வியாழன், 25 ஜனவரி, 2018

ஆண்டாள் சர்ச்சை முடிவதற்குள் ஆழ்வார் சர்ச்சை: எம்எல்ஏ தினகரன் கருத்துக்கு எதிர்ப்பு

திருச்சி:
    ஆண்டாள் விவகாரம் முடிவதற்குள் திருமங்கை ஆழ்வார் குறித்து எம்எல்ஏ தினகரன் தெரிவித்த கருத்து புது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஆர்.கே.நகர் எம்எல்ஏ தினகரன் கூறுகையில், ‘ஆண்டாள் என்பது தெய்வப் பிறப்பாக நம்புகிறோம். அவர் குறித்து வைரமுத்து பேசியது தவறு. மத நம்பிக்கையை தகர்த்திடும் வகையில், யாரோ எழுதியதை தேவையில்லாமல் பேசி சிக்கலில் மாட்டிக்கொண்டார். நாலாயிரம் திவ்விய பிரபந்தத்தில், 2 ஆயிரம் பாடல்கள் எழுதிய திருமங்கை ஆழ்வார் கூட என் மூதாதையர் தான். சீர்காழி பக்கத்தில் ஆழிநாட்டு அரசராக இருந்தவர், என தினகரன் கூறியது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
எம்எல்ஏ தினகரன் தெரிவித்த கருத்துக்கள் காரணமாக முத்தரையர் சமுதாய மக்களின் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளார். அவர் தனது மூதாதையர் என்று கூறிய, திருமங்கை ஆழ்வார் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்றும், தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள முத்தரையர்கள் நம்பிக்கையுடன், அவரை தெய்வமாக வணங்கி வருகிறோம் என்று, தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மரு.பாஸ்கரன் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
 திருமங்கை ஆழ்வார் எங்களின் மூதாதையர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருந்த வைணவர்களின் ஆதரவைப் பெற வேண்டும் என்பதற்காக, இப்படி வரலாறை மறைக்கும் வகையில், ஏதோ ஒரு ஆதாரத்தை வைத்துக் கொண்டு, அவர் தங்களின் மூதாதையர் என்று தினகரன் கூறியுள்ளது கண்டிக்கத்தக்கது. முத்தரையர்களின் 300 ஆண்டு கால வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், திருமங்கை ஆழ்வார் பஜனை மடங்கள் வைத்துள்ளனர். சீர்காழியில் கூட திருமங்கையாழ்வார் ஆன்மீக நிகழ்வுகளில் முத்தரையர்கள் தான் முன்னின்று நடத்தி வருகின்றனர். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் பெருமாள் கோயில்களில் நடைபெறும் வேடுபறி விழாவில், முத்தரையர்கள் தான் பங்கேற்கின்றனர். இதில் இருந்தே திருமங்கை ஆழ்வார் முத்தரையர் என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆகையால், அரசியல் லாபத்துக்காக திருமங்கயாழ்வாரை சொந்தம் கொண்டாடும் தினகரன் பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஆண்டாள் குறித்து வைரமுத்து பேசியதால் ஏற்பட்ட சர்ச்சை இன்னும் முடிவுக்கு வராத நிலையில் ‘வைணவ’ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களில் இளையவர் மற்றும் இறுதியானவருமான திருமங்கை ஆழ்வார் குறித்து தினகரன் எம்எல்ஏ தெரிவித்த கருத்து புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News Source : DINAMALAR

1 கருத்து:

  1. எந்த நாயப் பாத்தாலும் நம்ம வரலாற்றையும் நம் முன்னோர்களையும் உரிமை கெண்டாடுவதையே வழக்கமா வச்சிருக்கானுங்க.இவனுங்க கிட்ட இருந்து ஜாக்கிரதையா தான் இருக்கனும்.

    பதிலளிநீக்கு