திங்கள், 21 ஜூன், 2010

தஞ்சை வரலாற்றில் புதிய செய்தி


First Published : 19 Jun 2010 12:00:00 AM IST
Last Updated :

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளை சென்னையில் வியாழக்கிழமை பார்வையிடுகிறார் முதல்வர் கருணாநிதி. உடன் பள்ளி கல்வி துறை அமைச்ச
சென்னை, ஜூன் 18: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் வழியாக, தஞ்சை வரலாற்றில் புதிய செய்தி கிடைக்கப் பெற்று இருப்பதாக முதல்வர் கருணாநிதி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கோவை உலகத் தமிழ்ச் செம்மாநாட்டில் கண்காட்சி அரங்கம் ஒன்று அமைக்கப்படுகிறது. கண்காட்சிக்கான பொருள்களைத் தேடிக் கொண்டிருக்கும் போது, சில நாள்களுக்கு முன்பு நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில்-மயிலாடுதுறையில் இருந்து ஆனதாண்டவபுரம் சாலையில் 2 கிலோ மீட்டர் தொலைவில் திருஇந்தளூர் எனும் ஊர் அமைந்துள்ளது. அந்த ஊரின் உட்கிராமமாக கழுக்காணி முட்டம் என்ற பகுதி உள்ளது. அங்கு சோழர் காலத்தில் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயில் உள்ளது.

இந்தக் கோயிலின் முன், மண்டபம் கட்டும் பணிக்காக குழி தோண்டப்பட்டது. அப்போது, பத்து அடி ஆழத்தில் 12 செப்புத் திருமேனிகள், பூஜைப் பொருள்கள், வாத்தியக் கருவிகள், சோழர் காலத்தைச் சேர்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செப்பேடுகள் போன்றவைகள் கிடைத்துள்ளன.

செப்பேட்டில் சின்னங்கள் பள்ளமாகப் பொறிக்கப்பட்டுள்ளன. முத்திரை 11 செ.மீ., விட்டமும், 2 செ.மீ., கனமும் கொண்டதாகும். இந்தச் செப்பேடுகள் கோக்கப்பட்ட வளையத்தில் முத்திரையிடப்பட்டு பிரிக்கப்படாத நிலையில் உள்ளது.

செப்பேட்டு முத்திரையின் விளிம்புப் பகுதியில் கிரந்த எழுத்துகளால் எழுதப்பட்டுள்ளன. இந்தத் தர்மம் ராஜேந்திர தேவன் என்கிற பரகேசரி வர்மனால் உலகத்தின் உச்சியின் மீது வைக்கப்படுகிறது என்ற பொருள்படும் படி எழுதப்பட்டுள்ளது.

இந்தச் செப்பேடு கோவிராஜகேசரிவர்மன் ஆன விஜயராஜேந்திர தேவர் தனது 35-வது ஆட்சி ஆண்டில் அளித்த அறக்கொடையைக் குறித்து வெளியிடப்பட்டது. இவர் கங்கைகொண்ட சோழன் எனவும் கடாரங்கொண்டான் எனவும் வரலாற்றில் மிகப்புகழ் பெற்ற அரசனாகக் குறிக்கப் பெறும் முதலாம் ராஜேந்திரச் சோழனின் மூத்த மகன். ராஜேந்திர சோழனின் பேரனே முதலாம் ராஜாதிராஜனாவார்.

ஒற்றுமையாக இருக்க வேண்டும்: முதலாம் ராஜாதிராஜனின் தந்தையான முதல் ராஜேந்திரச் சோழன் தன்னுடைய இறுதிக் காலத்தில் தன்னுடைய மக்கள் நால்வரையும் அருகிலே அழைத்து நால்வரும் ஒற்றுமையோடு எப்போதும் இருக்க வேண்டுமென்றும்- நாட்டு மக்களுக்கு எப்போதும் நன்மை செய்வதையே அவர்கள் குறிக்கோளாகக் கொள்ள வேண்டுமென்றும் கூறி அவர்களிடம் அதற்கான உறுதியைப் பெற்றுக் கொண்டான் எனவும்,அவர்களும் அவ்வாறே தங்கள் தந்தைக்கு உறுதி அளித்ததாகவும் இந்தச் செப்பேடுகளில் காணப்படுகிறது.

பிற்காலச் சோழர்களில் முதல் அரசனாக விஜயாலயச் சோழன் தஞ்சையை பல்லவ மன்னனான கம்ப வர்மன் என்பவனிடம் இருந்து கைப்பற்றி-பல்லவர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்ததாகவும் செப்பேடுகளில் காணப்படுகிறது. இதுகாறும் தஞ்சையை சோழர்கள் முத்தரையர்களிடம் இருந்து கைப்பற்றியதாகவே அறியப்பட்டு வந்தது. இந்தச் செய்தி புதிய செய்தியாகும்.
எண்பத்தைந்து செப்பேடுகளைக் கொண்ட இந்தச் செப்பேட்டில் முதல் எட்டு செப்பேடுகள் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட பகுதியாகும். எட்டாம் செப்பேட்டின் இறுதியில் இருந்து கோனேரின்மை கொண்டான் என்று தொடங்கும் தமிழ்ப் பகுதி 85-ம் செப்பேடு வரை நீள்கிறது. ராஜாதிராஜனால் வெளியிடப்பட்டுக் கிடைத்திருக்கும் முதல் செப்பேடு என்ற பெருமைக்குரியது இந்தச் செப்பேடு ஆகும். இந்தியாவிலேயே கிடைத்துள்ள செப்பேடுகளில் பெரிய செப்பேட்டுத் தொகுதியாகக் கருதப்பட்ட முதலாம் ராஜேந்திரனின் 57 கரந்தைச் செப்பேட்டுத் தொகுதிகளை விட அளவிலும், எண்ணிக்கையிலும் பெரிதாக விளங்குவது இந்தச் செப்பேடு ஆகும் என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








சரி விசயத்திற்கு வருவோம்..! பிற்கால சோழன் விஜயாலயச் சோழன் தஞ்சையை பல்லவர்களிடமிருந்து மீட்டதாகவும், முத்தரையர்களிடமிருந்து இல்லை என்றும் இங்கே முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார், ஆக அவர் சொல்ல வருவது என்ன? முத்தரையர்கள் ஆள வில்லை என்கிறாரா? இல்லை முத்தரையர்கள்தான் சோழர்கள் என்கிறாரா? அவரே விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும் அன்புடன்

சஞ்சய்காந்தி

http://illamsingam.blogspot.com/2010/06/volume-27-issue-13-jun.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக