பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2010,22:53 IST
திருச்சி: தமிழகத்தின் மையப்பகுதி மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கும் முத்தரையர்களுக்கு அ.தி.மு.க.,வில் முக்கிய பதவி வழங்க கட்சித்தலைமை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தின் மையப்பகுதி மாவட்டங்களான திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட சில மாவட்டங்களில் முத்தரையர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்களே மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள பல தொகுதிகளில் வெற்றி, தோல்வியை முடிவு செய்பவர்களாகவும் உள்ளனர்.
முத்தரையர்களுக்கு அரசியலில் பெரிய அளவில் அங்கீகாரம் கொடுக்க ஆரம்பித்தது அ.தி.மு.க., தான். 1982ம் ஆண்டு முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., முதன்முதலாக முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த கோவேந்தன் என்பவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து அரசியலில் முக்கியத்துவத்தை அளித்தார்.அதன்பின், முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற காலகட்டங்களில் கு.ப.கிருஷ்ணன், ஆலங்குடி வெங்கடாச்சலம், கே.கே.பாலசுப்பிரமணியன், அண்ணாவி ஆகியோருக்கு அமைச்சர் பதவி அளித்தார். மேற்கண்டவர்கள் கட்சியிலும் அமைப்புச் செயலாளர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளையும் வகித்தனர்.அதே சமுதாயத்தைச் சேர்ந்த காத்தமுத்து, முசிறி ரத்தினவேல், பரஞ்ஜோதி, பிரின்ஸ் தங்கவேல், சிவபதி ஆகியோர் எம்.எல்.ஏ.,வாகவும், அ.தி.மு.க.,வில் முக்கிய பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் மேற்கண்டவர்கள் அ.தி.மு.க.,வின் முக்கிய பிரமுகர்களாகவும் மாறிவிட்டனர்.அ.தி.மு.க.,வில் முக்கிய பதவி வகித்த முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தோர் சில ஆண்டாக ஓரம்கட்டப்பட்டனர். இதனால் முத்தரையர்களுக்கு அ.தி.மு.க.,வில் முக்கியத்துவம் குறைந்துவிட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டது. இதனால் முத்தரையர் சமுதாயம் அரசியலில் புறக்கணிக்கப்படுகிறது என்ற பேச்சும் எழுந்தது.முத்தரையர் சமுதாயத்திலிருந்து அ.தி.மு.க.,வில் மாநில பொறுப்பு வகித்த முன்னாள் அமைச்சர் ஆலங்குடி வெங்காடச்சலம் சமீபத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனால் அ.தி.மு.க.,வில் அந்த சமுதாயத்தினருக்கான அங்கீகாரத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
இதை உணர்ந்த அ.தி.மு.க., தலைமை கட்சியில் முத்தரையருக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த, பேச்சாளரான முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனுக்கு கட்சியில் மாநில பதவியும், புதுக்கோட்டை மற்றும் திருச்சியில் முத்தரையருக்கு மாவட்ட செயலாளர் பதவியும் வழங்க கட்சித்தலைமை முடிவு செய்துள்ளது என்றும், அதற்கான அறிவிப்புகள் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று கட்சியினர் கூறி வருகின்றனர்.
சட்டசபைத் தேர்தல் நேரத்தில் முத்தரையருக்கு முக்கியத்துவம் கொடுப்பதன்மூலம் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் பல தொகுதிகளை கைப்பற்றலாம் என்ற கணக்கில் அ.தி.மு.க., தலைமை இந்த முடிவை எடுத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக