வியாழன், 8 ஜூலை, 2010

காந்தளூர்ச் சாலை - ஒரு மீள்பார்வை - கோகுல் சேஷாத்ரி

காந்தளூர்ச் சாலை - ஒரு மீள்பார்வை - கோகுல் சேஷாத்ரி

--------------------------------------------------------------------------------

By humble - Posted on 24 February 2010

காந்தளூர்ச் சாலை- ஒரு மீள்பார்வை
கோகுல் சேஷாத்ரி
தமிழக வரலாற்றை - குறிப்பாகச் சோழர் வரலாற்றைப் படிப்போர் "காந்தளூர்ச் சாலை" எனும் முக்கியமான இடத்தை மறக்கவே மாட்டார்கள். இது முதலாம் இராஜராஜரின் (A. பி. 985 - 1012) மெய்க்கீர்த்தியில் அவரது கன்னி வெற்றி (அதாவது முதல் வெற்றி) நடைபெற்றதாகக் குறிக்கப்படும் இடமாகும்.

அவரது மெய்க்கீர்த்தியின் முதற் சில வரிகள் பின்வருமாறு:

திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்
தனக்கேயுரிமை பூண்டமை மனங்கொளக் கருதிக்
காந்தளூர்ச் சாலை கலமறுத்தறுளி...

இதனைத் தொடர்ந்து அவர் அடுத்தடுத்து பெற்ற பலப்பல வெற்றிகளையும் அந்த மிகப் பிரபலமான மெய்க்கீர்த்தி விளக்குகிறது. இதில் காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளி எனும் இரண்டு சொற்களை மட்டும் இந்தக் கட்டுரையின் கருப்பொருட்களாக எடுத்துக்கொள்வோம்.

காந்தளூரையும் அதில் அமைந்துள்ள சாலையையும் முதன்முதலாகத் தனது மெய்க்கீர்த்தியில் இடம்பெறச் செய்து அதனை மிகவும் பிரபலப்படுத்திதவர் முதலாம் இராஜராஜரே. அவருக்குப் பின் வந்த பல மன்னர்களும் - பாண்டியர் உட்படத் - தத்தம் மெய்க்கீர்த்தியில் காந்தளூரை இடம்பெறச் செய்துள்ளனர். இவ்வாறு ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகளுக்கு வரலாற்று வெளிச்சம் படும் இவ்விடம் காலப்போக்கில் கண்களிலிருந்து மறைந்து விடுகிறது.

முதலாம் இராஜராஜரின் மெய்க்கீர்த்தி கண்டுபிடிக்கப்பட்ட நாள் முதல் இந்நாள் வரை இந்த இரு சொற்களைப் பற்றியும் கருத்துரைக்காத தமிழக வரலாற்று அறிஞர்களே கிடையாது எனும்படி ஏராளமானோரின் கவனத்தைக் காந்தளூர்ச் சாலையும் கலமறுத்த சம்பவமும் பெற்றுள்ளன. குறிப்பாகக் கலமறுத்தல் என்றால் என்ன? அது எதனைக் குறிக்கிறது? என்பதை ஆராய முயலும் கட்டுரைகள் மட்டும் இருபது இருபத்தைந்து உண்டு. இருப்பினும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படியான உறுதியான எந்த ஒரு ஆய்வு முடிவையும் இதுவரை எழுதப்பட்டுள்ள எந்தக் கட்டுரைகளுமே முன்வைக்கவில்லை என்பது ஆச்சரியமான உண்மை. அது மட்டுமல்ல. இது வரை காந்தளுர் பற்றியோ அதில் சாலை என்பது எங்கிருந்தது என்பதை அறிய முயற்சித்தோ குறிப்பிடும்படி ஒரே ஒரு அகழ்வாராய்ச்சி கூட மேற்கொள்ளப்படவில்லை என்பதும்¢ வருத்தமான உண்மை.

இருப்பவை ஏராளமான கட்டுரைகள் என்றாலும் மிகவும் தீவிரமான ஆய்வு நோக்கோடு இத்தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரைகளாக மிகச்சில கட்டுரைகளை மட்டுமே என்னால் குறிப்பிட முடிகிறது.

• கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் காந்தளூர் பற்றிய கட்டுரை. மிக நேர்த்தியான முதல் முயற்சி. ஆனால் முடிவுகளில் சில பிழையானவை.

• அறிஞர் டி.ஏ. கோபிநாதராவ் அவர்கள் பதிப்பித்த திருவிதாங்கூர் சமஸ்தானக் கல்வெட்டுக்கள் - பாகம் 2ற்கு எழுதிய முன்னுரை. இம்முன்னுரையில் காந்தளூரைப் பற்றியும் சாலை பற்றியும் ஆழமாக விவாதித்திருக்கிறார் ராவ்.

• அறிஞர் சந்திரசேகரன் அவர்கள் பதிப்பித்த தென்னிந்தியக் கோயில் சாசனங்கள் - பாகம் 3 - பகுதி 2ல் காந்தளுரைப் பற்றிய விவாதங்கள் விரிவாகக் காணக்கிடைக்கின்றன.

• கேரள வரலாற்றறிஞர் எம்.ஜி.எஸ்.நாராயணன் அவர்கள் எழுதியுள்ள Bachelors of Science எனும் கட்டுரையில் சாலை எனும் நிறுவனத்தைப் பற்றியும் காந்தளூரில் அமைந்திருந்த சாலை பற்றியுமான மிக மிக முக்கியமான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

• உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தால் பதிப்பிக்கப்பட்டுள்ள பாண்டியச் செப்பேடுகள் பத்து எனும் நூலில் பார்த்திவசேகரபுரச் செப்பேடுகள் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. காந்தளூரையொத்த செயல்பாட்டைக் கொண்டிருந்த வேறொரு சாலை பற்றி விவரிக்கும் மிக முக்கிய ஆவணமாகும் இது.

இம்மூன்றைத் தவிர அருள்மொழி எனும் தொகுப்பில் நடன காசிநாதன் அவர்கள் எழுதிய கலமறுத்தல் பற்றிய கட்டுரையையும் குறிப்பிடலாம். இக்கட்டுரையில் புதிய செய்திகள் எவையும் சொல்லப்பட வில்லையென்றாலும் கலமறுத்தல் பற்றிய ஏனைய அறிஞர்கள் அனைவரின் கருத்தையும் தொகுத்தளித்திருக்கறார் என்பதால் அதனையும் படிக்க வேண்டியது அவசியமாகின்றது.

இக்கட்டுரைகளுள் ஒன்றுகூட இராஜராஜர் ஏன் முதன்முதலில் காந்தளூருக்குப் படையெடுத்துச் சென்றார்? அதற்கான அவசியம் என்ன? அங்கு அவரை எதிர்த்தவர்கள் யார்? இந்தப் போர் குறிப்பாக எந்த வருடத்தில் நடந்தது? எப்போது முடிந்தது?என்பனபோன்ற அடிப்படைக் கேள்விகளைக்கூட எழுப்பவே இல்லை. ஏனெனில் கலமறுத்தல் என்பது உண்மையில் ஒரு போர் வெற்றிதானா? அல்லது வேறு ஏதாவது செயலா? என்று அறியும் முயற்சி அனைவரையும் குழப்பிவிட்டுவிட்டதுபோல் தெரிகிறது.

ஆக, இவ்வாசகங்களை அறிய முற்படும் மாணவர் ஒருவர் முதலில் காந்தளூர் என்பது எங்கிருக்கிறது? அதில் சாலை என்பது எம்மாதிரியான இடம்? அதில் என்னவிதமாக செயல்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன? என்றெல்லாம் அறிய முற்படவேண்டும். இவற்றைத் தௌ¤வாக அறிந்துகொண்டால் கலமறுத்தல் பற்றிய யூகத்தையாவது நம்மால் ஓரளவிற்குத் தொட முடியும்.

காந்தளூர் எனும் ஊர்ப்பகுதி முதன்முதலில் முத்தரையர் கல்வெட்டொன்றில் இடம்பெறுகிறது. ஆனால் அக்கல்வெட்டில் இடம்பெறும் காந்தளூரும் மெய்க்கீர்த்தியில் குறிப்பிடப்படும் காந்தளூரும் ஒன்றல்ல என்கிற முடிவுக்குப் பல காரணங்களால் வர நேர்கிறது. இன்றைய மாநில வரைபடங்களில் காந்தளூரைத் தேடினால் பலப்பல ஊர்கள் அதே பெயரில் வந்து நிற்கின்றன. செங்கல்பட்டிற்கு அருகில் ஒன்று, திருச்சிக்கருகில் ஒன்று, கேரளா இரிஞ்சாலக்குடைக்கருகில் ஒன்று என்று பலப்பல காந்தளூர்கள். விழிஞத்திற்கருகிலும் காந்தளூர் என்றொரு சிற்றூர் அமைந்துள்ளது. இதில் எது இராஜராஜர் குறிப்பிடும் காந்தளூர்?

நாம் தேடும் காந்தளூரில் சாலை நிறுவனம் அமைந்திருப்பது முக்கியமாகின்றது. சாலை எனும் நிறுவனங்கள் வடமொழியில் சாலா என்றழைக்கப்பட்டன. இந்தியாவெங்கிலும் அக்காலத்தில் நிறுவப்பட்ட கடிகா அல்லது கடிகை எனும் நிறுவனங்களையொத்தே இவற்றின் செயல்பாடுகள் அமைந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இரண்டுமே அடிப்படையில் கல்வி நிறுவனங்கள். பல்லவர் காலத்துக் காஞ்சியில் பல கடிகைகள் செயல்பட்டதற்கு ஆதாரங்களுண்டு. சோழர் காலத்திலும் கடிகைகள் தொடர்ந்து செயல்பட்டன. தமிழகத்தில் கடிகை என்று அழைக்கப்பட்ட நிறுவனமே கேரளத்தில் சாலை என்றழைக்கப்பட்டது என்பதை அழுத்தமாக நிறுவ முடியவில்லை. அதே நேரத்தில் சாலைக்கும் கடிகைக்கும் குறிப்பாக வேறுபாடுகள் இருந்தனவா என்பதையும் கண்டறிய முடியவில்லை.

கடிகைகளும் சாலைகளும் ஏதாவது ஒரு திருக்கோயிலோடு தம்மை இணைத்துக்கொள்கின்ற நிறுவனங்களாய்க் காட்சியளிக்கின்றன. இதற்கான மிக முக்கிய ஆதாரம் ஆய்வேள் மன்னர் கோக்கருந்தடக்கரின் பார்த்திவசேகரபுரச் செப்பேட்டில் காணப்படுகிறது. இதில் விஷ்ணு பட்டாரகர் திருக்கோயிலையொட்டித் தாம் அமைக்கப்போகும் சாலையைப் பற்றிய மிக முக்கியத் தகவல்களை மன்னர் பகிர்ந்துகொள்கிறார். சென்னைக்கருகில் நரசிம்ம சுவாமி திருக்கோயில் அமைந்துள்ள கடிகாசலம் (சோளிங்கர்) மலையில் அக்காலத்தில் ஒரு கடிகை திருக்கோயிலையொட்டி அமைந்திருந்தது. அதனால்தான் அம்மலைக்கே கடிகாசலம் எனும் பெயர் வந்தது என்கிற கருத்தும் குறிப்பிடத்தக்கது.

ஆகக் காந்தளூரின் சாலையும் ஏதோ ஒரு திருக்கோயிலுடன் சம்மந்தப்பட்டிருக்க வேண்டும். அந்தத் திருக்கோயில் எங்கு சென்று விட்டது?

காந்தளூரோடும் சாலைப் பாரம்பரியத்தோடும் ஓரளவிற்குத் தொடர்புடைய ஒரே கோயிலாக இன்றைய திருவனந்தபுரத்தின் நெரிசல் மிக்க வலியசாலை பகுதியில் அமைந்திருக்கும் "ஜுவாலா மகாதேவர் திருக்கோயில்" காணக்கிடைக்கிறது. அந்த ஊர்ப்பகுதியின் பெயரிலும் சாலை அமைந்துள்ளது நோக்கத்தக்கது. இத்திருக்கோயிலை நேரடியாகத் தொடர்புபடுத்தும் ஒரே ஆவணம் அனந்தபுரம் பத்மநாபஸ்வாமி ஆலயத்தில் பாதுகாகக்கப்படும் மதிலகம் ஆவணங்களாகும். நூறு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்புகூட இத்திருக்கோயில் காந்தளூர் மகாதேவர் கோயில் என்றே அழைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டும் இராவ், இத்திருக்கோயிலே காந்தளூர்ச் சாலையோடு தொடர்புடையது என்கிறார். மேலும் மகாதேவரின் பெயரான ஜுவாலா மஹாதேவர் என்பதும் சாலா மகாதேவர் என்பதன் திரிபே. ஏனெனில் நீலகண்ட சாஸ்திரியாரின் கூற்றுப்படி சாலா வடமொழியில் ஜுவாலா என்றும் குறிப்பிடப்பட்டது. இவையெல்லாவற்றையும் தவிர, கருவரையின் பின்புறச் சுவறில் காணப்படும் சிதைந்த முதலாம் இராஜேந்திரரின் மெய்க்கீர்த்தி... இது மட்டும் நேர்த்தியாகக் கிடைத்திருந்தால் இத்திருக்கோயிலும் சாலை திருக்கோயிலும் ஒன்றா என்பது ஐயந்திரிபர நிருபணமாகியிருக்கும்.

காந்தளூர் மகாதேவர் திருக்கோயில் இதுதான் எனில் அதனையொட்டிக் காந்தளுர் எனும் ஊர்ப்பகுதி காணப்பட வேண்டுமே? அப்பகுதியின் வரலாறும் குறைந்தது ஆயிரமாண்டுகளாவது பழமையாக இருக்கவேண்டுமே? கிடையாது. சொல்லப்போனால் ஆய்வேள் மன்னர்களால் புரக்கப்பட்ட காந்தளூர்ச் சாலை, அவர்களின் மிக முக்கியமான கோட்டையான விழிஞத்திற்கு அருகில் காந்தளூர் கிராமத்தில்தான் அமைந்திருக்க வேண்டும். அதனை விட்டுவிட்டுப் பல மைல்கள் தள்ளியிருக்கும் அனந்தபுரத்திற்குத் திருக்கோயில் மட்டும் இடம்பெயர்ந்திருப்பதை என்னவென்று சொல்வது?

இதனைத் தவிர பரதப்புழா நதி தீரத்தில் வேறொரு காந்தளூரையும் வில்லியம் லோகனின் மிகவும் புகழ்பெற்ற நூலான மலபார் மேனுவல் அறிமுகம் செய்கின்றது (தகவல் உதவி - ஆய்வாளர் எஸ்.இராமச்சந்திரன்). அக் காந்தளூர் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்படாத நிலையில் அனந்தபுரத்துக் காந்தளூர் மகாதேவரை ஏற்பதைத்தவிர வேறு வழியில்லை.

ஆகக் காந்தளூர் பற்றி மட்டும் இத்தனை குழப்பங்கள்.

அடுத்து சாலை. காந்தளூரில் அமைந்திருந்த சாலை பற்றி ஆழமாக விவாதிக்கும் ஒரே கட்டுரை நாராயணுடையதுதான். இதில் மிக விரிவாகச் சாலைப் பாரம்பரியம் பற்றியும் அங்கு கொடுக்கப்பட்ட பயிற்சிகள் பற்றியும் அலசுகிறார் அவர். அந்நாளையக் கேரளத்து இளம் நம்புதிரி அந்தண வாலிபர்களுக்குப் பல்வேறு போர்ப்பயிற்சி முறைகளையும் கற்றுத்தந்த இடம்தான் சாலை. கேரளத்தில் காந்தளூரையும் சேர்த்து மொத்தம் நான்கு சாலைகள் அமைந்திருந்தன. நான்குமே பன்னிரண்டு அல்லது பதிமூன்றாம் நூற்றாண்டில் மறைந்துவிடுகின்றன. இவை மறைந்த பிறகுதான் கேரளத்தில் களரி எனும் பாரம்பரியமே உருவாகத் தொடங்குகிறது. இன்றும்கூடப் பலப்பல களரியாசான்கள் தங்களின் ஆதி குருக்களாக நம்பூதிரி அந்தணர்களையே குறிப்பிடுகின்றனர். சாலையில் படித்த சட்டர்களும் பட்டர்களும் நாளடைவில் தங்கள் சூழலிலிருந்து விலக்கப்பட்டவர்களாக - அடையாளம் இழந்தவர்களாக அல்லுறுவதைப் பலப்பல இலக்கியச் சான்றுகளின் மூலம் நிறுவியுள்ளார் நாராயணன். இன்றும் சாலைப் பாரம்பரியத்தின் எச்சங்களாகச் சங்ககளி, பனயங்களி முதலான நடனங்களும் களரிப் பயிற்சிகளும் மிச்சமிருப்பதை நாம் நினைவுகூற வேண்டும்.

ஆகக் காந்தளூர்ச்சாலை என்பது அந்நாளைய கேரளத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய ஒரு கல்வி நிறுவனம். தற்போதைக்குக் கிடைக்கும் ஆதாரங்களைக்கொண்டு அதனை அனந்தபுரத்திற்கு அருகில் அடையாளம் காண வேண்டியுள்ளது. அங்கு சட்டர்களும் பட்டர்களும் பயிற்றுவிக்கப்பட்டனர்.

இனி இராஜராஜருக்கு வருவோம். அவருடைய வெற்றிகளைப் பதிவு செய்யும் திருவாலங்காட்டுச் செப்பேடு அவர் மதுரையிலிருந்து தன்னுடைய திக்விஜயத்தைத் தொடங்கினார் - அமரபுஜங்கன் நெடுஞ்செழியனை வென்றார் என்று குறிப்பிடுகிறது. இந்த மதுரை வெற்றியையும் அமரபுஜங்கனையும் குறிப்பிடும் ஒரே ஆதாரம் செப்பேடுதான். இராஜராஜர் ஏனோ மதுரை வெற்றியைத் தனது மெய்க்கீர்த்தியில் குறிப்பிடுவதே இல்லை. பாண்டியரையே பொதுவாகச் செழியரைத் தேசுகொள் என்று கூறிச் சென்றுவிடுகிறார். ஆனால் காந்தளூர் அவருக்கு மிக முக்கியமானது. மெய்க்கீர்த்தி உருவாக்கப்படும்வரை அவர் பலகாலம் தன்னைக் காந்தளூச்சாலை கலமறுத்தருளிய கோ இராசகேசரிவர்மர் என்றுதான் குறிப்பிட்டுக்கொள்கிறார்.

அப்படியென்ன இராஜராஜருக்குக் காந்தளூர் மேல் பகை? அப்போது அங்கே யார் அவரை எதிர்த்தார்கள்? சாலையோ ஒரு கல்வி நிறுவனம். அதனை அவர் தாக்க வேண்டிய அவசியமென்ன? அது என்ன விதமான தாக்குதல்?

அது நிச்சயம் அழித்தொழித்த தாக்குதல் அல்ல - ஏனெனில் அதற்குப் பிறகு மீண்டும் மீண்டும் பலப்பல மன்னர்கள் முனைந்து முனைந்து கலமறுக்கின்றனர். வேடிக்கை என்னவென்றால் மூன்று கை மாசேனை எனும் சோழ சைனியம்கூடத் தன்னைக் கலமறுத்ததாக ஒரு கல்வெட்டில் அறிவித்துக் கொள்கிறது என்று நீலகண்ட சாஸ்திரியார் சொல்கிறார். ஆக, சைனியம் சம்மந்தப்பட்ட விவகாரமென்பதால் நிச்சயம் போர் சம்மந்தப்பட்டிருக்கவேண்டும். அதே போல "வேலை அழித்ததும் சாலை கொண்டதும் தண்டுகொண்டல்லவோ?" என்கிற கலிங்கத்துப் பரணியின் கேள்வியில் அழித்தொழிப்பது என்பது வேறு சாலை கொள்வது என்பது வேறு என்கிற அர்த்தம் வருகிறதல்லவா?

இக்கேள்விகளுக்கான நேரடி விடைகளை வரலாறு எங்கோ ஒளித்து வைத்திருக்கிறது. அந்த விடைகள் தம்மை முனைப்புடன் - விடா முயற்சியுடன் தேடி வரப்போகும் ஆய்வாளருக்காக ஆயிரமாண்டுகளாகத் தவமியக்கிக் கொண்டிருக்கின்றன.

1 கருத்து: