செவ்வாய், 31 மே, 2011

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த தின விழா

(25 May) திருச்சி, மே 24: திருச்சியில் மக்கள் மறுமலர்ச்சி மன்றம் சார்பில், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1336-வது பிறந்த தின விழா, முத்தரையர் இன எழுச்சி நாளாக திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மக்கள் மறுமலர்ச்சி மன்றத் தலைவர் பெ. லோகநாதன் தலைமை வகித்தார். முனைவர் சந்திரசேகரன் தலைமையில், முத்தரையர் வளர்ச்சிக்கு பெரிதும் வேண்டுவது இன உணர்வே சமுதாய உணர்வே, என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. முனைவர் கு.ப கணேசன், மருத்துவர் காசிப்பிச்சை, கு.மா. சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பேசினர். லால்குடி ஸ்ரீ ராகவேந்திர பள்ளி மாணவர்களின் தற்காப்புக் கலை விளக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தஞ்சை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் ச. பிரகாஷ், குடிமைப்பணி தேர்வு எழுதவுள்ள மாணவி யோகலட்சுமி ஆகியோருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு பாராட்டுத் தெரிவித்தும், முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த என்.ஆர். சிவபதிக்கு அமைச்சர் பதவி அளித்ததற்கு நன்றி தெரிவித்தும், விகிதாசார அடிப்படையில் முத்தரைய மக்களுக்கு அதிக எண்ணிக்கையில் வாய்ப்பளிக்க வலியுறுத்தியும், முத்தரையர் சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவுகளையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விழா ஏற்பாடுகளை மக்கள் மறுமலர்ச்சி மன்றப் பொருளாளர் சு. ரவிச்சந்திரன், இணைச் செயலர் முத்திரியன், கல்விப் புரவலர் குழு அமைப்பாளர் க. மாரிமுத்து உள்ளிட்டோர் செய்தனர். முன்னதாக, மக்கள் மறுமலர்ச்சி மன்ற துணைத் தலைவர் பெ. தனபால் வரவேற்றார். செயலர் க. செல்வராசு நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக