வியாழன், 7 ஏப்ரல், 2011

ஆறுக்கு நாலு கைப்பற்றும் வாய்ப்பில் அ.தி.மு.க.,:புதுக்கோட்டை மாவட்ட நிலவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு தேர்தலிலும், வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பது கூட்டணிக் கட்சிகளின் பலம் மட்டுமல்ல; ஜாதி ஓட்டுகளும் தான். தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, தற்போது, புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, திருமயம், விராலிமலை, அறந்தாங்கி, ஆலங்குடி என ஆறு தொகுதிகள் இம்மாவட்டத்தில் உள்ளன.
புதுக்கோட்டை: இத்தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் பெரியண்ணன் அரசு போட்டியிடுகிறார். அ.தி.மு.க., அணியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் முத்துக்குமரன் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் முத்தரையர் சமுதாயத்தினர் அதிகம். இரண்டாவதாக முக்குலத்தோர் மற்றும் ஆதிதிராவிடர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் என, பல்வேறு ஜாதி, மதத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.பிரதான கட்சி வேட்பாளர்கள் இருவரும் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அதனால், அந்தச் சமுதாய ஓட்டு பிளவுபடுகிறது. முத்தரையர் ஓட்டுகளை அதிகமாக பெறும் வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்புள்ளது.அ.தி.மு.க., நேரடியாக போட்டியிடாத நிலையில், அந்தக் கட்சியின் மொத்த ஓட்டும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறி. இதனால், புதுக்கோட்டை தொகுதியின் வெற்றி வாய்ப்பு, மதில் மேல் பூனையாக உள்ளது.
கந்தர்வகோட்டை (தனி): புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இத்தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் கவிதைப்பித்தன், அ.தி.மு.க., வேட்பாளர் சுப்பிரமணியன் இடையே தான் போட்டி நிலவுகிறது. ஏற்கனவே இருந்த குளத்தூர் (தனி) தொகுதிக்குட்பட்ட பல கிராமங்கள், கந்தர்வகோட்டை தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளன. குளத்தூர் தொகுதி அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக இருந்ததால், கந்தர்வகோட்டை தொகுதியின் தேர்தல் முடிவும், அ.தி.மு.க.,வுக்குத் தான் சாதகமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
விராலிமலை: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இத்தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் ரகுபதி மற்றும் அ.தி.மு.க., வேட்பாளர் விஜயபாஸ்கர் போட்டியிடுகின்றனர். முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர். இரண்டாவதாக, முத்தரையர் மற்றும் முஸ்லிம் சமுதாயத்தினர் உள்ளனர். கவுண்டர் மற்றும் ஆதிதிராவிடர் சமுதாயத்தினரும் அதிகம்.தி.மு.க., வேட்பாளர் ரகுபதி சிறுபான்மையினமான செட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், முக்குலத்தோர் ஓட்டு அதிகம் கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிம்களின் ஓட்டு கிடைக்கும். அ.தி.மு.க., வேட்பாளர் விஜயபாஸ்கர், முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் மட்டுமின்றி, மண்ணின் மைந்தர் என்பதால், இவருக்கு அந்தச் சமுதாயத்தினரின் ஓட்டு அதிகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. முத்தரையர் மற்றும் கவுண்டர் ஓட்டுகளும் கிடைக்குமென்பதால், அ.தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.
திருமயம்: இத்தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் வைரமுத்து மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் சுப்புராம் இடையே கடும் போட்டி நிலவுகிறது. "சிட்டிங்' எம்.எல்.ஏ., சுப்புராம், 2006 தேர்தலில், 314 ஓட்டு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார். அப்போதைய தே.மு.தி.க., வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன், 10 ஆயிரத்து 490 ஓட்டுகள் பெற்றிருந்தார். இந்தத் தேர்தலில் அ.தி.மு.க., வுடன், தே.மு.தி.க., கூட்டணி சேர்ந்துள்ளதால், அ.தி.மு.க., வேட்பாளர் வைரமுத்து வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
ஆலங்குடி: இத்தொகுதியில், தி.மு.க., அணியில் பா.ம.க., வேட்பாளர் அருள்மணி போட்டியிடுகிறார். அ.தி.மு.க., வேட்பாளராக, கு.ப.கிருஷ்ணன் போட்டியிடுகிறார். இருதரப்பிலும் போட்டி வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அது, தேர்தல் முடிவை மாற்றக் கூடும். முத்தரையர் சமுதாய மக்களின் ஓட்டு சிந்தாமல், சிதறாமல் யாருக்கு கிடைக்கிறதோ, அவர் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. எதிர்ப்பை சரிகட்டி அச்சமுதாய ஓட்டுகளைப் பெற, கு.ப.கிருஷ்ணன் முயன்று வருகிறார்.
அறந்தாங்கி: இத்தொகுதியில், தி.மு.க., கூட்டணி சார்பில், காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர், அ.தி.மு.க., வேட்பாளர் ராஜநாயகம் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 1977 முதல், 96 வரை நடந்துள்ள ஆறு தேர்தல்களில், அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்ட திருநாவுக்கரசர், தொடர்ந்து வெற்றி பெற்றார்.2006 தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் உதயம்சண்முகம் வெற்றி பெற்றார். 30 ஆண்டுக்குப் பின் தொகுதி மீட்கப்பட்டதால், தி.மு.க.,வினர் மகிழ்ச்சியில் திளைத்தனர்.தொகுதியைத் தக்கவைக்கும் விதமாக உதயம்சண்முகம் எம்.எல்.ஏ., உட்பட, கட்சி நிர்வாகிகள் பலர், வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். வாய்ப்பு காங்கிரசுக்குப் போனதால், தி.மு.க.,வினர் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. அவர்களைச் சரிக்கட்டினால் மட்டுமே திருநாவுக்கரசர் வெற்றி பெற முடியும்.
முக்கிய தொழில் :விவசாயம், கல் குவாரிகள், மீன் பிடி தொழில், முந்திரி.
நீண்ட கால கோரிக்கைகள் :கொள்ளிடம் உபரிநீர் திட்டம், காவிரி குடிநீர் திட்ட விரிவாக்கம், மீனவர்கள் உயிருக்கு பாதுகாப்பு, மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக