First Published : 30 May 2011 01:57:37 PM IST
தஞ்சாவூர், மே 29: முத்தரையர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தஞ்சாவூர் மண்டல முத்தரையர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூர் திலகர் திடலில் ஞாயிற்றுக்கிழமை தஞ்சை மண்டல முத்தரையர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1336-வது பிறந்த நாள் விழா மாநாட்டில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் புதிதாக அமைந்துள்ள தமிழக அரசுக்குப் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம். முத்தரையர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சீர்மரபினர் என 3 நிலைகளில் உள்ளதை மாற்றி 22.2.1996-ன் படி அறிவிக்கப்பட்ட 29 முத்தரையர் உட்பிரிவுகளையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
ஜாதி வாரி கணக்கெடுப்பின் போது, 29 உட்பிரிவுகளையும் முத்தரையர் என்ற ஒரே ஜாதிப் பெயரில் மத்திய, மாநில அரசுகள் கணக்கில் கொண்டு வர வேண்டும். பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு, அவர் ஆட்சி செய்த தஞ்சாவூரில் சிலையும், மணி மண்டபமும் அமைக்க வேண்டும்.
தமிழக வரலாற்றிலும், இலக்கியத்திலும் முக்கிய இடம்பெற்றுள்ள முத்தரைய மன்னர்களின் வரலாற்றை பாடப் புத்தகத்தில் சேர்க்க வேண்டும். தஞ்சாவூர் - திருக்காட்டுப்பள்ளி அருகிலுள்ள நேமம் கிராமத்தில் ஆயிரத்தளிமேடு (லிங்கமேடு) காவிரியின் போக்கு திசை மாறியதால், மண்மேடிட்டு இருக்கும் இடத்தை அகழ் வாராய்ச்சி செய்து முத்தரையர் மன்னர்களின் மேலும் பல சரித்திரச் சான்றுகளை தொல்பொருள் ஆராய்ச்சித் துறை மூலம் வெளிக்கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஜெ. ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டை மக்கள் மறுமலர்ச்சி மன்ற மாநிலத் தலைவர் என். ராஜசேகரன் தொடக்கிவைத்தார். சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஆர். விசுவநாதன் சிறப்புரையாற்றினார். இளைஞரணிச் செயலர் ஆர்.வி. பரதன் கொடியேற்றிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநிலத் தலைவர் குழ. செல்லையா, முத்தரையர் இளைஞர் எழுச்சி இயக்கப் பொதுச் செயலர் எஸ்.எம். மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் ஆர். பூபதி, கே. முருகேஷ், ஜி. நந்தகுமார், வழக்குரைஞர் சிவநேசன், கு.ப. கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, மானம்புச்சாவடியிலிருந்து தொடங்கிய பேரணியை முத்தரையர் சங்க மாநிலத் தலைவர் மு. ராஜமாணிக்கம் தொடக்கிவைத்தார். பேரணி ரயிலடி வழியாக திலகர் திடலை அடந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக