
திண்டுக்கல் : நத்தம் தொகுதியில் அதிகாரபூர்வ தி.மு.க.,வேட்பாளரை எதிர்த்து, அத்தொகுதியில் சீட் கிடைக்காத தி.மு.கவைச் சேர்ந்த, எம்.ஏ.ஆண்டி அம்பலம் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் ஓன்பது முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆண்டி அம்பலம். இவரது மறைவுக்கு பின்பு நத்தம் தொகுதி அ.தி.மு.க.,வுக்கு மாறியது. ஆண்டி அம்பலத்தின் மகன் எம்.ஏ., ஆண்டி அம்பலம் கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, தி.மு.க.,வில் சேர்ந்தார். இதையடுத்து கடந்த சட்டசபை தேர்தலில் இவருக்கு போட்டியிட சீட் வழங்கப்பட்டது. இவர் 3 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
இந்த முறை தி.மு.க.,வில் தனக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தார். ஆனால் ஒன்றிய செயலரும், மாவட்ட ஊராட்சி துணை தலைவருமான க.விஜயனுக்கு சீட் கிடைத்தது. இதையடுத்து ஆண்டி அம்பலமும், இவரது ஆதரவாளர்களும் அதிருப்தியடைந்தனர். இவர் சார்ந்துள்ள முத்தரையர் சமுதாய மக்கள், நத்தம் தொகுதியில் 56 ஆயிரம் பேர் உள்ளனர். ஒரு சமுதாயத்திற்கு தி.மு.க.,வில் பிரதிநிதித்துவம் தரவில்லை எனக் கூறி, சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்தனர். எம்.ஏ.ஆண்டி அம்பலத்தை சுயேச்சையாக நிறுத்துவது என்று முடிவு செய்தனர். ஆண்டி அம்பலம் நேற்று அதிகாரபூர்வ தி.மு.க.,வேட்பாளரை எதிர்த்து, நத்தம் தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவரது மனைவி பஞ்சவர்ணம் இவருக்கு மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக