தமிழக முதலமைச்சருடனான சந்திப்பு..!!
2020 ம் ஆண்டின் கடைசிநாளுக்கு முந்தைய நாள் (30.12.2020) இரவு 7:30 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் முத்தரையர் சமுதாய தலைவர்களுடன் சந்திக்கிறார் என அழைப்பு வந்தது, மொத்தம் 14 அமைப்புகளுக்கு அழைப்பு கொடுத்திருக்கிறார்கள், ஒன்றிரண்டு அமைப்புகளை தவிர ஏனையோர் வருகைபுரிந்திருந்தார்கள்,
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணப்பாளர் என்ற முறையில் நானும் அந்த நிகழ்வில் கலந்துகொள்ள சென்றிருந்தேன், துரதிஷ்டவசமாக முதலமைச்சரின் ஏனைய நிகழ்வுகளை முடிந்து சந்திப்புக்கு வரும்பொழுது இரவு மணி 12:30 அதாவது தேதிக்கு 31 டிசம்பர்.
இத்தனை அமைப்புகளை அழைத்திருந்தாலும் சூழ்நிலைகருதி யாரேனும் ஒரிருவர் மட்டுமே பேச முடியும் என்ற நிலை, தமிழக அளவில் பெரிய அமைப்புகளை நடத்தும் தலைவர்கள் கருத்துக்களை முன்வைப்பார்கள் என கருதினேன், அவர்கள் பேசவில்லை மாறாக அவர்கள் சார்பாக ஒருவர் பேசினார் அதாவது பத்து அமைப்புகள் சார்பாக பேசுவார் என சொல்லிவிட்டார்கள் (நான் அவருடைய கருத்திலோ / என் சார்பில் அவர் பேசுவதிலோ உடன்படவில்லை) , அவரோ நள்ளிரவு நேரத்தில் எந்த கருத்தை முன்வைக்க வேண்டுமோ அதை பேசாமல் நீட்டி முழக்கி பேசிக்கொண்டு இருந்தார், இதனைதான் ஏற்கனவே
"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி"
கிடைத்த வாய்ப்பில் ஒரு முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய விசயங்களை ஒரீரு வார்த்தைகளில் கொண்டு சேர்க்காமல், பேசி புரிய வைக்க முடியாத, எழுத்தில் கொடுக்கப்பட வேண்டிய கோரிக்கைகளை பேசிக்கொண்டே இருந்தது அங்கிருந்த அனைவருக்குமே அலுப்பை ஏற்படுத்திவிட்டது சோகமான நிகழ்வு, இப்படிதான் நம் சமுதாயத்திற்கு கிடைக்கும் வாய்ப்புகளை பிரதிநிதிகளாக கலந்துகொள்பவர்கள் இந்தநாள் வரை வீணடித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை கண்கூடாக கண்டேன்.
மற்றபடி தமிழ்நாடு முத்தரையர் சங்கம் திரு.ராமலிங்கம் ஓரிரு வார்த்தைகள் பேசினார், டாக்டர் சந்திரசேகர் நியமம் கோயில் குறித்து பேசினார் அத்தோடு போதுமென வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து பேச வேண்டிய கருத்துக்களை கோரிக்கை மனுவாக முதலமைச்சரிடம் நேரில் கொடுக்க வைத்தார்கள்,
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் சார்பில் நாம் முன் வைத்த கோரிக்கைகள் கீழே....
மாண்புமிகு முதல்வர் அவர்களே, முத்தரையர் என்ற பேரினத்தின் வரலாற்றை நீங்கள் அறிந்திருக்க கூடும், ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று பெருமையை மட்டும் சுமந்து திரிகிறோம், சுதந்திரத்திற்கு பிறகு கைவிடப்பட்ட ஒரு சமூகம் என்றால் அது எங்கள் முத்தரையர் சமூகம் மட்டும்தான், அடிப்படையான வசதிவாய்ப்புகளுக்கு கூட தடுமாறும் நிலையிலேயே இன்றும் எங்கள் மக்களில் 90% பேர் இருக்கிறார்கள் என்பதுதான் வேதனையான உண்மை..,
1947 முதல் சுதந்திர இந்தியாவில் தமிழகத்தில் முதலமைச்சர்களாக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், பி.எஸ்.குமாரசாமிராஜா, மூதறிஞர் ராஜாஜி, காமராஜர், பக்தவசலம், அறிஞர் அண்ணா, கருணாநிதி என எந்த முதலமைச்சரும் எங்கள் சமூகத்தை ஏறெடுத்து பார்க்கவில்லை, நாங்கள் இந்த மண்ணின் பூர்வகுடிகள் என்ற எந்த கரிசனத்தையும் மேற்கூறிய எந்த முதலமைச்சர்களும் அங்கீகரிக்கவில்லை,
வரலாற்றில் முதல்முறையாக அதிமுகவை தோற்றிவித்த புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் எங்கள் சமூகத்தை அங்கீகரித்து மரியாதைக்குறிய எம்.ஆர்.கோவேந்தனை தனது அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார், அன்று முதல் இன்றுவரை அமைக்கப்பட்ட அனைத்து மந்திரிசபையிலும் எங்கள் சமூகத்திற்கு மந்திரிசபையில் இடமளித்து கெளரவபடுத்திவருகிறது அதிமுக.
அதேபோல புரட்சிதலைவி அம்மா அவர்கள் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் இதே திருச்சி மாநகரின் மத்தியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு சிலை அமைத்தும், 29 பட்டங்களில் வாழும் எங்கள் மக்களை முத்தரையர் என ஒரே பெயரில் அறிவிக்க சொல்லி அரசாணை வெளியிட்டும், திருச்சி மாவட்டத்தை பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மாவட்டமென அறிவித்தும் பெருமைபடுத்தினார்கள்.
இன்று நீங்களோ பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு திருச்சியில் மணிமண்டபம் அமைத்துதந்திருக்கிறீர்கள்,அது மட்டும் போதாது எங்கள் சமூகத்தவர்கள் பரந்து வாழும் மதுரை, தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் அரசாங்கத்தில் செலவிலேயே பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு சிலை அமைத்து தர வேண்டும், அதேபோல தலைநகர் சென்னையில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு சிலை அமைத்து தர வேண்டும்.
புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் காலம் தொடங்கி அதிமுகவின் ஆணிவேராக இருக்கும் முத்தரையர் சமூகம், அரசியல் சூழ்ச்சிகளை அறிந்திடாத சமூகம், சூது செய்து பதவிகளை பெற தெரியாத சமூகம் முத்தரையர் சமூகம், இன்றும் கூட எங்களிடம் இருக்கும் மாவட்ட செயலாளர், அமைப்பு செயலாளர் உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் நீங்களாக வழங்கிய பதவிகளாகதான் இருக்குமே தவிர, எங்கள் மக்கள் அரசியல் செய்து, நிர்பந்தம் செய்து பெற்ற பதவிகளாக நிச்சயம் இருக்காது, ஆகவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நீண்ட வரலாற்றை கொண்ட பழம்பெரும் எங்கள் முத்தரையர் சமூகத்தை அங்கீகரித்து அதிமுகவில் இருக்கும் சிறுபான்மையினர் பிரிவு, தாழ்த்தப்பட்டோர் பிரிவு மீனவர் பிரிவுகளை போல பழம்பெருமை கொண்ட முத்தரையர் சமூகத்துக்கு தனிபிரிவினை உங்கள் கட்சியிலேயே வழங்கி எங்கள் இளைய தலைமுறையினருக்கும் அரசியலில் உரிய அங்கீகாரத்தை வழங்கிட வேண்டும்.
திருச்சி மாவட்டத்தில் வழக்கமாக வழங்கும் இரண்டு மூன்று என்ற எண்ணிக்கையிலான சட்டமன்ற தொகுதிகளை அதிகபடுத்தி குறைந்தது ஐந்து தொகுதிகளை முத்தரையர் சமூகத்துக்கு ஒதுக்கி தர வேண்டும், திருச்சியை தவிர்த்து முத்தரையர்கள் எண்ணிக்கையில் கிட்டதட்ட லட்சங்களில் இருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, அறந்தாங்கி,திருமயம் தொகுதிகளையும், தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணி, பட்டுக்கோட்டை தொகுதிகளையும், மதுரை மாவட்டத்தில் மேலூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளையும் முத்தரையர்களுக்கு ஒதுக்கி தர வேண்டும், திண்டுக்கல் மாவட்டம் நந்தம் தொகுதி, கரூர் மாவட்டம் குளித்தலை தொகுதிகளையும் முத்தரையர் சமூகத்துக்கு ஒதுக்கி தர வேண்டும். குறைந்தபட்சம் 25 தொகுதிகளாவது எங்கள் சமூகத்திற்கு கிடைத்திட மாண்புமிகு முதலமைச்சர் வழி அமைத்திட வேண்டும்
அதேபோல உங்கள் கட்சியோடு இணக்கமாக இருக்கும் முத்தரையர் முன்னேற்ற சங்கம், வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் போன்ற அமைப்புகளுக்கு தலா இரண்டு தொகுதிகளாவது கூட்டணியின் சார்பில் வழங்கிட வேண்டும்.
முத்தரையர் சமூகத்தில் எண்ணிக்கை பலமுடைய வளர்ச்சி குறைந்த வலையர் மற்றும் அம்பலக்காரர் பிரிவினருக்கு தனிதனியே நலவாரியம் அமைத்து அந்த வாரியத்தின் வாயிலாக பொருளாதாரத்தில் பின் தங்கிய முத்தரையர் சமூக மாணவ மாணவியருக்கு டிஎன்பிஎஸ்சி மற்றும் ஐஏஎஸ் ஐபிஎஸ் பதவிகளுக்கான தேர்வுகளுக்கு பயிற்சிவகுப்புகளை மாவட்டந்தோறும் இலவசமாக அரசாங்கமே நடத்திதர வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பை வெறுமனே புள்ளிவிவரங்களை மட்டும் திரட்டுவதாக இல்லாமல் அடிப்படையிலிருந்தே நேரடியாக கணக்கெடுக்க வேண்டும், சாதிசான்றிதழ்களை ஆதார், பான் கார்டு போலவே முழுமையான விவரங்களை உள்ளடக்கி சுமார்ட் கார்டு வடிவில் வழங்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டாலோ, நடத்தாமல் இடஒதுக்கீட்டை வழங்குவதாக இருந்தாலோ முத்தரையர் சமூகத்துக்கு தனி இடஒதுக்கீடு 15% தருவதை மாண்புமிகு முதலமைச்சர் உறுதிபடுத்த வேண்டும்.
அதேபோல திருச்சி விமான நிலையத்துக்கு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பெயர் சூட்ட தமிழக அரசு பரிந்துரை வழங்க வேண்டும்,
தேர்வாணைய உறுப்பினராக முத்தரையர் ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்,
தஞ்சை மாவட்டம் நியமம் செந்தலையில் தமிழக அறநிலையத்துறையில் சார்பில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வழிபட்ட பிடாரி அம்மன் ஆலயத்தை கட்டிதர வேண்டும்,
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் வரலாற்றை தமிழக அரசு பாடநூல்களில் எழுதிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இறுதியாக எங்கள் சமூகத்திற்கு வழக்கம்போல வழங்கும் ஒரு அமைச்சர் பதவியோடு மேலும் ஒரு அமைச்சர் பதவியை 2021 ல் அமையும் உங்கள் ஆட்சியில் தருவதற்கான உத்தரவாதத்தை இந்த கூட்டத்தின் வாயிலாக நீங்கள் தர வேண்டும்.
பட்டுக்கோட்டை கா.சஞ்சய்காந்தி அம்பலகாரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக