வியாழன், 24 ஜூன், 2010

கல்வெட்டாய்வு - 3
மா. இலாவண்யா
இத்தொடரின் இதர அத்தியாயங்கள்
கல்வெட்டுச் செய்திகள்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நமது கல்வெட்டுப் பயணம் தொடர்கிறது.

இரண்டு மாதங்களுக்கு முன் கொடுக்கப்பட்ட இராஜராஜன் மெய்கீர்த்திக் கல்வெட்டுப் புகைப்படத்தில் இருக்கும் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் படித்ததை சரி பார்த்துக்கொள்ளவும்.


1) ஸ்வஸ்திஸ்ர்: ஏதத் விஷ்வ ந்ரூப ஷ்ரேணி மௌலி மாலோப லாலிதம் ஸாஸநம் ராஜராஜ ஸ்ர்ராஜகேஸரி வர்மணஹ: திருமகள் போலப் பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூ
2) ண்டமை மநக்கொளக் காந்தளூர்ச் சாலைக் கலமறுத்தருளி வேங்கை நாடுங் கங்கபாடியுந் தடிகைபாடியும் நுளம்பபாடியுங் குடமலை நாடுங் கொல்ல
3) முங் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமுந் திண்டிறல் வென்றித் தண்டாற் கொண்டதன்னெழில் வளரூ
4) ழியுளெல்லா யாண்டுந் தொழுதக விளங்கும் யாண்டேய் செழியரைத் தேசுகொள் கோராஜகேசரி பம்மரான ஸ்ர் ராஜராஜ தேவர்க்கு யாண்டு இ
5) ருபத்தாறாவது நாள் இருபதினால் உடையார் ஸ்ர்ராஜராஜ தேவர் தஞ்சாவூர்க் கோயிலிநுள்ளால் இருமடி சோழநின் கீழைத் திரும
6) ஞ்சந சாலை தாநஞ்செயதருளாவிருந்து பாண்டிய குலாஸநி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி
7) ஸ்ர் ராஜராஜீஸ்வரமுடையார்க்கு நாங்குடுத்தநவும் அக்கன் குடுத்தநவும் நம் பெண்டுகள் குடுத்தநவும் மற்றும் குடுத்தார் குடுத்தநவும்
8) (கல்வெட்டுப் படத்தில் இல்லாதது) கல்லிலே வெட்டி அருளுக.


மேலே உள்ள கல்வெட்டில் வர்மணஹ வரை கிரந்தச் சொற்கள்.

சரி இந்த மாதம் கல்வெட்டு தரும் செய்திகளை தெரிந்து கொள்வது எப்படி என்றும் அவை தரும் சில அரிய செய்திகளையும் பார்க்கலாம்.

கல்வெட்டுச் செய்திகளைத் தெரிந்துகொள்வது அத்தனை கடினமானதா என்ன? கல்வெட்டினைப் படித்துவிட்டால் செய்தி தெரிந்துவிடப் போகிறது என்று தானே நினைக்கிறீர்கள். ஒருசில கல்வெட்டுகளைப் பொறுத்தவரையில் நீங்கள் நினைப்பது சரி தான். கல்வெட்டினை முழுமையாய் படித்துவிட்டால் செய்திதெரிந்துவிடும். உதாரணத்திற்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள கல்வெட்டினைப் படித்துப்பாருங்கள்.

திருச்சிராப்பள்ளிக்கு அருகில் இருக்கும் திருநெடுங்களம் என்ற ஊரில் உள்ள பழமையான சோழர் கோயிலில் உள்ள 2 வரிக் கல்வெட்டு (காலம் கி.பி 1082)


1) ஸ்வஸ்திஸ்ர் குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 12ஆவது இத்திருமண்டபஞ் செய்வித்தான் பாண்டி கு
2) லாசநி வ[ள நாட்டு] கிளியூர் நாட்டுக் கள்ளிக்குடி அரைய மகந் ஆதித்தந் உலகநான விசையாலய முத்தரை[யன்].


மேலே தொடர்வதற்கு முன் ஒரு சிறு குறிப்பு. கல்வெட்டில் கற்கள் பொறிந்திருப்பதாலோ அல்லது எழுத்துக்கள் தேய்ந்து மறைந்திருப்பதாலோ படிக்க முடியாது, ஆனால் அந்த இடங்களில் என்ன எழுத்துக்கள் இருந்திருக்கும் என்று ஊகித்தறிய முடிந்தால் அந்த எழுத்துக்கள் [ ] குறியீட்டினுள் கொடுக்கப்பட்டிருக்கும். மேலேயுள்ள கல்வெட்டில் [ ] குறியீட்டினுள் கொடுக்கப்பட்டிருக்கும் சொற்கள் அப்படி ஊகித்தறிந்தவை. அதுபோல் ஊகித்தறிய முடியாமல் போனால் அங்கே எவ்வளவு எழுத்துகள் இருக்கிறதோ அவ்வளவு கோடுகள் (_ _ ) கொடுக்கப்பட்டிருக்கும். எவ்வளவு எழுத்துக்கள் அங்கே இருந்தன என்றும் தெளிவில்லாத பொழுது (........) புள்ளிகளால் அதைச் சுட்டியிருப்போம்.

கல்வெட்டு உள்ள இடம்: சோமாஸ்கந்தர் திருமுன் வாயில் உத்திரம்.

கல்வெட்டுச் செய்தி: சோமாஸ்கந்தர் திருமுன்னுக்கு முன்னாலுள்ள மண்டபத்தை முதலாம் குலோத்துங்கனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் ஆதித்தன் உலகனான விசயாலய முத்தரையன் என்பார் எடுப்பித்திருக்கிறார். இவரது தந்தையார் பெயர் அரையன். ஊர் கிளியூர் நாட்டுக் கள்ளிக்குடி. இக்கல்வெட்டு புரிந்துகொள்வதற்கு சற்று எளிதானதாகவே உள்ளதல்லவா.இன்னொரு எளிய கல்வெட்டினையும் இங்கே உங்களுக்காகத் தருகிறேன்.

கல்வெட்டுகளில் சிறுபழுவூர் என்று அழைக்கப்படும் கீழப்பழுவூரில் உள்ள ஆலந்துறையார் கோயிலில் மகா மண்டப வடக்குச்சுவரில் உள்ள கல்வெட்டு (காலம் உத்தம சோழர், கி.பி. 981).


1) ஸ்வஸ்திஸ்ர் கோப்பரகேசரிபன்மற்கு யாண்டு 12 ஆ
2) வது குன்றக் கூற்றத்து ப்ரஹ்மதேயம் சிறுபழூவூர் மஹா
3) தேவர்க்கு திருவாலந்துறை உடையார்க்கு மதுராந்தகன் கண்டரா
4) தித்தந் வை(ய்)த்த விளக்கு 1 ஒந்றும் நொந்தா விளக்கு எரிய வை(ய்)த்த
5) சாவா மூவாப் பேராடு தொண்ணூற்றிநால் நிசதி உழக்கு நெய் இது பந்மா
6) கேச்வர ரக்ஷை"


செய்தி: மதுராந்தகன் கண்டராதித்தர் இக்கோயில் இறைவர்க்கு விளக்கு ஒன்றும், நாள்தோறும் உழக்கு நெய் கொண்டு நந்தா விளக்கொன்று எரிக்கத் தொண்ணூறு ஆடுகளும் (சாவா மூவாப் பேராடு - ஆடு) கொடையாகத் தந்தார்.

இதுபோல் நொந்தாவிளக்கும் விளக்கெரிக்க ஆடுகளையோ, பொன்னையோ கோயில்களுக்குக் கொடையாகத் தருவது அக்கால வழக்கம். இப்படி விளக்கு வைத்த செய்தியைக் கூறும் கல்வெட்டுகள் பல உள்ளன.

ஆனால் எல்லா கல்வெட்டுகளும் இது போல் எளிமையானது என்று கருதிவிட முடியாது. பல கல்வெட்டுகளில் உள்ள சொற்றொடர்கள் இன்றளவும் புரியாதவையாய் ஆய்விற்குரியதாய் இருக்கின்றன.

உதாரணத்திற்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள சிறிய கல்வெட்டினைப் பாருங்கள்.

புதுக்கோட்டையில் மலையடிப்பட்டியில் ஊரின் தென்கிழக்கே பரவியுள்ள மலைக் குன்றுகளில், உயரமான குன்றொன்றின் உச்சியில், பாறையில் வெட்டப்பட்டிருக்கிறது இக்கல்வெட்டு.


1) கறையூர் ஆலங்காரி
2) க்கு பிச்சும் பிராந்
3) தும் அமனி.


எட்டாம் நூற்றாண்டு எழுத்தமைதி கொண்டு விளங்கும் இக்கல்வெட்டு டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையக் கல்வெட்டாய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. 'கறையூரைச் சேர்ந்த ஆலங்காரி என்பார்க்குப் பித்தும் அச்சமுமே வழியாக உள்ளன' என்று பொருள்படுமாறு இருந்தாலும், அதை மைய ஆய்வாளர்களால் சரியான பொருளாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆலம், காரி, பிச்சு, பிராந்து, அமனி என்ற சொற்களுக்குத் தமிழ்ப்பேரகராதியில் கொடுக்கப்பட்டுள்ள பொருள் விளக்கங்களைப் பட்டியலிட்டும், பல தமிழ் மற்றும் கல்வெட்டு அறிஞர்களிடம் கருத்துகளைக் கேட்டும் இக்கல்வெட்டின் சரியான பொருளைப் புரிந்து கொள்ள முயன்றனர். பல அறிஞர்களும் இக்கல்வெட்டிற்குப் பலவாறாகப் பொருளுரைத்துள்ளனர். ஆனால் இது தான் இக்கல்வெட்டின் பொருள் என்று உறுதியிட்டுக் கூறமுடியவில்லை.

தமிழ்பேரகராதி விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆலம் - அம்புக்கூடு, ஒரு மரம், கலப்பை, நஞ்சு நீர், பாம்பின் நஞ்சு, புன்கு, ஈயம், மலர்ந்த பூ, மழு, மழை, மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த நீர், மாவிலங்கு, கருப்பு நிறம்.

காரி - ஆவிரை, வாசுதேவன், இந்திரன், அய்யன், கரிய எருது, கடையேழு வள்ளல்களில் ஒருவன், கண்டங்கத்திரி, கரிக்குருவி, கருமை, மிளகு, கள், கிளி, காக்கை, சனி, தூணி (அளவை), தொழில் செய்யும் இடம், நஞ்சு, காரீயம், வயிரவன், ஒரு நதி, வெண்காரம், கருநிறமுடையது, அய்யனார், காரி நாயனார், காரிவள்ளல் குதிரை, ஒரு பெண்பால் பெயர் விகுதி, ஈயச்சிலை, ஒரு சிவத்தலம், பதினாறு துரோணம் கொண்ட அளவு, நீண்ட கருமேகம்.

பிச்சு - பித்து, பித்த நீர், பைத்தியம்

பிராந்து - பருந்து, பிராந்தி - உறுதியின்மை என்ற பொருள், கழிதல், சுழலல், திரிதல், நிலையின்மை, மயக்கம், கவலை, தப்பிதம், பயங்கொள்ளி.

அமனி - தெரு, வீதி, மன்றம், மார்க்கம்.

இப்பொழுது நீங்கள் கல்வெட்டினையும், அதில் வரும் சொற்களுக்கு அகராதி தரும் விளக்கங்களையும் தெரிந்துகொண்டீர்களல்லவா. உங்களுக்கு அக்கல்வெட்டு கூறும் செய்தி என்னவாக இருக்கும் என்று ஏதேனும் விளக்கம் தோன்றினால், உங்கள் கருத்துகளை எழுதி (தட்டச்சு செய்து) அனுப்புங்கள்.

கல்வெட்டின் செய்தியைப் புரிந்து கொண்டாலும், அதிலுள்ள ஊர்களின் பெயர், கல்வெட்டுகளில் காணப்படும் பெயர்கள் அவற்றின் காலம் இப்படிப் பலவற்றையும் தெரிந்து கொண்டு, ஆராய்ந்து, பல கல்வெட்டுகளை தொடர்புப் படுத்தி, நாம் வரலாற்றினைத் தெரிந்து கொள்ள முடியும்.

உதாரணத்திற்கு மேலே கொடுக்கப்பட்டிருக்கும் இராஜராஜன் கல்வெட்டு எளிமையானதே. அக்காலத்தில் விளங்கிய சொற்றொடர்களைத் தெரிந்து கொண்டுவிட்டால் படிப்பதற்கு மிகவும் சுலபமானதே. உதாரணமாக அக்கன் என்ற சொல் அக்கா (தமக்கை) என்பதைக் குறிக்கும், பெண்டுகள் (அவரின் மனைவியர்), திருமஞ்சனச் சாலை என்பது நீராடும் இடம். இராஜராஜர் நீராடுமிடத்தில் இருந்தபொழுது கூறியதைக் கல்லிலே வெட்டியிருக்கிறார்கள். அவர் கூறியதாவது, ஸ்ர் ராஜராஜீஸ்வரமுடையார்க்கு அதாவது தஞ்சை கோயிலில் இருக்கும் ஈஸ்வரனுக்கு, அவர் குடுத்ததையும், அவரின் அக்கா (குந்தவை) குடுத்ததையும், அவரின் மனைவியர் குடுத்ததையும் மற்றும் எவர் எவர் என்னென்ன குடுத்தார் என்பதையும் கல்வெட்டில் பொறிக்க வேண்டும். இதில் வரும் சொற்களுக்கான விளக்கம் மட்டுமே இது. ஆனால் இக்கல்வெட்டினைக் கொண்டு நாம் இராஜராஜரின் உயர்ந்த உள்ளத்தைத் தெரிந்து கொள்ள முடியும். அக்கன் குடுத்தனவும் நம் பெண்டுகள் குடுத்தனவும் என்று கூறும் பொழுது அக்காள் தான் முதலில் வருகிறார். அவர் தம் மனைவியரை விடவும் தன் தமக்கையாருக்கு ஒரு உயர்ந்த இடம் அளித்திருப்பது, அவரிடம் அவர் கொண்டுள்ள பாசம் இவை தெளிவாகத் தெரிகிறதல்லவா. மேலும் அவர்கள் குடுத்ததை மட்டுமல்ல, யார் என்ன குடுத்தாலும் அவை எல்லாவற்றையும் கல்லிலே வெட்ட வேண்டுமென்று கூறியிருப்பதன் மூலம் அரசனுக்கு வேண்டிய ஒரு முக்கிய குணம் அதாவது எல்லோரையும் ஒன்று போலவே நடத்துவது அவரிடமிருப்பது தெரிகிறதல்லவா. அரசர் குலத்தவர் குடுத்தால் மட்டும் கல்வெட்டில் பொறித்துவிட்டு சாதாரண மக்கள் குடுப்பதை உதாசீனம் செய்வது என்றெல்லாம் இல்லாமல், கொடுக்கும் பொருள் எவ்வளவு என்றெல்லாம் பாராமல், அவர்கள் என்ன குடுத்தார்களோ அவற்றையெல்லாம் கல்லிலே வெட்ட வேண்டும் என்று கூறியிருப்பது அவரின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. அவர் கூறியிருப்பதைப் போலவே தஞ்சாவூர்க் கோயிலில் யார் என்ன குடுத்தார்கள், அவர்கள் குடுத்த பொன், மணி, முத்து எவ்வளவு என்று எல்லாமே மிகவும் விரிவாகக் கல்வெட்டிலே கொடுத்திருக்கிறார்கள்.

பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்குப் பழுவூரை ஆண்ட பழுவேட்டரையர்களைத் தெரிந்திருக்கும். ஆனால், பழுவேட்டரையர்கள் எப்பொழுது முதன் முதலில் ஆட்சிக்கு வந்தார்கள், அவர்களின் வம்சம் எத்தகையது, எவருக்குப் பிறகு எவர் ஆட்சி செய்தனர், அவர்களின் ஆட்சிமுறை எப்படியிருந்தது போன்ற பல செய்திகள் தெரியாமலேயே இருந்தன, டாக்டர் இரா. கலைக்கோவன், "பழுவூர்ப் புதையல்கள்" என்ற நூலை எழுதாத வரையில். அதனைத் தொடர்ந்து, டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வாளர்கள் ஆய்வு செய்து பல தகவல்களைச் சேகரித்து, முக்கியமாகப் பல கல்வெட்டுகளையும் படித்து, காலத்தைக் கணித்து, பழுவேட்டரையர்களின் வரலாற்றினை முழுமையாக "பழுவூர் அரசர்கள்-கோயில்கள்-சமுதாயம்" என்ற நூலில் விளக்கியுள்ளார்கள்.

கல்வெட்டுகளின் மூலமாக அரசர்களையும் அவர்களின் ஆட்சிகாலம் பற்றியும் மட்டுமல்ல, அக்கால சமுதாயம் எப்படி இருந்தது என்பதிலிருந்து, என்னென்ன இசைக்கருவிகள் உபயோகத்திலிருந்தன, எத்தனை வகையான கூத்துகள் (நாட்டியம்) இருந்தன, பொருளாதாரம் எப்படி இருந்தது, நிலத்தினை எப்படி அளந்தார்கள், எப்படி வரி விதித்தார்கள், வரியை எவ்வாறு வசூலித்தார்கள், அக்காலத்தில் இருந்த பெயர்கள் இப்படிப் பலவற்றைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

முதல் வரலாறு இதழில் வெளியான "இராஜராஜீஸ்வரத்துப் படகர்கள்" என்ற கட்டுரையைப் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அதிலே இருந்த செய்திகளனைத்தும், தளிச்சேரிக் கல்வெட்டு என்று வழங்கப்படும் அக்கோயிலில் உல்ள கல்வெட்டுகளின் மூலமாகத் தெரிந்து கொண்டவையே.

சரி கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கல்வெட்டினைப் படித்து அது தரும் செய்தியினைப் புரிந்துகொள்ள முடிகிறதா பாருங்கள்.


1) ஸ்வஸ்திஸ்ர் ஸகலபுவந சக்கரவர்த்திகள் ஸ்ர்கு
2) லோத்துங்க சோழ தேவற்கு யாண்டு நாற்ப
3) த்திரண்டாவது ஸ்ர்சிவபாதசேகரமங்கலத்து
4) எழுந்தருளிநின்ற ஸ்ர்ராஜராஜதேவரான ஸ்ர்
5) சிவபாதசேகரதேவர் திருமாளிகை முன்பில்
6) பெரிய திருமண்டப முன்[பி]லெடுப்பு ஜீர்
7) ந்நித்தமையில் இம்மண்டபம் எடுப்பி
8) த்தார் பிடவூர் வேளா
9) ன் அரிகேசவனாந கச்சிராஜற்காக இவ்வூர்
10) நாயகம் செய்து நின்ற ஜயசிங்ககுலகா
11) ல வளநாட்டு குலமங்கல நாட்டு சா
12) த்தமங்கலத்து சாத்தமங்கலமுடை
13) யான் நம்பிடாரன் நாடறிபுகழன் இ
14) வருடன் விரதங்கொண்டு செய்தார் இ
15) வ்வூர் பிடாரகளில் ராஜேந்த்ரசோழனு
16) தைய நாயகநான ஈசானசிவரும் தேவ
17) நபயமாந அறங்காட்டி பிச்சரும்


செய்தி என்னவென்று புரியவில்லையா? சரி உங்களுக்காக ஒரு குறிப்பு தருகிறேன். இக்கல்வெட்டினைப் பற்றிய செய்தி, வரலாறு இதழ் ஒன்றினுள்ளே தான் உள்ளது. அது எங்கே என்று தேடிப்பிடித்து செய்தியினைத் தெரிந்துகொள்ளுங்கள். முடியவில்லை என்றால் அடுத்த இதழ் வரும் வரை காத்திருங்கள்.

அடுத்த இதழில் கல்வெட்டுகள் தரும் சில அரிய செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக