ஞாயிறு, 22 ஜனவரி, 2012

சாதிவாரி கணக்கெடுப்புக்கு அனைத்து சமுதாயக் கூட்டம் வலியுறுத்தல்!

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் அரங்கில் அனைத்து சமுதாய தலைவர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வந்தவர்களை ஜி.கே.மணி வரவேற்றார்.
நாடார் பேரவை செயலாளர் தர்மராஜ், தேவேந்திரகுல வேளாளர் சஙக தலைவர் ஜான்பாண்டியன், சத்திரியநாடார் சங்க செயலாளர் சந்திரன் ஜெயபால், யாதவ மகாசபை தலைவர் தேவநாதன், முத்தரையர் சங்க செயலாளர் ராஜமாணிக்கம், மற்றும் கிஷ்ணபறையனார், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, சுப்பிர மணியன், சுப.அண்ணாமலை, அனந்தராமன், ஐசக்அய்யா, பொற்கை நடராஜன், ரமேஷ் செட்டியார் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன :-

* சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும். இல்லாவிட்டால் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்படும். எனவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

* நீதிபதிகள் நியமனத்திலும் இடஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும். பெட்ரோல், கியாஸ் ஏஜென்சிகள் மற்றும் பெரிய பணிகளுக்கான ஒப்பந்தங்கள் வழங்குவதிலும் இடஒதுக்கீடு முறையை கொண்டு வரவேண்டும்.

* கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு முறையை அமுல்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலத்திற்கு ஏற்ப இட ஒதுக்கீட்டு அளவை நிர்ணயித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். தமிழ்நாட்டில் 100 சதவீத அளவுக்கு இடஒதுக்கீடு தேவை.

* ராமேசுவரம் மீனவர்கள் சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு இலங்கை கடல் எல்லையிலும் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* முல்லை பெரியாறு சிக்கல் தொடர்பாக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது. அணையின் நீர்மட்டத்தை முதலில் 142 அடியாகவும், அதன்பிறகு 152 அடியாகவும் உயர்த்தி தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும்.

* எல்லா சமுதாயத்திலும் உழைக்கும் மக்கள் மதுவுக்கு அடிமையாகி உடல்நலம் பாதிக்கின்றனர். சாலை விபத்துகள், கொலை-கொள்ளை போன்ற சமூக சீரழிவுக்கு மதுபழக்கம் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. எனவே தமிழ் நாட்டில் உடனடியாக முழு மதுவிலக்கை கொண்டு வரவேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக