அறிஞர் நடன.காசிநாதன் அவர்கள்
1990 ஆம் ஆண்டளவில் எனக்குத் தொல்லியல்
அறிஞர் நடன. காசிநாதன் அவர்களின் பெயர் அறிமுகமானது. எங்கள் ஊரான கங்கை கொண்ட
சோழபுரம் அகழாய்வுப்பணிகளில் ஆர்வம் காட்டி அந்தப் பகுதிக்குப் பல உதவிகளைச்
செய்தார். அந்த நாளில் உள்கோட்டையில் ஒரு விழா ஏற்பாடு செய்து ஐயா அவர்களைப்
பேசவும் செய்தோம்.
அச்சக ஆற்றுப்படை என்ற என் நூலுக்கு அரியதோர்
அணிந்துரையும் ஐயா அவர்கள் வழங்கினார்கள்(25.07.1992). நான் சென்னையில்
பணியிலிருந்தபொழுது ஒருமுறை அவர்களின் அலுவலகம் சென்று பார்த்த நினைவும் எனக்கு
உண்டு. கண்ணியம் இதழ் வழியாகவும், பிற ஏடுகளின் வழியாகவும் அறிஞர் நடன.காசிநாதன்
அவர்களின் ஆராய்ச்சி ஆர்வத்தைக் கண்டு பலபொழுது
வியந்துள்ளேன்.
பூம்புகாரும் கடல் அகழாய்வும் என்ற
அறிஞர் நடன.காசிநாதன் அவர்களின் ஆராய்ச்சி நூலைக் கற்கும் வாய்ப்பு அண்மையில்
அமைந்தது. அந்த நூலைக் கற்ற பிறகு பட்டினப்பாலை நூலைக் கற்றேன். பட்டினப்பாலையின்
மேன்மை எனக்கு அப்பொழுது நன்கு விளங்கியது.
பூம்புகாரின் பண்டையச் சிறப்பையும் கடல்
அகழாய்வின் உண்மைகளை யும் உரைக்கும் அந்த நூலை வரைந்த அறிஞர் நடன. காசிநாதன்
அவர்கள் தமிழகத் தொல்லியல் வரலாற்றில் என்றும் நினைவுகூரத்தக்கத் தொல்லியல் அறிஞர்
ஆவார். அவர்தம் வாழ்க்கை வரலாற்றையும், அவர் எழுதிய நூல்களையும் கட்டுரைகளையும்
தமிழுலகிற்குப் பதிந்துவைக்கின்றேன்.
தொல்லியலறிஞர், நடன. காசிநாதன் வாழ்க்கை
வரலாறு:
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், தொப்பளிக் குப்பத்தில் 01.11.1940 இல் பிறந்தவர். இவர், குழந்தைப் பருவத்திலேயே தமது தந்தையை இழந்துவிட்ட காரணத்தால், தாய்வழிப் பாட்டனார் ஊரான சிதம்பரம் வட்டம், தே.புதுப்பேட்டையில் வளர்க்கப்பட்டார். தொடக்கக் கல்வியைப்
புதுப்பேட்டையிலும், புதுப்பூலாமேட்டிலும் முடித்து, சிதம்பரம் இராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்புவரை
பயின்றார். பின்பு, 1963-இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வரலாற்றில் இளங்கலைப் பட்டம்
முடித்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் “தொன்மை வரலாறு மற்றும் தொல்லியல்” பாடத்தில் முதுகலைப் பட்டத்தை 1965- இல் பெற்றார். இரண்டாண்டு காலம் அதே பல்கலைக் கழகத்தில் ஆய்வு மாணவராகப்
பயின்ற பின்னர், 1967-இல் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் கல்வெட்டாளராகப் பணியில்
சேர்ந்தார்.
வட்டெழுத்தைப் படிப்பதில் வல்லவர்
கல்வெட்டாய்வாளராகப் பணிபுரிகையில் கன்னியாகுமரி மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம் ஆகியவற்றில் கல்வெட்டுகளை ஆய்வு செய்து பல புதிய கோயிற் கல்வெட்டுகளையும், நடுகல் கல்வெட்டுகளையும் கண்டுபிடித்தார். இவர் கண்டறிந்த பல வட்டெழுத்துக்
கல்வெட்டுகளைப் படித்து, ‘வட்டெழுத்தைப் பயில்வதில் வல்லவர்’ என்ற பாராட்டையும் பெற்றார்.
செப்புப் பட்டயங்கள், கல்வெட்டுகள், சிற்பங்கள்
கண்டுபிடித்தார்
1974 - இல் பதிவு அலுவலராகப் பதவி உயர்வு பெற்று தஞ்சையிலும், சென்னையிலும் பணியாற்றியபோது, திருத்தணிக்கு அருகிலுள்ள வேலஞ்சேரியில், பல்லவ மன்னன் அபராஜிதன், சோழ மன்னன் முதலாம் பராந்தகன் காலத்திய இரு அரிய செப்புப் பட்டயங்களைக்
கண்டறிந்து துறைக்குக் கைப்பற்றினார். சென்னையில் தனியார் ஒருவரிடம் இருந்த
மராத்திய மன்னர் சரபோஜியின் திருவுருவச் சிலையையும், இராயப்பேட்டையில் ஒரு புற்றுக் கோயிலுக்கருகில் இருந்த பௌத்த புடைச்
சிற்பத்தையும், எல்லிஸ் துரை, கிணறுகள் அமைத்ததைத் தெரிவிக்கும் கல்வெட்டையும், காரனெட் நிறுவனத்தார் சிற்பக் கிடங்கில் இருந்த வட்டெழுத்துக் கல்வெட்டுடன்
கூடிய பல்லவர் காலத் துர்க்கைச் சிலையொன்றையும் கண்டுபிடித்துத் துறைமூலம்
வெளியுலகுக்குத் தெரியப்படுத்தினார்.
இராசராசனின் ஆயிரமாவது முடிசூட்டு விழா
நடத்தினார்
1981-இல் துணை இயக்குநராகப் பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து
கொண்டிருக்கையில், இயக்குநர் பொறுப்பை (Director incharge 1983- இல் ஏற்று, தஞ்சாவூரில் 1984-இல் சோழ மாமன்னன் முதலாம்
இராசராசனின் ஆயிரமாவது முடிசூட்டு விழாவை, அந்நாள் மாண்புமிகு தமிழக முதல்வர்
புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். மற்றும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திருமதி
இந்திராகாந்தி ஆகியோரைக் கொண்டு சிறப்பாக நடத்தி முடித்தார்.
இயக்குநராக நியமனம் பெற்ற பின்னர்
செய்து முடித்த அரும்பணிகள்
1989-இல் துறையின் இயக்குநராகப் பதவி உயர்வு பெற்று பணியாற்றுகையில் பல நில
அகழாய்வுகள் நடத்தியும், ஆங்காங்கே அகழ் வைப்பகங்களை நிறுவியும் தமிழக வரலாற்றுக்குப் புத்தொளி
ஏற்படுத்தினார். இவர் காலத்தில் நிகழ்ந்த அகழாய்வுகளில் அழகன்குளம் நில
அகழாய்வும், பூம்புகார் நில அகழாய்வும் மற்றும் கடல் அகழாய்வும்
குறிப்பிடத்தக்கவைகளாகும். இவர் ஏற்படுத்திய அகழ் வைப்பங்களில் தஞ்சாவூர் முதலாம்
இராசராசன் அகழ் வைப்பகம், பூம்புகார் ஆழ்கடல் தொல்லியல் அகழ் வைப்பகம் ஆகியவை முக்கியமானவையாகும்.
மரபுச் சின்னங்கள்
பாதுகாத்தல்
1995-இல் அந்நாள் தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்
தலைமையில், தஞ்சையில் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டின் போது, தஞ்சாவூர் மராத்திய அரண்மனையில் தர்பார் மண்டபம், மணிக் கோபுரம், ஆயுதக் கோபுரம், சார்ஜா மாடி ஆகியவற்றையும்; சரபேந்திரராசன் பட்டினம் (மனோரா) உப்பரிகை, மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை, இராமநாதபுரம், இராமலிங்க விலாசம் மற்றும் அங்குள்ள ஓவியங்கள், தரங்கம்பாடி டேனிசு கோட்டை ஆகியவற்றை அவற்றின் பழமைத் தன்மை கெடாமல்
பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வெற்றிகரமாக முடித்தார்.
ஓலைச்சுவடி நூல் நிலைய நூல் வெளியீடு மற்றும்
மேம்பாடு
சென்னை அரசு கீழ்த்திசை ஓலைச் சுவடி நூல் நிலையத்தில் 51க்கு மேற்பட்ட சுவடிகளை நூல்களாக அச்சாக்கி வெளியிட்டார். மேலும்,
சுவடிகள் வைத்துப் பாதுகாக்கும் கூடத்துக்குக் குளிர்சாதன வசதி
செய்தார்.
கோடைக் காலக் கல்வெட்டுப்
பயிற்சி
கோடைக் காலக் கல்வெட்டுப் பயிற்சியையும், ஓராண்டு காலக் கல்வெட்டுப் பட்டய வகுப்புப் பயிற்சியையும் மீண்டும்
துறையில் தொடங்கி ஆண்டுதோறும் நடத்தினார். இவர் காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பல
அரிய தொல்பொருள்கள் இவராலும், துறையின் பிற அலுவலர்களாலும் கண்டுபிடிக்கப் பெற்று வெளியுலகிற்குத்
தெரிவிக்கப்பட்டன.
திரைப்பட வெளியீடு
தமிழகத்தின் நாகரிகச் சிறப்பு குறித்த ‘உங்கள் பெருமையை உணர்வீர்’ என்னும் திரைப்படம் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும், துறையின் செயல்பாடுகள் குறித்த ‘வீடியோ’ படம் தமிழிலும் தயாரித்தார்.
பூம்புகார் கடலகழாய்வு
இவர் காலத்தில் நிகழ்ந்த
பூம்புகார் கடலகழாய்வு மூலம் கடற்கரையிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில்
கடலுக்கடியில் 21
மீட்டர் ஆழத்தில் ஐந்து கட்டடப் பகுதிகள் இருப்பதையும், பழைய காவிரி ஆற்றுப் போக்கு
கடலுக்கடியில் தெரிவதையும், சின்ன வானகிரிக்கு எதிர்த்திசையில் நாலரை கி.மீட்டர் தொலைவில்
கடலுக்கடியில் 19
மீட்டர் ஆழத்தில் தரை தட்டிச் சிதைந்த, கி.பி. 18-ஆம் நூற்றாண்டுக் கப்பல் ஒன்று
புதைந்து கிடப்பதையும், கடற்கரையிலிருந்து 200 மீட்டர் தொலைவில், ஏழு மீட்டர் ஆழத்தில் கருங்கல் கட்டடங்கள் சில புதைந்திருப்பதையும்,
கரையின் ஓரமாக அலைகள் மோதும்
இடத்தில் கடலுக்கடியில் சில செங்கற் கட்டடங்கள் அழிந்திருப்பதையும், சின்னமேட்டுக்கு எதிர்த் திசையில்
கடலிலிருந்து ஒரு புத்தர் சிற்பத்தையும் கண்டறிந்து வெளியுலகுக்குத்
தெரிவித்தார்.
கருத்தரங்குகள் நடத்தப்
பெற்றமை
பொதுமக்களிடையே மரபுச் சின்னங்கள் பாதுகாப்புப் பற்றிய விழிப்புணர்வை
ஏற்படுத்துவதற்காக, மாவட்டந்தோறும் வரலாற்றுக் கருத்தரங்குகள் நடத்தவும், அதையட்டி காட்சிகள் அமைக்கவும் ஏற்பாடு செய்தார். ஆழ்கடல் அகழாய்வுக்
கருத்தரங்குகள் சென்னையிலும், பூம்புகாரிலும் நடத்தினார். அகில உலக ஆழ்கடல் அகழாய்வுக் கருத்தரங்கினைச்
சென்னையில் நடத்தினார். இக்கருத்தரங்கைத் தமிழக ஆளுநர் மேதகு பாத்திமா பீவி அவர்கள்
தொடங்கி வைத்தார்கள். இக்கருத்தரங்கில் ஆஸ்திரேலியா, மலேசியா, இசுரேல், இங்கிலாந்து, இலங்கை ஆகிய வெளிநாடுகளைச் சேர்ந்த பேராளர்களும், இந்திய நாட்டுப் பேராளர்களுமாக 70க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்துகொண்டு சிறந்த ஆய்வுக் கட்டுரைகளைப்
படித்தளித்தனர். அக்கட்டுரைகளின் சுருக்கம் அச்சாக்கப் பெற்றுக் கருத்தரங்கம்
நடைபெற்றபோதே, பேராளர்களுக்கு வழங்கப்பெற்றது.
வெளிநாடுகளுக்குச் சென்று பன்னாட்டுக்
கருத்தரங்குகளில் பங்கு பெற்றமை
இந்தியாவில் நடைபெற்ற கல்வெட்டு, நாணயவியல், தொல்லியல், இடம் பெயர் வரலாறு சம்பந்தமான தேசிய கருத்தரங்குகளில் பங்கு பெற்றுச்
சிறந்த கட்டுரைகளைப் படித்தளித்ததோடு, சென்னையில் 1992-இல் நடைபெற்ற பன்னாட்டுப் பௌத்த மதக் கருத்தரங்கு மற்றும்
1990-இல் நடைபெற்ற பன்னாட்டுப் பௌத்த மதக் கருத்தரங்கு, 1981-இல் மதுரையில், 1995-இல் தஞ்சையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டுக் கருத்தரங்குகள்,
புதுதில்லியில் 1994-இல் நடைபெற்ற பன்னாட்டு மூன்றாம் தொல்லியல் கருத்தரங்கு, ஆஸ்திரேலியாவில் 1997-இல் நடைபெற்ற பன்னாட்டு ஆழ்கடலாய்வுக் கருத்தரங்கு, யாழ்ப்பாணத்தில் 1976- இல் நடைபெற்ற தெற்காசியக் கல்வெட்டுக் கருத்தரங்கு ஆகியவற்றில் இவர்
கலந்துகொண்டு கருத்தரங்கு சார்பான சிறந்த ஆய்வுக் கட்டுரைகளைப்
படித்தளித்தார்.
வெளிநாட்டுப்
பயணம்
1976-இல் இலங்கைக்கும், 1986-இல் அந்தமான் தீவுக்கும், 1997&இல் சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கும், கல்வி சம்பந்தமான பயணம் மேற்கொண்டார்.
வானொலி, தொலைக்காட்சி உரை
அகில இந்திய வானொலி மூலமும், தொலைக்காட்சி மூலமும் தமிழகத் தொல்லியல் துறையின் செயல்பாடுகள்,
மரபுச் செல்வங்களைப் பாதுகாத்தல், அகழாய்வில் வெளிக் கொணரப்பட்ட முக்கியத் தொல்பொருள்கள் ஆகியவை பற்றி பல உரை
நிகழ்த்தியுள்ளார்.
பல்கலைக் கழகப் பாடத் திட்டக் குழு
உறுப்பினர்
தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் பாடத் திட்டக் குழுக்களில்
உறுப்பினராகவும், சில சமயங்களில் தலைவராகவும் இருந்து பணியாற்றி
உள்ளார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆளவைக் குழு
உறுப்பினர்
2004 டிசம்பர் திங்கள் 6-ஆம் நாள் முதல் மூன்று ஆண்டு காலத்துக்குச் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் ஆளவைக் குழு உறுப்பினராகத் தமிழக
மேதகு ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா அவர்களால் நியமனம்
செய்யப்பட்டார்.
அரசு உயர்மட்டக் குழுக்களில்
உறுப்பினர்
தமிழ்நாடு அரசு தமிழ்நாடு வரலாறு எழுதும் உயர்மட்டக் குழுவில் ஐந்து முறை
உறுப்பினராக இருந்து பல்லவ & பாண்டியர் வரலாறு, சோழப் பெருவேந்தர் வரலாறு, தமிழக வரலாறு (ஒரே தொகுதி) ஆகிய நூல்களுக்குச் சில பகுதிகள் எழுதியும்
உதவியுள்ளார்.
தமிழ்நாடு அரசு ஆலய நிருவாக உயர்மட்டக் குழு, தமிழ் ஆட்சிமொழி உயர்மட்டக்குழு போன்றவற்றிலும் உறுப்பினராகச்
செயல்பட்டிருக்கிறார். நடுவணரசு தமிழ்ச் செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் சான்றாதார
வல்லுநராகவும் பணியாற்றியிருக்கிறார்.
அறிஞர் நடன.காசிநாதன்
பெற்ற விருதுகள்
முனைவர் ந. சஞ்சீவி & காசுநாதன்; ‘கண்ணியம்’ இதழ் & கல்வெட்டுச் செம்மல்;
முனைவர் ச. மெய்யப்பனார்; முனைவர் ஒளவை நடராசனார் & தொல்லியல் அறிஞர்;
பத்மபூஷன் வை. கணபதிஸ்தபதி & கல்வெட்டுச் சொல்லோவியர்;
தாமரைத்திரு. ஐ. மகாதேவன் & கல்வெட்டறிஞர்; முனைவர் இரா. நாகசாமி & வட்டெழுத்தில் வல்லவர் என்று இவரைப்
பாராட்டியுள்ளனர்.
தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனம் என்னும் அமைப்பை
அமைத்தல்
அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு ‘தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனம்’ என்னும் ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதில் சில ஆய்வு அறிஞர்களை இணைத்துக்கொண்டு
பல அரிய தொல்பொருள்களைக் கண்டுபிடிப்பதற்கு உதவியுள்ளார். மேலும் ‘தொண்டை மண்டல வரலாற்றுக் கருத்தரங்குகளை’ இவ்வமைப்பின் மூலம் இதுவரை பன்னிரண்டு
நடத்தியுள்ளார்.
முத்தரையர் சங்கம்
பாராட்டு
‘முத்தரையர்’ என்ற நூலை எழுதியதற்காக
‘முத்தரையர்
சங்கம்’ புதுக்கோட்டையிலும், முத்தரையர் வரலாற்றாய்வு
மையம் திருச்சியிலும் இவரை மிகைப்படப் பாராட்டியது. 2007&இல் திருச்சியல் இவருக்கு மலர் மகுடம் சூட்டி
மகிழ்ந்தது.
திருப்பூர்த் தமிழ்ச் சங்கம்
பாராட்டு
இவரது நூலான ‘தமிழகம் அரப்பன் நாகரிகத் தாயகம்’ என்னும் நூலுக்குப் பரிசளித்துப் பாராட்டியது.
2006-இல் இவரது நூலான “தமிழகச் சிற்பிகள் வரலாறு” என்னும் நூலை வெளியிட்டு, இவருக்கு ரூ. 5,000 பண முடிப்பைச் சிற்பச் சித்தர் பத்மபூஷன் வை. கணபதி ஸ்தபதி அவர்கள்
வழங்கிப் பாராட்டினார்.
வரலாற்றுப்
பேரறிஞர்
2009-இல், திருவையாறு, “தமிழய்யா கல்விக் கழகம்” நாகப்பட்டினத்தில் நடத்தியக் கருத்தரங்கில், இவருக்குச் சிறந்த வரலாற்றுப் பேரறிஞருக்கான “கரிகாற் சோழன்” விருதை வழங்கிச் சிறப்பித்தது.
நூல்கள்:
இவர் தமிழிலும், ஆங்கில மொழியிலும் தொண்ணூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிச்
சிறப்பித்திருக்கிறார்.
குடும்பம்
இவருக்குத் திலகவல்லி என்ற இல்லத்தரசியாரும், கதிரவன், அருண்மொழி, ஆதித்யன் என்ற மகன்களும், க.ஜெயந்தி, அ. இரமா, ஆ. இரம்யா ஆகிய மருமகள்களும், க. அரிணி, க. புனிதன், அ.ஈரா, ஆ. சேந்தன் ஆகிய பெயரப்பிள்ளைகளும் உள்ளனர்.
தொல்லியறிஞர் நடன. காசிநாதன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் ‘கண்ணியம்’ இதழ் ‘கண்ணியப் பெருமக்கள்’ வரிசையில் வெளியிட்டு “வரலாற்று அறிஞர்” என்று சிறப்பித்து மகிழ்ந்தது.
தொல்லியலறிஞர் நடன. காசிநாதன் அவர்கள்
எழுதிய
ENGLISH
BOOKS
S.No. Name
of the Book Author / Editor, Year
1. Hero
Stones in Tamil Nadu Author
1978
2.
Functions of the Department of
Archaeology Author
1989
3.
Under Sea Exploration off the shore of
Pumpuhar Author
1991
4. The
Metropolis of the Medieval Cholas -
(First Edition) Author
1992
5.
Seminar on Marine Archaeology Author
1992
6. Art
panorama of the Tamils Joint Author
1993
7.
Padavedu Excavation Author
1993
8.
Alagankulam - A Preliminary Report of
Excavation General Author
1994
9.
Collected papers (Studies in Tamil Culture) Author
1994
10.
Achievements of Archaeology Department Author
1994
11.
Ancient Industries of Tamil Nadu Author
1994
12.
Cultural Heritage of Tamil Nadu Author
1997
13.
Ancient Ports of Tamil Nadu and their
trade contact with Foreign Countries Author
1997
14.
Tirukkoyilur Excavation Joint Author
1998
15. The
Metropolis of the Medieval Cholas
(Second Edition) Author
1998
16.
Tamils Heritage
Author 2000
17. Ancient Port Towns and their busy
Trade
Activities, Capital Cities and
Trade
Contact (Under Print).
Author
18.
Hero-Stones, Pallava Period (Under Print) , Author
19.
Cultural Heritage of the Tamils. June 2010
20.கல்வெட்டின் கதை, ஆசிரியர்,1968
21.கன்னியாகுமரிக் கல்வெட்டுகள் (முதல்தொகுதி), பதிப்பாசிரியர்,1972
22.கன்னியாகுமரிக்கல்வெட்டுகள்இரண்டாம்தொகுதி),பதிப்பாசிரியர், 1972
23.கன்னியாகுமரிக்கல்வெட்டுகள் (மூன்றாம் தொகுதி), பதிப்பாசிரியர், 1972
24.கல்வெட்டியல், இணை ஆசிரியர்,
1973
25.கல்வெட்டு ஓர் அறிமுகம், இணை ஆசிரியர், 1973
26.காலச்
சுவடுகள், ஆசிரியர்,
1973
27.ஆய்வுக்
கொத்து, இணை ஆசிரியர்,1973
28.பூம்புகார், இணை ஆசிரியர், 1973
29.மனோரா, ஆசிரியர்,
1975
30.ஆய்வுத்தேன், இணை ஆசிரியர்,
1976
31.முத்தரையர் (முதற்
பதிப்பு),ஆசிரியர், 1976
32.முத்தரையர் (இரண்டாம் பதிப்பு), ஆசிரியர், 1994
33.தொல்லியல் கட்டுரைகள், ஆசிரியர், 1977
34.களப்பிரர், ஆசிரியர்,
1981
35.தொல்லியல் கருத்தரங்கம், பகுதி - 11 பொதுப்
பதிப்பாசிரியர்,
1983
36.இராசராசேச்சுரம், ஆசிரியர், 1984
37.அருண்மொழி, பதிப்பாசிரியர், 1988
38.கல்லெழுத்துக்கலை,(தமிழ்நாடுஅரசு பரிசு பெற்றது),ஆசிரியர்,1989
39.தமிழக
வரலாற்றுச் சின்னங்கள், ஆசிரியர், 1989
40.கண்டி
மன்னர் கல்லறை,
ஆசிரியர்,
1989
41.வளரும்
தமிழகத்தில் மலரும், மாவட்டத் தலைநகர் நாகப்பட்டினம், ஆசிரியர், 1991
42.திருக்கோடிகா கல்வெட்டுகள், பொதுப் பதிப்பாசிரியர், 1992
43.கும்பகோணமும் மகாமகப் பெருவிழாவும், இணை ஆசிரியர், 1992
44.தமிழகத்தில் தொல்மாந்தர் பண்பாடு, ஆசிரியர், 1993
45.தமிழ்க்
கீர்த்தனைகள், பொதுப்பதிப்பாசிரியர், 1993
46.திருக்குறள் பழைய உரை, பொதுப்பதிப்பாசிரியர், 1993
47.திருவீழிமிழலைக் கல்வெட்டுகள், பொதுப் பதிப்பாசிரியர், 1994
48.தமிழர்
நாகரிகம்,பதிப்பாசிரியர்,1996
49.தமிழர் காசு
இயல்,(முதல் பதிப்பு),ஆசிரியர் 1995
50.தமிழர் காசு
இயல் (இரண்டாம் பதிப்பு),ஆசிரியர், 2003
51.பெருமுக்கல் கல்வெட்டுகள், இணைத் தொகுப்பாளர், 1998
52.தொல்லியல்துறையின், அரியகண்டுபிடிப்புகள், இணைஆசிரியர்,1998
53.பூம்புகாரும், கடல்
அகழாய்வும்,ஆசிரியர் ,
1999
54.அரசு
கீழ்த்திசை ஓலைச்சுவடி நூலக வெளியீடுகள் (மொத்தம் 51) பொதுப்
பதிப்பாசிரியர்,
1991-1998
55.தமிழர் தெய்வங்கள், ஆசிரியர், 2003
56.வன்னியர், ஆசிரியர், 2001
57.தடயம்,
இணை ஆசிரியர், 2000
58.வரலாற்றுத் தடயம், ஆசிரியர், 2002
59.தொன்மைத் தடயம்,இணை ஆசிரியர், 2003
60.மாமல்லபுரம், ஆசிரியர், 2000
61.தமிழ்
எழுத்தியல் வரலாறு, இணை ஆசிரியர், 2004
62.சோழ
வேந்தர் பரம்பரை
பிச்சாவரம் வன்னியப் பாளையக்காரர் வரலாறு, (முதல்
பதிப்பு) ஆசிரியர், 2005
63.பண்டைத்
தடயம், இணை ஆசிரியர், 2005
64.வன்னியர் மாட்சி, ஆசிரியர், 2005
65.சமணத்
தடயங்கள், இணை ஆசிரியர், 2005
66.தமிழகச்
சிற்பிகள் வரலாறு, ஆசிரியர், 2006
67.வன்னியர் வரலாறு, முதல்தொகுதி,பதிப்பாசிரியர், 2007
68.தமிழகம்
அரப்பன் நாகரிகத் தாயகம் (திருப்பூர்த் தமிழ்ச்
சங்கம் பரிசு பெற்றது), ஆசிரியர், 2006
69.வேலூர் மாவட்டத் தடயங்கள், தொகுதி 1, இணை ஆசிரியர்;
2008
70.வேலூர் மாவட்டத் தடயங்கள், தொகுதி 2, இணைஆசிரியர், 2008
71பெரம்பலூர் மாவட்டத் தடயங்கள், இணை ஆசிரியர்,
2008
72.வன்னியர் (இரண்டாம் பதிப்பு), ஆசிரியர், 2008
73.தமிழகவரலாற்றுவரிசை (களப்பிரர்காலத் தமிழகம்), ஆசிரியர், 2008
74.கடலூர் மாவட்டத் தடயங்கள் தொகுதி 1, இணை ஆசிரியர், 2009
75.கடலூர் மாவட்டத் தடயங்கள், தொகுதி 2, இணை ஆசிரியர், 2009
76.தொன்மைத் தமிழும் தொன்மைத்தமிழரும், ஆசிரியர், 2009
77.வன்னியர் வரலாறு,இரண்டாம்தொகுதி, பகுதி1, பதிப்பாசிரியர், 2009
78.வன்னியர் வரலாறு,இரண்டாம்தொகுதி,பகுதி2
, பதிப்பாசிரியர்,
2009
79. இராசராசேச்சுரம் (இரண்டாம் பதிப்பு),ஆசிரியர் ,டிசம்பர், 1994
80.கல்வெட்டு ஓர் அறிமுகம் (இரண்டாம் பதிப்பு), இணை ஆசிரியர், 2008
81.சோழவேந்தர் பரம்பரைவன்னியப்பாளையக்காரர் வரலாறு,
(இரண்டாம்பதிப்பு) ஆசிரியர், ஆகஸ்ட், 2009
82.கல்லெழுத்துக் கலை, (இரண்டாம் பதிப்பு),ஆசிரியர், டிசம்பர்,2009
83. தமிழர் பண்பாட்டுச் சிதறல்கள், ஆசிரியர், ஜுன் 2010
84.நெல்லை
அதன் வரலாற்றெல்லை, ஆசிரியர், செப்டம்பா;
2010
85.காஞ்சிபுரம் மாவட்டத் தடயங்கள், இணை ஆசிரியர், செப்டம்பா; 2010
86. வன்னியர் மாட்சி (இரண்டாம் பதிப்பு), ஆசிரியர், ஆகஸ்ட் 2010
87.இராசராசேச்சுரம் (மூன்றாம் பதிப்பு), ஆசிரியர், செப்டம்பா; 2010
88.தென்
பகுதிப் பாளையக்காரர்கள் வரலாறு, ஆசிரியர், ஏப்ரல் 2011
89. தமிழக
வரலாற்றுத் தடயங்கள், ஆசிரியர், ஜுலை 2011
90.சோழர் செப்பேடுகள், ஆசிரியர், ஜுலை 2011
91.சோழர்
செப்பேடுகள், ஆசிரியர், 2012
92.காஞ்சிபுரம் மாவட்டக் கலைகள், தொகுதி 1, இணை ஆசிரியர், 2012
முனைவர் மு.இளங்கோவன் எழுதியது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக