பிறப்புச் சான்றிதழிலேயே சாதியைக் குறிப்பிட்டுவிடலாமே?
சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றைப் பெறுவதில் ஏற்படுகின்ற நடைமுறை காலதாமதத்தைக் கருத்தில் கொண்டு, வரும் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும் மாணவ, மாணவியருக்கு ஆறாம் வகுப்பிலேயே அந்தச் சான்றிதழ்கள் அனைத்தும் அளிக்கப்படும்’ என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். காலதாமதத்தைத் தவிர்க்கும் முயற்சி வரவேற்கத்தக்கதுதான்.
ஆனால் அதே சமயம் இது குறித்து மனதில் பல நெருடல்களும் ஏற்படுகின்றன. பொதுவாக, 6ம் வகுப்பு படிக்கும் பிள்ளைகளுக்கு 11, 12 வயதாகியிருக்கும். காண்பது, கேட்பது எல்லாம் மனதில் பசுமரத்தாணி போலப் பதிகிற வயது.
பள்ளிப் பிள்ளைகளிடையே ஒரு வழக்கம் உண்டு. பள்ளிகளில் ஒவ்வொரு மாணவருக்கும் ஏதாவது வழங்கப்படும்போது உனக்கு என்ன கிடைத்தது என்று மற்ற மாணவர்களுக்குக் கிடைப்பதை வாங்கிப் பார்ப்பது. பார்த்து தன்னுடையதோடு ஒப்பிட்டுக் கொள்வது. அது மதிப்பெண் அட்டையானாலும் சரி, தேர்வுத் தாளானாலும் சரி, பரிசுப் பொருளானாலும் சரி.
அந்தப் பருவத்தில், அவர்களுக்கு பள்ளியிலிருந்தே சாதிச் சான்றிதழ் வழங்கும்போது, மதிப்பெண் பட்டியலை ஒப்பிட்டுப் பார்ப்பதுபோல, நான் இந்த சாதி, நீ எந்த சாதி என்று சக மாணவர்களின் சாதி பற்றி அறியும் ஆர்வம் நிச்சயம் ஏற்படும். இதன் விளைவால் ஒவ்வொருவரும் இன்ன சாதி என்பது அவர்களது பிஞ்சு மனதில் ஆழமாகப் பதிந்து விடும். அதோடு, வகுப்பறையில் சாதி வேற்றுமை பார்க்கிற உணர்வும் வேரூன்றி வளரும் அபாயமும் நேரலாம்.
ஆகவே இதுபோன்ற சிக்கல்கள் நேர்வதைத் தவிர்க்க, பிறப்புச் சான்றிதழிலேயே அவரவர் சாதியைக் குறிப்பிட்டு வழங்கிவிடலாமே. இதன்மூலம் பிறப்பைப் பதிவு செய்யும் வழக்கமும் வலுப்பெறும்.
இப்பொதெல்லாம் பெரிய நகரங்களில் கணினி மூலம் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. எனவே பிறப்புச் சான்றிதழ் வழங்கும்போது சாதி பற்றிய விவரங்களும் கணினியிலேயே பதிவாகி ஒரு data base உருவாகிவிடும்.
கணினி மூலம் பிறப்புச் சான்றிதழ் வழங்காத இடங்களில் ரிஜிஸ்டரில் பதிவாகிவிடும்.
இதன் மூலம் வருங்காலத்தில், ஒவ்வொரு சாதியைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை பற்றிய விவரங்களையும் அரசு தனது விரல்நுனியில் வைத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும். தனியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டியிருக்காது.
-த்ராவிட், சென்னை - 24
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக