First Published : 24 Oct 2010 09:38:01 AM IST
Last Updated :
கோவை, அக். 23: தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயரில் தொடங்கப்பட்டுள்ள அறக்கட்டளையில் இருந்து கல்வி உதவி வழங்கும் திட்டத்தை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் காயிதே மில்லத், எம்ஜிஆர், அறிஞர் அண்ணா, சம்புவராயர், வள்ளலார், ராமசாமி படையாச்சியார், காமராஜர், டாக்டர் அம்பேத்கர், ராஜாஜி, மருதுபாண்டியர், மாவீரன் சுந்தரலிங்கம், மன்னர் திருமலை, பெரும்பிடுகு முத்தரையர், தீரன் சின்னமலை, வீரன் அழகுமுத்துகோன், ராணி மங்கம்மாள், கட்டபொம்மன், நேசமணி, மன்னர் பூலித்தேவன், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், சிதம்பரனார் ஆகியோர் பெயர்களில் இந்த அறக்கட்டளைகள் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு அறக்கட்டளைக்கும் தலா ரூ. 25 லட்சத்தை அரசு ஒதுக்கியது.
பல்வேறு தலைவர்களின் பெயர்களில் செயல்பட்டு வந்த போக்குவரத்துக் கழகங்கள், அரசுப் போக்குவரத்துக் கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டதையடுத்து அவர்களது பெயர்களை இளம் தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் பல்கலை.களில் அவர்களது பெயரில் அறக்கட்டளைகள் தொடங்கப்பட்டன.
சென்னை பல்கலை., அண்ணா, அண்ணாமலை, பெரியார், அழகப்பா ஆகியவற்றில் தலா 2 அறக்கட்டளைகளும்; மதுரை காமராஜர், பாரதிதாசன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.களில் தலா 3 அறக்கட்டளைகளும், பாரதியார் மற்றும் அன்னை தெரசா பல்கலை.களில் தலா ஒரு அறக்கட்டளையும் தொடங்கப்பட்டது.
அறக்கட்டளைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அரசு நிறுவனங்களில் வைப்பீடு செய்யப்பட்டு அதில் வரும் வட்டித் தொகையில் 80 சதவீதத்தை அதிக மதிப்பெண் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் எனவும், 20 சதவீதத்தை வைப்பீட்டுத் தொகையுடன் சேர்க்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த அறக்கட்டளைகளில் இருந்து உதவித்தொகை வழங்குவது ஒவ்வொரு பல்கலை.யிலும் வேறுபடுவதும், பல்வேறு முரண்பாடுகள் இருப்பதும் தகவல் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது.
1997-லிலேயே நிதி ஒதுக்கீடு செய்திருந்தாலும் பல அறக்கட்டளைகளில் 2000-க்குப் பிறகே கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதிலும் ஒவ்வொரு அறக்கட்டளையிலும் வெவ்வேறு விதமாக உதவித் தொகை அளிக்கப்படுகிறது. சென்னை பல்கலை.யின் சம்புவராயர் அறக்கட்டளையில் ஒரு மாணவருக்கு உதவித் தொகை ரூ. 3 ஆயிரமும், சென்னை அண்ணா பல்கலை.யின் காயிதே மில்லத் அறக்கட்டளை ஒரு மாணவருக்கு ரூ. 5 ஆயிரமும், அன்னை தெரசா பல்கலை.யின் ராணி மங்கம்மாள் அறக்கட்டளை ஒரு மாணவருக்கு ரூ. 600 மட்டுமே வழங்கப்படுகிறது.
பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலை.யுடன் இணைக்கப்பட்டதால், மதுரை காமராஜர் பல்கலை.யில் பொறியியல் மாணவர்களுக்கு நிறுவப்பட்ட மன்னர் திருமலை அறக்கட்டளையில் 2003-04-க்குப் பிறகு உதவித் தொகை வழங்கப்படவில்லை.
இந்த அறக்கட்டளை உதவியை எம்பிஏ, எம்சிஏ மாணவர்களுக்கு வழங்க 2006-லேயே கடிதம் எழுதியும் இன்னும் அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை.
இந்த தகவல்களை தகவல் உரிமைச் சட்டத்தில் பெற்ற கொங்குநாடு முன்னேற்றப் பேரவையின் மாணவரணி மாநில அமைப்பாளர் மு.லோகநாதன் கூறியது:
கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் உயரிய நோக்கத்தில் தலைவர்களின் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. ஆனால், பல பல்கலைக்கழகங்களில் இந்த அறக்கட்டளைகளின் செயல்பாடு திருப்திகரமாக இருப்பதாகத் தெரியவில்லை.
அன்னை தெரசா பல்கலை.யின் ராணி மங்கம்மாள் அறக்கட்டளையில் 1997-98 முதல் 2008-09 வரை ரூ. 29.58 லட்சம் வட்டியாகக் கிடைத்துள்ளது. இதில் ரூ. 24.70 லட்சத்தை 2 ஆயிரத்து 54 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்கியுள்ளது. இப் பல்கலை.யில் ஒரேயொரு அறக்கட்டளையை மட்டுமே அரசு துவக்கியது.
அதேநேரம், திருச்சி பாரதிதாசன் பல்கலை.யில் 3 அறக்கட்டளைகள் இருக்கின்றன. இதில் இதுவரை ரூ. 27.60 லட்சம் மட்டுமே கல்வி உதவித் தொகை தரப்பட்டுள்ளது. அதுவும் 920 மாணவர்கள்தான் பயன்பெற்றுள்ளனர்.
அதோபோல, 2 அறக்கட்டளைகளைக் கொண்ட சென்னை பல்கலை.யில் இதுவரை 646 மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித் தொகை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் தொகையில் வேறுபாடு இருப்பதைக் காரணமாகக் கூறினாலும், இதுவரை கிடைக்கப்பெற்ற வட்டித் தொகைக்கும் வழங்கிய உதவித் தொகைக்கும் பெருமளவில் வித்தியாசம் இருக்கிறது.
மேலும், வட்டித் தொகையில் 20 சதவீதம் வைப்பீட்டுத் தொகையுடன் சேர்க்கப்பட்டதற்கான தகவல்கள் இல்லை. இணைப்புக் கல்லூரி இல்லாத அண்ணாமலை பல்கலை.யில் 2 அறக்கட்டளைகள் உள்ளன. ஆனால், 103 இணைப்புக் கல்லூரிகளைக் கொண்ட பாரதியார் பல்கலை.யில் ஒரேயொரு அறக்கட்டளை மட்டுமே உள்ளது.
ஆகவே, இந்த முரண்பாடுகளைக் களைந்து அனைத்துப் பல்கலை.களிலும் ஒரே மாதிரியான உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வட்டி அதிகம் கிடைக்கும் பல்கலை.களில் அதிகம் பேருக்கு கல்வி உதவித் தொகை அளிக்க வேண்டும்.
சென்னை அண்ணா பல்கலை.யில் இருந்து பிரிக்கப்பட்டு கோவை, நெல்லை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் தொடங்கப்பட்ட அண்ணா தொழில்நுட்ப பல்கலை.களில் அறக்கட்டளைகள் கிடையாது. இப் பல்கலை.களிலும் புதிய அறக்கட்டளைகள் தொடங்கி கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்கிறார் லோகநாதன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக