வெள்ளி, 4 மார்ச், 2016

தமிழரின் உணவு பழக்கங்கள்

கி பி மூன்றாம் ஆண்டுடன் சங்க காலம் முடிவுற்றது.முடிவுறும் காலத்தை பிந்தைய சங்க காலமாக அடையாளப்படுத்தப்பட்டது.கி.பி.250 அளவில் வேங்கடத்திலிருந்து வந்த களப்பிரர் சிறிது சிறிதாகச் சேர,சோழ,பாண்டிய நாடுகளைக் கைப்பற்றி ஆளத் தொடங்கினர்.சேர நாடு,சோழ நாடு,பாண்டிய நாடு என்னும் மூன்று தரைப் பகுதிகளையும் கைப்பற்றி ஆண்ட காரணத்தால் களப்பிரர் தங்களை முத்தரையர் என அழைத்தும் கொண்டனர் என்பர்.பொதுவாக களப்பிரர்கள் கருநாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அங்கிருந்து படையெடுத்து வந்து தமிழகத்தைக் கைப்பற்றி ஆண்டனர் என்றும் வரலாற்றாசிரியர்கள் பலர் கருதுகின்றனர்.இருப்பினும் இவர்களின் தோற்றம்,இவர்கள் யார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இன்னும் இல்லை.எனினும் இவர்கள் காலத்தில் சமண சமயம்,பெளத்த சமயம் தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது.இவர்கள் பாளி மொழியை
ஆதரித்தாகவே தெரிகின்றது.எனினும்,தமிழ் மொழியும் இலக்கியமும் வளர்ந்தது.எம் மதமும் சம்மதம் என்ற தமிழர்களின் உன்னதமான மனப்பான்மை இப்படியான மாற்று கொள்கைகளுக்கும் பிற மதத்திற்கும் இடம் கொடுத்தன.மேலும் அண்மைக்கால ஆய்வுக் கருத்துக்களின் படியும் இவர்கள் கன்னட நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளது.களப்பிரருடைய ஆட்சி தமிழக அரசியலில் ஒரு பெரும் மாறுதலை ஏற்படுத்தியதுடன் சமயம்,சமுதாயம் பண்பாட்டுத் துறைகளில் சில புரட்சிகரமான மாறுதல்களையும் தோற்றுவித்தது.உதாரணமாக,நல்ல நடத்தைக்குரியவை பற்றியும்,உலகத்தில் கூடாதவை என்னென்ன
என்பது பற்றியும் மற்றும் நீதிகளைப்பற்றியும் உரைக்கும் நூல்களான இன்ன நாற்பது,இனியவை நாற்பது,நாலடியார் போன்றவை தோன்றின.களப்பிரர்கள் கி பி ஆறாம் ஆண்டு வரை,முன்னூறு ஆண்டுகாலம் தமிழகத்தை ஆண்டார்கள்.என்றாலும் இவர்களைப்பற்றி அவ்வளவு பெரிதாக அறிய முடியவில்லை.இதனால் தான் இதை இருண்ட காலம் என பொதுவாக அழைக்கப்படுகிறது.தமது இறுதி காலத்தில் களப்பிரர்கள் சைவ சமயத்தை ஏற்றுக்கொண்டனர்.எப்படியாயினும் இவர்கள் கொடுங்கன் பாண்டியனாலும் சிம்ஹவிஷ்ணு பல்லவனாலும் தோற்கடிக்கப்பட்டு இவர்களின் ஆட்சி நிறைவுக்கு வந்தது.இவர்களின் இறுதி காலத்தில் பக்தி இயக்கம் தளைத்தோங்க தொடங்கியது.இந்த பக்தி இயக்கம் சைவம்,வைணவம் என்னும் இரு கிளைகளாக ஓங்கியது. 

காலப்போக்கில் உணவைப்பற்றிய சில சுவாரஸ்யமான கருத்துக்கள் தமிழகத்தில் தோன்றின.தமிழ் நாட்டிலோ அல்லது சங்க காலத்திலோ இல்லாத மரக்கறி உணவுக் கொள்கை அல்லது புலால் உண்ணாமை,சமணம்,பெளத்தம் போன்றவற்றின் செல்வாக்கால் அங்கு வெளிப்பட தொடங்கின.இது தமிழர்களின் உணவு பழக்கங்களில் மிகப் பெரிய மாற்றமாக அமைந்தது.மேலும் சுவைகளை ஆறு வகையாக,துவர்ப்பு,இனிப்பு,புளிப்பு,கார்ப்பு,கசப்பு,மற்றும் உவர்ப்பு என்ற அறுசுவையாக பிரித்தனர்.அத்துடன் எல்லா உணவுகளையும் இரண்டு பரந்த பிரிவுகளில்,சூடு,குளிர் சாப்பாடுகளாக வகுத்தார்கள்.இன்றும்
தமிழர் உணவுகள் இவைகளின் அடிப்படையிலேயே இருக்கின்றன. ஆயுர்வேதம்,சித்த மருத்துவம் போன்றவை உடலின் ஆறு முக்கிய
தாதுக்களுடன்[ இரத்தம்,தசை,கொழுப்பு,எலும்பு,நரம்பு,உமிழ்நீர்] இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி,உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது.அது மட்டு அல்ல களப்பிரர்கள் கால தமிழ் இலக்கியமான நாலடியார்:"அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண்டாரும் - வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின்,செல்வம் ஒன்று உண்டாக வைக்கற்பாற்றன்று." என்ற பாடலில் அறுசுவையை குறிப்பிடுகிறது. அதாவது,ஆறு வகைச் சுவை உணவை அன்புடன் மனைவி உண்பிக்க,ஒரு கவளமே கொண்டு,மற்றவற்றை நீக்கியுண்ட செல்வர்களும் வறியவராகி,வேறோர் இடம் போய்,எளிய கூழ் உணவை இரந்து உண்பர்.ஆதலால் செல்வம் நிலையானது என்று கருதத்தக்கதன்று என்கிறது.

மேலும் அங்கு கிராமப்புறங்களில் தினை முக்கிய உணவாக இருந்தன.அது அண்மைய காலம் வரை தொடர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.உண்மையில் இப்பவும் தொலைதூர அல்லது பழைமையான தமிழ் நாட்டு கிராமங்களில் திணை அவர்களின் பிரதான உணவாக இருப்பதுடன்,அங்கு எப்போதாவது சிலவேளையே சோறு உண்ணப்படுகிறது.அதிகமாக கொண்டாட்ட நாட்களிலேயே இந்த நெல்லுச் சோறு உண்
ணப்படுகிறது.எப்படியாயினும் நாளடைவில் உணவு பழக்கங்கள் மாற்றம் அடைந்து திணை இப்ப மெல்ல மெல்ல கிராமப்புறங்களில் இருந்தும் மறைய தொடங்குகின்றன.முருகனுக்கு தேனும்,தினை மாவும் உகந்த பிரசாதம் என்பார்கள்.அதனால் அவனுக்கு கொடுக்கும் வழிபாடு "தேனும் தினை மாவும்" என்ற அடிகளுடன் ஆரம்பிக்கின்றன.இது எமது மூதாதையர்கள் திணைக்கு கொடுத்த முக்கியத்தை கொடுக்கிறது.பண்டைய தமிழர்களின் பிரதான உணவாக திணை கஞ்சி இருந்தது.இதை களி,கூழ் என அழைத்தார்கள்.இது சங்க காலத்திலும் கூட உட்கொள்ளப்பட்டது.

கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில்,தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவருமான திருநாவுக்கரசு நாயனார் என அழைக்கப்பட்ட அப்பர்,தமது தேவாரத்தில் ஆமை உணவாக உட்கொள்ளப்பட்டத்தை தெரிவித்துள்ளார்.

"வளைத்துநின் றைவர் கள்வர் வந்தெனை நடுக்கஞ் செய்யத்
தளைத்துவைத் துலையை யேற்றித் தழலெரி மடுத்த நீரில்
திளைத்துநின் றாடு கின்ற வாமைபோற் றெளிவி லாதேன்
இளைத்துநின் றாடு கின்றே னென்செய்வான் றோன்றி னேனே."

ஐந்து கள்வர் போன்ற ஐம்பொறிகள் இவ்வுடம்பில் என் உள்ளத்தைச் சுற்றி நின்று கொண்டு என்னை நடுங்கச் செய்தலால்,எங்கும் செல்லாதபடி பிணித்து வைத்துப் பாத்திரத்தில் நீரை நிரப்பி அப்பாத்திரத்தைத் தீயினால் சூடாக்க,அந்நீரிலே பிணியை அவிழ்த்து நீந்தவிட்ட அளவிலே மகிழ்வோடி நீந்தி விளையாடிக்கொண்டு சூட்டில் வெந்து உயிர் நீங்க இருக்கும் அவலத்தைப் பற்றிச் சிந்திக்க மாட்டாத ஆமையைப் போல உள்ளத்தெளிவு இல்லாதேனாய் வாழ்க்கையில் இளைத்து நின்று தடுமாறுகின்றேன்.வேறு யாது செய்வதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ? என கேட்டு முறையிடும் இந்த தேவாரத்தில் ஆமையை நீரில் வேகவைப்பதை உதாரணமாக அவர் கையாளுவதன் மூலம் இந்த உணவு முறையையும் நாம் அறிகிறோம்.
 
News Source : தீபம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக