வெள்ளி, 25 மார்ச், 2011

THANKS TO DINAMALAR

யானையின் காதில் புகப்போகும் சுள்ளெறும்பு நான் : ஸ்ரீரங்கம் தி.மு.க., வேட்பாளர் "சுளீர்' பேட்டி : என்.ஆனந்த், வயது - 29, படிப்பு - பி.எஸ்சி., சமூகம் - முத்தரையர், தொழில் - விவசாயம், ரியல் எஸ்டேட், கட்சிப் பதவி - சாந்தாபுரம் தி.மு.க., கிளைச் செயலர் : ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் ஆனந்த், காலையில் துவங்கி, இரவு வரை ஓயாத பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இரவு 9 மணிக்கு மாவட்டச் செயலர் நேருவுடன் ஆலோசனை; இரவு 9.30 மணிக்கு, பிரசாரத்தை முடிக்க கடைசி பகுதி நோக்கி காரில் விரைகிறார். மிகுந்த சிரமத்துக்கு இடையே, காரிலேயே அவர் அளித்த, "மினி' பேட்டி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடுவோம் என எதிர்பார்த்தீர்களா?




கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை.




எந்த தைரியத்தில் அவரை எதிர்த்து போட்டியிடுகிறீர்கள்?




தி.மு.க.,வும் மிகப் பெரிய கட்சி தான். உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக கருணாநிதியும், ஸ்டாலினும் இருக்கிற தைரியத்தில் தான் போட்டியிடுகிறேன். என்னைப் பொறுத்தவரை ஜெயலலிதாவை, என்னை எதிர்த்து போட்டியிடும் ஒரு சக வேட்பாளராகத் தான் கருதுகிறேன்.




ஜெயலலிதாவை எதிர்த்து இதுவரை சுகவனம் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில், நீங்கள் பலிகடா ஆக்கப்பட்டதாக நினைக்கிறீர்களா?




நிச்சயமாக நான் பலிகடா இல்லை. தலைவர் கருணாநிதியும், ஸ்டாலினும், மாவட்டச் செயலர் நேருவும் எனக்கு மிகப்பெரிய வாய்ப்பை அளித்துள்ளனர்.




முத்தரையர் இன ஓட்டுகளை மட்டுமே நம்பி களம் இறங்குகிறீர்களா?




முத்தரையர் இனத்தைச் சேர்ந்தவன் என்றாலும், அனைத்து தரப்பு மக்களிடமும் சகஜமாக பழகக் கூடியவன் நான். தாழ்த்தப்பட்ட மக்களின் ஓட்டுகளும் எனக்கு நிச்சயம் விழும்.




பொதுவாகவே முத்தரையர்கள், அ.தி.மு.க., ஆதரவாளர்கள் என்ற நிலை உள்ளதே?




என் வெற்றியின் மூலம் அந்த, "டிரென்ட்'டை நிச்சயம் உடைப்பேன். கருணாநிதி கூறியதைப் போல, யானையின் காதில் புகுந்த கட்டெறும்பாக அல்ல; நான் சுள்ளெறும்பாக இருந்து யானையை வீழ்த்துவேன்.




ஸ்ரீரங்கத்தில் உள்ள பிராமண சமுதாயத்தினர் உங்களுக்கு ஓட்டு போடுவார்களா?




எவ்வித குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாத இளைஞன் என்பதாலும், தமிழகத்தில் ஏராளமான கோவில்களுக்கு குடமுழுக்கு செய்த அரசின் சாதனைகளாலும், அவர்களின் ஓட்டு எனக்கு நிச்சயம் உண்டு.




தி.மு.க., அரசின் மீதான ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை எப்படி சமாளிப்பீர்கள்?




இதுவரை எந்த மக்களும் ஊழல் குறித்து என்னிடம் கேள்வி எழுப்பவில்லை. அப்படி கேள்வி எழுப்பினால், ஊழல் நடக்கவில்லை என்பதை விளக்கிக் கூறுவேன். அ.தி.மு.க.,வின் ஊழல்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைப்பேன்.




உங்களின் தேர்தல் பிரசாரம் எப்படி இருக்கும்?




தி.மு.க., அரசின் சாதனைகளையும், தேர்தல் அறிக்கையையும், வீடு வீடாகச் சென்று கூறி பிரசாரம் செய்வேன். இவ்வாறு ஆனந்த் கூறினார்.




ஆயிரம் தலைக்கட்டுகளைக் கொண்ட சொந்தங்களையும், அதே இனத்தைச் சேர்ந்த மக்களையும், வேண்டுமென்ற அளவு பணத்தையும் நம்பி களமிறங்கி இருக்கிறார் தி.மு.க., வேட்பாளர் ஆனந்த். மாவட்டச் செயலர் நேரு மற்றும் ஆனந்தைச் சுற்றியுள்ள கட்சியினர் சிலர் ஆட்டுவிக்கும் பொம்மையாகத் தான் ஆனந்த் இருக்கிறார். அவர்கள் நில் என்றால் நிற்கிறார்; செல் என்றால் செல்கிறார்; உட்காரு என்றால் உட்காருகிறார்.




ஆனந்த் நமக்களித்த பேட்டியின் போது, அவருக்கு தெளிந்த அரசியல் அறிவோ, எதிராளியை வீழ்த்துகின்ற பிரசார யுக்திகளோ இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.




மொத்தத்தில், வேட்பாளர் தேர்வை பொறுத்தவரை, "மலையை சணல் கயிற்றால் கட்டி இழுப்போம்... வந்தால் மலை; போனால் சணல் தானே...' என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், மாவட்டச் செயலர் நேரு முடிவெடுத்துள்ளனர் என்பது தெளிவாகிறது. மே 13ம் தேதி தெரிந்துவிடும், சுள்ளெறும்பின் நிலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக