திருச்சி: தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் புத்தூர் நால்ரோட்டில் உள்ள அலுவலகத்தில் நடந்தது.
இதில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பாஸ்கரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜமாணிக்கம், பொருளாளர் குஞ்சான் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பி.சி., எம்.பி.சி., பட்டியலில் உள்ள முத்தரையர் சமுதாய மக்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் மிக, மிக குறைந்த அளவே முன்னேறியுள்ளனர். மக்கள் தொகைக்கேற்ப முன்னேற்றமில்லை. ஆகவே, இரண்டாம் கட்ட போராட்டமாக கல்வி, வேலைவாய்ப்புகளில் முத்தரையருக்கு 15 சதவீதம் தனி இடஒதுக்கீடு கேட்டு, ஸ்ரீரங்கம் தொகுதியில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
அரசாணை வெளியிட்டும் முத்தரையர் மக்களுக்கு அம்பலக்காரன் என்று ஜாதி சான்றிதழ் தர மறுக்கின்றனர். அம்பலக்காரன் என்ற பெயரில் ஜாதி சான்றிதழ் வழங்க அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மத்திய அரசு ஊழியர்களையும் லோக்பால் மசோதாவுக்குள் கொண்டு வந்து நிறைவேற்றினால் மட்டுமே, ஊழலை ஒழிக்க முடியும் என்று நம்புகிறோம். ஆகவே, அன்னா ஹசாரேவை ஆதரித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் முத்தரையர் சங்கமும் கலந்து கொள்வது.
திருச்சி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த பட்ஜெட்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி. கடந்த சட்டசபைத் தேர்தலில் தே.மு.தி.க., சார்பில் 41 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். அவர்களில் ஒருவர் கூட முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் இல்லை. ஆகையால், வரும் உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க.,வில் அதிகளவு முத்தரையர்களுக்கு வாய்ப்பளிக்க, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்தை கேட்டுக்கொள்கிறோம்.
நடக்கவுள்ள திருச்சி மேற்கு தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு அனைத்து கட்சியினரும் வாய்ப்பு தரவேண்டும். தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக