தமிழகத்தில் தேர்தல் வரும் போது பல எதிர்பாராத சம்பவங்கள், திருப்பங்கள் எல்லாம் நடக்கும்.
புதிய கட்சிகள் தொடங்கப்படும். ஏற்கனவே இருக்கும் சில கட்சிகள் காணாமல் போகும். இதன்படி நேற்று சென்னையில் நடிகர் சரத்குமார் தலைமையில் " பெருந்தலைவர் மக்கள் கட்சி" என்ற பெயரில் நாடார் சமுதாயத்திற்காக புதிய கட்சி ஒன்றை அந்த சாதி சங்க தலைவர்கள் தொடங்கியுள்ளனர். அரசியல்கட்சிகள் தங்களை மதிக்காத காரணத்தால் புதிதாக கட்சி அமைப்பை உருவாக்குவது தான் சரியான வழி என்ற அடிப்படையில் இப்படி கட்சி தொடங்கப்பட்டதாக சொன்னார்கள்.
இதே வழியில் தமிழ்நாட்டின் மற்றொரு சாதியான முத்தரையர் சாதியினர் புதிதாக "சிங்கத்தமிழர் முன்னேற்ற கழகம்" என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினர். இந்த கட்சி ஏன் தொடங்கப்பட்டது என்பது பற்றி இந்த கட்சியின் தலைவர் விஸ்வநாதன் என்பவர் ஊடகவியலாளர்களிடம் சொல்லும் போது " கட்சியாக மாறும் போது அரசியல் கட்சிகள் எங்களை போன்றவர்களுடன் பேச்சு நடத்த வருகின்றனர். இனி எல்லா பெரிய அரசியல் கட்சிகளும் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வருவார்கள். எங்களது வலிமையை இந்த தேர்தலில் காட்ட இருக்கிறோம். நாங்கள் தமிழ்நாட்டின் 50 தொகுதிகளில் (இடங்களில்) இந்த தேர்தலில் போட்டியிடுவோம். தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் வரும் போது போட்டியிடுவோம்" என்றார்.
தமிழகத்தின் மையப்பகுதி மாவட்டங்களான திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட சில மாவட்டங்களில் முத்தரையர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்களே மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள பல தொகுதிகளில் வெற்றி, தோல்வியை முடிவு செய்பவர்களாகவும் உள்ளனர்.
முத்தரையர்களுக்கு அரசியலில் பெரிய அளவில் அங்கீகாரம் கொடுக்க ஆரம்பித்தது அ.தி.மு.க., தான். 1982ம் ஆண்டு முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., முதன்முதலாக முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த கோவேந்தன் என்பவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து அரசியலில் முக்கியத்துவத்தை அளித்தார்.அதன்பின், முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற காலகட்டங்களில் கு.ப.கிருஷ்ணன், ஆலங்குடி வெங்கடாச்சலம், கே.கே.பாலசுப்பிரமணியன், அண்ணாவி ஆகியோருக்கு அமைச்சர் பதவி அளித்தார். மேற்கண்டவர்கள் கட்சியிலும் அமைப்புச் செயலாளர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளையும் வகித்தனர்.
அதே சமுதாயத்தைச் சேர்ந்த காத்தமுத்து, முசிறி ரத்தினவேல், பரஞ்ஜோதி, பிரின்ஸ் தங்கவேல், சிவபதி ஆகியோர் எம்.எல்.ஏ.,வாகவும், அ.தி.மு.க.,வில் முக்கிய பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர். முத்தரையர் சமுதாயத்திலிருந்து அ.தி.மு.க.,வில் மாநில பொறுப்பு வகித்த முன்னாள் அமைச்சர் ஆலங்குடி வெங்காடச்சலம் சமீபத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிட தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக