வையம்பட்டி
அணியாப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில்
திருவிழாவில் உயிரோடு இருப்பவருக்கு இறுதிச்சடங்கு நடத்தி பாடையில் சுமந்து
வந்து கோவில் முன்பு ஈஸ்வரன் உயிர் தரும் வினோத நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
திருவிழா தொடங்கியது
மணப்பாறையை அடுத்த அணியாப்பூர் கோட்டை
மாரியம்மன் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடைபெறுவது வழக்கம்.
15 நாள் நடக்கும் இந்த திருவிழா நேற்று இரவு தொடங்கியது. கோவிலில் கிராம
மக்கள் சிறப்பு வழிபாடு நடத்திய பின் வீரப்பூர் ஜமீன்தாரும், கன்னிமாரம்மன்
கோவில் பரம்பரை அறங்காவலருமான கிருஷ்ணவிஜயனை கோவிலுக்கு அழைத்து வந்தனர்.
அதன் பின் கோவிலில் இருந்து சண்முகம் முத்தரையர் மற்றும் கிராமமக்கள் சாமி
நகை பெட்டியுடன் பாப்புக்காளை நாடாரை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு வந்தனர்.
நள்ளிரவு அணியாப்பூர் குளக்கரை அருகில்
இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் மாரியம்மனும், கரகமும் கோவிலுக்கு
அழைத்து வரப்பட்டு சிறப்பு வழிபாடு விடிய, விடிய நடைபெற்றது. இன்று
(திங்கட்கிழமை) காலை கோட்டை மாரியம்மன் கோவில் முன்பு வீரப்பூர் ஜமீன்தார்
கிருஷ்ணவிஜயன் சார்பில் முதல் ஆடு வெட்டிய பின்பு தொடர்ந்து ஆடு, கோழி
வெட்டுதல், பால்குடம், அக்னிசட்டி எடுத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட
நிகழ்ச்சிகள் மாலை வரை நடக்கிறது.
வினோத நிகழ்ச்சி
நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை முளைப்பாரி
கொண்டு வருகின்றனர். அதை தொடர்ந்து அணியாப்பூர் மற்றும் சுற்றுவட்டார
கிராமங்களில் இருந்து ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் பல்வேறு வேடம் அணிந்து
வண்டிவேடம் வருவார்கள். இதன் பின்னர் அணியாப்பூர் தங்கவேல் முத்துராஜா
இறந்து விட்டதாகவும் மாலையில் இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் காரில்
ஒலிபெருக்கி வைத்து கிராமங்களில் அறிவித்துவிட்டு அவருக்கு இறுதிச்சடங்கு
செய்து உடலை பாடையில் வைத்து சுமந்து வருகின்றனர்.
கோவில் எதிரில் சற்று தூரத்தில் வெட்டி
வைக்கப்பட்டுள்ள குழிக்கு அருகில் உடலை வைத்ததும் கோவிலில் இருந்து ஈஸ்வரன்
வந்து தங்கவேல் உடல் மீதும் தீர்த்தம் போட்டதும் தங்கவேல் உயிருடன்
எழுந்து விடும் வினோத நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் வெட்டி வைத்த குழியில்
கோழியை வெட்டிப்போட்டு மூடி விட்டு தங்கவேலை கோவிலுக்கு அழைத்து வந்து
சிறப்பு வழிபாடு நடத்த உள்ளனர்.
படுகளம்
இரவில் கோவில் முன்பு உள்ள கமுகு மரத்தில்
பக்தர் ஏறி நின்றதும் கோவில் முன்பு பொரி–கடலை, முறுக்கு, ரொட்டி உள்ளிட்ட
படையல் வைப்பார்கள். அதன் அருகே ஒருவர் முக்காடு போட்டு கையில் விளக்குடன்
அமர்ந்திருக்க, கோவில் முன்பு 4 வாலிபர்களை படுக்க வைத்து இறந்தவர்கள்
போன்று துணியால் உடலை இறுதிச்சடங்கு செய்யப்பட்டு கோவிலை 3 முறை
சுற்றிவந்து ஆடுவெட்டி வாலிபர்கள் நெற்றியில் ரத்தப்பொட்டு வைத்து உயிர்பெற
வைக்கும் படுகளம் என்ற வினோத நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
News Source : DINATHANTHI
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக