வியாழன், 7 அக்டோபர், 2010

தேவை பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு - தினமணி

தேவை பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு

வை. இராமச்சந்திரன்First Published : 02 Oct 2010 12:00:00 AM IST

Last Updated :


ஜாதியால் ஆதிக்க வர்க்கம், ஆளப்படுகிற வர்க்கம் என இருந்த காலத்தில், ஆதிக்க வர்க்கத்திற்கு இணையாக ஆளப்படுகிற வர்க்கமான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் சமூக, பொருளாதார நிலைகளில் உயர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், உன்னதமான தலைவர்களால் உருவாக்கப்பட்டதுதான் ஜாதிவாரியான இடஒதுக்கீடு. இது அரை நூற்றாண்டுக்கும் மேலாக இருந்து வருகிறது.
அன்றைய காலகட்டம் கல்வி, வேலைவாய்ப்பு, முக்கிய பதவிகள் போன்றவற்றில் உயர்ஜாதி பிரிவினரின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. இதனால் அன்று ஜாதி வாரியான இடஒதுக்கீட்டுக்கான அவசியம் இருந்தது. ஆனால், இப்போது கல்வி, வேலைவாய்ப்பு, உயர்பதவிகள் போன்றவற்றில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என அனைவருமே ஏற்றத் தாழ்வு இன்றி இடம் வகித்து வருகின்றனர். சமூகத்திலும் ஜாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு பார்க்கப்படாமல் அந்தஸ்திலும் உயர்ந்துள்ளனர்.
இப்படி உயர்ந்த இடத்துக்கு வந்தவர்கள் தாம் சார்ந்த சமூகத்துக்கு வழிகாட்ட வேண்டும் என்பதுதான் இடஒதுக்கீட்டினுடைய உண்மையான நோக்கம். அந்த உண்மையான நோக்கம் இன்று நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறதா என்றால் கேள்விக்குறிதான்.
இப்போதைய சூழ்நிலையில் ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டால் தாழ்த்தப்பட்டோரில் ஏராளமானோர் உயர்ந்த இடத்துக்கு வந்து கொண்டிருக்கும் வேளையில், உயர் வகுப்பினர் பலர் கல்வி, வேலைவாய்ப்பு, உயர் பதவிகள் போன்றவற்றில் பின்தங்கிய நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். காரணம் தொடர்ந்து பல ஆண்டுகளாக இடஒதுக்கீட்டை காரணம் காட்டி ஒதுக்கிவைக்கப்படுவதால், உயர் ஜாதி வகுப்பினரிலும்கூட பலர் பொருளாதார ரீதியாக கடும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.
இடஒதுக்கீட்டுக்காக காரணம் காட்டப்பட்ட சமத்துவமின்மை, இன்று மாற்றுத் திசையில் பயணிக்கிறதோ என்ற ஐயமும், சமத்துவத்திற்காக உருவாக்கப்பட்ட இடஒதுக்கீடு சட்டமே இன்று சமத்துவத்தை சீர்குலைத்து நாட்டை பாழாக்கிவிடுமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது.
இந்நிலையில்தான் ஜாதிவாரியான இடஒதுக்கீடு அவசியமா என்ற கேள்வி எழுகிறது. ஜாதிவாரியான இடஒதுக்கீடு என்பதே, அரசியல் கட்சிகளைப் பொறுத்த அளவில், வாக்குவங்கியை மனதில்கொண்டே எழுப்பப்படுகிறது. இன்று அரசுத் துறைகளில் ஜாதிவாரியான இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூக்குரலிடும் தேசியக் கட்சிகளோ, திராவிடக் கட்சிகளோ, தனியார் நிறுவனங்களில் ஜாதிரீதியான இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்று போராடத் தயாராக உள்ளனவா? ஏன், மத்திய, மாநில அரசால்தான் பகிங்கரமாக உத்தரவிட முடியுமா? முடியாது.
முக்கிய அரசியல்வாதிகள் நடத்தும் தொழில்நிறுவனங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற அச்சமும், தேர்தல் நேரங்களில் உதவும் பண முதலைகளிடம் தேவையில்லாமல் பகைக்க வேண்டுமா என்ற அச்சமும்தான் இதற்குக் காரணம். அவர்களுக்கு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது அக்கறை இருந்தால், அவர்களின் தொழில் நிறுவனங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வாய்ப்புத் தரலாமே. ஏன் முடியவில்லை?
அரசியல் பலம் படைத்தவர்களின் நிறுவனங்களில், முக்கிய பதவிகளுக்குத் தகுதியான உயர்வகுப்பினரை வைத்துக் கொள்வர்.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு என வாய் கிழியப் பேசும் முக்கிய தலைவர்களும், அரசியல்வாதிகளும், ஏன் தொழிலதிபர்களும்கூட, தங்களது தனிச் செயலர், கணக்கு தணிக்கையாளர், வழக்கறிஞர்கள் என அனைத்திலும் உயர்வகுப்பு ஜாதியினரைப் பயன்படுத்துகின்றனரே அது எப்படி?
இவ்வாறெல்லாம் கேள்விகள் எழுவது தவிர்க்கமுடியவில்லை. ஆக, அரசியல்வாதிகளைப் பொறுத்த அளவில், அரசியல் ஆதாயம் வேண்டும் என்ற இடத்தில் ஒரு நிலைப்பாடும், அரசியல் ஆதாயம் இல்லாத இடத்தில் வேறு ஒரு நிலைப்பாடும் கொண்டுள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் ஜாதிவாரியான இடஒதுக்கீடு என்பது வெறும் அரசியல் லாபத்திற்காக மட்டுமே எனத் தோன்றுகிறது. இன்று தாழ்த்தப்பட்டோர் ஏராளமானோர் வாழ்க்கைத் தரத்தில் உயர்ந்தும் உள்ளனர். அதேபோல உயர்வகுப்பினரில் கோயில் மணி அடித்துப் பிழைப்பை நடத்துபவர்களும், ஹோட்டல்களில் சமையல் வேலை செய்து பிழைப்பை நடத்துபவர்களும் உள்ளனர். அப்படிப் பார்க்கையில் இன்று ஆளுகிறவர் யார்? ஆளப்படுகிறவர் யார் என்ற கேள்வி எழுகிறது.
ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டின் அடிப்படையில் உயர்ந்தவர்களின் பிள்ளைகளும், இன்றும் அதே இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மேலும் உயர்ந்த நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.
இடஒதுக்கீடு இன்றி தவிப்பவர்களின் பிள்ளைகள் மேலும் தாழ்வு நிலைக்கே தள்ளப்பட்டு வருகின்றனர். இதுதான் இன்றைய நிலை.
இத்தகைய நிலையைத் தீர்க்க வேண்டியது ஒரு தலைசிறந்த அரசின் தலையாய கடமை. இந்த வேறுபாட்டை போக்க ஒரே வழி பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு வழங்குவதுதான்.
கல்விநிலையங்களில் ஜாதிய அடிப்படையில் உண்டாகும் காழ்ப்புணர்வுக்கு ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடுதான் காரணமோ எனத் தோன்றுகிற சூழலில், இந்த காழ்ப்புணர்வை நீக்குவதற்கும் இந்தப் பொருளாதார இடஒதுக்கீடே ஓர் ஊன்றுகோலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இவ்வகையில் ஒதுக்கீடு செய்வதால் மட்டுமே, ஜாதி அடிப்படையில் உயர் வகுப்பினர், தாழ்ந்த வகுப்பினர் எல்லோரும் கல்வி, வேலைவாய்ப்பு மட்டுமன்றி, பொருளாதார நிலையிலும் சமநிலையை அடைய முடியும்.
பொருளாதார அடிப்படையில் பயனாளிகள் தேர்வில் பல தில்லுமுல்லுகள் நடைபெற வாய்ப்புகள் இருந்தாலும், பொதுமக்கள் தாமாக முன்வந்து, முழுமையாக, உண்மையான தகவல்களை மட்டுமே வழங்கி, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, அவர்கள் உயர் வகுப்பினராக இருந்தாலும் சரி, தாழ்ந்த வகுப்பினராக இருந்தாலும் சரி, வாழ்க்கைத் தரத்தில் முன்னேற வழிவிட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக