""பாண்டி... நீ என்ன செய்வியோ தெரியாது. என்னோட கோரிக்கைய நீ சீக்கிரமே நிறைவேத்தித் தரணும்' என சாமிக்கே கட்டளையிடுவது போலத்தான் வரம் கேட்கிறார்கள் பக்தர்கள். கடவுளைத் தாயாய்- தந்தையாய்- தாயுமானவனாய்- தந்தையுமானவனாய் பார்த்தார் பாரதியார். காதலனாய் பார்த்தார்கள் ஆண்டாளும் மீராவும். கடவுளைக் காதலியாகவே பார்த்தார் குணங்குடி சித்தர். ‘""அண்ணன் 15 நாளா கனவுல வந்து, "வாடா... வந்து என்னய பாத்துட்டுப் போ'ன்னு சொல்லிச்சு. அதான் வந்தேன்'' என பாண்டி முனீஸ்வரனை அண்ணனாகப் பார்க்கிறார்கள் பாண்டி யின் பக்தர்கள்.
பொங்கலோ, ஆடு வெட்டுவதோ, சுருட்டு வாங்கி வைப்பதோ, பாலாபிஷேகம் செய்வதோ... எப்படி வேண்டு மானாலும் படைத்து பாண்டியை வணங்கலாம். "சாமியோட அருளைப் பெற சடங்குகள் ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது. விரும்பிய வழியில் கடவுளின் அன்பைப் பெறலாம்' என்கிற உயர்ந்த தத்துவத்திற்கு உதாரணமாக இருக்கிறது பாண்டி கோவிலின் பக்தி மார்க்கம்.
மதுரை வடக்குப் பகுதியில் இருக்கும் மேலமடை பகுதியில் இருக் கிறது பாண்டி முனீஸ்வரர் கோவில். பாண்டியைப் பற்றி மதுரை மாவட்ட மக்களிடையே பல செவிவழிக் கதைகள் உண்டு. அதில் சிறுவர்களை மிரள வைக்கும் பிரசித்தி பெற்ற கதை ஒன்று உண்டு.
'வீட்டுக்கே அடங்காத பிள்ளையாய் வளர்ந்த பாண்டி, நாளாவட்டத்தில் யாருக்கும் அடங்காத- அடக்கவும் முடியாத மனிதரானார். ஆனால் அநீதியைக் கண்டால் ஆக்ரோஷத்தோடு பாய்வார். இப்படி வாழ்ந்த பாண்டி இறந்தபின் ஒரு குடும்பத்தின் குலதெய்வமாகி, இன்று தென்மாவட்ட மக்களின் இஷ்ட தெய்வமாகி இருக்கிறார். இப்போதும்கூட பாண்டி சிலையை குழந்தை கள் பார்த்தால் பயந்து போகும். முழிகளை உருட்டி, முறுக்கிய மீசையோடு சினந்து காணப்படும் பாண்டி முனி... எப்போது வேண்டு மானாலும் ஆக்ரோஷத் தோடு கிளம்பிவிடும் என்ப தால், சிலையை இரும்புச் சங்கிலியால் கட்டிப் போட்டிருக்கிறார்கள்' எனச் சொல்வார்கள். இதுபோல பல கதைகள் உண்டு.
ஒரு குடும்பத்தினர் வம்சாவழியாக நிர்வகித்து வரும் இந்தக் கோவிலின் இப்போதைய நிர்வாகப் பரம்பரை அறங்காவலர் சிவாஜி பூசாரி. அவரிடம் பாண்டி கோவில் வரலாறு குறித்துக் கேட்டோம்.
""பாண்டியைப் பத்தி நிறைய்ய கதைகள் இருக்கு. ஆனா நிஜம் வேற. ரொம்ப வருஷங்களுக்கு முன்னாடி இந்த இடம் பழைய மதுரைனு சொல்லப் பட்டது. கரூர் அருகே உள்ள நெரூர் கிராமத்தில் முத்தரையர் வம்சத்தைச் சேர்ந்த வள்ளியம்மை பிழைப்பு தேடி மதுரை மாநேரியில் குடியேறினார். வள்ளியம்மை கனவில் பலமுறை சாமி வந்து, மேலமடை கிராமத்தில் தான் புதைந்திருக்கும் இடத்தைச் சொல்லியது. ஆனா அந்த அம்மா கனவை பெருசா எடுத்துக்கல. ஆனா கனவு தொடர்ந்து வரவும் கிராம மக்கள்கிட்ட இந்தக் கனவைச் சொல்லியிருக்கார். உடனே வண்டியூர், உத்தங்குடி, கருப்பாயூரணி கிராம மக்களோட மேலமடை மக்களும் சேர்ந்து வள்ளியம்மை கனவில் சாமி சொன்ன இடத்தைத் தோண்டியபோது, உருட்டிய விழிகள், முறுக்கிய மீசை, அடர்ந்து நீண்டு வளர்ந்த ஜடாமுடியோடு சம்பணமிட்ட தவக்கோலத்தில் சாமி சிலை கிடைத்தது. அந்த சிலையை வெளியே எடுத்து, ஒரு குடிசை போட்டு சிலையை வைத்து கும்பிடத் தொடங்கினார்கள். ஜடாமுனீஸ்வரர் கோவில் என மக்கள் மத்தியில் பிரபலமானது. வள்ளியம்மை அம்மாதான் பூசாரியாக இருந்தார்.
அப்போது அடர்ந்த காட்டுப்பகுதியாக- நடக்கக்கூட சரிவர பாதையில்லாத காலம். கம்பீரமாக இருக்கிற ஜடாமுனியைப் பார்த்து மக்கள்- குறிப்பாக குழந்தைகள் அச்சப்பட்டதாம். நீண்டு வளர்ந்த ஜடாமுடியைப் பார்த்து சாமியை இரும்புச் சங்கிலியால் கட்டி வைத் திருப்பதாக மக்கள் நினைத்துக் கொண்டார்கள்.
அந்தக் காலத்திலேயே கோவில் பிரபலமாகிவிட, வெள்ளைக்கார அரசாங்கம் கோவிலுக்கு சில சட்ட- திட்டங்களைப் போட்டது. இதேபோல் எல்லா கோவில்களுக்கும் சட்டங்கள் போட்டது. ஆனால் வள்ளியம்மை நீண்ட போராட்டம் நடத்தியதன் விளைவாக 1930-களில் ‘"அரசு சட்டங்களிலிருந்து விலக்கு அளிக் கப்பட்ட கோவில்' என்ற பெருமை யைப் பெற்றது.
இப்போதும் தமிழக அரசின் அறநிலையத்துறையின் ‘"அன்ன தானம்' உள்ளிட்ட சில சலுகை களைப் பெற்றாலும், இது விலக்கு அளிக்கப்பட்ட கோவில்தான். வள்ளியம்மையின் வம்சாவழியினர் தொடர்ந்து கோவில் பூசாரிகளாக இருந்து வந்தனர். எனது தாத்தா பாண்டி இந்தக் கோவிலில் பூசாரி யாக இருந்தபோது "பாண்டி பூசாரி கோவில்' என அழைக்கப்பட்டு, நாளடைவில் ஜடாமுனீஸ்வரர் என்பது மாறி பாண்டி முனீஸ்வரர் கோவில் ஆனது.
பக்தர்கள் கோரிக்கை யில் நியாயம் இருந்தா... அதை உடனே நிறை வேத்தி வைப்பார் பாண்டி முனி. பில்லி, சூன்ய, ஏவல்களில் பாதிக்கப்பட்ட வங்க பாண்டிகிட்ட முறை யிட்டா... உடனே சரி பண்ணுவார். குழந்தையில்லாதவர்கள் தூளிகட்டி வேண்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்'' என பாண்டி கோவில் வரலாற்றைச் சொன்னார் சிவாஜி பூசாரி.
பொதுவாக இந்துக்கள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்தான் கோவிலுக்குப் போவது வழக்கம். ஆனால் "நல்லவருக்கு ஏது நாளும் கிழமையும்' என்பதுபோல... செவ்வாய், வெள்ளியோடு ஞயிற்றுக்கிழமை ரொம்ப விசேஷமாக இருக்கிறது. அன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது.
மேரியோ, மாரியோ, பத்மாவோ, பாத்திமாவோ... யார் வேண்டுமானாலும் கோவிலுக்கு வருகிறார்கள். கர்ப்பக்கிரகம் வரை சென்று பாண்டியைத் தரிசிக்கிறார்கள். இப்படி சமயங்களைக் கடந்த சாமியாக இருக்கிறார் பாண்டி. பொதுவாக வீடுகளில் வெள்ளி, செவ்வாயில் அசைவம் சமைக்காத- உண்ணாத இந்துக்கள்கூட குடும்பம் குடும்பமாக வந்து ஆட்டுக் கெடா வெட்டி அங்கே சமைத்து உண்ணு கிறார்கள். செவ்வாய்க் கிழமையில் 200 கெடா வெட்டு, வெள்ளிக் கிழமையில் 400 கெடா வெட்டு, ஞாயிற்றுக் கிழமையில் 500 கெடா வெட்டு நடக்கிறது. அந்த சுற்றுப் பகுதியெங்கும் கறிக்குழம்பு வாசம் கமகமக்கிறது.
ஆனாலும் பாண்டிமுனி சைவச்சாமி என்கிறார் சிவாஜி பூசாரி. நமக்கு திகைப்பாகத்தான் இருக்கிறது.
""பாண்டி- ஆண்டி- சமயன் என மூன்று தெய்வங்கள் இங்கே இருக்கு. பாண்டிக்குக் கட்டுப் பட்டவர் ஆண்டி. அவருக்கு சுருட்டு வைத்து பக்தர்கள் வேண்டிக் கொள்வார்கள். ஆண்டிக்கு விருப்பமானது மாம்பழ பூஜை.
பாண்டிக்குக் காவலாக இருப்பது சமய கருப்பு சாமி. பாண்டி நிறைவேற்றிய கோரிக்கைகளுக்குப் பிரதிபலனாக மக்கள் கெடா வெட்டுவது கருப்புக்குத்தான். பாண்டி சைவச்சாமி. பொங்கல் படையல், நெய், பால், பன்னீர், சந்தன அபிஷேகம்தான் பாண்டிக்கு இஷ்டம். அதை மீறி பாண்டிக்கு எது கொடுத்தாலும் பக்தர்களின் இஷ்டத்தை ஏற்றுக் கொள்கிறார் பாண்டி''’என்கிறார் சிவாஜி பூசாரி.
லாரிகளில், டிராக்டர்களில், பஸ்களில், வேன்களில் கூட்டம் கூட்டமாக வந்தபடியே இருக்கிறார்கள் மக்கள். நிறைவேறின கோரிக்கைக்காக நேர்த்திக் கடன் செய்ய வரும் பழைய பக்தர்கள், கோரிக்கை வைப்பதற்காக வரும் புதிய பக்தர்கள் என எல்லா நாளும் திருவிழாவாக இருக்கிறது பாண்டி கோவிலில். சமய பேதங்களைக் கடந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் இந்த சைவ முனி.
___________________________________
நக்கீரன்கோபால் அவர்களின் சகோதரரான நக்கீரன் அலுவலக மேலாண்மை இயக்குநர் குருசாமி அவர்களின் இளைய மகன் ராம்பிரசாந்த்திற்கு மதுரை பாண்டி கோவிலில் முடி இறக்கும் நேர்த்திக் கடன் நிறைவேற்றும் விழா கடந்த 23-5-2010 அன்று நடந்தது.
இந்த விழாவிற்கு மூன்று ஏ.சி. பஸ்கள் மற்றும் ஒரு வேனில் நக்கீரன்கோபால் தலைமையில் நக்கீரன் குடும்பத்தினர் 21-ஆம் தேதி இரவு கிளம்பினார்கள். மதுரையில் விடுதி ஒன்றில் அனைவருக்கும் தங்கும் வசதி செய்யப் பட்டது.
23-ஆம் தேதி முடி இறக்கம் செய்தபின் பாண்டி முனி கோவிலில் ஏழு ஆட்டுக்கிடாய்கள் வெட்டப்பட்டன. மண்டபத்தில் கறி விருந்து சமைக்கப்பட்டது. இந்த விருந்தில் நக்கீரன் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் குடும்பம் குடும்பமாகக் கலந்து கொண்டனர். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாமின் செகரட்டரி பொன்ராஜ், நடிகர் தாமு ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பாண்டி முனியை தரிசித்து அருளாசி பெற்ற மனநிறைவையும், நக்கீரன் குடும்ப உறுப்பினர்கள் ஒரே இடத்தில் கூடி மனம் விட்டுப் பேசிக் கொண்ட சந்தோஷ நிகழ்வாகவும் இந்த விழா அமைந்ததால், எல்லாருக்குமே மறக்க முடியாத மகிழ்ச்சி நாளாக இருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக