இன்று காரைக்குடியில் நடந்த கல்வி பரிசளிப்பு விழாவில் நான் (சஞ்சய்காந்தி அம்பலக்காரர்) பேசியதன் எழுத்து வடிவம்..!
சாதி அரசியலும், மாணவர்களும்..!
எனது அன்பான காரைக்குடி உறவுகளுக்கு பணிவான வணக்கங்கள், உலகில் எந்த பகுதிக்கு சென்றாலும் பெற முடியாத, திகட்டாத அன்பினை எப்போழுதும் என் மீது செலுத்தும் செட்டிநாட்டின் சொந்தங்களே, மாணவ செல்வங்களே..!
இன்றைய தினம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கலைமகள் கல்வி அறக்கட்டளை மற்றும் சிவகங்கை மாவட்ட முத்தரையர் மறுமலர்ச்சிப் பேரவையும் இணைந்து நடத்தக்கூடிய இந்த இனிய கல்வி பரிசளிப்பு விழாவில், உங்கள் உறவாக தொடர்ந்து பங்குகொள்ளும் பெரும்பாக்கியத்தை எனக்கு வழங்கி உங்களில் ஒருவனாக என்னை அங்கீகரித்தமைக்கு எனது நன்றிகளை உரித்தாக்கி கொள்கிறேன்.
அன்பான உறவுகளே..! இதுபோன்ற கல்வி பரிசளிப்பு, ஊக்குவிப்பு விழாக்கள் இங்கு மட்டுமல்ல, முத்தரையர் மக்கள் எங்கெல்லாம் செரிந்து வாழ்கிறார்களோ அங்கெல்லாம் சீறும் சிறப்புமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது, மதுரை, திருச்சி, சென்னை, காரைக்குடி, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் என்று பரவலாக நடந்துகொண்டுதான் இருக்கிறது, இன்னும் சொல்லப்போனால் தமிழகத்திலே இருக்கக்கூடிய நூற்றுக்கணக்கான சாதிகளில் அதிகப்படியாக "கல்விக்கு" விழா எடுக்கும் ஒரே சமூகம் நம்முடைய "முத்தரையர்" சமூகம்தான். இது நமக்கு பெருமைக்குறிய விசயம், இதற்காக நாம் பெருமை பட்டுக்கொண்டாலும், வருத்தப்பட வேண்டிய ஒரு துர்பாக்கிய நிலையிலும் இருக்கிறோம், ஆம் இங்கு தமிழகத்தில் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள், பள்ளிகளுக்கே செல்லாதவர்களில் 80% என் சாதியை சேர்ந்தவர்கள், ஆம் அவர்கள் அனைவரும் முத்தரையர் சாதியை சேர்ந்தவர்கள், படிக்காமல், படிக்க போகாமல் இருக்க குடும்பம், பொருளாதாரம், ஆணவம், அலட்சியம் என்று பல காரணிகள் இருந்தாலும், இந்த காரணிகளால் இப்படியான கல்வி விழாக்களைக் கூட பெருமையாக சொல்ல முடியாத அவலநிலை.
இங்கு பரவலாக ஒரு கேள்வி பொதுவெளியில் தொக்கி நிற்கிறது, ஏன் மாணவர்களிடம் சாதியை தினிக்கிறீர்கள் ? சாதியாய் ஏன் துண்டாடுகிறீர்கள் ? இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க இந்த அரங்கம்தான் சரியான தளம் என்று கருதுகிறேன்,
நிச்சயமாக இந்த விழாக்கள் மூலம் எங்கள் பிள்ளைகள் மனதில் சாதி வெறியையோ, சாதி உணர்வையோ நாங்கள் விதைக்கவில்லை, நூற்றாண்டுகளாக அரசியல், பொருளாதாரம், கல்வி என்று எல்லா நிலைகளிலும் வஞ்சிக்கப்பட்ட, துரோகிக்கப்பட்ட இனத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள் இவர்கள், இந்த சமூகத்தின் விடியலுக்கு எங்களிடம் இருக்கும் ஒரே நம்பிக்கை, கடைசி நம்பிக்கை இந்த மாணவசெல்வங்கள்தான், அதனால் கல்வியில் சிறந்த இந்த செல்வங்களை பாரட்டவும், சீராட்டவும் நினைக்கிறோமே தவிர வேறு பெரிய காரணிகள் எதுவுமில்லை.
என் அன்பான மாணவ செல்வங்களே, நீங்கள் யாரும் இந்த சமூகத்திற்காக கொடி பிடிக்கவோ, கோசம் போடவோ எப்போதும் வரவேண்டாம், அதை செய்ய ஒவ்வொரு ஊரிலும் ஓராயிரம் பேர் சும்மாதான் இருக்கிறார்கள், அவர்கள் அதை செய்துக்கொள்ளட்டும், நீங்கள் ஒவ்வொருவரும் போட்டி நிறைந்த இந்த உலகில் வெற்றியாளர்களாக பவனி வர வேண்டும், அதற்காக எங்களை படிகற்களாக பயன்படுத்திக் கொள்ளுங்கள், வெற்றியை மட்டும் இலக்காக கொள்ளுங்கள், நீங்கள் பெறப்போகும் வெற்றியும் வாழ்வும்தான் இந்த சமூகத்தின் விருப்பம், அதற்காகதான் இந்த விழா.
அன்பான என் சமூகத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களே..! உங்களுக்கெல்லாம் நம்மில் இருந்து வெற்றியாளராக மாறிய ஒருவரை பற்றி தெரிந்திருக்கும் அடுத்த வாரங்களில் பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரா நகரில் துவங்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தில் இருந்து கலந்து கொள்ளும் எட்டு போட்டியாளர்களில் நமது உறவு உங்கள் சகோதரன் சதீஷ்குமார் சிவலிங்கமும் ஒருவர் என்பதை நீங்கள் அறிவீர்கள், நம் சகோதரன் பளுவை தூக்கி பதக்கம் வெல்வான் என்று நாம் வாழ்த்துவோம், அந்த வெற்றியாளனை போல நீங்களும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய அத்தனை வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தி வெற்றியாளர்களாக இந்த பூமியில் பவனி வர வேண்டும். எதில் உங்களுக்கு ஆர்வமோ அது விளையாட்டா, விஞ்ஞானமா எதுவாக இருந்தாலும் அதில் நீங்கள் முத்திரை பதித்திட வேண்டும், சாதியிலேயே முத்தரை பதித்த நீங்கள் சாதனையிலும் முத்திரை பதித்திட வேண்டும்.
அரசியல் மட்டுமே ஒரு சமூகத்திற்க்கு போதுமானதல்ல, ஆனால் அரசியல் இல்லாமல் இந்த நாட்டில் எதுவுமே சாத்தியமுமில்லை, அது ஒரு பக்கம் இருக்கட்டும், அதை இங்கு மேடையில் இருப்பவர்கள் பார்த்துக்கொள்ளட்டும், தமிழகத்தில் பணியாற்றக்கூடிய 500க்கும் மேற்பட்ட ஐ ஏ எஸ் அதிகாரிகளில் ஒரே ஒருவர்தான் நம் சமூகத்தை சார்த்தவர் (சங்கர்) எனது அறிவுக்கு எட்டியவரை நம் சமூகத்திலிருந்து ஒருவர்கூட ஐ பி எஸ் அதிகாரியாகவோ, ஐ எப் எஸ் அதிகாரியாகவோ கிடையாது, போனால் போகிறது என்று முதல்முறையாக ஒரு பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியை நம் சாதிக்கு வழங்கி இருக்கிறார்கள், இந்தியாவின் முதல் உயர்நீதிமன்றம், 150 ஆண்டுகள் பழமையான நீதிமன்றம் என்றெல்லாம் புகழ்பெற்ற சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரே ஒரு நீதிபதி பதவி என்பது இன்றுவரை கனவாகவே இருக்கிறது, இந்த கனவுகள் எப்படி நினைவாகும், அதற்காக எங்கள் முன்பு இருக்கக்கூடிய ஒரே நம்பிக்கை நீங்கள்தான்.
நீங்கள் எதை வேண்டுமானாலும் படியுங்கள், அது மருத்துவமாக, பொறியியலாக, கலை அறிவியலாக எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், அதோடு உங்கள் எல்லைகளை தயவு செய்து சுருக்கிவிடாதீர்கள், மருத்துவமும், பொறியியலும், உங்கள் குடும்பத்தாரின் கனவாக இருக்கும், உங்களுடைய பொருளாதார தேவைகளை நிறைவு செய்வதாக இருக்கும் ஆனால் அதுவே இறுதியாக இருந்துவிட வேண்டாம், அரச பதவிகளை கைப்பற்ற வேண்டும் என்ற வெறியை உங்கள் மனதில் விதைத்துக்கொள்ளுங்கள், அரச பதவிகளை கைப்பற்றுவேன் என்று இங்கேயே இப்போதே சபதம் எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் தமிழக அரசின் டி என் பி எஸ் ஸி நடத்தக்கூடிய அனைத்து போட்டி தேர்வுகளையும் குருப் ஒன்று தொடங்கி நான்கு வரை, கிராம நிர்வாக அதிகாரி பதவி வரை ஒன்றையும் விட வேண்டாம், தேர்வுகளை ஒருமுறைக்கு இருமுறை எழுதுங்கள் பயம் போய்விடும் பிறகு உங்கள் லட்சியம் நிச்சயம் வெல்லும். அத்தோடு அல்ல நீங்கள் ஒவ்வொருவரும் IAS, IPS, IFS, IRS, நீதிபதி, துணைவேந்தர் என்று பெரிய பதவிகளை உங்கள் மனதில் லட்சியமாக கொள்ளுங்கள், இந்த பதவிகளில் எப்போது நீங்கள் அமர்கிறீர்களோ அன்றுதான் இந்த சமூகத்திற்க்கு, நம் சாதிக்கு விடிவு பிறக்கும், அன்றுதான் இந்த சமூகத்திற்க்கு வெற்றி திருநாள், இந்த பதவிகளை இலக்காக கொண்டு முன்னேற இந்த அரங்கம் பரிபூரணமாக உங்களை ஆசிர்வதிக்கும், ஆதரவினை வழங்கும், நாளை நீங்கள் இந்த பதவிகளில் அமர்ந்து காரைக்குடிக்கு வரும் அந்த நல்ல நாளுக்காக இந்த அரங்கம் காத்திருக்கும், உங்களை உச்சிமுகர்ந்து வரவேற்கும்.
அதேபோல நீங்கள் எதை செய்ய நினைத்தாலும், உங்கள் மனதிற்க்கு அது தவறில்லை என்று தோன்றினால் தயக்கமின்றி செய்யுங்கள், இதுவரை யாருமே முயற்சிக்காத ஒன்றை அது சமூகம், குடும்பம் சார்ந்த எதுவாக இருந்தாலும் உங்கள் முயற்சியை நீங்கள் தொடங்கும்போது அதற்காகவே காத்திருக்கும் வீணர்கள் கூட்டமொன்று புறப்பட்டுவரும், முடிந்த அளவு உங்களுக்கு தொல்லைகளை தருவார்கள், அவதூறை பரப்புவார்கள், தடைபோட நினைப்பார்கள், இவர்கள் வேறுயாருமாக இருக்க மாட்டார்கள், நம் சமூகத்தை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள், இந்த வீணர்களை கண்டு பின் தங்கினோமேயானால் நாம் வீழ்ந்துவிடுவோம், இந்த வீணர்களின் ஒரே இலக்கு நம்முடைய கனவுகளை சிதைப்பது மட்டும்தான், இவர்களை நீங்கள் அடையாளம் கண்டு புறம்தள்ள வேண்டும். தூக்கி எறிய வேண்டும், இந்த வீணர்களுக்கு சுயமாக சிந்திக்கும் அறிவு இருக்காது, அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் கலகமூட்டுவது அவர்கள் அதை செய்து கொண்டே இருக்கட்டும், உங்கள் முயற்சிகளை நீங்கள் இன்னும் வலுவாக செய்யுங்கள், இது மாணவர்களுக்கு மட்டுமல்ல, இந்த விழாவினை ஒருங்கிணைத்தவர்களுக்கும்தான் சொல்கிறேன்.
கடந்த வாரங்களில் மத்திய சீர்மரபினர் ஆணையத்தினுடைய தலைவர் திரு. பிகு ராம்ஜி ஐடேட் அவர்கள் மதுரை மாநகருக்கு வந்தபோது அவரை சந்திக்க, அவரிடம் கோரிக்கை மனுவினை கொடுக்க நம் சமூகத்தின் தலைவர்களும், அமைப்புகளும் அங்கு அணி திரண்டதை நீங்கள் அறிந்திருக்க கூடும். என்னுடைய கனவெல்லாம் இங்கு அமர்ந்திருக்கும் உங்களில் ஒருவர் அந்த ஆணையத்தின் தலைவராக வீற்றிருக்க வேண்டும் என்பதுதான். என்னுடைய கனவு வேண்டுமானால் பெரிதாக இருக்கலாம், ஆனால் அது ஒருநாள் உங்களால் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்.
நன்றி வணக்கம்