முத்தரையர் சிலையை அகற்ற எதிர்ப்பு: கிராம மக்கள் போராட்டம்
First Published : 25 May 2010 01:46:44 AM IST
Last Updated :
ராமேசுவரம், மே 24: ராமேசுவரத்தில் முத்தரையர் சிலையை அகற்ற முயற்சித்த போலீஸôருக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சிலை முன் அமர்ந்து திங்கள்கிழமை போராட்டம் செய்தனர்.
ராமேசுவரம் அருகே ஏரகாடு கிராமத்தில் சனிக்கிழமை இரவு பெரும் பிடுகு முத்தரையர் சிலை நிறுவப்பட்டது. அரசு அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலையை அகற்றிட வேண்டும் என காவல்துறை, வருவாய்துறையினர் கிராம மக்களிடம் வலியுறுத்தினர்.
இதையடுத்து திங்கள்கிழமை ராமேசுவரம் தாசில்தார் அலுவலகத்தில் கோட்டாசியர் இளங்கோ தலைமையில் சமரசக் கூட்டம் நடந்தது. இதில் கூடுதல் எஸ்.பி. சூரியபிரகாஷ், ராமேசுவரம், கீழக்கரை டி.எஸ்.பி.கள். கமலாபாய், ராதாகிருஷ்ணன், மற்றும் மாவட்ட முத்தரையர் சங்கத் தலைவர் குப்புசாமி, நிர்வாகிகள் செல்லத்துரை, முனியசாமி உள்ளிட்ட ஏரகாடு கிராமப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் அரசு அனுமதியின்றி வைக்கப்பட்ட முத்தரையர் சிலையை அகற்றிவிட்டு, மீண்டும் சிலை நிறுவ ஒரு மாதத்திற்குள் அரசு அனுமதி பெறுவது எனவும், விரைவில் அரசு அனுமதி வழங்க பரிந்துரை செய்வது எனவும் தீர்மானம் இயற்றப்பட்டது.
இதையடுத்து சிலையை அகற்ற ஏரகாடு கிராமத்திற்குச் சென்ற வருவாய்த்துறை மற்றும் போலீஸôருக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் துணியால் மூடப்பட்ட சிலை முன் அமர்ந்து போராட்டம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
24.05.2010 அன்று "தினமணி" நாளிதழில் வந்த செய்தி.............
1335-வது சதய விழா: முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிப்பு
First Published : 24 May 2010 12:50:09 PM IST
Last Updated :
திருச்சி, மே 23: பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1335-வது சதய விழாவையொட்டி, திருச்சி கன்டோன்மென்ட்டில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பிலும், அரசியல் கட்சிகளின் சார்பிலும் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அரசு சார்பில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு, வனத் துறை அமைச்சர் என். செல்வராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, கே.என். சேகரன், மா. ராஜசேகரன், இரா. ராணி, இரா. மாணிக்கம்,
திருச்சி மாநகராட்சி மேயர் எஸ். சுஜாதா, துணைமேயர்
மு. அன்பழகன், ஆணையர் த.தி. பால்சாமி, மாவட்ட ஊராட்சித் தலைவர் சங்கீதா வசந்தகுமார், ஒன்றியக் குழுத் தலைவர்கள் அ.த.த. செங்குட்டுவன், எஸ். துரைராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
அதிமுக சார்பில் மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலரும், முன்னாள் அமைச்சருமான ஆர். வெங்கடாசலம் தலைமையில் அதிமுகவினர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், மாநகர் மாவட்ட அதிமுக செயலர் ஆர்.
மனோகரன், புறநகர் மாவட்ட செயலர் பே. சுப்பு என்கிற சுப்பிரமணியன், திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ப. குமார், சட்டப்பேரவை உறுப்பினர் மு. பரஞ்சோதி, முன்னாள் அமைச்சர்கள் கு.ப. கிருஷ்ணன், ப. அண்ணாவி, கே.கே. பாலசுப்பிரமணியன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் பிரின்ஸ் எம். தங்கவேல், என்.ஆர். சிவபதி, டி. ரத்தினவேலு, பாலன், மாநகர் மாவட்ட அவைத் தலைவர் வெல்லமண்டி என். நடராஜன், மாநகர் மாவட்ட ஜெ. பேரவை செயலர் சீனிவாசன் உள்ளட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஆர். விசுவநாதன் தலைமையில் சங்கத்தினர் வரகனேரியிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு வந்து பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் அக் கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
கட்சியின் மாவட்டச் செயலர்கள் ஆர். விஜயராஜன், செந்தில்குமார், நடராஜன், தொகுதிச் செயலர்கள் ஏ.எம்.ஜி. விஜயகுமார், சக்கரவர்த்தி உள்ளிட்டோர் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் அக்கட்சியின் நிறுவனர் - தலைவர் டி.ஆர். பச்சமுத்து உடையார் தலைமையில் அக் கட்சியினர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
சோழிய வேளாளர் சங்கத்தின் சார்பில் சங்கத் தலைவர் வி. ஜயபால் உள்ளிட்டோரும், பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாநகர் மாவட்டத் தலைவர் வரகனேரி எஸ். பார்த்திபன், கட்சி நிர்வாகிகள் திருமலை, பெரியசாமி உள்ளிட்டோரும் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் சார்பில் சங்கத்தின் பொதுச் செயலர் மரு. பாஸ்கரன் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
சங்கத்தின் மாவட்டச் செயலர் தங்கவேல், பொருளாளர் குஞ்சான், மாநகரப் பொறுப்பாளர்கள் ஜயச்சந்திரன், வேலாயுதம், பெரியசாமி, ராஜமாணிக்கம், விஸ்வம், மூர்த்தி, ஆனந்த் உள்ளிட்டோர் மாலையணிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மதிமுக சார்பில் புறநகர் மாவட்டச் செயலர் ஆர். நடராஜன் தலைமையில் அக் கட்சியினர் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்தனர். ஒன்றியச் செயலர்கள் எல். கிருஷ்ணமூர்த்தி, டி.டி.சி. சேரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராஜன் பன்னீர்செல்வம், கோபால், தமிழகன், மகேஷ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
திருச்சிமுத்தரையர் சமூகத்தை "எம்பிசி' பட்டியலில் சேர்க்க வலியுறுத்தல்
First Published : 24 May 2010 12:50:22 PM IST
Last Updated :
திருச்சி, மே 23: முத்தரையர் சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1335-வது சதய விழா பொதுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தென்னூர் உழவர் சந்தை திடலில் நடைபெற்ற இந்தப் பொதுக் கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர். விசுவநாதன் தலைமை வகித்தார்.
பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
முத்தரையர் மரபில் 29 பட்டப் பெயர்கள், தொழில்பெயர்கள் மற்றும் வழங்கு பெயர்களில் வாழும் அனைவரையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து தமிழக அரசு ஆணையிட வேண்டும்.
முத்தரையர் என்ற தலைப்பின் கீழ் உள்ள அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பிற இனத்தவரின் தாக்குதல்களில் இருந்து சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் உள்ளதைப் போல, சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தி, முத்தரையர்களுக்கு 20 சதம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
சட்டப் பேரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும் முத்தரையர் சமுதாயத்துக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்கியும், நியமனப் பதவிகள், வாரியத் தலைவர் மற்றும் அரசுத் தேர்வாணையக் குழு ஆகியவற்றில் இடம் வழங்க வேண்டும்.
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சிலையை தஞ்சை, சென்னை மற்றும் மதுரை ஆகிய இடங்களில் திறந்து வைத்து அரசு விழா எடுக்க வேண்டும். மேலும், தஞ்சையில் பேரரசருக்கு மணிமண்டபம் அமைக்க வேணóடும்.
அரசு பாடநூல்களில் முத்தரைய மன்னர்களில் புகழ்வாய்ந்த சுவரன்மாறன், 2-ம் பெரும்பிடுகு முத்தரையர், திருமங்கை ஆழ்வார் ஆகியோரின் வரலாறுகள் இடம்பெறச் செய்ய வேண்டும். தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டத்தில் வளப்பக்குடி கிராமத்தையும், மணத்திடல் கிராமத்தையும் இணைக்கும் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும். புதுக்கோட்டை மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையான கொள்ளிடம்- காவிரி உபரிநீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். முத்தரையர் இன மக்களுக்கு சுய தொழில்கள் தொடங்கவும், வங்கிகளில் கடனுதவி பெறவும் தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக, ஒத்தக்கடை பகுதியிலுள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
முத்தரையர் இளைஞர் எழுச்சி இயக்கத்தினர் உண்ணாவிரதம்
First Published : 24 May 2010 01:35:57 PM IST
Last Updated :
தஞ்சாவூர், மே 23: கல்வி, வேலைவாய்ப்பு, அரசியலில் தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, தஞ்சாவூரில் முத்தரையர் இளைஞர் எழுச்சி இயக்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பனகல் கட்டடம் முன் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் எஸ்.எம். மூர்த்தி தலைமை வகித்தார்.
மாநில இளைஞர் அணி செயலர் ஏ.எம். புகழேந்தி முன்னிலை வகித்தார். குரலரசு கழக மாநில விவசாயப் பிரிவு செயலர் கு. மாரிமுத்து உண்ணாவிரதத்தை தொடக்கிவைத்தார்.
தஞ்சாவூரில் பெரும்பிடுகு முத்தரையர் உருவச் சிலையுடன் மணி மண்டபம் கட்டி, புதிய பேருந்து நிலையத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும். தமிழகத்தில் வாழும் முத்தரையர் அனைவருக்கும் குடியிருக்கும் நிலத்திற்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும்.
முத்தரையர் மாணவர்கள் சுயதொழில் தொடங்க பிணையம் இல்லா கடன் வழங்க வேண்டும்.
விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு கூலி நிர்ணயம் செய்து, நடப்பாண்டில் அமல்படுத்த வேண்டும்.
அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன
அனுமதியின்றி முத்தரையர் சிலை: எஸ்.பி. ஆலோசனை
First Published : 24 May 2010 12:39:06 PM IST
Last Updated :
ராமேசுவரம், மே 23: ராமேசுவரத்தில் அருகே அனுமதியின்றி பெரும்பிடுகு முத்தரையர் சிலை வைக்கப்பட்டது குறித்து மாவட்ட எஸ்.பி. (பொறுப்பு) ராஜசேகரன் அதிகாரிகளுடன் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
ராமேசுவரம் அருகே ஏர்க்காடு கிராமத்தில் வசிக்கும் சமூகத்தினர் சனிக்கிழமை இரவு பெரும்பிடுகு முத்தரையரின் 5 அடி உயர சிலையை திறந்துவைத்து பூஜை செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த ராமேசுவரம் தாசில்தார் ராஜேந்திரன், டி.எஸ்.பி. கமலாபாய் மற்றும் போலீஸôர் ஏர்க்காட்டிற்கு விரைந்துசென்றனர்
அங்குள்ள கிராமப் பிரமுகர்களிடம் அனுமதியின்றி சிலை நிறுவக்கூடாது என கூறியுள்ளனர். மேலும், அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலை குறித்து ராமநாதபுரம் கோட்டாசியர் இளங்கோ, கூடுதல் போலீஸ் எஸ்.பி. சூரியபிரகாஷ் மற்றும் போலீஸôர் ஏர்க்காட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை கிராம முக்கிய பிரமுகர்கள் திருச்சியில் நடக்கும் மாநாட்டிற்கு புறப்பட்டுச் சென்றுவிட்டதால், அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தமுடியாமல் போனது. இதன்பின்னர் அதிகாரிகள் உத்தரவின்படி சிலையை துணியால் சுற்றி மூடிவைத்தனர்.
பின்னர் ஞாயிற்றுக்கிழமை மதியம் ராமேசுவரம் தாசில்தார் அலுவலகத்தில் போலீஸ் எஸ்.பி. ராஜசேகரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில்
கோட்டாட்சியர், ஏ.டி.எஸ்.பி., தாசில்தார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக் கூட்டத்தில் அரசின் அனுமதிபெறும் வரை சிலையை திறக்கவேண்டாம் என அறிவுறுத்தியதாகவும்; இதுகுறித்து கிராமப் பிரமுகர்களிடம் செவ்வாய்க்கிழமை ஆர்.டி.ஓ. தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த முடிவெடுக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.
பழஞ்சூரில்....
First Published : 24 May 2010 10:04:13 AM IST
Last Updated :
பட்டுக்கோட்டை, மே 24: பட்டுக்கோட்டை வட்டம், பழஞ்சூரில் இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் என்ற அமைப்பின் 2 -ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1335 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நடைபெற்றது.
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பேரவையின் முன்னாள் தலைவர் வி. கலைமணி இயக்கக் கொடியை ஏற்றி வைத்துப் பேசினார். ஜெயராமன், தசரதன், உத்திராபதி, சரவணன்,நீலகண்டன், மணிகண்டன், விவேக், ராஜகுரு, வீரமணி உள்ளிட்ட இயக்கத்தினர் கலந்து கொண்டனர். இயக்கச் செயலர் எம். காந்தி வரவேற்றார். தலைவர் ஆர். சுரேஷ் நன்றி கூறினார்.
24.05.2010 அன்று தினமலர் நாளிதழில்.....
.பேரரசர் முத்தரையர் சதயவிழா கட்சியினர் மாலை அணிவிப்பு
திருச்சி: பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1,335வது சதயவிழாவையொட்டி, திருச்சியில் பல்வேறு கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1,335வது சதயவிழாவையொட்டி, திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு, தமிழக அரசு சார்பில் போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு, வனத்துறை அமைச்சர் செல்வராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து, கலெக்டர் சவுண்டையா, எம்.எல்.ஏ.,க்கள் பெரியசாமி, சேகரன், ராஜசேகரன், சவுந்திரபாண்டியன், ராணி, மாணிக்கம், மேயர் சுஜாதா, துணைமேயர் அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் பால்சாமி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சங்கீதா, பஞ்சாயத்து தலைவர்கள் செங்குட்டுவன், துரைராஜ், மாநகராட்சி கோட்டத்தலைவர்கள் ஜெரோம் ஆரோக்கியராஜ், அறிவுடைநம்பி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க., சார்பில், மாநில எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் வெங்கடாச்சலம் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மாநகர் மாவட்டச் செயலாளர் மனோகரன், புறநகர் மாவட்டச் செயலாளர் சுப்ரமணியன், எம்.பி., குமார், எம்.எல்.ஏ., பரஞ்சோதி, முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், கே.கே.பாலசுப்ரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தே.மு.தி.க., சார்பில், மாநில அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட செயலாளர் விஜயராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
3.இடஒதுக்கீடு வழங்க கோரி முத்தரையர் உண்ணாவிரதம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம் பனகல் கட்டிடம் முன் முத்தரையர் இளைஞர் எழுச்சி இயக்கம் சார்பில் உண்ணாவிரதம் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். மாநில இளைஞரணி அணி செயலாளர் புகழேந்தி முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சிவனேசன், மாரிமுத்து, நகர செயலாளர் முத்துகுமார் உட்பட பலர் பேசினர். முத்தரையர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அரசியலில் தனி இடஒதுக்கீடு வேண்டும். தஞ்சையில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் உருவச்சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைக்க வேண்டும். தஞ்சை புதிய பஸ் ஸ்டாண்ட்டுக்கு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் என பெயர் வைக்க வேண்டும்.
தமிழகத்தில் வாழும் முத்தரையர் அனைவருக்கும் குடியிருக்கும் நிலத்தை உடனடியாக பட்டா வழங்க வேண்டும். முத்தரையர் மாணவர்களுக்கு சுய தொழில் செய்ய பிணையம் இல்லாத கடன் வழங்க வேண்டும். விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு கூலி நிர்ணயம் செய்து நடப்பு ஆண்டில் வழங்க வேண்டும். சிறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும், என வலியுறுத்தினர்.
2.ராமேஸ்வரத்தில் அனுமதியின்றி சிலை
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ஏரகாடு கிராமத்தில் மாரியம்மன் கோயில் அருகில் அனுமதியின்றி பெரும்பிடுகு முத்தரையர் சிலையை வைத்துள்ளனர். ராமேஸ்வரம் டி.எஸ்.பி., கமலபாய் சிலையை அகற்று கூறினார். சம்பந்தப்பட்டவர்கள் மறுத்துவிட்டதால் ராமேஸ்வரம் தாசில்தார் ராஜேந்திரன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.
நேற்று காலை அதிகாரிகளின் உத்தரவை தொடர்ந்து, நான்கு புறமும் துணியினால் தடுப்பு ஏற்படுத்தி சிலையை மறைத்து வைத்தனர். அந்த பகுதியில் போலீஸ் குவிக்கப் பட்டுள்ளது. ஆர்.டி.ஓ., இளங்கோ, சிவகங்கை எஸ்.பி.,ராஜசேகரன் , ஏ.எஸ்.பி.,பிரகேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
ராமேஸ்வரத்தில் அனுமதியின்றி முத்தரையர் சிலை திடீர் பதட்டத்தால் போலீஸ் குவிப்பு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் அனுமதியின்றி நிறுவப்பட்ட பெரும்பிடுகு முத்தரையர் சிலையை போலீசார் அகற்ற கூறியதால் பதட்டமான சூழ்நிலை உருவானது. ராமேஸ்வரம் ஏரகாடு கிராமத்தில் அதிகளவில் முத்தரையர் இன மக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலின் அருகில் பீடம் அமைத்து நேற்று முன்தினம் இரவில் ஐந்தடி உயரத்தில் மன்னர் பெரும்பிடுகு முத்தரையர் சிலையை நிறுவியுள்ளனர். அனுமதியின்றி சிலை வைத்ததால் ராமேஸ்வரம் டி.எஸ்.பி.,கமலபாய் தலைமையில் போலீசார் நிறுவப்பட்ட சிலையை அகற்றுமாறு கிராமத்தினரிடம் தெரிவித்தனர். ஆனால் பொது மக்கள் மறுத்து விட்டதால் ராமேஸ்வரம் தாசில்தார் ராஜேந்திரன் தலைமையில் கிராமத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனிடையே முத்தரையர் சிலையை போலீசார் அகற்றப்போவதாக தகவல் பரவியதால் ராமேஸ்வரம்,பாம்பன், மண்டபம் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான முத்தரையர் சமுதாயத்தினர் ஏரகாடு கிராமத்தில் நள்ளிரவில் குவிந்தனர். இதனால் பதட்டமான சூழ்நிலை உருவானதால் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர். நேற்று காலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேன்களில் திரண்டு வந்த இச்சமுதாயத்தினர் சிலைக்கு மாலையிட்டு திருச்சியில் நேற்று நடைபெற்ற மன்னர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவிற்கு புறப்பட்டு சென்றனர். பின் அதிகாரிகளின் உத்தரவை தொடர்ந்து முத்தரையர் சிலையின் நான்கு புறமும் துணியினால் தடுப்பு ஏற்படுத்தி சிலையை மறைத்து வைத்தனர். இதனிடையே ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., இளங்கோ, சிவகங்கை எஸ்.பி.,ராஜசேகரன் (ராமநாதபுரம் பொறுப்பு), பரமக்குடி ஏ.எஸ்.பி., பிரகேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் சிலையை பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர்.
முத்தரையர் சதய விழாவில் தேசிய மக்கள் கட்சி துவக்கம்
பதிவு செய்த நாள் : மே 23,2010,02:13 IST
திருச்சி: "தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாடுபடவே தேசிய மக்கள் கட்சி உதயமாகிறது' என்று அக்கட்சியின் மாநில தலைவர் தெரிவித்தார். தேசிய மக்கள் கட்சியின் நிறுவனரும், மாநில தலைவருமான அருணாச்சலம் கூறியதாவது:
தேசிய மக்கள் கட்சி முத்தரையர் மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்காக துவக்கப்படுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் அனைத்து பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் எல்லா சலுகையும் கிடைக்க வேண்டும் என்பதே கட்சியின் முக்கிய நோக்கமாகும். பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழா இன்று 23ம் தேதி திருச்சியில் நடக்கிறது.இதற்காக ஸ்ரீரங்கத்திலிருந்து ஒத்தக்கடையில் உள்ள முத்தரையர் சிலை வரை ஊர்வலமாக வந்து தேசிய மக்கள் கட்சி துவக்கப்படுகிறது. முத்தரையர்களுக்கு ஜாதிவாரியாக எந்த சலுகையும் கிடைப்பதில்லை. ஆகையால், ஜாதிரீதியாக சலுகை பெறவேண்டும் என்ற நோக்கிலும் தேசிய மக்கள் கட்சி துவக்கப்படுகிறது.
பதிவு செய்த நாள் : மே 24,2010,03:58 IST
மதுரை: முத்தரையர் புனரமைப்பு கழக தென் மண்டல மாநாடு மதுரையில் நடந்தது. விருதுநகர் மாவட்ட அமைப்பாளர் அழகுமலை தலைமை வகித்தார். இட ஒதுக் கீட்டில் முத்தரையர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குதல்; தனி நலவாரியம் அமைத்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிறுவனர் தனுஷ்கோடி பங்கேற்றார்.
ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு
கீழக்கரை : ஏர்வாடியில் ஒளி வெள் ளத்தில் மிதந்து வந்த சந்தனக்கூடால் பரவசமடைந்த பக்தர்கள் ஆரவாரத்துடன் வரவேற்று தர்காவுக்குள் அழைத்து சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் ஜாதி, மொழி, மதத்திற்கு அப்பாற்பட்டு தர்காவில் சமாதி அடைந்துள்ள செய்யது இப்ராகிம்மை சரணடைந்தால் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைவார்கள் என்ற நம்பிக்கை அனைவரது மத்தியிலும் உள்ளது.
மதநல்லிணக்கத்திற்கு சான்றாக திகழ்ந்து வரும் ஏர்வாடி தர்காவில் சந்தனகூடு விழா நேற்று அதிகாலை நடந்தது. வண்ண விளக்குகளால் ஜொலித்து கொண்டிருந்த தர்காவின் சுற்றுப்புற பகுதிகளை முத்தரையர் சமூகத்தினர் கொண்டு வந்த தண்ணீரால் சுத்தம் செய்தனர். சந்தனகூடின் அடித்தளத்தை ஆசாரி சமூகத்தினர் உருவாக்கினர். அலங்கரிக்கும் பொறுப் பினை ஆதி திராவிடர்கள் ஏற்றனர். ஊர்வலத்தில் வழிகாட்டுதலுக்காக பிடிக்கப்படும் தீப்பந்தங்களுக்கான துணிகளை சலவை தொழிலாளர்கள் கொண்டு வந்தனர். அதில் ஊற்றப்பட வேண்டிய எண்ணையை ஆதி திராவிடர்கள் வழங்கினர்.
பல்வேறு சமூகத்தினரின் முதல் மரியாதையை பெற்று கொண்ட சந்தனகூடு சந்தன பேழையை சுமந்து கொண்டு ஒளி வெள்ளத்தில் மிதந்தவாறு தைக்காவில் இருந்து வெளியேறியது. சந்தனகூட்டினை பக்தர்கள் பரவசத்துடன் வரவேற்று தர்காவிற்குள் அழைத்து சென்றனர். புனித சமாதியில் சந்தனம் பூசும் நிகழ்வுக்கு பின் பக்தர்கள் பிரசாத சந்தனத்தை பெற்றனர். ராமநாதபுரம் எஸ்.பி., செந்தில்வேலன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக