வியாழன், 8 ஜூலை, 2010

செம்மொழி செதுக்கிய கல்வெட்டுகள்!

Tuesday, June 22, 2010
செம்மொழி செதுக்கிய கல்வெட்டுகள்!

Posted on 9:23 PM by Vijay Kumar


சிலிர்ப்பான வரலாறு செம்மொழி செதுக்கிய கல்வெட்டுகள்! ''உயர்ந்த நம் தமிழைச் செம்மொழி அந்தஸ்துக்கு அழைத்துச்சென்ற பெருமை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதிணென்கீழ்க்கணக்கு உட்பட்ட 40 இலக்கியங்களைச் சேரும். அவை யாவும் ஓலைச்சுவடிகளாகத்தான் நமக்குக் கிடைத்தன... அதேநேரத்தில், அறிவிப்புப் பலகைகளாக மட்டுமே நாம் அறிந்திருக்கும் கல்வெட்டுகள் அனைத்தும்கூட தமிழ்ச் செம்மொழிதான் என்பதற்கான சான்றுகள் குவிந்து கிடக்கின்றன..!'' என்கிறார், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்ரமணியன். ''இந்தக் கோயில் இந்த மன்னனால் கட்டப் பட்டது... இந்தப் போரில் இவனை இவன் வெற்றி கொண்டான்... இந்தக் கோயிலுக்கு இவனால் இன்னின்ன கொடைகள் தரப்பட்டன என்பதைச் சொல்லுகிற வகையில்தான் கல்வெட்டுகளும், செப்பு சாசனங்களும் நமது முன்னோர்களால் அமைக்கப் பெற்றன. அந்தத் தகவல்களையே நமது சங்க இலக்கியங்களில் அதே சுவையும், சொல்லாட்சியும், பொருட்செறிவும் மிளிரும் வண்ணம் அமைத்து, தமிழுக்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்...'' என்று சொன்ன குடவாசல் பாலசுப்பிர மணியன் தொடர்ந்தார்... ''தமிழையும், புலவர்களையும் நம் மன்னர்கள் எந்த அளவுக்கு மதித்தார்கள், நேசித்தார்கள் என்பதனைக் காட்டுகிற ஒரு கல்வெட்டுச் செய்தி, திருவெள்ளரையில் இருக்கிறது. அங்குள்ள விஷ்ணு கோயிலில், பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் கல்வெட்டு இருக்கிறது. அது உரையாக இல்லாமல் சங்க இலக்கியப் பாணியில் பாடலாகவே உள்ளது. அதில், சோழநாட்டை வென்று... சோழ நாட்டின் அரசுக் கட்டடங்கள் அனைத்தையும் இடித்துத் தரைமட்டம் ஆக்கிய தகவல்களைப் பதிந்து வைத்திருக்கிறார்கள். அதிலேயே 'எல்லாவற்றையும் இடித்த நான், சோழ நாட்டில் இருந்த ஒரு பதினாறுகால் மண்டபத்தை மட்டும் இடிக்கவில்லை. காரணம், அது பட்டினப் பாலை பாடிய உருத்திரங்கண்ணனார் என்ற புலவருக்கு மன்னன் கரிகால்பெருவளத்தான் பரிசாகக் கொடுத்தது...' என பொறித்திருக்கிறான் சுந்தரபாண்டியன். அதன் மூலமாக தன்னைப் பாடியவர்க்கு ஒரு பதினாறுகால் மண்டபத்தையே பரிசாக அளித்த சோழ மன்னனின் கொடைத் திறத்தையும், அவனுக்குப் பிறகு ஆயிரம் ஆண்டுகள் கழித்து வந்தாலும் அந்த மாண்பை மதித்த பாண்டிய மன்னனின் பெருந்தன்மையையும் அறிய முடிகிறது. கல்வெட்டில் இப்படிக்கூட இலக்கியங்களைப் பதிக்க முடியுமா என்று வியக்கிற அளவுக்கு இருக்கிறது, செந்தலை என்னும் ஊரில் இருக்கும் சிவாலாயத் தூண் பாடல்கள்! திருக்காட்டுப்பள்ளி அருகே நியமம் என்னும் ஊரில் உள்ள காளி கோயிலில்தான் முதலில் அந்தக் கல்வெட்டு இருந்தது. பின்னாளில் அந்தக் கோயில் இடிபாடாகிவிட... அங்குள்ள தூண்களை எடுத்து செந்தலை சிவன் கோயிலில் வைத்திருக்கிறார்கள். ஏழு, எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்லவர்களின் ஆட்சியின் கீழ் குறுநில மன்னராக இருந்த பெரும்பிடுகு முத்தரையர் என்பவரை, நான்கு புலவர்கள் வாழ்த்தும்விதமாக அமைந்திருக்கும் அந்தப் பாடல்கள் தமிழின் நயத்துக்கு அழியாத சான்று! பாச்சில்வேள்நம்பன், கோட்டாற்று இளம்பெருமானார், பவதாயமங்களத்து காஞ்சன், ஆச்சார்யர் அனிருத்தர் ஆகிய நான்கு புலவர்களும் பெரும்பிடுகு முத்தரையரின் போர் வெற்றிகள் குறித்து சொல் சித்து நடத்தி இருக்கிறார்கள். திருச்சி மலை உச்சியில் மகேந்திரவர்ம பல்லவன் கட்டுவித்த ஒரு குடைவரைக் கோயில் இருக்கிறது. உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குக் கொஞ்சம் கீழே இருக்கிறது அது. அங்கே நிறைய வடமொழிப் பாடல்கள் கல்வெட்டில் காணப்படுகின்றன. அந்தக் கோயிலுக்கு 11-ம் நூற்றாண்டில் சென்ற நம் தமிழ்ப்புலவன் ஒருவன் அந்த மலையைப் பற்றியும், அங்குள்ள சிவனைப் பற்றியும் 103 பாடல்களைக்கொண்ட சிராமணி அந்தாதியைப் பாடினான். அந்த 103 பாடல்களும் அப்படியே அங்கு கல்வெட்டில் இருக்கின்றன. இப்படி ஒரு முழு நூலையே கல்வெட்டில் பதித்திருப்பது, வேறு எங்கும் இல்லாத தனிச் சிறப்பு! நம் தமிழைச் செம்மொழியாக்க இப்படி ஒரு பதிவும் துணை நின்றது என்றே சொல்லலாம். அந்தப் பாடல் 'கற்பந்தல் கீழ் வைத்தான் கவி' என்று முடிகிறது. அதாவது, பாடிய பாடல்களை மண்டபத்தில் வைத்தேன் என்று சொல்ல வந்த அந்த புலவன், மண்டபம் என்று சொல்லாமல் 'கல்பந்தல்' என்று கற்பனைத் திறன் காட்டியிருக்கிறான். அந்த சிராமணி அந்தாதியைப் பதிப்பித்தது தருமபுரம் ஆதீனம். அந்த பதிப்புகூட இப்போது அவர்களிடம் இல்லை. ஆனால், கல்வெட்டில் அப்படியே காலத்தை வென்று நிற்கிறது அது....'' என்ற பாலசுப்ரமணியம், ''நாம் அறியாத இன்னும் பல பழைய செய்திகளும் கல்வெட் டில் உண்டு...'' என்றபடி விவரித் தார். ''பறம்பு மலையை ஆண்ட பாரி மன்னனுக்கு தோழராய் இருந்த புலவர் கபிலரை நாம் அறிந்திருக்கிறோம். பாரி, போரில் இறந்துபட்ட பின்பு அவனது மகள்கள் இருவரையும் ஆதரித்து மலையமானுக்கு மணம்செய்து கொடுத்த கபிலர், அதன்பிறகு பாரி போன இடத்துக்கே போகநினைத்து வடக்கிருந்து உயிர்விட்டார் என்றும் அறிந்திருக்கிறோம். ஆனால், அவர் வடக்கிருந்து உயிர் துறக்கவில்லை. மாறாக, திருக் கோவிலூரில் பெண்ணையாற்று நடுவில் இருக்கும் ஒரு பாறையில் அமர்ந்து சுற்றிலும் தீ மூட்டிக்கொண்டுதான் இறந்திருக்கிறார் என்பது கல்வெட்டுத் தகவல். அவர் உயிரைத் துறந்த அந்தப் பாறை, இன்றும் 'கபிலர்கல்' என்று அழைக்கப்படுகிறது. இதைச் சொல்லும் அந்தக் கல்வெட்டில், இன்னொரு நயமான விஷயமும் உண்டு. ராஜராஜனுடைய தந்தை இரண்டாம் பராந்தகன் என்னும் சுந்தரசோழன் இறந்தவுடன் அவனுடைய சிதையில் ஏறி உயிர் துறந்தாள் வானவன் மாதேவி. இந்தச் செய்தியை சொல்லும் அந்தக் கல்வெட்டுப் பாடல், 'விண்ணகத்து மகளிர் யாரேனும் தன் கணவன் உடலை தழுவிவிடுவார்களோ என்று பயந்து, தானும் தீயில் உடன் பாய்ந்தாள்' என்கிறது. இந்தத் தகவல்கள் யாவும் திருக்கோவிலூரில் உள்ள ராஜராஜன் கல்வெட்டுகளில் கம்பன்மணியன் என்ற அதிகாரி அளித்திருக்கும் நிவந்தங்கள் பற்றிய செய்தி களில் காணப்படுகிறது. இப்படி நமது கல்வெட்டுகள் அத்தனையும் அருமையான செம்மொழி இலக்கியங்கள்தான். அவற்றையெல்லாம் நூல்களாகக் கொண்டுவந்தால் அடுத்தடுத்த தலைமுறைகளின் நெஞ்சில் நம் மொழித் தாயின் பெருமைகள் அழுந்தப் பதியும்..!'' என சிலிர்த்தபடி முடித்தார் குடவாயில்பாலசுப்ரமணியன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக