சனி, 29 ஜனவரி, 2011

சட்டசபைத் தேர்தலில் ஜெ.,வை எதிர்த்து போட்டி : முத்தரையர் இளைஞர் எழுச்சி இயக்கம் அறிவிப்பு - நன்றி: தினமலர்

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2011,00:24 IST


திருச்சி: ""முத்தரையர்களை தொடர்ந்து புறக்கணித்து வரும் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டு தோற்கடிப்பேன்,'' என்று முத்தரையர் இளைஞர் எழுச்சி இயக்கத்தின் மாநில இளைஞரணி செயலாளர் புகழேந்தி கூறியுள்ளார். முத்தரையர்களை அலட்சியப்படுத்தும் அ.தி.மு.க.,வையும், அதன் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவையும் கண்டித்து, முத்தரையர் இளைஞர் எழுச்சி இயக்கத்தின் சார்பில், திருச்சி காதிகிராஃப்ட் ஜங்ஷன், ரவுண்டானா அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.



ஆர்ப்பாட்டத்துக்கு முன், முத்தரையர் இளைஞர் எழுச்சி இயக்கத்தின் மாநில இளைஞரணி செயலாளர் புகழேந்தி, நிருபர்களிடம் கூறியதாவது: மீனவர் ஜெயக்குமார் இறந்ததுக்கு ஆறுதல் சொல்ல ஹெலிகாஃப்டரில் பறந்து சென்ற ஜெயலலிதா, அவருடைய கட்சியில் முக்கிய பதவியில் இருந்து, அமைச்சராக இருந்து கொலை செய்யப்பட்ட வெங்கடாசலம் குடும்பத்துக்கு ஆறுதல் கூற வரவில்லை.



முத்தரையர்களில், 90 சதவீதம் பேர் அ.தி.மு.க.,வில் தான் உள்ளனர். ஆனால், தற்போது கட்சியில் முக்கிய பதவிகள், முத்தரையர்களுக்கு மறுக்கப்படுகிறது. அ.தி.மு.க.,வில் தொடர்ந்து முத்தரையர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். ஆகையால் ஜெயலலிதா எங்கு போட்டியிட்டாலும், அவரை தோற்கடிப்பதற்காக நான் எதிர்த்து போட்டியிட முடிவு செய்துள்ளேன். அதேபோல், முத்தரையர் சமுதாயத்தினர் அதிகம் உள்ள தொகுதிகளில், வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை நிறுத்தினால், எதிர்த்து போட்டி வேட்பாளர்களை நிறுத்துவோம். முத்தரையர்களுக்கு எதிராக செயல்படும் யாரையும் எதிர்த்து போராடுவோம். ஏற்கனவே, தி.மு.க.,வை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக