செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

கோஷ்டி மோதல் : ஒருவருக்கு கத்தி கீறல் - DINAMALAR

உசிலம்பட்டி : உசிலம்பட்டியில் முத்தரையர் சங்க கூட்டத்திற்கு வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் கீறப்பட்டார். போலீசார் பிடித்த நான்கு பேர்களை ஸ்டேஷனை முற்றுகையிட்டு மீட்டுச் சென்றனர். உசிலம்பட்டியில் நேற்று மாலை தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க பொதுக்கூட்டம் மாநில தலைவர் பரதன் தலைமையில் நடந்தது. பொதுக்கூட்டத்திற்கு மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து பலர் வந்திருந்தனர். தேனிரோட்டில் முருகன் கோயில் முன்பு கூடியிருந்த தொண்டர்கள் அந்த இடத்தில் வேனை நிறுத்த வந்த கருக்கட்டான்பட்டியைச் சேர்ந்த அசோகன் மகன் ரஞ்சித் என்பவருடன் தகராறு செய்தனர். இதில் ரஞ்சித்தின் முதுகில் கத்தியால் கீறினர். ரஞ்சித்தை கத்தியால் கீறியதைத் தொடர்ந்து அங்கிருந்த முத்தரையர் சங்க பேனர்களை கிழித்தனர். மேலும் சில வாகனங்களையும் சேதப்படுத்தினர். போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட பாணாமூப்பன்பட்டி ராமர்(19), பெரியகுளம் கல்லுப்பட்டியைச் சேர்ந்த செல்வம்(30), விருவீடு வளையபட்டியைச் சேர்ந்த குமார்(23), மற்றொரு குமார் (22) ஆகியோரை பிடித்து போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்றனர். ஸ்டேஷன் முற்றுகை: பொதுக்கூட்டம் முடியும்வரை அமைதி காத்தவர்கள் இரவு ஒன்பது மணிக்கு மேல் கூட்டம் முடிந்தவுடன் உசிலம்பட்டி டவுன் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். போலீசார் பிடித்து வந்த நான்கு பேர்களையும் விடவேண்டும் என கோஷமிட்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத போலீசார் நான்கு பேர்களையும் எச்சரிக்கை செய்து அனுப்பிவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக