வியாழன், 16 அக்டோபர், 2014

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வேட்பாளர் யார்? : கனிமொழி வற்புறுத்தலால் ஸ்டாலின் அப்செட்

ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில், முத்தரையர் ஒருவரை, போட்டியிட வைக்க வேண்டும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம், ராஜ்யசபா எம்.பி., கனிமொழி வலியுறுத்தியதால், கட்சியின் பொருளாளர் ஸ்டாலினும், முன்னாள் அமைச்சர் நேருவும், அதிருப்தி அடைந்துள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறை தண்டனை : அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்றதால், அவரது எம்.எல்.ஏ., பதவி பறிபோனது. அதனால், அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற, ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதி, தற்போது காலியாக உள்ளது. அந்த தொகுதிக்கு, வரும் மார்ச் மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன் குமார் அறிவித்துள்ளார். இந்த இடைத்தேர்தலில் போட்டியிட, தி.மு.க., ஆர்வமாக உள்ளது. அதற்காக, சமீபத்தில் நடந்த தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், 'ஏற்காடு சட்டசபை இடைத்தேர்தலில், தி.மு.க., போட்டியிட்டது போல், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், தி.மு.க., போட்டியிட வேண்டும்' என, விருப்பம் தெரிவித்து, கருணாநிதி பேசினார்.
இதனால், உடனடியாக, அந்த தொகுதியில் வாக்காளர்கள் பட்டியலை சரிபார்க்கும் பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும், கட்சியினரிடம் கேட்டுக் கொண்டார். இதற்கிடையில், 'ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில், முத்தரையர் சமுதாயத்தினருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
அப்போது தான், கட்சிக்கு கவுரவமான ஓட்டுகள் கிடைக்கும்' என, கருணாநிதியிடம் கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

சட்டசபை தேர்தல் : டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில், முத்தரையர் இனத்தை, சேர்ந்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். கிட்டதட்ட, அந்த பகுதிகளில், 40 சட்டசபைத் தொகுதிகளில், வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய சக்தி, அந்த இனத்தவரிடம் உள்ளது. முத்தரையர் சமுதாயத்தின் ஓட்டுகளை, அ.தி.மு.க., தான் தொடர்ந்து பெற்று வருகிறது. அந்த ஓட்டு வங்கியை தி.மு.க., பக்கம் மாற்றுவதற்கு, வரு ம் சட்டசபை தேர்தலில், 10 தொகுதிகளில் முத்தரையர் சமுதாய வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். இதற்காக, கட்சியிலும் மாவட்ட செயலர் பதவி உட்பட, பல்வேறு பதவிகளும் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொடுக்க வேண்டும். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் முத்தரையர் இனத்தைச் சேர்ந்தவர் ஒருவரை, தி.மு.க., சார்பில் வேட்பாளராக்க வேண்டும். இப்படி, நிறைய விஷயங்களை, கருணாநிதியிடம் கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.
இதனால், தன் ஆதரவாளர் ஒருவருக்கு ஸ்ரீரங்கத்தில், போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என, திருச்சி மாவட்ட செயலர் நேருவும், தன்னை மீறி கட்சியில் கனிமொழி செயல்படுகிறாரே என, ஸ்டாலினும் அதிருப்தி அடைந்துள்ளனர். இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

News Source : DINAMALAR

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக