தி.மு.க.-இந்திய கம்யூனிஸ்டு பலப்பரீட்சை புதுமுகங்கள் மோதும் புதுக்கோட்டை தொகுதி புதுக்கோட்டை தொகுதியில் தி.மு.க.-இந்திய கம்யூ. கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் இரு கட்சி வேட்பாளர்களும் புதுமுகங்கள் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக புதுக்கோட்டை தொகுதி உள்ளது. இதுவரை நடந்த 11 சட்டமன்ற தேர்தல்களில், புதுக்கோட்டை தொகுதியில் காங்கிரஸ் 5 முறையும், காங்கிரஸ் (பழைய) ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2 தேர்தல்களில் அ.தி.மு.க. தொடர் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதியில் நகர்புறங்களை காட்டிலும் கிராமபுற பகுதிகளே அதிகமாக உள்ளன.
புதுக்கோட்டை தொகுதியில் முத்தரையர் இன மக்கள், ஆதிதிராவிடர் இன மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இதையடுத்து கள்ளர் இனமக்களும், உடையார், முஸ்லிம் இன மக்களும் வசித்து வருகின்றனர். தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு புதுக்கோட்டை தொகுதியில் புதுக்கோட்டை நகராட்சியில் 39 வார்டுகளும், புதுக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகளும், கறம்பக்குடி ஒன்றியத்தில் 20 ஊராட்சிகளும் உள்ளடங்கியுள்ளன.
புதுக்கோட்டை தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. வேட்பாளராக மாவட்ட செயலாளர் பெரியண்ணன் அரசு போட்டியிடுகிறார்.இவர் தேர்தல் களத்தில் முதன்முதலாக நிற்கிறார். இவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் முத்துக்குமரன் போட்டியிடுகிறார். இவரும் தேர்தல் களத்தில் இப்போது தான் குதிக்கிறார். இதனால் 2 புதுமுகங்கள் போட்டியிடுவதால் புதுக்கோட்டையை கைப்பற்றுவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க. வேட்பாளர் பெரியண்ணன் அரசு கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் மூலம் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தொகுதி முழுவதும் கிராமம், கிராமமாக, கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று பொதுமக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார். இதேபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் முத்துகுமரன், அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளின் பலம், தி.மு.க. அரசின் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, ஊழல் நிர்வாகம் ஆகியவற்றை சுட்டிகாட்டி பிரசாரம் செய்து வருகிறார். இதனால் புதுக்கோட்டை தொகுதியை பொறுத்தவரை 2 வேட்பாளர்களும் சமபலத்தில் உள்ளனர்.
இவர்கள் மட்டுமின்றி முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் பரதனும், சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவர் முத்தரையர் இன மக்களின் ஓட்டுக்களை பிரிப்பார் என கூறப்படுகிறது. மேலும் பா.ஜனதா சார்பில் பழ.செல்வம் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 9 பேரும் களத்தில் உள்ளனர். புதுக்கோட்டை வறட்சி மிகுந்த பகுதியாகும். எனவே வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கனரக தொழிற்சாலைகள் ஏற்படுத்துவதை மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இதேபோல் காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். புதுக்கோட்டை நகரில் புதிதாக பஸ்நிலையம், கால்நடை மருத்துவ கல்லூரிகள் ஆகியவை அமைக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். வியாபாரிகள் மற்றும் பயணிகள் வசதிக்காக புதுக்கோட்டை வழியாக சென்னைக்கு பகல்நேர எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் கூடுதல் நெடுந்தூர ரெயில்கள் இயக்க வேண்டும். மேலும் புதுக்குளத்தை தூர்வாரி படகு போக்குவரத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக