முசிறி: திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், தா.பேட்டை யூனியனில் உள்ள மங்கலம் கிராமத்தில் முத்தரையர் இன மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இக்கிராமத்தின் அருகிலுள்ள துலையாநத்தம் கிராமத்தில் 300 குடும்பங்களை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன் மங்கலம் கிராமத்தில் ஸ்ரீமகா மாரியம்மன் கோவில் திருவிழா துவங்கியது. நேற்று முன்தினம் இரவு நடந்த ஆடல், பாடல் நிகழ்ச்சியின் போது, தாங்கள் கூறும் பாடல் தான் வேண்டும் என்று துலையாநத்தம் கிராம வாலிபர்கள் பிரச்னை செய்துள்ளனர். இதனால், மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கும், துலையாநத்தத்தை சேர்ந்தவர்களுக்கும் வாய்தகராறு ஏற்பட்டு அடிதடியில் முடிந்துள்ளது.
நேற்று காலை மங்கலம் கிராமத்தில் இருந்து காலை பள்ளிக்கு பஸ்ஸில் சென்ற மாணவ, மாணவிகளை துலையாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர்கள் இறக்கி விட்டும், அவ்வழியே சென்ற வாலிபர் கர்ணனையும் தாக்கியுள்ளனர். இதையறிந்த மங்கலம் கிராமத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ஆண்கள் துலையாநத்தம் கிராமத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருக்கும் 50க்கும் மேற்பட்ட வீடுகளை சூறையாடி, கிராம மக்களை சரமாரியாக அடித்து நொறுக்கி, ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதில், துலையாநத்தம் கிராமத்தை சேர்ந்த ஜோதிவேல்(45), பிரகாஷ்(30) ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும் 108 ஆம்புலன்ஸ் வண்டி உதவியுடன் முசிறி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தா.பேட்டை போலீஸார் விரைந்து வந்தும், நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, ஏ.டி.எஸ்.பி., பெரோஸ்கான் தலைமையில், அதிரடிப்படை குழுவினர் குவிக்கப்பட்டு, மக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் துலையாநத்தம் கிராம பொதுமக்கள் ஏற்கவில்லை. தங்கள் கிராம மக்களை தாக்கியவர்களை கைது செய்ய கோரி முசிறி - துறையூர் மெயின்ரோட்டில் நேற்று மதியம் 1.30 மணி அளவில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
முசிறி ஆர்.டி.ஓ., ஜெயசீலா, ஏ.டி.எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா, தாசில்தார் பாலசுப்பிரமணியன், தொட்டியம் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், தா.பேட்டை தமிழ்மாறன், தா.பேட்டை யூனியன் ஆணையர் ராணி, தேவராஜ் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மோதல் தொடர்பாக மங்கலம் கிராமத்தை சேர்ந்த 40 பேரை போலீஸார் முசிறி போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பவ இடத்தை திருச்சி எஸ்.பி., லலிதா லட்சுமி நேரில் பார்வையிட்டு விசாரித்தார். இருப்பினும் இரு கிராமங்களுக்கு இடையே பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக