வசதி படைத்தவன் முதல் வசதி படைத்துவிட வேண்டும் என்று பாலைவன நாடுகளுக்கு பறப்பவன்வரை கண்களில் கனவுகளோடு ஏறி இறங்கும் விமானங்களையே ஆச்சர்யமோடு பார்க்கும் அழகிய இடம் "விமான நிலையம்" ஒவ்வொரு விமான நிலையங்களுக்கும் பின்னால் சில கண்ணீர் கதைகள் இருக்கும், ஆசையாசையாய் கட்டிய வீடுகள் இருந்த இடங்களில் விமான சக்கரங்கள் சுகமாய் ஓடிக்கொண்டு இருக்கும்.
விமான நிலையம் என்பது ஒவ்வொரு நாட்டின் அடையாளம், ஏறி இறங்கும் விமானங்களின் எண்ணிக்கையே அந்நாட்டின் செல்வசெழிப்பை பறைசாற்றும். விமான நிலையம் என்பது ஏதோ ஒரு ஊரின் சந்தைமடமோ, பேருந்து நிலையமோ அல்ல....
அப்படியான விமான நிலையத்துக்கு ஒரு பெயரை சூட்டினால் அது உலகளவில் கவனத்தை பெரும், அப்படி ஒரு விமான நிலையத்துக்கு "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்" என்று பெயர் சூட்டினால் அது வரலாற்றில் இரட்டிப்பு செய்யப்பட்ட ஒரு மாமன்னருக்கு, அவரின் வழிதோன்றலாய் மாபெரும் ஜனசமுத்திரமாய் இருக்கும் "முத்தரையர்" மக்களுக்கு உலகளவில் மிகப்பெரிய அங்கிகாரம் கிடைத்துவிடும்.
இருக்கும் எல்லா விமான நிலையங்களுக்கும் ஒரே பெயரை சூட்டிவிட முடியுமா ? அது நடைமுறை சாத்தியமா ? கோரிக்கை ஒன்றை / விருப்பம் ஒன்றை தெரிவிக்கும் முன்பு அறிவு சார்ந்த மக்களிடம் கருத்துரு பெறாமல் தான் தோன்றிதனமான கோரிக்கைகளுக்கு எவ்வளவு பலம் கிடைத்துவிடும் ?
திருச்சி விமான நிலையத்துக்கு "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்" பெயரை சூட்ட வேண்டும். இது ஒரு கோரிக்கை இந்த கோரிக்கைக்கு வலு சேர்க்க பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ஒரு அறிக்கைவிட்டார், அத்தோடு முடிந்துவிட்டது, இதற்காக அடுத்தகட்ட திட்டமென்ன ? இந்த கோரிக்கைக்காக மக்கள் ஆதரவு திரட்டுதல், அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்துதல், ஒத்த கருத்தினை உருவாக்குதல் எதுவுமே எனக்கு தெரிந்து இதுவரை கிடையாது, திருச்சி விமான நிலையத்துக்கு வேறு எந்த பெயரையும் சூட்டகோரி இதுவரை எந்த கோரிக்கையும் எழுந்ததாக தெரியவில்லை, ஆக பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் ஆட்சிபரப்புக்கு உட்பட்ட, அருகாமை விமான நிலையமான திருச்சி விமான நிலையத்துக்கு பெயர் சூட்டகோருவது ஒரு நியாயமான கோரிக்கை..
அதேபோல மதுரை விமான நிலையத்துக்கும் "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்" பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை சிலர் முன் வைக்கிறார்கள், அது எவ்வளவு தூரம் சரியான கோரிக்கை, விமான நிலையம் அமைக்க நிலம் கொடுத்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் "முத்தரையர்கள்" என்பதனால் இந்த கோரிக்கைக்கு ஒரு வலு சேர்கிறது, ஆனால் "பெரும்பிடுகு முத்தரையர் பெயரை விடுத்து" "கண்ணப்பநாயனார் விமான நிலையம்" என்று பெயர் சூட்ட கோரினால் இரு விமான நிலையங்களுக்குமான கோரிக்கையில் ஒரு வித்தியாசம் இருக்கும், அதேபோல ஹிந்துத்துவா பாஜகவின் கவனத்தையும் எளிதில் பெற முடியும்.
இதே மதுரை விமான நிலையத்துக்கு "முத்துராமலிங்க தேவர்" பெயரினை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை "முக்குலத்து மக்கள் / அமைப்புகளையும் தாண்டி" இந்தியாவின் ஆட்சி அதிகாரங்களின் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும் சுப்பிரமணியசுவாமி, தமிழகத்தின் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் போன்றோரும் முன்வைக்கிறார்கள், ஒருவேளை நாளை திமுக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைந்தால் இந்த கோரிக்கையை ஒட்டி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி "முத்துராமலிங்க தேவர்" பெயரினை சூட்டிவிடுவார்கள்.
அதேபோல மதுரை விமான நிலையத்துக்கு பள்ளர் சமூகமும் "தியாகி இம்மானுவேல் சேகரனார்" பெயரினை வைக்க கோரிக்கை வைத்திருக்கிறது, அது எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பது தெரியவில்லை..
ஆனால்...
கடந்தகால வரலாற்றை பார்த்தால் பள்ளர் சமூகத்தை குறைத்து மதிப்பிட முடியாது 1997 ஆம் ஆண்டு வீரர் சுந்தரலிங்கனார் பெயரை போக்குவரத்து கழகத்துக்கு சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மிகப்பெரிய போராட்டங்களும் / கலவரங்களும் நடந்து தென் தமிழகமே பற்றி எறிந்தது, இந்த போராட்டத்தின் விளைவாகவே அன்று மாவட்ட தலைநகரங்கள் (திருச்சி பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மாவட்டம் உட்பட), போக்குவரத்து கழகங்களின் பெயர்களை அதிரடியாக நீக்கியது அன்றைய திமுக அரசு... ஆக பள்ளர் சமூகத்தின் கோரிக்கை ஏற்க்கப்படாத பட்சத்தில் அது வேறுவிதமான போராட்டத்தை அந்த சமூகம் முன்னெடுக்கவே வாய்ப்புகள் அதிகம்.
ஆக போட்டியே இல்லாத திருச்சி விமான நிலையமா ? போட்டிகளோடு கலவரம் சூழ்ந்த மதுரை விமான நிலையமா ? எதற்கான போராட்டத்திற்கு முக்கியதுவம் கொடுக்க வேண்டும், கோரிக்கையினை வலுப்படுத்த வேண்டும் ?
விவாதியுங்கள்
கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக