வெள்ளி, 13 செப்டம்பர், 2013

போலி வேலைவாய்ப்பு நிறுவனங்கள்… வேலை தேடுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை…



உண்ன உணவு, இருக்க இருப்பிடம், உடுத்த உடை என அடிப்படை வசதிகளையும் மனிதனின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்துவது அவர்களது வருமானம் தரக் கூடிய வேலை தான்.
இன்றைய நவீன உலகில் பள்ளி படிக்கும் காலத்திலே மாணவ, மாணவிகள் எதிர் காலத்தில் தான் நல்ல மருத்துவர் ஆக வேண்டும், நல்ல பொறியாளர் ஆக வேண்டும் என தனக்கான துறையை முடிவு செய்து கொண்டு கல்லூரியில் கால் பதிக்கும் போது தான் படிக்கும் கல்லூரி மூலமாகவே வேலையும் பெற்றுவிட வேண்டும் என்று களம் இறங்குபவர்களில் சிலர் ஏனோ சில காரணத்தால் கல்லூரி முடித்துவிட்டு தான் படித்த படிப்புக்கு ஏற்ற வேலையும், தான் எதிர்பார்த்த வேலையும் கிடைக்காமல் செய்வதறியாது தடுமாறுகிறார்கள்...
இதை பயன்படுத்திக் கொண்டு சில போலி நிறுவனங்கள் எங்களிடம் வருவோர்க்கு 100சதவீத வேலை என்று கவர்ச்சிகரமான விளம்பரத்தை கொடுத்து வேலை தேடுபவர்களை தங்களது அலுவலகத்திற்கே வரவழைத்து அனுமதிக் கட்டணம், நுழைவுக் கட்டணம் என கூறி 100ரூபாய் முதல் பல லட்சம் ரூபாய்களை பெற்றுக் கொண்டு இறுதியில் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்காமல் பணத்தை பறித்துக் கொண்டு தங்களை தொடர்பு கொள்ள முடியாத இடத்திற்கு பறந்துவிடுகிறார்கள்.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக வேலையும் இன்றி தனது பணத்தையும் இழந்து தவிக்கும் இன்றைய இளையதலைமுறை அதிகமே.
போலி வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பற்றிய எச்சரிக்கையாக , வேலை தேடுபவர்களுக்கான ஒரு விழிப்புணர்வு கட்டுரை.
வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பற்றிய கருத்துக்களை காம்கேர் கே. புவனேஸ்வரி இங்கே பதிவு செய்துள்ளார்.
வேலைவாய்ப்பு நிறுவனங்கள்  உருவானது எப்படி...
பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் காலூன்றத் தொடங்கிய காலத்தில் தான் வேலை வாய்ப்பு நிறுவனங்களும் பெருகத் தொடங்கின. வேலை தேடுபவர்களுக்கும், வேலை கொடுப்பவர்களுக்கும் பாலமாக செயல்படுவதே இவர்கள் பணி. இந்நிறுவனங்கள் கன்சல்டன்சிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு நிறுவனங்கள் அரசிடம் முறையான அனுமதி பெறுகின்றதா?
வேலை வாய்ப்பு நிறுவனங்கள் அரசு பதிவுபெற்றதாக இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான நிறுவனங்கள் அரசு பதிவு பெற்றதாக இருப்பதில்லை.
இளைஞர்கள் வேலைவாய்ப்பு நிறுவனம் தேடிவரக்காரணம் என்ன?
உதாரணத்துக்கு, காம்பஸ் இண்டர்வியூ இல்லாத கல்லூரிகளில் படிக்கின்ற மாணவர்கள், கிராமப்புறங்களிலும், சிறு நகரங்களிலும் படித்து முடித்த மாணவர்கள், வீட்டுச் சூழல் காரணமாக 2, 3 வருடங்கள் தாங்கள் படித்த படிப்புக்கு ஓத்து வராத வேலையை செய்தவர்கள் இது போன்றவர்களுக்கு, நேரடியாக வேலை தேடுவதை விட வேலை வாய்ப்பு நிறுவனங்கள் வாயிலாக வேலை கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளனஆனால், வேலை வாய்ப்பு நிறுவனங்களை அணுகும் போது கவனமாக இருக்க வேண்டும்.
படிக்கும் கல்லூரிகளில் அனைவருக்கும் வளாக வேலைவாய்ப்பு முகாம் என்று நிறைய கல்லூரி நிறுவனங்கள் கூறிவருகிறது. அப்படியானால் படிக்கும் காலத்திலே அனேக மாணவ, மாணவிகள் வேலை பெற்றுவிடுகின்றார்களா?
அரியர்ஸ் வைத்திருக்கும் மாணவர்கள், ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறமையில்லாதவர்கள், கல்லூரியில் ஏதேனும் பிரச்சனையில் சிக்கி ப்ளாக் மார்க் வாங்கியவர்கள், தாங்கள் படித்த சப்ஜெக்ட்டில் தெளிவு இல்லாமல் மனப்பாடம் மட்டுமே செய்து மதிப்பெண் பெற்றவர்கள், இவர்கள் மட்டும் தான் காம்பஸ் இண்டர்வியூவில் தேர்வாகாமல் தங்கி விடுகிறார்கள்.

கல்லூரி வளாக வேலைவாய்ப்பு நேர்முக தேர்வில் மாணவர்கள் பலர் தேர்வு செய்யப்படாமல் போக காரணம் என்ன?
காம்பஸ் இன்டர்வியூவில் ஜெயிப்பதற்கு, எழுத்துத் தேர்வு, குழு விவாதம், தொழில்நுட்பத் தேர்வு, எச்.ஆர் இன்டர்வியூ என்று பல நிலைகளைத் தாண்டி வர வேண்டியிருக்கும். இதற்கு ஆங்கிலத்தில் உரையாடுகின்ற திறமை, கணிதத்தில் ஆழ்ந்த புலமை, புரோகிராம் எழுத உதவுகின்ற லாஜிகல் திங்கிங், வித்தியாசமாக சிந்திக்கும் திறனான லேட்ரல் திங்கிங் போன்றவற்றில் அதீத ஈடுபாடு இருக்க வேண்டும். இவற்றுடன் அதிமுக்கியமாக தன்னம்பிக்கை அவசியம் தேவை. இவற்றில் ஏதேனும் ஓரிடத்தில் சறுக்குபவர்களுக்கு காம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைப்பதில்லை.
போலி வேலைவாய்ப்பு நிறுவன அதிபர்களுக்கு இந்திய தண்டனை சட்டம் தண்டனை பெற வழி செய்கிறதா?
நிச்சயமாக சட்டப்படி தண்டனை உண்டு. போலீசில் புகார் தரலாம்.
மென்பொருள் துறை நிறுவனங்கள் மற்றும் வன்பொருள் துறை நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை நேரிடையாக தேர்வு செய்கிறதா? அல்லது வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் நிறுவனம் மூலமாகவே வேலையாட்களை பெற்றுக் கொள்கிறதா?
சாஃப்ட்வேர் மற்றும் வன்பொருள் துறை நிறுவனங்கள் தேவைக்கு ஏற்றவாறு, நேரடியாகவும், கன்சல்டன்சிகள் மூலமாகவும் ஆட்களை தேர்வு செய்கிறார்கள். எம்ப்ளாயி ரெஃபரென்ஸ் எனப்படும் முறையிலும் ஆட்களை தேர்ந்தெடுக்கிறார்கள்.
வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் ஏஜென்டுகளை பயன்படுத்துவதால் பெரிய நிறுவனத்துக்கு என்ன லாபம்?
பன்னாட்டு நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களை தேர்ந்தெடுக்கும் போது, அவர்களே நேரடியாக அவ்வேலையை செய்ய, அனைத்து மீடியாக்களிலும் விளம்பரம் கொடுக்க வேண்டும், டெக்னிகல் இண்டர்வியூ, ஆப்டிடியூட் டெஸ்ட், ஹெச்.ஆர் இண்டர்வியூ, பர்சனல் இண்டர்வியூ என்று பல்வேறு கோணங்களில் பரிசோதித்து ஆட்களை தேர்ந்தெடுக்க தேவையான முன்அனுபவம் உள்ள ஸ்டாஃப்களை முதலில் அப்பாயிண்ட்மெண்ட் செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறில்லாமல், நேரத்தையும், பணத்தையும் சேமித்து தேவையான ஆட்களை தேவையான நேரத்தில் உடனுக்குடன் பெற்றுக் கொள்ளவே பன்னாட்டு நிறுவனங்கள், வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் கன்சல்டன்சிகளைப் பயன்படுத்துகிறது.
இதே போல், போலி வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பற்றிய கருத்தை ஜெகதீசன்.எல் ( கிரி டெக்னாலஜி) அவர்கள் கூறும்போது, எங்களைப் போன்று வளர்ந்து வரும் நிறுவனங்களில் பெரும்பாலும் எங்களுக்கு தேவையான ஆட்களை நாங்கள் நேரிடையாக தேர்வு செய்து கொள்கிறாம்.
ஆனால், பெரும்பாலும் இன்றைய இளைய தலைமுறையினர் கல்லூரி படிப்பை முடித்ததும் மிகப் பெரிய நிறுவனங்களில் மட்டுமே தாங்கள் பணியில் சேர வேண்டும் என விரும்புகிறார்கள்.
இவர்களின் மனநிலை அறிந்து சில ஏமாற்று பேர்வழிகள் எம்.என்.சி நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி வலை விரிக்கும் போது தான் சிலர் அதில் விழுந்து தனது பணம், நேரத்தை இழந்து தவிக்கிறார்கள்.
நாம் பெரும்பாலும் ஊடக செய்திகளில் பல ஆயிரம், இலட்சம் இழந்தவர்களை மட்டும் தான் படிக்கின்றோம். ஆனால், 100 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை அன்றாடம் போலி வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு சென்று பதிவு கட்டணம் என்ற பேரிலும் தங்களது பணத்தை இழந்து வரும் அவலம் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.

பொதுவாக படிக்கும் காலத்தில் படிப்புக்கென்று பணத்தை செலவு செய்துவிட்டு தங்களது எதிர்கால கனவுடனும், குடும்பக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடனும் தனக்கேற்ற வேலையை நல்ல ஊதியத்தில் தேடுகின்றனர்.
இந்நிலையில் வேலை கிடைக்காமல் ஏதோ சில காரணங்களால் தாமதாகும் போதுதான் வாழ்க்கையில் விரக்தியும், மன அழுத்தமும் ஏற்பட்டு தன்னம்பிக்கையை அதிகம் பேர் இழந்து விடுகிறார்கள்.
பெரும்பாலும் சென்னையில் வேலை தேடுபவர்கள் மதுரை, கோவை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தர்மபுரி என வெளிமாவட்டத்தை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இங்கே வேலை தேடும் சரியான முறையும், நல்ல வழிகாட்டுதலும் இங்கே கிடைக்காமல் போவதும் கூட போலி நிறுவனங்களை நம்பி ஏமாறுவதற்கு ஒரு காரணமாக அமைந்து விடுகிறது.
எனவே தனது, பிள்ளைகளின் மன நிலையையும் அறிந்து பெற்றோர்கள், அவர்களது வேலை என்னும் எதிர்காலத்தில் வழிநடத்த வேண்டும். மேலும், இந்த நவீன உலகில் வேலைவாய்ப்பு நிறுவனங்களும், வேலை வாய்ப்புகளும் அதிகமாகவே உள்ளது. ஆனால், வேலைக்கேற்ற தகுதியான ஆட்களை மட்டும் தான் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்கின்றன என்பதை உணர்ந்து வேலைக்கான அனைத்து தகுதியையும் அனைவரும் முதலில் உருவாக்கிக் கொள்ள வேண்டும். சிறிய நிறுவனங்களில் ஊதியக் குறைவு என கருதாமல், தனது அறிவையும், தகுதியையும் வளர்த்துக் கொள்ள சிறிய நிறுவனங்கள் அனைவருக்கும் கிடைக்கப்பெற்ற ஒரு அற்புதமான வாய்ப்பு என்பதை எண்ணி அங்கே தங்களது வேலைக்கான அறிவை வளர்த்துக் கொண்டால் பின்பு, அவர்களின் மிகப்பெரிய கனவு நிறுவனங்களுக்கு சுலபமாக வேலைக்கு செல்ல முடியும் என்பதனை அனைவரும் உணர வேண்டும்.
இன்று எம்.என்.சி என அழைக்கப்படும் பெரிய நிறுவனங்கள் கூட தொடக்கத்தில், சிறிய வகையில் தொடங்கப்பெற்ற நிறுவனங்கள் தான் என்ற உண்மையை அனைவரும் உணர்ந்து, அதற்குரிய தகுதியை அனைவரும் வளர்த்துக் கொண்டால், வேலை உங்களை தேடி வரும். வேலை தேடும் அனைவருக்கும் சிறப்பான எதிர்காலம் அமையும்.
வேலைவாய்ப்பு நிறுவனங்களை அணுகும் போது கவனமாக இருக்க வேண்டிய தகவல்கள்
வேலை வாய்ப்பு நிறுவனங்கள், அரசு அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்
அந்நிறுவனத்துக்கு வெவ்வேறு ஊர்களில் அலுவலகங்கள் இருந்தால் அவற்றின் முகவரிகள், போன் எண்கள், தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள் என்று எல்லா விவரங்களையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
மேலும் வெப்சைட் முகவரி, இமெயில் முகவரி போன்றவற்றையும் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள் அந்த ஊர்களில் இருந்தால், அவர்களை விட்டு விசாரிக்கச் சொல்லலாம் அல்லது நீங்களே போன் செய்து விசாரிக்கலாம்.
பொதுவாக இதுபோன்ற நிறுவன்ங்களில், அங்கு வேலை செய்கின்ற நபர்கள் மட்டுமே உங்களுடன் தொடர்பு கொள்வார்கள். நீங்கள் அந்நிறுவனத்தின் உரிமையாளர் யார் என்பதை அவர்களிடமே கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். முடிந்தால் அவர்கள் போன் எண் மற்றும் இமெயில் ஐடி வாங்கி இமெயில் செய்து உறுதிபடுத்திக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு நிறுவனங்கள் வேலை தேடி வரும் நபர்களிடமும் கட்டணம் வசூலிக்கிறார்கள், வேலை கொடுக்கும் நிறுவனங்களிடமும் கட்டணம் வசூலிக்கிறார்கள்.
உங்களிடம் அக்ரிமெண்ட் போடும் போது, அந்த அக்ரிமெண்டில் உள்ள அனைத்து பாயிண்டுகளையும் ஒரு எழுத்து விடாமல் கவனமாக படித்துப் பார்க்க வேண்டும். புரியவில்லை எனில் என்ன என்று அவர்களிடமே கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
பொதுவாக 1 மாத, 2 மாத சம்பளத்தை கட்டணமாக கேட்பார்கள்வேலைக்கான அப்பாயிண்ட்மெண்ட் கடிதம் கையில் கிடைத்தவுடன் செலுத்த வேண்டியிருக்கும்.எக்காரணம் கொண்டும் வேலை கிடைப்பதற்கு முன் பணத்தை கட்டி விடாதீர்கள்.
ஒரிஜினல் கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் போன்றவற்றை எக்காரணம் கொண்டும் அவர்களிடம் கொடுத்துவிடக் கூடாது.
அந்நிறுவனம் மூலம் வேலை பெற்று சென்றவர்கள் விவரங்கள் கேட்டு அவர்களிடமும் பேசி அவர்கள் அனுபவத்தையும் பெற்றுக் கொள்ளலாம்.
அதே நேரம் அவர்கள் கொடுக்கின்ற தொடர்புகள் உண்மையானதா அல்லது உங்கள் நம்பிக்கையைப் பெறுவதற்காக, அவர்கள் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களாகவே(ஸ்டாஃப்) இருக்கிறார்களா என்பதிலும் கவனம் தேவை.
- தாமரைச் செல்வன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக