விமான நிலையத்துக்கு பெரும்பிடுகு முத்தரையர் பெயர் சூட்டக்கோரி ஆர்ப்பாட்டம்
First Published : 10 Sep 2010 10:46:44 AM IST
Last Updated :
மதுரை, செப். 9: மதுரை விமான நிலையத்துக்கு பெரும்பிடுகு முத்தரையர் பெயர் சூட்டக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வியாழக்கிழமை முத்தரையர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முத்தரையர் சங்கம், தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம், முத்தரையர் பேரவை ஆகிய அமைப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சங்க முக்கிய நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் சி.காமராஜை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
| 1 லட்சம் இழப்பீடு: இது தொடர்பாக தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநில பொதுச் செயலரும் மதுரை மாவட்ட தலைவருமான ராஜாராம் பாண்டியன் கூறியது:
மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்காக எங்கள் சமூகத்தினர் பெருமளவில் வசித்துவந்த பரம்புபட்டியில் காடு மற்றும் வயல்களை அரசு கையகப்படுத்தி அதற்கு ஈடாக சென்ட் ஒன்றுக்கு | 2931 அறிவித்தது.
அந்தத் தொகையை உயர்த்தி வழங்குமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பிறகு சென்ட்டுக்கு | 8000 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது விமான நிலைய விரிவாக்கத்துக்காக பரம்புபட்டி ஊரே காலியாகும் அளவுக்கு நிலத்தை அரசு கையகப்படுத்தி வருகிறது.
இதற்கு ஈடாக அரசு சென்ட் ஒன்றுக்கு | 1 லட்சம் வழங்க வலியுறுத்துகிறோம். மேலும் மாற்று இடம் நல்ல இடமாக ஒதுக்க வேண்டும். விமான நிலையத்துக்கு இடம் வழங்கியதற்காக விமான நிலையத்துக்கு பெரும்பிடுகு முத்தரையர் பெயர் வைக்கவும் அரசை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது என்றார்.
தமிழ்நாடு முத்தரையர் பேரவை நிறுவனத் தலைவர் வெள்ளைத்துரை, தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க தென் மண்டல அமைப்பாளர் வாசகர் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக