சனி, 30 அக்டோபர், 2010

திரிசக்தி விருதுகள் வழங்கும் விழா - தினமலர்

சென்னை:""தமிழ் இலக்கியங்கள் உலகளவில் பரவ, எழுத்தாளர்களுக்கு விசாலமான பார்வை தேவை,'' என, ஐகோர்ட் நீதிபதி ராமசுப்பிரமணியம் பேசினார்."இலக்கிய பீடம்' மாத இதழ், திரிசக்தி குழுமத்துடன் இணைந்து நடத்திய இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னை மேற்கு மாம்பலத்தில் நேற்று நடந்தது.சிறந்த கவிதைக்கான இலக்கிய பாரதி விருது மற்றும் 5,000 ரூபாய் ரொக்க பரிசு, முனைவர் ஜவகர்லாலுக்கு வழங்கப்பட்டது. "பெருமை பெறும் பெண்ணியம்' எனும் கட்டுரைத் தொகுப்பை எழுதிய, வக்கீல் விவேகானந்தன், இலக்கியத் திலகம் விருதையும், 10 ஆயிரம் ரூபாய் பரிசையும் பெற்றார்."முத்தரையர்' எனும் குறுநில மன்னர் இனத்தைப் பற்றிய வரலாற்று நூலை எழுதிய, பேராசிரியர் ராஜசேர தங்கமணிக்கு, வரலாற்றுச் சிற்பி விருதும், 10 ஆயிரம் ரூபாய் பரிசும் தரப்பட்டது.



கவிஞர்கள் கருமலைத் தமிழாழன், வரதகோவிந்தராஜன், கலைமதியன் மற்றும் அருள் நம்பி ஆகியோருக்கு தலா 1,000 ரூபாய் ரொக்கபரிசு தரப்பட்டது.விருதுகளை வழங்கி, ஐகோர்ட் நீதிபதி ராமசுப்பிரமணியம் பேசும்போது," ஹாரிபாட்டர் நாவலை எழுதிய ஜே.கே.ரவுலிங், ஜெர்மானிய எழுத்தாளர் லென்டிங் போன்றோர் தங்கள் படைப்புகள் மூலம் உலகளாவிய புகழ் பெற்றனர். இவர்களின் படைப்புகளைப் போல, தமிழ் இலக்கியங்களும் உலகளவில் பரவ, தமிழ் எழுத்தாளர்களுக்கு விசாலமான பார்வை வேண்டும். எழுத்தாளர்களை ஊக்குவிக்க இதுபோன்ற விருதுகள் உதவும்' என்றார்.வக்கீல் ராமலிங்கம் பேசும்போது, "மன அழுத்தம் மிகுந்த இன்றைய அவசர யுகத்தில், இலக்கியங்கள் தான் நம்மை இளைப்பாற்றுகின்றன. வரலாற்று பதிவுகள், ரசிக்கத்தக்கவை, வழிகாட்டிகள் என, மூன்று வகையாக பிரிக்கப்படும் இலக்கியங்களை படிப்பதன் மூலம், நம் வாழ்க்கை முழுமை பெறுகிறது' என்றார்.நிகழ்ச்சியில், இலக்கிய பீடம் மாத இதழின் ஆசிரியர் கலைமாமணி விக்ரமன், திரிசக்தி குழும தலைவர் சுந்தர்ராமன், கவிஞர் ரமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக