வியாழன், 21 அக்டோபர், 2010

முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் கொலை சரண் அடைந்த அரிசி வியாபாரியிடம் போலீசார் துருவி துருவி விசாரணை

புதுக்கோட்டை, அக்.21-

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாட்டில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் வெங்கடாசலம் கடந்த 7-ந்தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். வீட்டில் இருந்த அவரை காரில் வந்த ஒரு கும்பல் வெட்டி சாய்த்து விட்டு தப்பி ஒடியது. ஆலங்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக துப்பு துலக்க 4 தனி போலீஸ்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் கொலையாளிகள் பயன்படுத்திய கார், ஆயுதங்கள், முகமூடிகள் கைப்பற்றப்பட்டது. மேலும் இந்த கொலை தொடர்பாக பேராவூரணியை சேர்ந்த அரிசி வியாபாரி கணேசன் என்பவர் மதுரை கோர்ட்டில் கடந்த 11-ந்«தி சரண் அடைந்தார். அவரை 25-ந்தேதி வரை கோர்ட்டு காவலில் வைக்க நீதிபதி உமாமகேஸ்வரி உத்தரவிட்டார். மேலும் 25-ந்தேதி ஆலங்குடி கோர்ட்டில் கணேசனை ஆஜர்படுத்தவும் உத்தர விட்டார்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக அடையாள அணிவகுப்பு நடத்த அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்தனர். இதற்கு நீதிபதி சாம்பசிவம் அனுமதி வழங்கினார்.

இதைத் தொடர்ந்து கடந்த 19-ந்தேதி கணேசன் அடைக்கப்பட்டுள்ள மதுரை மத்திய சிறையில் அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. இதில் வெங்கடாசலத்தின் மகள் தனலட்சுமி, மகன் ராஜபாண்டி மற்றும் ஆசிரியர் செல்வராஜ் ஆகியோர் சரியாக அடையாளம் காட்டியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் கணேசனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஆலங்குடி கோர்ட்டில் போலீசார் மனுதாக்கல் செய்தனர். கோர்ட்டு உத்தரவு வழங்கியதை தொடர்ந்து நேற்று பகல் 1.30 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கணேசன் ஆலங்குடி கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டார். கணேசன் யார் என்று அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக 6 பேருக்கு மூகமூடி அணிவித்து போலீசார் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர்.

மேலும் கோர்ட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தண்ணீரை பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைக்கும் வஜ்ரா வாகனமும் நிறுத்தப்பட்டு இருந்தது. மேலும் கணேசனை எந்த ஊர்கள் வழியாக போலீசார் அழைத்து வருவார்கள் என்பதும் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. மணப்பாறை, விராலிமலை, புதுக்கோட்டை வழியாக கணேசனை கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வடிவேல் நேற்று மாலை 5.45 மணி முதல் 24-ந்தேதி மாலை 5.45 மணிவரை மொத்தம் 4 நாள் போலீஸ் காவலில் கணேசனை விசாரிக்க அனுமதி வழங்கினார். இதைத் தொடர்ந்து கணேசனை போலீஸ் வேன் மூலம் கறம்பக்குடி ரோடு வழியாக போலீசார் அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் அந்த பகுதியில் வெங்கடாசலத்தின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஏராளமா னோர் திரண்டு நின்றனர். மேலும் அவர்கள் ஆவேசமாக கூச்சல் போட்டுக் கொண்டு இருந்ததால் மாற்று வழியில் கணேசனை போலீசார் அழைத்து சென்றனர். கணேசனை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக