புதுக்கோட்டை : புதுக்கோட்டை இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வரும்போது, தி.மு.க.,வின், "முக்கிய புள்ளி' ஒருவரை, அ.தி.மு.க.,வில் இணைக்க முயற்சி நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை இடைத்தேர்தல், வரும் 12ம் தேதி நடக்கிறது. இதில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக, முதல்வர் ஜெயலலிதா நாளை (9ம் தேதி) புதுக்கோட்டை வருகிறார்.
வாடிக்கை : பொதுவாக இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள், தொகுதியில் உள்ள எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களை தங்கள் பக்கள் இழுத்து தேர்தல், "ஸ்டண்ட்' அடிப்பதும், எதிர்த்து போட்டியிடுபவர்களின் ஆதரவாளர்களை தங்கள் பக்கம் இழுத்து, பரபரப்பை ஏற்படுத்துவது வாடிக்கை.
அந்த வழக்கம் இந்த இடைத்தேர்தலிலும் அரங்கேறியுள்ளது. சில வாரங்களுக்கு முன், தி.மு.க., முன்னாள் மாவட்ட துணை செயலர் ஜாபர் அலி, முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தார்.
இணைந்தனர் ஒருவேளை, தி.மு.க., புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிட்டிருந்தால், தி.மு.க., சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட ராஜா பரமசிவம், நேற்று முன்தினம் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தார். அதே போல், தே.மு.தி.க., மகளிரணி மாநில செயலர் ரெஜினா பாப்பாவும், முத்தரையர் சமுதாயத்தில் செல்வாக்குள்ள குழ.செல்லையாவும், நேற்று முன்தினம் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
உறுதி : முதல்வர் ஜெயலலிதா இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு புதுக்கோட்டை வரும் வேளையில், முக்கிய, தி.மு.க., பிரமுகர் ஒருவரை, அ.தி.மு.க.,வில் சேர்க்க முயற்சி நடந்து வருவதாகத் தெரிகிறது. அந்த பிரமுகர் யார்? என்பதை வெளியே சொல்ல, அ.தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள் மறுத்து வருகின்றனர். ஆனால், தி.மு.க., பிரமுகர், அ.தி.மு.க.,வில் இணைவது மட்டும் உறுதி என்பதை மட்டும் அடித்துக் கூறுகின்றனர். ஏற்கனவே, இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து கிடக்கும் மாவட்ட, தி.மு.க.,வினர் மத்தியில், இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க.,விலிருந்து அ.தி.மு.க.,வுக்கு தாவிய ஜாபர்அலியும், ராஜா பரமசிவமும், முன்னாள் அமைச்சர் ரகுபகுதியின் தீவிர ஆதரவாளர்கள் ஆவர். புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிட்டால் எதிர்மறையான பாதிப்புகள் இருக்கும் என்ற காரணத்தால், தி.மு.க., போட்டியிடாத நிலையிலும், அ.தி.மு.க.,வினர் தங்கள் பக்கம், தி.மு.க.,வின் முக்கிய புள்ளிகளை இழுத்து வருவது, தேர்தலில் போட்டியிடாத நிலையிலும் அக்கட்சிக்கு பாதிப்பை உருவாக்கி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக