதியுள்ளார்.
இராசாசி அவர்கள் குடும்பத்தில் கலப்பு மணமும் நடைப்பெற்று இருக்கிறது.
இராசாசி அவர்கள் சொன்னதைப் பெரியார் சொன்னால் கசக்கிறதா? இராசாசி சொன்னதை நாங்கள் ஒப்புக்கொண்டோமா என்று பார்ப்பன நண்பர்கள் கேட்க்கூடும்.
அவர்கள் ஒப்புக்கொண்டார்களோ இல்லையோ - அவர்களுடைய சமுதாயத்திலே 100 க்கு - 5 சதவீதம் கலப்பு திருமணம் நடைபெறாமலா இருக்கிறது?
நான் அளவிட்டுச் சொல்வது ஒப்புக்கொண்ட திருமணங்களைத்தான்; முடியாத திருமணங்களை அல்ல.
எனவே, காலத்தை உணர்ந்து முற்போக்காகத் தங்களுடைய சமுதாயத்தை பாதுகாத்துக்கொள்ள நினைக்ககூடிய ‘பிராமண’ நண்பர்கள் மற்றவர்ள் முன்னேறுவதற்கு வழிவிடவேண்டாமா? அவர்கள் வழி கூட விடவேண்டா; சிவன்கோயில் ந்ந்தியாக இருக்கலாமா?
அவர்கள் நந்தியாக இருந்தால் இந்த ந்ந்தன்கள் என்றைக்குமே திருக்கோயிலுக்குள் போய்ச் சேரமாட்டார்கள் என்ற நினைப்பா? அந்தக் காலத்து நந்தன், ‘நந்தியே வழிவிடு வழிவிடு என்றான்.
இந்தக்காலத்து நந்தன் நந்திமீது ஏறிக்கொண்டு அதையே ஓட்டிக்கொண்டு போய்விடுவான்? நிலைமை மாறியுள்ளது!
காலம் மாறுகிறதல்லவா? மாறுகிற காலத்தை உணருகின்ற ஆற்றல் பெற்றிருந்த காரணத்தினால்தானே பிராமணர்களை எல்லாம் அறிவாளிகள் என்று பெரும்பாலோர் நினைத்துக் கொண்டிருந்தனர். இன்றைக்ககு அதை ஏற்பார் இல்லையெனினும் இந்தக் காலத்தின் மாற்றத்தை ஏற்க மறுப்பது பயன்தருமா?
பார்ப்பனர்களுக்குள்ளேயாவது முதலில் சாதி வித்தியாசம் தொலையட்டும். அவர்களுக்கிடையிலேயாவது அர்த்தமில்லாத மூடநம்பிக்கைகள் ஒழியட்டும். அவர்களாவது ஒன்றாக ஆகித் தொலையட்டும். அவரகளைப் பார்த்தாவது மற்றவர்களுக்குப் புத்தி வரட்டும் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது எனக்கு.
இங்கே முக்குலத்தோர் என்பவருள் முப்பத்து மூன்று சாதிகள் இருக்கின்றன.
முத்தரையர் என்று நாற்பத்தெட்டு முத்தரையர் இருக்கின்றனர்.
முதலியாரிலே எழுபத்தெட்டு முதலியார் இருக்கின்றனர். பிள்ளைமாரிலே ஐம்பத்திரண்டு பிள்ளைமார்கள் இருக்கின்றனர்.
பள்ளர், பறையர், அருந்ததியரிலே - அறுபத்தெட்டு வகை இருக்கிறார்கள்.
ஆக, இந்த நாடு நலம்பெற வேண்டுமானால், பார்ப்பனர்களாக இருக்கின்ற அவர்களாவது சாதிப்பெயர் வேற்றுமையின்றி ஒன்றுபட்ட்டும்.
உங்களிடையே உள்ள வேற்றுமையை முதலில் ஒழியுங்கள் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள்.
சமூகத்தில் ஒரே சாதிக்குள்ளேயே பல்வேறு பிரிவுகள் உள்ளன. இப்பிரிவுகள் கரை, கூட்டம், பரம்பரை, வகையறா, கிளை என்பன போன்ற பெயர்களைப் பெற்றுள்ளன. ஒரே கரையையோ, கூட்டத்தையோ, பரம்பரையையோ, வகையறாவையோ, கிளையையோ சேர்ந்தோர் தங்களுக்குள் மணஉறவு கொள்வதில்லை. மற்றொரு கூட்டத்தினருடன்தான் மண உறவு கொள்கின்றனர். இவர்களிடம் காணப்பெறும் கடவுள் வழிபாடுதான் இவர்களை வேறுபடுத்துகின்றது. குறிப்பாக, முத்தரையர் சமூகத்தினரிடம் பூவான் கூட்டம், முடியன் கூட்டம், கலியன் கூட்டம், செல்லாயி கூட்டம் என இன்னும் பல பிரிப்பு முறைகள் உள்ளன.
இவர்களில் ‘முடியலாயி’ என்ற தெய்வத்தை வழிபடுவோர் அனைவரும் பங்காளி உறவுடையோராவர். எனவே, இவர்களுக்குள்ளேயே மண உறவு கொள்வதில்லை. மாறாக, ‘கலியன்’ என்ற தெய்வத்தை வணங்குவோருடன் மண உறவு கொள்வர். இவர்கள் மாமன் உறவுடையோராவர். இவ்வாறே மற்ற குழுவினரையும் கருத்தில் கொள்கின்றனர். ஆக, முத்தரையர் சமூகத்தினரிடம் கடவுள் வழிபாடே குழு அடையாளமாக அமைகிறது.
புதிய கண்டுபிடிப்பு: சோழர் காலக் காளாபிடாரி (பத்ரகாளி) சிற்பம்
கோ. தில்லை கோவிந்தராஜன் (ஆய்வாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்)
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டையை அடுத்துள்ள பசுபதிகோயில் அருகில் கி.பி. 850- 900ஆம் ஆண்டைச் சேர்ந்த சோழர் காலக் காளாபிடாரி (பத்ரகாளி) சிற்பம் ஒன்றைக் கண்டறிந்துள்ளோம்.
ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர் கலாநிதி, வடக்குமாங்குடி தலைமை ஆசிரியர் அ. சுப்பையா, வெண்ணுகுடி ஆசிரியர் பழனிச்சாமி மற்றும் பாலசுப்பிரமணியன், க. பத்மநாபன், ஓவிய ஆசிரியர் சங்கர் ஆகியோரைக் கொண்ட ஆய்வுக் குழுவினர் என் தலைமையில் பசுபதிகோயில் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு எதிரே உள்ள தோப்பில் ஆய்வு செய்து காளாபிடாரி சிற்பத்தைக் கண்டுபிடித்தோம்.
தஞ்சையை ஒட்டிய பகுதியில் காளாபிடாரி வழிபாடு சிறப்பாக இருந்தது என்பதை நிருபதொங்க பல்லவர் காலத்தைச் சேர்ந்த கண்டியூர் காளாபிடாரி, முத்தரையர் சுவரன் மாறனால் உருவாக்கப்பட்ட நியமத்துக் காளாபிடாரி கோயில்கள் பற்றிக் குறிப்பிடும் கண்டியூர் மற்றும் செந்தலைக் கல்வெட்டுகளால் அறியமுடிகின்றது.
இப்பசுபதிகோயில் காளாபிடாரியைப் பற்றிப் புள்ளமங்கை கோயிலில் உள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. உத்தம சோழனின் 2ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டிலும், சுந்தர சோழனின் மூத்த மகனும், முதலாம் இராஜராஜனின் சகோதரனுமாகிய ஆதித்த கரிகாலனின் 5ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டிலும் நடுவிற்சேரி திருமணிமண்டகமுடைய காளாபிடாரி எனக் குறிப்பிடப்படுகின்றது. நடுவிற்சேரி என்ற ஊர் தற்போது நல்லிச்சேரி என வழங்கப்படுகிறது. தற்போது இச்சிற்பம் நல்லிச்சேரிக்கும் புள்ளமங்கைக்கும் இடையில் காணப்படுகிறது. இந்த இடத்தில் கோயில் ஒன்று இருந்து அழிந்திருக்கவேண்டும். இக்கோயிலே மேற்குறித்த கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் ‘நடுவிற்சேரி திருமணிமண்டகமாக’ இருக்க வேண்டும். குடிப்பெயர்வு காரணமாகவோ, ஆட்சி மாற்றங்கள் காரணமாகவோ இக்கோயிலில் வழிபாடு முற்றிலும் நின்றுபோய் இக்கோயிலுக்குரிய நிலங்களின் மேலாண்மையும் கைமாறிப்போய் இக்கோயில் முற்றிலும் கைவிடப்பட்டு அழிந்திருக்கவேண்டும். எப்படியோ இந்த அழகிய சிற்பம் அழிவின் விளிம்புவரை சென்று அதிசயமாகத் தப்பிப் பிழைத்துள்ளது.
இச்சிற்பம் நான்கரை அடி உயரத்தில் பத்மபீடத்தில் சுகாசனத்தில் அமர்ந்த நிலையில் உள்ளது. வலது முன்கை உடைந்துள்ளது. இடது முன்கை தொடைமீது வரதஹஸ்தத்தில் உள்ளது. வலது பின்கையில் சூலமும், இடது பின்கையில் கபாலமும் உள்ளன. மார்பினில் குறுக்கே கபாலயக்ஞோபவீதம் (மண்டையோடுகளால் ஆன பூணூல்), ஜடாபாரம், அதில் சர்ப்பமெளலி, காதுகளில் பைதற் பிணக்குழை காட்டப்பட்டுள்ளன. “துளைஎயிற்று உரகக் கச்சுடை முலைச்சி” எனச் சிலப்பதிகாரம் கூறுவதுபோல மார்பினில் பாம்பினைக் கச்சையாக அணிந்துள்ள நிலையில் காளாபிடாரி உள்ளார். சோழர் காலத்தில் காளாபிடாரி வழிபாடு சிறப்பான நிலையில் இருந்தது என்பது இச்சிற்பத்தின் மூலம் தெரியவருகிறது.
சோழர்களின் குல தெய்வம் காளியே என்பதும், காளியை ஊர்த்துவ தாண்டவம் ஆடி வென்றதன் மூலம் நடராஜர் (ஆடவல்லான்) என்ற பட்டத்தைச் சிவபெருமான் பெற்றுவிட்டதாலேயே தில்லை சபாபதி (நடராஜர்) சோழர்களின் குல தெய்வமாக ஆகிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
திங்கள், 14 ஜூன், 2010
ரவிகுல திலகன்..-ஒரு பார்வை..
வானதி பதிப்பகத்தின் வரலாற்று நூல்... அணிந்துரை சுந்தா..
சரித்திரப் புதினங்களில் சாண்டில்யன் ராஜா என்றால் கோவி மந்திரி எனலாம். ஆனால் சக்கரவர்த்தி என்றால் அது கல்கிதான்.. அல்லியும் ஆம்பலும் கொட்டிக்கிடக்கும் வாவிகளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு வலிமையான மாமல்லரும்.. நளினமான சிவகாமியும்தான் நினைவில் மலருவார்கள்..அவரின் இளவல் கல்கி கி. ராஜேந்திரன் (இவரை தளபதி எனலாம்) எழுதிய சரித்திரப் புதினம் ரவிகுல திலகன்..சிங்கக் குட்டியல்லவா பதினாறு அடி பாயாவிட்டாலும்..சிங்கம் பாய்ந்த தூரத்தைத் தொட முயன்றிருக்கிறது..
ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கருங்கோளரும் பாண்டியனும் சிம்ம விஷ்ணு பல்லவருக்கு திரை கட்டி வாழ்ந்தனர்..
நலங்கிள்ளி ., நெடுங்கிள்ளி., கிள்ளிவளவன்., போன்ற சோழமன்னர்கள் 700 ஆண்டுகள் (நந்திவர்ம) பல்லவர்க்குத் திரைகட்டியபின் ரவிகுலத்தோன்றலாய் ஆதித்தன் விஜயாலயன் உதயம்.. தன் முன்னோர்கள் போலில்லாமல் சுதந்திர நாட்டை ஆளவிரும்பும் சோழன்..இவன் வீரர் தலைமணி., கொடையில் கர்ணன்., நேர்மையான ஒழுக்கமுடையவன்..பம்பைப் படை வீட்டில் பிடித்த நெருப்பில் பாய்ந்து குடிகளைக் காப்பாற்றி முகம் கரிந்து வீரத்தழும்பு பெற்றவன்.. முத்தரையர் குலமகள் உத்தமசீலி இவன் மனதை கொள்ளை கொண்டவள்..
இவளை அடையவும்., சுதந்திரத் திருநாட்டை அடையவும்., குவளை (குறிஞ்சி மகள்)., சீனன்., (மஞ்சள் பூதம் எனக் குறிப்பிடப் படும் பீம்பாய் போன்ற நல்லவன்.. ஊமையன்..)மற்றும் ஜெய்சிங்கன் ( நண்பன்.. வியாபாரி).. இவர்கள் துணையுடன் போராடுவதுதான் கதை.. வெற்றி கிட்டுகிறது வீரத் திருமகனுக்கு.. சில படிப்பினைகளும்..
ஆகவமல்லன் (ஒற்றர் படைத்தலைவன்)., பராசிராயன் ( பல்லவ சக்கரவர்த்தியின் மாதண்ட நாயகர் .), போன்றவர்களின் கண்காணிப்பிலும் சூழ்ச்சியிலும் தப்பி வெல்கிறான் நாட்டை.. கடைசியில் வாரிசும் பெறுகிறான்.. மனம் கவர்ந்த உத்தம சீலியின் (மதுரை அரசன் பர சக்ர கோலாகன்.. ஸ்ரீ மாறன்.. ஸ்ரீ வல்லபன் மகள்) மூலம்....
மொழி நடைக்காகப் படிக்கப் பட வேண்டிய நூல் இது.. செம்பியன் என்ற புனை பெயரிலும் கல்கி கி.ராஜேந்திரன் எழுதி இருக்கிறார்..
குதிரைகளும் குளம்படிச்சத்தங்களும்., வேல் .,ஈட்டி .,வில் .,வாளின் உராய்வுகளும்., சதியாலோசனைகளும்.., பிரதிபலன் பார்க்காத ராஜ விசுவாசமும்., காதலும் , வீரமும் கொட்டிக் கிடக்கும் நாவல் இது...
ஒரு ராஜாவானவர்.. தன் நலம் விரும்பும் குவளை போன்ற மலை மகளிடம் இருந்து கூட அரசியல் நீதியைக் கற்பதும்., காதல் வயப்படுவதும் அழகு.. பலதார மணம் அனுமதிக்கப்பட்ட அரசகுலத்தில்..
ஆதூர சாலை., நாட்டிய அரங்கம்., பச்சிலை மூலிகை பயன்படுத்தும் மருத்துவத்திறன்., உணர்ச்சிமிக்க சுதந்திர உணர்வைத்தட்டி எழுப்பக்கூடிய நாட்டிய நாடகங்களை நடத்தும் கலை ஆற்றல்..மந்திர மாயம் போல காட்டு மிருகங்களைப் பழக்கும் அதிசயம்..எல்லாம் குவளையின் வழி கிட்டுகிறது..
வேளைக்காரப் படை வீரர்கள் கடமையை நிறைவேற்ற முடியாவிட்டால்.. சிரத்தையே கொடுத்தல் எனும் ராஜவிசுவாசம்.. மேலும் மல்யுத்தத்தின் யுக்திகள்.. அரசாங்கக் கருவூலம் என்பது ஆயத்தீர்வை மேலும் வேறு பல இறைகள் சேர்ந்த செல்வம்.. என நிறைய அறியத்தருகிறார்.. இளவல்
”நிலவருவாய்க் கணக்குகள் பற்றி திணைக்கள நாயகத்திடம் பேசிவிட்டு., அங்காடிப் பாட்டமாகவும்., மனை இறையாகவும்..தனி இறையாகவும்.. முத்துக் குளிப்பதில் கிட்டிய சலாபத் தேவையாகவும் இதர சிற்றாயங்களாகவும் பெறப்பட்ட வரிகள் கணக்கில் வைக்கப் பட்டன.. நகருக்கு வந்த புதிய வணிகர்களிடம் பெறப்பட்ட சுங்கங்களைத் திருவாசல் முதலி.,கருவூலத்தில் ஒப்படைப்பார்.. சில பொற்கழஞ்சுகளை நிலுவையாகத் திருப்பித்தர வேண்டும்..” இவ்வாறான பகிர்வுகள் எனக்கு இதில் பிடித்தது..
மேலும்..பரிகள் பராமரிப்புப் பற்றி..” லாயங்களை நிர்வாகிக்கிற கீழ் வாயில் காப்போரிடம் நாம் காலணி தரிப்பது போல் குதிரைக் குளம்புகளுக்கு இரும்பிலேயே செய்த லாடம் அணிவிக்க வேண்டும்..அதனை எந்த வடிவில்., எப்படித்தயாரிப்பது., எப்படிப் பொருத்துவது., என்று கற்றுத்தந்தாள் குவளை..
பிடறியிலும் உடலிலும் உரோமம் ஒரு அளவுக்கு மேல் வளரும் போது வெட்டி விடுதல்.. குதிரையை குளிப்பாட்டி தினம் ஒரு முறை வைக்கோலால் உடலை உருவி விடுவது போல் தேய்த்து விடுதல்..எந்த வகை உணவு எந்த அளவுக்குத் தரவேண்டும்.. எவ்விதம் தேகப்பயிற்சி அளிக்க வேண்டும்..என்று ஒவ்வொரு விஷயத்தையும் முறையாகத்தெரிந்து பகிர்கிறார்.. இது தனிச்சிறப்பு ..
கோட்டை கொத்தளங்கள்., மாட மாளிகைகைகள்., கூட கோபுரங்கள்., உப்பரிகைகள் .. அந்தப்புரங்களின் பின்னே உள்ள வீரம் மட்டுமல்ல.. இதயங்களையும் பற்றிப் பேசும் நாவல் இது,.. வாசித்துப் பாருங்கள்... சொல்வீர்கள் கல்கியின் இளவலும் அற்புதமென்று..
டிஸ்கி:..1...- ”முதலிரவன்று மணமகளைச் சட்டபூர்வமான உரிமையுடன் மணமகன் கட்டிப் பிடிப்பது போல் தஞ்சை மாநகரத்தை தன் மகிழ்ச்சிக்காகக் கைப்பற்றினான் விஜயாலயன்” என்று திருவாலங்காட்டுச் செப்பேடு கூறுவதில் வினோத அழகு தென்படுவதாக எழுதுகிறார் சரித்திரப் பேராசிரியர் K.A. நீலகண்ட சாஸ்த்ரிகள்..(சோழர்கள்)
டிஸ்கி:...2...:- இரண்டு மூன்று நண்பர்களின் புத்தகங்கள் படித்துக் கொண்டிருக்கிறேன் .. விரைவில் விமர்சனம் வரும்..:)) இது கம்பர் விழாவுக்குப் போன போது படித்தது.. இப்போதுதான் வெளியிட நேரம் கிடைத்தது.. எனவே மக்காஸ்.. கூடிய சீக்கிரம் எழுதிவிடுவேன்.. கோபிக்காதீங்க..:))
டிஸ்கி..3 ..:- நேற்றிலிருந்து டிஸ்கவரி புக் பேலஸில் கிழக்கு பதிப்பகம் மற்றும் ஆழி பதிப்பகத்தின் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.. ஒரு மாதம் வரை.. பயன்படுத்திக் கொள்ளுங்கள் மக்காஸ்..:))
சோழர்கள்
சென்ற மாதம் ஒரு நாள் வள்ளுவர் கோட்டத்திற்கு நானும் மதுவும் சென்றிருந்தோம். அங்க ஒரு book stall இருந்தது. சரி சும்மா பார்ப்போமே என்று அங்கு இருக்கும் புத்தகங்களை நோட்டம் விட்டோம். அப்பொழுது அங்கு, நீலகண்ட சாஸ்திரி அவர்கள் எழுதிய "சோழர்கள்" புத்தகம் இருந்தது.
நீலகண்ட சாஸ்திரி அவர்கள் தென்னிந்திய வரலாற்றை பற்றி மிகப் பெரிய ஆராய்ச்சி நடத்தியவர். கல்வெட்டுகள், செப்பேடுகள், சங்க காலப் இலக்கியங்களை எல்லாம் ஆராய்ந்து, தென்னிதிய வரலாற்றிற்கு உலகளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவர். அவர் சென்னை பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம், சிகாகோ பல்கலைக்கழகம், பானரஸ் இந்து பல்கலைக்கழகம் என்று பல பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணி புரிந்தவர். யுனேஸ்கோவின் Institute of Traditional Cultures of South East Asia வின் Director ஆக பணிபுரிந்தவர். இந்தியாவின் மூன்றாவது மிக உயரிய civilian விருதான பத்மபூசன் விருது பெற்றவர். அவர் எழுதி 1955 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகமே "சோழர்கள்".
அந்த புத்தக் கடையில் ஒரே ஒரு பதிப்பு மட்டும் தான் இருந்தது. அந்த புத்தகத்தை வாங்கும்பொழுது அந்த கடைக்காரர், "சார், நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி சார். இந்த புத்தகம் எங்கும் கிடைப்பதில்லை. அனைத்தையும் நூலகங்களுக்கே கொடுத்துவிட்டார்கள். என்னிடம் இருந்ததுதான் கடைசி பிரதி. இனிமே இந்த புத்தகம் அச்சிட்டால்தான் உண்டு" என்றார். நானும் சிரித்துக் கொண்டு வாங்கி வந்தேன்.
நானும் மதுவும் மதுரைக்காரைய்ங்யதால (ய்ங்ய வை அழுத்தி உச்சரிக்கவும் :) ), எங்களுக்கு இயல்பாகவே பாண்டியர்கள் மீது ஒரு ஈர்ப்பும், அதனால் ஒரு பெருமை கலந்த கர்வமும் உண்டு. சின்ன வயதில் பாண்டியன் பேருந்தையும், அந்த பாண்டியன் என்ற பெயரில் "ண" க்கு மேல் புள்ளிக்குப் பதிலாக பாண்டியரின் சின்னமாகிய மீனைப் பார்ப்பதும் மிக ஆனந்தமாக இருக்கும். பாண்டியன் பேருந்து பிற பேருந்துகளை முந்திச் செல்லும்போது "ஹே, எங்க பாண்டியன் முந்திருச்சு" என்று பெரிதாக சத்தம் போடுவோம்.
பள்ளி நாட்களில் சமூக அறிவியல் பாடத்தில் இந்திய வரைபடம் கொடுக்கும்போது வைகையையும், மதுரையையும் தான் முதலில் தேடுவோம். நாங்கள் வட இந்தியச் சுற்றுலா சென்ற போது, எங்களுடன் சுற்றுலா வந்த நெல்லைகாரர்களுடன் "நீங்கலாம், எங்கப் பாண்டியப் பேரரசிற்குட்பட்டவர்கள்" என்று நானும் மதுவும் சண்டைலாம் போட்டோம். அப்பொழுதெல்லாம் பாண்டிய நாட்டையும், பாண்டியர்களையும் பிற நாட்டுடனும், மற்றவர்களுடனும் ஒப்பீடு செய்து குதூகலிப்பதே வழக்கமாக இருக்கும். இதே மாதிரி ஒரு தடவை எங்க அப்பாவிடம் நாங்கள், "அப்பா, காவிரி பெருசா, இல்ல வைகை பெருசா?" என்றுக் கேட்டோம். அதற்க்கு எங்க அப்பா, "வைகை எல்லாம் காவிரியுடன் ஒப்பிடவே முடியாது. காவிரி ரொம்பப் பெரியது" என்றார். அன்றுடன் பாண்டியரை பிறருடன் ஒப்பீடு செய்யும் கேள்விகளை எங்க அப்பாவிடம் கேட்பதையே விட்டு விட்டோம். ஒரு தடவை என்னிடம் ஒருவர், "ஏன் மதுரக்காரங்க எல்லாம் பாண்டி னு அதிகமா பெயர் வைக்குறாங்க" என்றார். சற்றும் தாமதிக்காமல் நான், "ஏன்னா, நாங்கல்லாம் பாண்டியப் பேரரசின் குடிமக்கள்" என்றேன்.
இப்படி பாண்டியர்கள் மீது மிகப் பெரிய பற்று கொண்ட எனக்கு, வயது ஆக ஆக, மேலும் அதிகம் படிக்க படிக்க சோழர்கள், பாண்டியர்களை விட மிகப் புகழ் வாய்ந்தவர்கள் என்றும் , மிகப் பெரிய பரப்பளவை ஆண்டவர்கள் என்றும் புரிய ஆரம்பித்தது. உடனே நானும் பாண்டியர்கள் என்பதிலிருந்து சற்று பெரிய மனது பண்ணி வெளியே வந்து, நாங்கல்லாம் தமிழர்கள் என்று கூறிக் கொண்டு சோழர்களின் பெருமையில் பங்கெடுத்துக்கொள்ள ஆரம்பித்தேன். இப்படி என்னை மாற்றியதில் கல்கியின் "பொன்னியின் செல்வன்" க்கு மிகப் பெரிய பங்கு உண்டு (பொன்னியின் செல்வன், ராஜராஜ சோழனைப் பற்றியது).
சோழர்கள் கிருஸ்துவிற்கு முந்திய சில நூற்றாண்டுகளிலிருந்து பதிமூன்றாம் நூற்றாண்டு இறுதி வரை தமிழகத்தை ஆண்டவர்கள். சேர, பாண்டிய அரசுகளைப் போலவே சோழப் பேரரசும் ஏற்ற, இறக்கங்களை கொண்டாதாகவே இருந்தது.
சோழர்கள் காலத்தை நான்காகப் பிரிக்கலாம்,
I.Early Chozhas எனும் சங்க காலச் சோழர்கள் ஆண்ட கி.மு.300 - கிறிஸ்து பிறப்பிற்கு பிந்தைய சில நூற்றாண்டுகள்.
II.Interregnum Chozhas எனும் சங்க காலச் சோழர்களுக்கும் விஜயாலச் சோழனின் தலைமுறைக்கும் இடைப்பட்டவர்கள் ஆண்ட கிறிஸ்து பிறப்பிற்கு பிந்தைய சில நூற்றாண்டுகள் - கி.பி 9 ஆம் நூற்றாண்டு .
III.Medival Chozhas எனும் விஜயாலச் சோழனின் தலைமுறையினர் ஆண்ட கி.பி 9 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 11 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை.
IV.Later Chozhas எனும் சாளுக்கிய - சோழ குல மன்னனான குலோத்துங்கச் சோழனும் அவன் தலை முறையினரும் ஆண்ட கி.பி 11 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் கி.பி 13 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை.
சோழா என்ற பெயரின் பொருள் என்னதென்று யாருக்கும் தெரியவில்லை. அதே போன்று சோழர்களின் சின்னமான புலி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சரியான காரணமும் தெரியவில்லை. ஆனால் இவையிரண்டும் ஆரம்ப காலத்திலிருந்தே புழக்கத்தில் இருந்திருக்கின்றன. சங்க காலச் சோழர்கள் கிள்ளி, வளவன், செம்பியன் என்ற பெயர்களாலும் குறிக்கப்பட்டனர். கிள்ளி என்பது "கிள்" சொல்லிலிருந்து தோண்டுபவன் என்ற பொருளில் வந்தது. வளவன் என்பதற்கு வளமையான நிலத்தை ஆள்பவன் என்று பொருள். செம்பியன் என்பது புறாவிற்கு பதிலாகத் தன் உடம்பிலிருந்து கறி கொடுத்த சிபிச் சக்ரவர்த்தியின் வழி வந்தவர்கள் என்றுக் குறிக்கும். ஆனால் இந்த பெயர்கள் எல்லாம் சங்ககாலச் சோழர்களுக்கு அடுத்து வழக்கில் இல்லாமல் போய்விட்டது. கரிகார்ச் சோழன், கிள்ளி வளவன்,
நலங் கிள்ளி, நெடுங் கிள்ளி ஆகியோரெல்லாம் சங்க காலச் சோழர்களே.
Interregnum Chozhas என்னும் சங்க காலச் சோழர்களுக்கும், விஜயாலச் சோழனின் தலைமுறைக்கும் இடைப்பட்ட சோழர்களைப் பற்றி பெரிதாக குறிப்பு எதுவும் இது வரைக் கிடைக்கவில்லை. அக்காலங்களில் சோழர்கள் பாண்டியருக்கும் பல்லவருக்கும் உட்பட்டவர்களாகவே இருந்தனர். இதனை சோழர்களின் இருண்ட காலம் எனலாம். இக்காலங்களில் சோழர்கள் தங்கள் பழம் பெருமையை் பற்றியும், எதிர்காலத்தைப் பற்றியும் எண்ணிக் கொண்டும் அமைதியாக இருந்தனர். இக்காலங்களில் ஆந்திராவின் சில மாவட்டங்களில் ஒரு தெலுங்கு அரசு ஒன்று இருந்தது. அவர்கள் தங்களை கரிகார்ச் சோழனின் வழி வந்தவர்கள் என்று கூறிக் கொண்டனர். இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
விஜயாலச் சோழன் தலையெடுக்க ஆரம்பித்த கி.பி 9 ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து சோழர்களின் பொற்காலம் ஆரம்பம் ஆகிறது. இக்காலகட்டத்தைச் சார்ந்தவர்களே உலகப் புகழ் பெற்ற ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆவார்கள். இக்காலகட்டத்தைப் பற்றிய நம்பத்தகுந்த ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளன.
சோழர்களுக்கும் சாளுக்கியருக்கும் இடையே திருமணங்கள் நடைபெற்று வந்துள்ளன. 1070 இல் விஜயாலச் சோழன் மரபில் வந்த ஆதிராஜேந்திர சோழன் மறைவிற்குப் பின், சோழ - சாளுக்கிய மன்னனான குழோத்துங்கச் சோழன், சோழ மன்னனாக அரியணை ஏறினான். ஆதிராஜேந்திர சோழன் மறைவில் Medieval Chozhas இன் காலம் முற்றுப் பெற்று Later Chozhas இன் காலம் ஆரம்பம் ஆகிறது. Later Chozhas இன் காலம் 1279 இல் மூன்றாம் ராஜேந்திரச் சோழனின் மறைவில் முற்றுப் பெறுகிறது.
இப்படியாகச் சோழர்களின் காலம் கிட்டத்தட்ட 16 நூற்றாண்டுகள் பரந்து விரிந்தது.
சங்க காலச் சோழர்கள்
இப்பதிவு நான் முன்னர் எழுதிய சோழர்கள் பதிவின் தொடர்ச்சியே ஆகும்
சங்ககாலச் சோழர்களின் காலம், கிறிஸ்து ஆண்டின் முதற்ச் சில நூற்றாண்டுகள். சங்ககாலச் சோழர்களைப் பற்றி அறிய சங்ககால நூல்கள் தான் வழி கோல்கின்றன. இக்காலச் சோழர்களைப் பற்றி அறிய வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு மிகக் குறைவே. சங்ககாலச் சோழர்களில் கரிகார்ச் சோழன் அளவிற்கு ஒப்பாரும் மிக்காரும் இலர். கரிகார்ச் சோழனின் காலத்தில் சோழர்களின் நிலப்பரப்பு தற்போதைய திருச்சி,தஞ்சை மாவட்டங்களையும் புதுக்கோட்டையின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது. சோழர்கள் ராஜேந்திர சோழன் காலத்தில் உச்சத்தில் இருந்த போது இருந்த நிலப்பரப்பை விட இது மிகவும் சிறியதே. ராஜேந்திர சோழன் காலத்தில் தென்னகம் முழுவதும் சோழர்களின் ஆட்சியில் இருந்தது. மேலும் ஒரிசா, வங்காளம், பர்மா, மலேசியா,தாய்லாந்து, இந்தோனேசியா வரை சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்தது.
சங்க காலத்தில் மிகப் புகழ் பெற்றிருந்த சோழர்கள் கரிகார்ச் சோழன் மற்றும் கோச்செங்கணன். கரிகார்ச் சோழன் என்பதற்கு கரிய காலை உடையவன் என்று பொருள். பிற்காலத்தில் வட மொழி ஆதிக்கம் ஏற்ப்பட்ட பிறகு இதற்க்கு கரி - யானை, காலன் - எமன் என்று யானைகளுக்கு எமனானவன் என்று பொருள் ஏற்ப்பட்டது. சங்ககாலத்தில் ஒரே நேரத்தில் பல சோழ அரசுகள் இருந்தன மேலும் அவற்றிற்கிடையே பகையும் இருந்தது.
சோழர்கள் தங்களை சூரியனின் வழி வந்தோர் என்று கூறிக் கொண்டனர். அதேபோல் கன்றை இழந்த தாய்ப் பசுவின் துயர் தீர்க்க தன் மகனை தேர் ஏற்றிக் கொன்ற மனு நீதிச் சோழன் மற்றும் புறாவுக்கு தன் கறி கொடுத்த சிபிச் சக்ரவர்த்தியின் வம்சத்தவர்கள் தாங்கள் என்று கூறிக் கொள்வதிலும் பெருமை கொண்டனர். இதில் மனு நீதிச் சோழன் தமிழகத்தில் வாழ்ந்த மன்னன் அல்லன். அவன் இலங்கையை ஆட்சி செய்தவன் என்பது ஒரு ஆச்சரியமான தகவல்.
கரிகார்ச் சோழன் மிகப் புகழ் பெற்றவன். அவன் வெண்ணி என்னும் இடத்தில் வைத்து சேரன், பாண்டியன் மற்றும் பதினோரு குறுநில மன்னர்களையும் தோற்கடித்தான். அதன் பிறகுதான் நிலையான ஆட்சி அமைந்தது.இவனுடைய காலத்திலேயே காவிரிப் பூம்பட்டினம் சிறப்புற்றது. கரிகார்ச் சோழனுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்தது. கரிகார்ச் சோழன் நாட்டிலும் பல மாற்றங்களை ஏற்ப்படுத்தினான். அவன் காலத்தில் வாணிகம், தொழிர்த் துறை, விவசாயம் போன்றவை செழித்து விளங்கின.
ஒரே நேரத்தில் பல சோழ மன்னர்கள் இருந்தார்கள். புகார் எனும் காவிரிப் பூம்பட்டினத்தை தலைநகராகக் கொண்டு நலங்கிள்ளியும் உறையூரிலிருந்து நெடுங்கிள்ளியும் அரசாண்டனர். அவர்களுக்கிடையே பகையும் இருந்தது. இவர்களுக்கிடையே காரியாற்றில் நடந்த போரில் நெடுங்கிள்ளி கொல்லப்பட்டதிலிருந்து சோழர்களுக்கிடையேயான போர் முடிவிற்கு வந்தது எனலாம். நாம் கூட பள்ளி பருவத்தில் நலங்கிள்ளி நெடுங்கிள்ளிக்கிடையேயான போரைப் பற்றி படித்திருக்கிறோம்.
நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி காலத்தில் வாழ்ந்த மற்றொரு முக்கியமான் மன்னன் கிள்ளிவளவன். இவன் சேரர்களின் தலைநகரான கரூரைக் கைப்பற்றினான்.
இந்தக் கரூரும் தற்பொழுது இருக்கும் கரூரும் ஒன்றா என்று எனக்குத் தெரியவில்லை .
இதே போல் நாம் பள்ளிப் பருவத்தில் படித்த மற்ற சில முக்கியமானவர்கள் கோப்பெருன்சோழரும் பிசிராந்தையாரும். பிசிராந்தையார் பாண்டிய நாட்டைச் சார்ந்தவர். அவர் பாண்டிய மன்னனுக்கு அறிவுரை கூறும் அளவிற்கு நெருக்கம் கொண்டவர். கோப்பெருன்சோழன் தன் பிள்ளைகளுக்கிடையே ஏற்ப்பட்ட வேறுபாடுகளைக் களைய முடியாமல் வடக்கிருந்து உயிர் துறக்க எண்ணினான். இதைப் பாண்டிய நாட்டில் கேள்விப்பட்ட பிசிராந்தையார் மன்னனுக்குத் துணையாக தானும் வடக்கிருந்து உயிர் நீத்தார்.
பின் குறிப்பு:
1. சங்க காலச் சோழர்களை பற்றி எழுதவே அதிகம் உள்ளது. இவர்களைப் பற்றி பின் வரும் பதிவுகளில் மேலும் அதிகம் எழுதுகிறேன்.
2. நாளை சோழர்கள் ஆண்ட நிலப் பகுதிகளின் வரை படத்தை அளிக்கிறேன்.
3. இப்புத்தகத்தில் சங்க காலச் சோழர்களைப் பற்றிய காலக் குறிப்புகள் தெளிவாக இல்லை. அதனால் யார் முன்னர் ஆண்டனர், யார் பின்னர் ஆண்டனர் போன்ற குறிப்புகள் அளிக்க முடியவில்லை.
தமிழக வரலாறு என்றாலே அது சோழர்களின் வரலாறு என்பது மறுக்க முடியாத உண்மை ...இருப்பினும் விஜயாலய சோழனிற்கு முன்பு தஞ்சையை ஆட்சி செய்த களபிறர்கள் ஆட்சியை ...வரலாற்று ஆய்வாளர்கள் இருண்ட காலம் என்கிறர்கள்...ஒரு ஆட்சியை இருண்ட காலம் என்பதற்கு காரணம் ..
... ஒரு கொடுங்கோல் ஆட்சி ஆக இருக்க வேண்டும்...
....அல்லது மன்னன் வீரம் இல்லாதவன் ஆக இருக்க வேண்டும்..அனால் அப்படி இல்லை..
களபிறர்கள் ஆட்சி காலத்தில் ஜைன மதம் பின்பற்ற பட்டுள்ளது..வேள்விக்குடி கல்வெட்டு மூலம் நாம் அறிவது...களபிறர்கள் ஆட்சி காலத்தில் பிரமதேய(gift to brahmins) முற்றிலும் ஒழிக்க பட்டது..இன்னும் தஞ்சாவூர்,புதுகோட்டை பகுதிகளில் உள்ள.மங்களம் என்று முடியும் கிராமங்கள் எல்லாம் ராஜ ராஜ சோழன் காலத்தில் பிராமணருக்கு இலவசமாக கொடுத்த கிராமங்கள் ஆகும்.....
இவற்றில் இருந்து களபிறர்கள் ஆட்சி காலம் யாருக்கு இருண்ட காலம் என்பது விளங்கும்.
மேலும் ,ஆர்யர்கள் க்ய்பர் கால்வாய் வழியாக வருகை தந்தார்கள் என்றும் (நம் வரலாறு பாட புத்தகத்தில் உள்ளாது) ....அனால் முகலாயர்கள் இந்தியாவின் மீது படை எடுத்தார்கள் என்றும் உள்ளது....ஏன் இந்த முரண்பாடு..
ஏன் இந்த முரண்பாடு:
எனக்கு பொதுவா ஒரு பழக்கம் இருக்கு.எந்த ஊருக்கு போனாலும் அந்த ஊரில் உள்ள பழமையான கோவிலிற்கு செல்வேன்.அந்த கோவில் எந்த நூற்றாண்டில் கட்ட பட்டது என்றும்.அப்பொழுது அந்த பகுதி எப்படி இருந்து இருக்கும் என்றும் கற்பனை செய்து பார்பேன்.ஒரு நாள் திருச்சியில் நடந்து செல்லும் பொழுது,ஒரு ராஜ ஒருத்தர் கையில் வாழுடன் வெயிலில் நின்று கொண்டு இருந்தார்.யார் அவர் என்று பார்த்தால்,பேரரசர் பெரும்பிடிகு முத்தரையர் என்று பொரிக்க பட்டு இருந்தது.பேர் தெரியாத ராசாவ இருக்காரே என்று அவர் சம்பந்தம் ஆக படிக்க ஆரம்பிதேன்.வரலாற்றில் இவர்களது ஆட்சி காலம், இருண்ட காலம் என்று இருந்தது.முரண்பாடுகளை அதிகம் நேசிப்பவன் நான்.ஆதலால் அவர் சம்பந்தம் ஆன கல்வெட்டு குறிப்புகளையும் மற்றும் கிடைத்த ஒரு சில தமிழ் பாடல்களையும் வைத்து பார்த்த பொழுது.இவர்கள் சொல்லும் காரணம்,
௧.ஜைன மதத்தை பரப்பினார்கள்.
௨.ஹிந்து மதத்திற்கும்,சமஸ்கிருதத்திற்கும் எதிராக இருந்தனர் பண்டிகைகளையும்,விழாக்களையும் தவிர்த்தனர் என்று சொல்ல பட்டு உள்ளது.
மேலே குறிப்பிட்ட காரணங்களிற்காக ஒருவரது ஆட்சி காலம் இருண்ட காலம் என்று கூறுவது அநியாயம்.
மற்றும் ஆரியர்கள் "கைபர் கால்வாய் வழியாக வருகை தந்தார்கள்", அனால் "முகலாயர்கள் இந்தியா மீது படை எடுத்தார்கள் ", என்றும் உள்ளது.இவற்றை போன்று தமிழக வரலாற்றிலும்,உலக வரலாற்றிலும் நிறைய முரண்பாடுகள் உள்ளன.
களப்பிரர்கள் தமிழகத்தை கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் 6 ஆம் நூற்றாண்டு வரை ஆண்டனர். அவர்கள் ஆண்ட காலத்தை interregnum period என்பார்கள். அதாவது இரண்டு era களுக்களுக்கு இடைப்பட்ட காலம் என்று பொருள் கொள்ளலாம். அதாவது சங்க கால சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட காலத்திற்கும் பிற்பாடு 6 ஆம் நூற்றாண்டு முதல் திரும்பவும் மூவேந்தர்களின் ஆட்சிக்கும் இடைப்பட்ட காலம் ஆகும். இதிலிருந்து களப்பிரர்கள் ஆண்ட காலத்திற்கு ஒரு தனிப்பட்ட அங்கீகாரம் கொடுக்காமல், அவர்கள் காலம் மூவேந்தர்களின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் இடைப்பட்ட காலப் பகுதி என்றே குறிக்கப்படுகிறது. இக்காலகட்டத்தைப் பற்றி குறிப்புகள் எதுவும் இல்லை. அதனாலயே களப்பிரர்களைப் பற்றி குறிப்புகள் கிடையாது. களப்பிரர்கள் ஆரம்ப காலத்தில் பௌத்த, ஜைன மதங்களை பின்பற்றினார்கள். அதனாலயே பிற்கால சைவ வைணவ மூவேந்தர்களால் அக்காலம் இருண்ட காலம் எனப்பட்டது. ஆனால் களப்பிரர்கள் பிற்பாடு சைவ, வைணவ மதங்களையே பின்பற்றினார்கள். கடவுள் முருகன் அவர்களின் முக்கிய கடவுளாக இருந்தார்.
எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் சிலப்பதிகாரம், திருக்குறள் போன்ற காவிய நூல்கள் எழுதப்பட்ட காலம் இவர்களுடையது. பல நாயன்மார்களும் , ஆழ்வார்களும் இவர்களுடைய காலத்திலேயே வாழ்ந்ததனர். ஆனாலும் களப்பிரர்கள் பற்றியக் குறிப்புகள் இல்லை.
இக்கலாத்தைப் பற்றிக் குறிப்புகள் இல்லாததலயே இதனை இருண்ட காலம் எனலாம். களப்பிரர்கள் தமிழகத்தை இருண்ட காலத்தில் ஆண்டார்களா அல்லது அவர்கள் ஆண்டதால் அது தமிழகத்தின் இருண்ட காலம் ஆனாதா என்பது விவாததத்திற்கு உரியது.
யாராலும் கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் 6 ஆம் நூற்றாண்டு வரை ஏன் தமிழகத்தைப் பற்றி பெரியக் குறிப்புகள் இல்லை என்பதற்கு விளக்கம் தர இயலவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக