ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து, அரசியல் கட்சிகள் தங்களை தயார்படுத்த ஆரம்பித்திருக்கின்றன. இதற்காக, அந்தப் பகுதியின் மக்கள் மனநிலையை அறிய, திராவிடக் கட்சிகளோடு, பா.ஜ.,வும் போட்டிப் போட்டு, களமிறங்கி செயல்பட்டுக் கொண்டிருப்பதாக, தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி, சிறை தண்டனை பெற்றதால், எம்.எல்.ஏ., பதவியை இழந்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இதனால், ஏற்கனவே அவர் போட்டியிட்டு வென்ற, ஸ்ரீரங்கம் தொகுதி, காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஜனவரி மாதமே அங்கு இடைத் தேர்தலை நடத்த, தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது. வரும், 2016ல் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலுக்கு, இந்த தொகுதி இடைத்தேர்தல், முன்னோட்டமாக இருக்கும் என்பதால், ஸ்ரீரங்கத்தில் எப்படியாவது போட்டியிட வேண்டும் என, தி.மு.க.,வும் பா.ஜ.,வும் முனைப்புடன் இருக்கிறது. இதற்காக, தொகுதியில், திருச்சி மாவட்ட கட்சி நிர்வாகிகள் மூலம், மக்கள் மனநிலையை அறியும் முயற்சியில் இறங்கி இருக்கின்றன.
சாதுர்யமான செயல்:
இதுகுறித்து தி.மு.க., வட்டாரங்களில் கூறியதாவது: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் என்பது தி.மு.க.,வுக்கு முக்கியமான தேர்தல். தமிழகத்தின் பிரதான கட்சியாக இருக்கும் தி.மு.க., உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கியது, சாதுர்யமான செயல் என, தலைமை முடிவெடுத்திருந்தாலும், கட்சியினர் ரொம்பவே சோர்ந்து விட்டனர். இந்த சூழ்நிலையில், ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு, தி.மு.க., குறிப்பிடத்தக்க அளவில் ஓட்டுகளை வாங்கவில்லை என்றால், கட்சி மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். அதேபோல, ஏதாவது காரணம் சொல்லி, போட்டியிடாமல் ஒதுங்கினாலும், மக்கள் தி.மு.க.,வை முற்றிலுமாக புறக்கணித்து விடுவர். இதை தலைமைக்கு பலரும் தெளிவாக எடுத்துச் சொல்லிவிட்டனர். இதனால், தலைமை ஸ்ரீரங்கம் தொகுதியில் கட்டாயம் போட்டியிடுவது என, முடிவெடுத்து விட்டது. தொகுதி எப்படி இருக்கிறது என்பதற்காக, கட்சியினரை விட்டு அவசர அவசரமாக மக்கள் மனநிலையை அறியும் முயற்சியில் இறங்கினர். தொகுதியில் பிரதானமாக இருக்கும் முத்தரையர், பிராமணர், தலித் ஆகியோர், தி.மு.க., மீது பரிவுடன் இருப்பதால், மும்முனைப் போட்டியில் வெற்றி வாய்ப்பும் இருக்கிறது என, சொல்லியிருக்கின்றனர். அதற்காக, தொகுதியில் இருக்கும் முத்தரையர் ஒருவரை வேட்பாளராக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கின்றனர்.
பா.ஜ., தரப்பில் கூறியதாவது:
ஊழல் வழக்கில் சிக்கி ஜெயலலிதா தண்டனை அடைந்திருப்பதால், ஊழலுக்கு எதிரான நிலை யில் பா.ஜ., இருக்கிறது என்பதை பறைசாற்றும் விதமாக, ஒருவரை வேட்பாளர் ஆக்கினால், கட்சிக்கு இமேஜ் கூடும் என்பதோடு, வெற்றி பெறவும் வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது. அதனால், தலைமையின் விருப்பப்படி, இந்த தொகுதியில் இருந்து டில்லி சென்று, தலைமையுடன் இணக்கமாக இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிர்வாத ஆச்சாரியை வேட்பாளர் ஆக்க, தலைமை முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், தமிழக தலைமையும் அதே எண்ணத்தில் வேட்பாளரை தேடிக் கொண்டிருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் வெற்றிடத்தைப் பயன்படுத்தி, கட்சியை வளர்க்க முடிவெடுத்திருப்பதால், ஸ்ரீரங்கம் தொகுதியில் கட்சி கட்டாயம் போட்டியிடும்.
பரிதாப உணர்ச்சியுடன்...:
அ.தி.மு.க., தரப்பில் கூறியதாவது: ஜெயலலிதா கைது செய்து சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளதால், மக்கள் அவர் மீதும் அ.தி.மு.க., மீதும் பரிதாப உணர்ச்சியுடன் இருக்கின்றனர். கட்சிக்கு அது லாபம். அதேபோல, அ.தி.மு.க., ஆட்சி மீதும் மக்கள் திருப்தியுடன் இருப்பதால், கட்சி, அங்கும் எளிதாக வெற்றி பெற்று விடும். தொகுதியில் உளவு போலீஸ் மூலமாக சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பும், அ.தி.மு.க.,வுக்கு சாதகமாகவே இருப்பதால், வெற்றி எங்களுக்குத்தான். தி.மு.க.,வும் பா.ஜ.,வும் எப்ப டியும் களத்துக்கு வரும். அ.தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகள் சிதறி விடும் என்பதால், அ.தி.மு.க.,வின் வெற்றி நிச்சயிக்கப்பட்ட ஒன்று. இவ்வாறு, அந்த வட்டாரங்களில் தெரிவித்தனர்.
News Source : DINAMALAR
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக