ஸ்ரீரங்கம் தொகுதியில் அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா உட்பட 23 வேட்பாளர்கள் களமிறங்குவதால், அத்தொகுதி ஓட்டுச்சாவடிகளில் இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்து அமைப்புகளை சார்ந்த வேட்பாளர்கள், சுயேச்சைக்கு முரசு சின்னம் ஒதுக்கீடு, கிராமப்பகுதியில் பெரும்பான்மையாக உள்ள ஜாதி ஓட்டுக்கள் பிரிப்பு ஆகியவை ஜெயலலிதாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவை எதிர்த்து 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஸ்ரீரங்கம் தொகுதியில் 257 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. வேட்பாளர்கள் எண்ணிக்கை 16 வரை ஒரு ஓட்டுப்பதிவு இயந்திரமும், 17 முதல் 32 வரை இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட வேண்டும். ஸ்ரீரங்கம் தொகுதியில் 23 பேர் போட்டியிடுவதால், இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில், முதல் இயந்திரத்தில் உள்ள வேட்பாளர் வரிசையில் நான்காவதாக தான் ஜெயலலிதாவின் பெயரும், இரட்டை இலை சின்னமும் இடம்பெறுகிறது.
இயந்திரத்தில் முதலாவதாக பா.ஜ., தாமரைச் சின்னத்தில் போட்டியிடும் ஜனதா கட்சி வேட்பாளர் அறிவழகன், இரண்டாவதாக தி.மு.க., வேட்பாளர் ஆனந்த், மூன்றாவதாக பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நடராஜன் ஆகியோர் பெயர்கள் இடம்பெறுகின்றன. கடுமையான தி.மு.க., எதிர்ப்பின் மூலம் அ.தி.மு.க.,வின் நலம்விரும்பியாக அடையாளம் காணப்பட்ட சுப்பிரமணியசாமியின் ஜனதா கட்சி வேட்பாளர் பா.ஜ., கூட்டணியில் ஸ்ரீரங்கத்தில களமிறக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக சுப்பிரமணிய சுவாமி பிரசாரம் செய்ய உள்ளார்.
அகில பாரத இந்து மகா சபா வேட்பாளர் ரவிசங்கர் அய்யர், தமிழ் மாநில சிவசேனா வேட்பாளர் செல்வம் ஆகியோர் சுயேச்சை சின்னத்தில் களமிறங்குகின்றனர். இதுதவிர சுயேச்சைகளாக போட்டியிடுபவர்கள் பலர் இந்து மதம் சார்ந்த அமைப்புகளில் தொடர்புடையவர்கள். இதனால், இந்து அமைப்புக்களை சார்ந்தவர்களின் ஓட்டுகள் கணிசமாக பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் தொகுதியில் திருச்சி மாநகராட்சியின் 1-6 வரையுள்ள வார்டுகள் மட்டுமே உள்ளன. இதுதவிர, ஸ்ரீரங்கம், மணப்பாறை தாலுகாக்களில் உள்ள 40க்கும் மேற்பட்ட ஊராட்சிகள், சிறுகமணி பேரூராட்சி, புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகாவின் கோமங்கலம் உட்பட தொகுதியின் பெரும்பாலான பகுதிகள் கிராமப்புறம் தான். பல கிராமங்களில் பெரும்பான்மையாக முத்தரையர் சமூகத்தினர் உள்ளனர். தி.மு.க., வேட்பாளர் ஆனந்த் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர். இதனால், கிராமப்பகுதி ஓட்டுகள் கணிசமாக அவருக்கு செல்ல வாய்ப்புள்ளது.
ஸ்ரீரங்கத்தில் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.,வின் முரசு சின்னம் சுயேச்சைக்கு ஒதுக்கப்பட்டது கிராமப்புற வாக்காளர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் என்ற ஐயப்பாடும் உருவாகியுள்ளது. இதற்கிடையே ஐ.ஜே.கே., சார்பில் தமிழரசி என்பவர் போட்டியிடுகிறார். இவரது பங்குக்கு உடையார் உள்ளிட்ட சமூக ஓட்டுகளும் பிரிக்கப்படும்.
எனவே, ஸ்ரீரங்கம் தொகுதியில் இந்து அமைப்புக்களைச் சார்ந்த வேட்பாளர்கள், முரசு சின்னம், ஜாதி ஓட்டு பிரிப்பு
போன்றவை ஜெயலலிதாவுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது. "இவற்றை எதிர்கொண்டு அதிக ஓட்டு வித்தியாசத்தில் அவர் வெற்றிபெறும் வகையில், அ.தி.மு.க.,வினர் களத்தில் இன்னும் வேகம் காட்டாமல் இருப்பது பின்னடைவுக்கு வழிவகுக்கும்' என, அக்கட்சி தொண்டர்களே பேசி வருகின்றனர்.
-நமது சிறப்பு நிருபர்-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக