செவ்வாய், 22 மார்ச், 2011

நத்தம் தொகுதி திமுக வேட்பாளரை மாற்றக் கோரிக்கை - Thanks to Dinamani

திண்டுக்கல், மார்ச் 21: நத்தம் தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரை மாற்றம் செய்து, ஆண்டி அம்பலத்தை வேட்பாளராக அறிவிக்கக் கோரி, முத்தரையர் சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் கூடி திங்கள்கிழமை கூட்டம் நடத்தினர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் ஆண்டி அம்பலம். முத்தரையர் இனத்தைச் சேர்ந்த இவர், நத்தம் சட்டப்பேரவைத் தொகுதி உருவானது முதல் 1999-ம் ஆண்டு வரை போட்டியிட்டு, அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். மேலூர் தொகுதியிலும் ஒரு முறை போட்டியிட்டு வென்று, மொத்தம் 7 முறை எம்.எல்.ஏ. பதவி வகித்துள்ளார்.

இவர், 1999-ம் ஆண்டு காலமானதைத் தொடர்ந்து, இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில், அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட இரா. விசுவநாதன் வெற்றி பெற்று இன்று வரை எம்.எல்.ஏ. வாக இருந்து வருகிறார்.

கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், இத்தொகுதியில் திமுக போட்டியிட முடிவுசெய்தது. அதன்படி, மறைந்த ஆண்டி அம்பலத்தின் மகன் காங்கிரஸிலிருந்து திமுக.வுக்கு மாறி (இவர் பெயரும் ஆண்டி அம்பலம்), அத்தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், ஆண்டி அம்பலம் தேர்தலில் தோல்வியுற்றார்.

இந்நிலையில், வரவுள்ள தேர்தலில் ஆண்டி அம்பலம் போட்டியிட வேண்டும் என, ஊரில் பெரும்பான்மையோர் விருப்பம் தெரிவித்திருந்தனர். ஆனால், சாணார்பட்டி திமுக ஒன்றியச் செயலரும், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவருமான க. விஜயன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனால், அதிருப்தியில் உள்ள முத்தரையர் சமூகத்தினர் சனிக்கிழமை கூட்டம் நடத்தி, வேட்பாளரை மாற்றம் செய்யவேண்டும் என வலியுறுத்தினர். இது தொடர்பாக, திங்கள்கிழமை மீண்டும் கூட்டம் கூட்டி தீர்மானிக்க முடிவெடுத்தனர்.

அதன்படி, திங்கள்கிழமை சந்தனக் கருப்பசாமி கோயில் வளாகத்தில் கூடிய இச்சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், நத்தம் திமுக வேட்பாளர் க. விஜயனை மாற்றி ஆண்டி அம்பலத்தை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் வரும் 25-ம் தேதி சுயேச்சை வேட்பாளருக்கான மனுத் தாக்கல் செய்யப்படும் என தீர்மானித்துள்ளனர்.

இக்கூட்டத்தில், திமுக கட்சியினர் மற்றும் மாற்று சாதியைச் சேர்ந்த மக்கள் கட்சியினர் கலந்துகொண்டு ஆண்டி அம்பலத்தை வேட்பாளராக நிறுத்துவது என்ற தீர்மானத்தை ஆதரித்தனர்.

2 கருத்துகள்:

  1. முத்தரையர் சமுதாயத்தை அடியோடு ஒழிக்க நடக்கும் சதி
    அதற்கு நாம் சரியான பாடம் புகட்ட வேண்டும் இல்லை என்றால் அதிக எண்ணிகையில் நாம் அந்த தொகுதியில் இருப்பதே அவமானம்

    பதிலளிநீக்கு
  2. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ...
    விழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது
    நம் இனமாக இருக்கட்டும்


    நத்தத்தில் இருந்து ராஜா ..........

    பதிலளிநீக்கு