திங்கள், 23 டிசம்பர், 2013

"ஜல்லிக்கட்டு" கவிஞர் தாமரைக்கு ஒரு விளக்கம்..

"ஜல்லிக்கட்டு" கவிஞர் தாமரைக்கு ஒரு விளக்கம்..

கவிஞர் தாமரை மீது எனக்கு அளவு கடந்த மரியாதை உண்டு, அது எனது பாரம்பரியத்தை, எங்கள் குல வழக்கத்தை கொண்டாடுவதுவரை அனுமதிக்கலாம், அதை சீர்குலைக்க வழக்கமாக எல்லா முற்போக்குவாதிகளையும் போல முயலும்போது பார்த்துக்கொண்டு ஒதுங்கிப்போவது எங்களால் முடியாதுஆபத்து, ஆபத்து என்றால் எதில் இல்லை ஆபத்து ? மிருகங்கள் மீதான உங்களின் அக்கறை மெய்சிலிர்க்க வைக்கிறது, ஏறுதலுவுதலில் ஒரு காளையை அடக்க அதிகப்பட்சம் ஒதுக்கப்படும் நேரம் என்பது 5 லிருத்து 10 நிமிடங்கள் அந்த கால அளவுக்குள் உங்களுக்கு பொங்கி வரும் மிருகங்களின் மீதான பாசம் அதே காளையையோ, கறவை நின்றுபோன காமதேனுவையோ கொன்று பசியாறும்போது வருவதில்லை...!!

இப்படி சொல்லி சொல்லியே தமிழனின் பாரம்பரியத்தையும், அவனுடைய பண்பாட்டையும் தொலைத்துவிட்டு அடிமை சமூகமாக வாழ்ந்துகொண்டு இருக்கும் நீங்கள், இருக்கும் ஒன்றிரண்டு விசயங்களிளாவது மூக்கை நுழைக்காமல் அதன் போக்கில் விடுங்கள், இது உயிருக்கு தீங்காக முடியும் வாய்ப்பு அதிகம் என்று தெரிந்துதான் தமிழன் இந்த விளையாட்டை விளையாட தொடங்கி இருப்பான், ஆபத்தோடு விளையாடுவதுதான் தமிழனுக்கு விளையாட்டு, அடுப்பாங்கரையோடு அல்ல...!!

 ஏன் ? இவ்வளவு வியாக்கியானம் பேசும் நீங்கள் மனிதனால் இந்த ஒரு பயன்பாட்டிற்க்காக மட்டுமே வளர்க்கப்படும் காளையை அடக்கி விளையாடும் "ஜல்லிகட்டு எனும் ஏறுதலுவுதலை" முடக்குவதை வழக்கமாக கொண்ட உங்களைப் போன்ற முற்போக்குவாதிகள் , காடுகளில் சுதந்திரமாக சுற்றி திரிய வேண்டிய யானைகளை கோவிலில் கட்டி வைத்தும், தெருவில் பிச்சை எடுக்க வைத்தும் இன்னும் கேரளா போன்ற இடங்களில் காலங்காலமாக செய்யும் கொடுமைகள் உங்கள் கண்களுக்கு எப்போதும் தெரிவதே இல்லையே ஏன் ?

அது என்ன தமிழனின் பாரம்பரியத்தை குழித்தோண்டி புதைப்பதில் மட்டும் இவ்வளவு ஆர்வம்... ? தமிழனின் பண்பாட்டு சின்னங்களை அழித்துவிட இங்கு அரசுகள், நீதிமன்றங்கள், விலங்கு நல ஆர்வலர்கள், இன்னும் இன்னும் ஆயிரம் பேர் வந்துகொண்டே இருக்கிறார்கள், அதில் ஆச்சர்யமாக தமிழ்பாடும் ஒரு கவிஞருக்கும் இதன் ஆளுமை புரியவில்லை, அல்லது இந்த பண்பாட்டை சிதைக்க நினைப்பவர்களின் உண்மையான நோக்கம் புரியவில்லை என்பது ஆச்சர்யமே..!

எல்லாவற்றிக்கும் மேலாக தமிழனின் பாரம்பரியமாக தமிழ்குடியின் மூத்தக்குடியாம் முத்தரையர்கள் ஆண்டாண்டுகாலமாக நடத்திவரும் இந்த வீரத்தின் அடையாளத்தை ஒருபோதும் விட்டுக்கொடுத்துவிட மாட்டோம் என்பதை இந்த உலகிற்க்கு திமிரோடு அறிவித்துக்கொள்கிறோம். வீரம் இருப்பவன் களத்திற்க்கு வா...! கோழையாய் இருப்பவன் நம் கவிஞர் சொல்வதுபோல ஒதுங்கி சென்றுவிடு...!! முடக்க நினைக்காதே இது வீரத்தின் அடையாளம், எங்கள் குலத்தின் பெருமை..!!

இதற்கு மேலும் நானே உங்களுக்கு விளக்கம் அளிப்பது அவ்வளவு சிற்ப்பாக இருக்காது, குறிப்பாக எங்கள் முத்தரையர் குலத்தினால் நடத்தப்படும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டோடு தொடர்பான ஒரு வழக்கிற்க்கு அரசு தரப்பில் இருந்து பதிலளித்த மரியாதைக்குறிய மாவட்ட ஆட்சியர் திரு. உதயசந்திரன் IAS அவர்களின் மனு விபரமும், குற்றச்சாட்டின் விபரத்தினையும் காண்க.
/// ஆவணம்
ஜல்லிக்கட்டு பாதுகாக்கப்பட வேண்டிய பண்பாட்டு அடையாளம்
. உதயச்சந்திரன், IASசுருக்கப்பட்ட தமிழ் வடிவம்: இர. வெள்ளியங்கிரி
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்த திரு. டி. ரங்கசாமி என்பவர் தமிழர்களின் வீரவிளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்குத் தடைகோரி உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ஒரு வழக்கைத் தொடர்ந்தார். தமிழக அரசின் உள்துறைச் செயலாளர், சுற்றுலாத் துறைச் செயலாளர், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் ஆகியோரை இவ்வழக்கின் பிரதிவாதிகளாகச் சேர்த்திருந்தார் ரங்கசாமி. இவ்விளையாட்டில் ஈடுபடும் இளைஞர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதோடு காளைகளும் துன்புறுத்தப்படும் என்பதால் இவ்விளையாட்டு தடைசெய்யப்பட வேண்டும் என்பதே அவரது வாதம். அவரது மனுவை ஏற்று நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
நீதிமன்றத்தின் இத்தீர்ப்பினால் இவ்விளையாட்டின் மீது ஈடுபாடுகொண்ட தெற்கத்தி மக்களுக்குக் கடும் அதிருப்தி ஏற்பட்டது. தடையை நீக்கக்கோரி உணர்ச்சி கரமான போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஜல்லிக்கட்டு போன்ற தமிழர்களின் பாரம்பரியமான வீரவிளையாட்டுகளை விலங்குகள் நல ஆர்வலர்களும் கடுமையாக எதிர்த்துவருகின்றனர். அவற்றிலுள்ள அபாயங்களைச் சுட்டிக்காட்டி அவற்றைத் தடைசெய்யக் கோரும் குரல்கள் வலுப்பெற்றுவருகின்றன. விளையாட்டு ஆர்வலர்களும் மரபின் மீது அக்கறைகொண்டவர்களும் ஜல்லிக்கட்டு போன்ற நம் மரபின் அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். சமூகவியல் நோக்கில் இது போன்ற விளையாட்டுகளைக் கடுமையாக எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். ஜல்லிக்கட்டை முன்வைத்து அறிவுச் சூழலிலும் பல விவாதங்கள் எழுந்துள்ளன.
இவ்விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் எனக் கோரி, சென்ற ஆண்டு உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கின் மூன்றாம் பிரதிவாதியான மதுரை மாவட்டத்தின் அப்போதைய ஆட்சித் தலைவரான . உதயச்சந்திரன் பதில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். இது போன்ற வீரவிளையாட்டுகளின் சமூகரீதியிலான முக்கியத்துவம் குறித்தும் பண்பாட்டு ரீதியில் அதன் இருப்புக்கான காரணங்களை விளக்கியும் அவர் தாக்கல்செய்த பதில் மனு இது. தமிழர்களின் மரபான வீர விளையாட்டுகளின் பண்பாட்டு முக்கியத்துவத்தை வலியுறுத்தும் மனு இது. பின்னர் இத்தடை நீக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடும் கண்காணிப்போடும் சென்ற ஆண்டு இவ்விளையாட்டு நடத்தப்பட்டது. இந்த ஆண்டும் இவ்விளையாட்டுக்குத் தடைவிதிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் தடைக்கெதிராகத் தென் மாவட்ட மக்கள் கடுமையாகப் போராடினர். தடையை மீறி இவ்விளையாட்டு நடத்தப்படும் எனவும் அறிவித்தனர். தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கடுமையாகப் போராடித் தடையை நீக்குவதற்கு வழிசெய்தது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுவிட்டாலும் அதன் எதிர்காலம் கேள்விக்குரியது. மரபு சார்ந்த பண்பாட்டு அடையாளங்களுக்கும் விலங்குகளின் நலனில் அக்கறை காட்டி இது போன்ற விளையாட்டுகளுக்கு எதிராகப் போராடிவரும் நவீனத்துவச் சிந்தனைகளுக்குமிடையேயான கலகமாக இப்பிரச்சினை உருவெடுத்துள்ளது. இது குறித்த ஒரு விவாதத்தைத் தூண்டும் நோக்குடன் அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியரும் தற்போதைய ஈரோடு மாவட்ட ஆட்சியருமான உதயச்சந்திரன் ஆங்கிலத்தில் சமர்ப்பித்த பதில் மனுவின் சாராம்சம் இங்குப் பிரசுரிக்கப்படுகிறது.
-ஆசிரியர்
n n n
இவ்வழக்கின் மூன்றாம் பிரதிவாதியும் மதுரை மாவட்டத்தின் ஆட்சியர் பொறுப்பிலுள்ளவருமான உதயச் சந்திரன் ஆகிய எனக்கு இவ்வழக்குத் தொடர்பாகக் கிடைத்திருக்கின்ற ஆதாரங்களின் அடிப்படையில் கீழ்க்காணும் பதில் மனுவை இந்த நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறேன்.
இவ்வழக்கின் உண்மையோடும் சூழலோடும் எனக்கு நல்ல பரிச்சயம் உண்டு. தமிழ் மரபோடும் கலாச்சாரத்தோடும் நெருங்கிய தொடர்புடைய ஜல்லிக்கட்டு என்னும் இவ்வீரவிளையாட்டின் மீது எதிர்தரப்பினர் தாக்கல்செய்த மனுவில் அடங்கியுள்ள குற்றச்சாட்டுகளை நான் மறுப்பதோடு, இவ்வீர விளையாட்டை நடத்த வேண்டியதின் அவசியம் கருதி மேல்முறையீடு செய்த விண்ணப்பத்தில் உள்ள விஷயங்களின் உண்மைத்தன்மையைத் தங்களுக்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு என்ற மாடு பிடிக்கும் இந்த வீரவிளையாட்டுக்குப் பெயர் பெற்ற அலங்காநல்லூர் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் இதில் ஆழமான ஆர்வமும் நம்பிக்கையும் அக்கறையும்கொண்டுள்ளது. உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு வீரத்தை விதைத்திடும் அலங்காநல்லூர் கிராமத்தில் தொடக்க காலத்திலிருந்தே இந்த விளையாட்டு தொடர்ந்து நடத்தப்பட்டுவருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே இந்த விளையாட்டுக்கெதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் இரண்டாம் பத்தியில் கூறப்பட்டுள்ள உறுதிக் கூற்று உண்மைக்கு முற்றிலும் புறம்பானதாகும். ஏறத்தாழத் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டுத் திருவிழாக்களில் 'அலங்காநல்லூர்' ஜல்லிக்கட்டுக்கெனத் தனித்த பெயரும் புகழும் இடமும் என்றும் உண்டு.
மதுரை மாவட்டக் கருப்பொருள் களஞ்சியத்தில் பதிவாகியிருக்கும் விவரத்தின்படி இவ்வீரவிளையாட்டானது தமிழ்நாட்டில் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்தப்பட்டுவருவது தெரிகிறது. தமிழ்நாட்டில் நடைபெறும் அறுவடைத் திருநாளாம் தைப்பொங்கல் நாளைச் சிறப்பிக்க நடத்தப்பட்டுவரும் இவ்விளையாட்டானது அன்றைய தினம் உழவுக்குத் துணையாக இருந்து மக்களின் உயிர் காக்கும் மாட்டுப் பொங்கலாகவும் மலர்கிறது. கால்நடைகள் சுதந்திரமாக்கப்பட்டு அன்று பூஜித்து வணங்கப்படுகின்றன. சுருங்கச் சொன்னால் அவற்றிற்கு நன்றிகூறும் விழாவாகவே அது உழவர்களால் உணரப்படுகிறது. இது மத உணர்வுகளோடும் தொடர்புடையதாகும். தமிழர்களின் காதலையும் வீரத்தையும் பதிவுசெய்துள்ள அகநானூறு மற்றும் புறநானூறு ஆகிய நூல்களில் இவ்வீரவிளையாட்டானது "ஏறுதழுவுதல்" என்ற பெயரால் குறிக்கப்பட்டு எருதுகளோடு வீரங்காட்டி விளையாடி, அவற்றை அரவணைத்துக் காப்பது என்று பொருள்கொள்கிறது. ஒவ்வொரு வருடமும் தை மாதம் மூன்றாம் நாள் இவ்விளையாட்டு தொடர்ந்து நடத்தப்படுகிறது.
தங்களின் மேலான கவனத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உறுதிக் கூற்றின் நான்காம் பத்தியில் கூறப்பட்டுள்ளவை உண்மையே என என்னால் உறுதிபடக் கூற முடியும்.
ஏனென்றால், கடந்த பல வருடங்களாக அலங்காநல்லூரில் இவ்விளையாட்டு அரசு ஆதரவோடும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் ஒப்புதலோடும் அருள்மிகு முனியாண்டி சுவாமி வகையறா மற்றும் முத்தாலம்மன் திருக்கோவில் கிராமக் கமிட்டியும் அதனோடு அரசு முகமைகளும் இதர அரசுத் துறைகளான வருவாய், காவல், கிராம அபிவிருத்தி, சுற்றுலா, சுகாதாரம், கால்நடைத் துறை மற்றும் இதர பல துறைகளின் ஒருங்கிணைப்போடும் இவ்விளையாட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. என்பது அனைவரும் அறிந்ததே. உலகெங்கிருந்தும் தமிழகத்தை நோக்கிப் பிற நாட்டவர்களின் கவனத்தைத் தைத்திங்களில் குவிக்கவைக்கக்கூடிய முக்கியத் திருவிழா ஜல்லிக்கட்டு. மனிதநேயத்தையும் பலதரப்பட்ட மக்களின் பண்பாட்டையும் அறிய விரும்பும் பிறநாட்டு மக்களின் வருகையைத் தொடர்ந்து உறுதிப்படுத்திவருகிறது இவ்விளையாட்டு.
உண்மையில் காளைகள் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கெனவே தனிக்கவனம் கொண்டு வளர்க்கப்படுவது இதன் சிறப்பம்சம். இந்தக் காளைகள் வேறு எந்த வேலைக்கும் பயன்படுத்தப்படாமல் இருப்பது அவற்றின் மீதான கற்பனைகளை விரிக்கிறது. இயல்பாகவே காளைகளை அடக்கத் துடிக்கும் வீரகுல இளைஞர்களின் குருதியோடும் சுவாசத்தோடும் நெருங்கிய தொடர்புடையது ஜல்லிக்கட்டு. இக்கூற்று மிகையாகத் தெரிந்தாலும் தைமாதம் முழுவதும் இந்த இளைஞர்களின் சுவாசமே வீரத்தை விருத்திப்படுத்துவதில் மையம் கொள்கிறது. மதுரை மாவட்டத்திலுள்ள அநேக கிராமங்களில் உள்ள "கோவில்மேட்டுப்" பகுதி இவ்விளையாட்டினை நிகழ்த்தும் களப் பரப்பாகவே கண்ணுக்குத் தெரிகிறது. மேலும் இந்த விளையாட்டின் மூலம் காளைகளுக்குத் தேவையற்ற வலியோ தீங்கோ இரத்தக் காயங்களோ ஏற்படுவதில்லை. அந்த அளவிற்கு இதனை நடத்தும்போது விதிமுறைகளில் தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. ஒரு பார்வையில், மேலோட்டமாக மனிதன் காளைகளோடு மோதும் முரண்பட்ட விளையாட்டாகத் தோன்றினாலும் உண்மை அதுவன்று. எதிரிக்கு எதிரி போர்க்களத்தில் நண்பனாவதுபோல் இரண்டு வீரர்களும் வீரம் காட்டி விளையாடும் நுட்பம் இதில் மறைந்துள்ளது. வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளைப் பின்தொடர்ந்து வீரர்கள் குறித்த தூரத்தில் ஓடி விளையாட்டுக் காட்டி நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துகிறார்கள். இதனை மாடு பிடிக்கும் விழா என்றும் கூறுவதுண்டு. உண்மையில், பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் அதாவது மூன்றாம் நூற்றாண்டில் அவர்களது நாள்காட்டியில் இந்த விழா பற்றிய குறிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில்கூட 15ஆம் நூற்றாண்டிலிருந்துதான் "Bull Bitting" என்ற பெயரால் குறிக்கப்பட்டு இவ்விழா தொடர்ந்து நடத்தப்படுகிறது. எனவே, இவ்விளையாட்டில் நமக்கு மட்டுமே மரபுரீதியான தொன்மையான நீண்ட அனுபவம் உள்ளது கண்கூடு.
'மஞ்சு விரட்டு' என்று மறுபெயரிட்டு இது அழைக்கப்பட்டு ஜல்லிக்கட்டிலிருந்து வேறுபடுகிறது இவ் விளையாட்டு என்பதே இதன் மீதான சுவாரஸ்யத்தை மேலும் கூட்டுகிறது. திறந்த மைதானத்தில் 'காளை' தனிமையில் விடப்படுகிறது. ஆயுதங்கள் இல்லாத மனவலிமை கொண்ட வீரர்கள் அதனை விரட்டிப் பிடித்து அடக்குவார்கள் என்பது நிஜம். அப்போது காளையின் இரண்டு கொம்புகளையும் தமது உரமேறிய கைகளால் மடக்கிப் பிடித்து அடக்கும் வீரர்கள், கொம்பில் கட்டப்பட்டுள்ள மஞ்சள் துணியிலுள்ள பரிசை வென்று மகிழ்வார்கள். வலிமையைப் பறைசாற்றும் இவ்விளையாட்டில் ஆண்களுக்கு மட்டுமே பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. பெண்கள் பார்வையாளர்களாக அனுமதிக்கப்படுவதுகூட ஒருவகையில் காதல் பயிரிடும் களமாகிறது. ஒரு நல்ல வீரம் நிறைந்த ஆண்மகனைக் காதலனாகப் பெறவே இவ்விளையாட்டு, பழங்காலந்தொட்டு நம்நாட்டில் நடத்தப்பட்டுவருகிறது. எனக்குச் சரியாக நினைவில்லையென்றாலும் உலகின் பல நாடுகளிலும் இது போன்ற விளையாட்டுகள் நடத்தப்பட்டு வந்துள்ளதை நான் அறிகிறேன்.
மாடுபிடிப் போரில் காளையை அடக்கிய வீரன் காதல் நிரம்பிய அழகிய கன்னிகையிடமிருந்து காதல் பரிசாக மோதிரத்தைப் பெற்றுக்கொள்கிறான் என்கிறது நமது பழைய வரலாறு. காதலும் வீரமும் தமிழர்களின் ஒழுக்கமாகும். அதனையே இந்த விளையாட்டு உலகிற்கு உணர்த்துகிறது.
ஜல்லிக்கட்டு என்ற சொல் "ஜல்லி" (Salli) என்னும் மூலச் சொல்லிலிருந்து பிறந்தது என்கிறது சொல்லாக்க வரலாறு. காசு (Kasu) என்பது Coins என்பதாகவும் Kattu என்பது பரிசுத்தொகையின் கோர்ப்பாகவும் பொருள்படுகிறது. ஜல்லிக்கட்டுக்கு எண்ணற்ற சான்றுகள் சங்கத்தமிழ் முழுவதும் விரவிக்கிடக்கின்றன என்பதைச் சங்கத் தமிழ் நூல்களிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம்.
நான் மிகுந்த கவனத்தோடும் மரியாதையோடும் இந்த மேல்முறையீட்டைத் தங்களின் மேலான பார்வைக்குத் தரும் சமயத்தில் இதில் இடம்பெற்றுள்ள பத்தி 7 மற்றும் 8இல் உள்ள விவரங்களின்படி இந்த வீரத் தமிழ் விளையாட்டு முன்னோர்கள் வழிவந்தது என்பதைத் தங்களின் மேலான கவனத்திற்கு எடுத்து வைக்கிறேன். காலத்தோடு தொடர்ந்து ஓடி ஆடி விளையாடும் இதற்கு எந்தவிதமான இடையூறுமின்றிக் காப்பது தங்களின் கவனத்திற்குரியது. அவ்வாறில்லாமல் இதற்கு மறுப்பு உருவாகும் சூழல் ஒரு நல்ல முன்னுதாரணத்திற்கான வழியாக இல்லாமல் போய்விடும் வாய்ப்பு உள்ளது. இந்த மிகமுக்கியமான முடிவினை அடையும் நேரத்தில் நான் தங்களுக்கு ஆய்வுரீதியாக முடிவுசெய்யப்பட்ட ஒரு நம்பிக்கையைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். ஜல்லிக்கட்டு என்ற தமிழர்களின் இந்த வீர விளையாட்டினை ஆராய்ந்த டாக்டர் முத்தையா என்பவர் தனது டாக்டர் பட்டத்திற்கான ஆய்வுக் கட்டுரையில், பெரும்பான்மை மக்களின் வெளிப்படையான நம்பிக்கை பொதிந்த விளையாட்டு என்றே இதனைக் கருத்துருவாக்கம் செய்கிறார். தைப் பொங்கலை ஒட்டிய நாள்களிலேயே இது நடத்தப்பட வேண்டும் என்பது இம்மக்களின் ஆன்மாவில் உரமேறிய நம்பிக்கை என்றும் அவ்வாறின்றி வேறு தினங்களில் நடத்தப்பட்டாலோ அல்லது தைப் பொங்கல் தினத்தையொட்டிய நாளில் நடத்தப்படாமல் போனாலோ ஊரெங்கும் சொல்லொணாத துன்பங்களும் மக்கள் நோயிலும் சிக்கி உழலவும் நேரும் என்கிறார்.
ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழர்களின் மத அடிப்படையிலான உரிமை என்றாலும், தைப் பொங்கலைக் குறிப்பதாகவே இருக்கிறது. எனவே, இந்த விளையாட்டும் பண்டிகையும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
நான் தங்களின் பார்வைக்குச் சமர்ப்பிப்பது என்னவெனில் ஆதாரம் (1) சட்டம் 25 (1)இன்படி இந்திய நாட்டில் வாழும் ஒவ்வொருவருக்கும் சுதந்திரமாகச் சிந்திக்க, மனசாட்சிப்படி நடக்க, தனது உரிமைகளை முன்மொழிய, பயிற்சி பெற்றுக்கொள்ள, இடமுண்டு.
அதே நேரத்தில் 1960ஆம் ஆண்டின் மிருக வதைத் தடைச் சட்டத்தின்படி காளைகளை வன்கொடுமையின்றிக் காக்கவும் காப்பாற்றவும் கடுமையான மேற்பார்வையும் கண்காணிப்பும் செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதனை எனது உறுதிமொழிக் கூற்றின் ஆதாரம் (ii)இலிருந்து (vii)இன் படியானது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
15ஆம் நூற்றாண்டில் எருதுச்சண்டை ஸ்பெயின் நாட்டில் உருவானது. மெக்சிகோ, பெரு, கொலம்பியா மற்றும் வெனின்சுலா போன்ற நாடுகளுக்கும் பரவியது. அங்கு மாடோ மனிதனோ இறப்பது பொதுவானதென்றே கருதப்படுகிறது. "Don't cry Agelita, Tonight I'll buy you a house, or I'll dress you in mourning" என்பது புகழ்பெற்ற மேனுவல் பெனீன்ஸின் கூற்றாகக் கூறப்படுகிறது. எனவே, ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் விளையாட்டுபோல் அல்ல ஜல்லிக்கட்டு. இங்கு விளையாட்டுக்கு மட்டுமே பிரதானமான இடமுண்டு. இதில் மனிதனுக்கோ காளைக்கோ மரணம் சம்பவிக்காமல் காக்கப்படுகிறது. முழுக்க முழுக்கப் பார்வையாளர்களின் விளையாட்டுதான் ஜல்லிக்கட்டு என்பதில் சந்தேகம் இருக்க வாய்ப்பில்லை.
ஐக்கிய நாடுகளின் நிறுவனச் சட்டம் 1948இன்படி கலாச்சாரம் மற்றும் சமூக உரிமையைத் தொடர்ந்து பராமரிப்பதின் அவசியம் கருதியாவது இவ்வீரவிளையாட்டைத் தமிழ் மண்ணில் தொடர வேண்டியுள்ளது.
ஆதாரம் IX மற்றும் XIஇன்படி நான் தங்களின் மேலான கவனத்தை எதை நோக்கி ஈர்க்கிறேனென்றால் இந்த விளையாட்டில் காளைக்கு எந்தவிதமான ஊக்கமருந்தும் வழங்கப்படுவதில்லை. ஆனால், மறுக்க முடியாத உண்மை என்னவென்றால் ஒலிம்பிக் போட்டிகளில் போலோ விளையாட்டில் பங்குபெறும் குதிரைகளுக்கு ஊக்கமருந்து வழங்கப்படுவதுதான். ஆனால், இங்குக் காளைகளுக்கு அப்படி எதுவும் நிகழுவதில்லை என நான் உறுதி கூறுகிறேன். இந்த விளையாட்டுக்காகவே தயாராகும் பயிற்சிக்கு உட்படுத்தப்படும் காளைகளுக்குத் தடைசெய்யப்பட்ட எந்தப் போதைப் பொருளும் வழங்கப்படுவதில்லை என்பதும் உண்மை என்பதைத் தாங்கள் ஏற்றுக்கொள்வதில் உள்நோக்கம் எனக்கெதுவும் இல்லை.
ஜல்லிக்கட்டைத் தடைசெய்யக் கோரும் மனுவின் பத்தி XII ஆனது ஒத்துக்கொள்ளப்பட்ட அல்லது அநேக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையை மறுப்பதாக உள்ளது. இந்திய அரசியல் சட்டம் 226 இன்படி இந்த நேரத்தில், அல்லது இத்தருணத்தில் நீதிமன்றம் இடையீடு செய்து இந்தச் சட்டமீறலைக்காக்க வேண்டியுள்ளது.
எனவே, மேன்மைதாங்கிய நீதிமன்றம் இவ் வழக்கினை விசாரித்து ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டைத் தடையில்லாமல் தொடர்ந்து நடத்திட நீதிவழங்கத் தேவையான உத்தரவுகளைச் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கிட வேண்டுகிறேன். அதே நேரத்தில் ஏராளமான மக்களின் நம்பிக்கைத் திருவிழாவிற்கு ஊறுவிளைவிக்கும் எந்த வன்செயலையும் நடைபெறாமல் தடுத்திடவும் வேண்டுகிறேன். 1960ஆம் ஆண்டின் மிருகவதைச் தடைச் சட்டத்தின்படி தேவையான அனைத்து அறிவுரைகளையும் வழங்கக் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், நான் தங்களின் மேலான பார்வைகுச் சமர்ப்பிப்பது என்னவென்றால், உறுதிமொழிக் கூற்றின் ஆதாரம் Xஇன்படி அதில் உள்ள விவரங்கள் பாதியளவிற்கு உண்மை என்பதாகும்.
ஏனென்றால், ஜல்லிக்கட்டு விளையாட்டோ டு மாட்டுப் பொங்கல் நிறைவுபெறுகிறது. இந்த விளையாட்டிற்கு உகந்த மாட்டின் பெயர் "தொழுமாடு" என்பதாகும். இதற்கெனச் சிறந்த இனக் காளையாகக் கருதப்படுவது மதுரை மாவட்டம் புலிக்கோளம் காளைகளாகும். (இது எட்கர் தர்ஸ்டன் கேஸ்ட் - தென் இந்தியா)
ரோம் மற்றும் ஸ்பெயின் நாட்டில் விளையாடப்படும் Bull Bitting விளையாட்டை "arenas" நடத்திட வழங்கப்படுவதுபோல் இங்கும் நடத்திட அனுமதியளிக்க வேண்டும்.
இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டானது இந்து மதத்தோடு மட்டும் தொடர்புடையதாகக் கருதக்கூடியது அல்ல என்பதைத் தங்களுக்கு முன்வைக்கிறேன். கிறிஸ்தவர்களும் முகமதியர்களும் தங்களுடைய வழிபாட்டுத் தலங்களிலேயே இந்த நிகழ்ச்சியை நடத்திவருவதால் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் விளையாட்டாகவே இதனைக் கண்டுணரத் தங்களை வேண்டுகிறேன்.
தமிழ் மக்களின் உணர்வு தளத்தை ஏற்றி இறக்கி ஓடிக் காளையைப் பிடித்தாடும் இவ்வீரவிளையாட்டைத் தொடர்ந்து நடத்திட மரியாதைக்குரிய நீதிமன்றம் தகுந்த அனுமதியும் ஆணையும் வழங்கிடப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அதே நேரத்தில் மாவட்ட நிர்வாகம் இவ்விளையாட்டைத் திறம்பட நடத்திடத் தேவையான அனைத்து வகையான ஏற்பாடுகளைச் செய்திடவும் தகுந்த வழிகாட்டுதலையும் வழங்கிடக் கேட்டுக்கொள்கிறேன்.
அவ்வாறு வழிகாட்டுதலும் உத்தரவும் வழங்கும் தருணத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் போதிய அனைத்து உதவிகளும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இவ்விளையாட்டுச் செவ்வனே நடத்தப்படும் என்ற உறுதியையும் தங்களுக்குக் கூறிக்கொள்கிறேன்.  /////

இது உங்கள் கேள்விகளுக்கான பதிலாக இருக்கும் என்று நம்புகிறோம், இந்த விளக்கம் உங்களுக்கு போதுமான புரிதல்களை தரும் என்ற நம்பிக்கையோடு...

என்றும் உங்கள் மீதான நன்மதிப்போடு...

சஞ்சய்காந்தி அம்பலக்காரர்,
ஒருங்கிணைப்பாளர்,
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக