பெரிய கோயில் வாராஹி அம்மன் நவராத்திரி விழா இன்று தொடக்கம்
First Published : 11 Jul 2010 01:08:50 PM IST
Last Updated :
தஞ்சாவூர், ஜூலை 10: தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள மஹா வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி 8-ம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 11) தொடங்குகிறது.
மஹாகணபதி ஹோமம், கணபதி அபிஷேகம், வராஹி ஹோமம், வராஹி அபிஷேகத்துடன் ஞாயிற்றுக்கிழமை காலை விழா தொடங்குகிறது. தொடர்ந்து இனிப்புப் படையல், மஞ்சள் அலங்காரமும், ஜூலை 12-ல் குங்குமம் அலங்காரமும், 13-ல் சந்தனம் அலங்காரமும், 14-ல் தேங்காய்ப்பூ அலங்காரமும், 15-ல் மாதுளை அலங்காரமும், 16-ல் நவதானிய அலங்காரமும், 17-ல் வெண்ணெய் அலங்காரமும், 18-ல் கனிவகை அலங்காரமும், 19-ல் காய்கறி அலங்காரமும், 20-ல் புஷ்ப அலங்காரமும் நடைபெறுகிறது.
ஜூலை 15-ல் பஞ்சமி தினத்தன்று பஞ்சமி அபிஷேகம் நடைபெறுகிறது. அன்று மதியம் 12 மணிக்கு 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும், தினமும் காலை 8 மணிக்கு வராஹி ஹோமம், அபிஷேக தீபாராதனையும், மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், மாலை 6.30 மணிக்கு சிறப்பு இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் செ. சிவாஜி, பரம்பரை அறங்காலர் சி. பாபாஜி ராஜாபோன்ஸ்லே, கண்காணிப்பாளர் டி.ஏ. யோகீஸ்வரன் மற்றும் ஆஷாட நவராத்திரி விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக