பட்டுக்கோட்டை: மாஜி காங்கிரஸ் எம்.எல்.ஏ., திருஞானசம்மந்தம் சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்தார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்தவர் திருஞானசம்மந்தம் (48). இவர் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர். கடந்த 1996, 2001 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற இவர், கடந்த 2006 தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர் வீரகபிலனிடம் தோற்றுப்போனார். வாசனின் தீவிர ஆதரவாளரான இவருக்கு இந்தாண்டு எப்படியும் சீட்டு வழங்கப்படும் என காத்திருந்த நிலையில், இத்தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டாலும் இளைஞர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மனோகரனுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டது. இருந்தும், தனக்கு ஒதுக்கப்பட வேண்டும் எனக்கோரி திருஞானசம்மந்தம் டெல்லி மற்றும் சென்னையில் வாசன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.
நேற்று காலை பேராவூரணி உதவி தேர்தல் அலுவலர் தருமையனிடம் இரு மனு தாக்கல் செய்தார். அதில், ஒன்று சுயேட்சையாகவும், மற்றொன்று காங்கிரஸ் கட்சி சார்பிலும் மனுத்தாக்கல் செய்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் அவர் போட்டியிட அக்கட்சி சார்பில் கடிதம் வழங்கப்பட வேண்டும். வேட்பு மனு பரிசீலனைக்கு முன்பாகக்கூட அக்கடிதத்தை வழங்கி சரி செய்து கொள்ளலாம், என்பதால் இரு மனுவை திருஞானசம்மந்தம் தாக்கல் செய்தார். காங்கிரஸ் கட்சி தனக்கு சீட்டு ஒதுக்காவிட்டால், தான் சுயேச்சையாக போட்டியிடுவது என்ற முடிவுடன் அவர் களத்தில் இறங்கியுள்ளார்.தே.மு.தி.க.,-சுயேச்சைகள் மனு தாக்கல்
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பேராவூரணி உதவி தேர்தல் அலுவலர் தருமையனிடம் தே.மு.தி.க., வேட்பாளர் அருண்பாண்டியன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இவருக்கு விஜயா என்ற மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அருகே இலஞ்சியைச் சேர்ந்த இவர் தற்போது சினிமா தயாரிப்பு, விநியோகிஸ்தர் உட்பட பல்வேறு தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் உள்ளது.
* பேராவூரணி தொகுதியில் போட்டியிட சிங்கத்தமிழன் முத்தரையர் முன்னேற்றக்கழக உறுப்பினர் பாலசுப்பிரமணியன் (42) என்பவர் தனித்துணை கலெக்டர் (முத்திரைத்தாள்) ரவிகுமாரிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். சுயேட்சையாக இவர் போட்டியிடுகிறார்.
* தஞ்சை சட்டசபை தொகுதிக்கு ஆர்.டி.ஓ., முத்துலட்சுமியிடம் சூசைஅருள் (49) என்பவர் சுயேட்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்தார். தஞ்சை விளார் ரோடு நாவலர் நகரைச் சேர்ந்த இவர் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். இவரது சொத்து மதிப்பு 20 லட்சம் ரூபாயாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக