இளைஞர்கள் தமிழ்நாட்டுக் கலை வரலாற்றில் கவனம் செலுத்த வேண்டும், அப்போதுதான் தமிழ்நாட்டின் பெருமைச் சுவடுகளை என்றென்றும் நிலைபெற்று இருக்குமாறு காப்பாற்ற முடியும் என்றார் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியின் வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர் முனைவர் மு. நளினி.
முசிறி அறிஞர் அண்ணா அரசுக் கலை அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், மருத்துவர் சுப்பிரமணியம் பழனியாண்டி அறக்கட்டளையின் "சிறந்த கல்வெட்டறிஞர்' விருதைப் பெற்றுக் கொண்டு "சிராப்பள்ளி மாவட்டத்தில் கோயில் கட்டடக் கலை' என்ற தலைப்பில் அவர் பேசியது:
பல்லவர், பாண்டியர், முத்தரையர், சோழர், ஹொய்சாலர், விஜயநகர அரசர்கள் எனப் பல அரச மரபுகளின் கைவண்ணம் சிராப்பள்ளி மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. கோயில் கலை ஆய்வுகள் பழந்தமிழ்ச் சமூகத்தின் கலை, பண்பாடு தொடர்பான பல அரிய தரவுகளை வரலாற்றுக்கு வழங்குகிறது.
எனவே, இளம் தலைமுறையினர் தமிழ்நாட்டுக் கலை வரலாற்றில் கவனம் செலுத்தி, பெருமைச் சுவடுகள் என்றென்றும் நிலைபெற்றிருக்குமாறு காப்பாற்ற வேண்டும் என்றார்.
பேராசிரியர் நளினியின் 25 ஆண்டுக் கால கல்வெட்டாய்வுப் பணியைப் பாராட்டி இந்த விருதை மருத்துவர் பழனியாண்டி வழங்கினார். இவரது பணிகள் குறித்து டாக்டர் இரா. கலைக்கோவன் பாராட்டுரை வழங்கினார்.
பெரம்பலூர் ரோவர் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வெ. சிவராமகிருஷ்ணன், கல்லூரி மாணவர்களுக்கான பரிசுகளை வழங்கிப் பேசினார். கல்லூரியின் முதல்வர் கூ. கூடலிங்கம் வாழ்த்துரை வழங்கினார்.
கல்லூரியின் முதுநிலை வரலாற்றாய்வுத் துறை, டாக்டர் மா. ராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின. முனைவர் அர. அகிலா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
News Source : DINAMANI
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக