வெள்ளி, 28 அக்டோபர், 2011

திருச்சி மாவட்ட பஞ்., தலைவர் பதவிக்கு போட்டி முட்டிமோதும் பெண் கவுன்சிலரில் ஜெயிப்பது யார்?

திருச்சி: திருச்சி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியை பிடிக்க அ.தி.மு.க., பெண் மாவட்ட கவுன்சிலர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் அப்பதவி யார் பிடிக்கப்போகிறார்? என்பதை அறிந்து கொள்ள மாவட்ட அ.தி.மு.க.,வினர் மத்தியில் பெருத்த ஆவல் ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 24 மாவட்ட கவுன்சிலர்கள் பதவிகள் உள்ளது. தற்போது நடந்த முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 24 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 22ஐ அ.தி.மு.க.,வினர் கைப்பற்றியுள்ளனர். மீதியுள்ள இரண்டு மாவட்ட கவுன்சிலர் பதவிகளை தி.மு.க., கைப்பற்றியுள்ளது. மாவட்ட கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டவர்களிலிருந்து தான் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்வு செய்யப்படுவர். திருச்சி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி பெண்களுக்கான ஒதுக்கீட்டில் உள்ளது.ஆகையால், அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்றுள்ள 10 பெண் கவுன்சிலர்கள் மத்தியிலும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியை பிடிப்பதில் கடுமையான போட்டி நிலவுகிறது.



அ.தி.மு.க., சார்பில் மாவட்ட கவுன்சிலர்களாக ஆனந்தி, விஜயா, ராஜாத்தி, சுலோச்சனா, அமுதா, ருக்மணி, காஞ்சனா, ரீனா, மலர்விழி, மாலதி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் ராஜாத்தி மூன்றாவது முறையாக மாவட்ட கவுன்சிலராகியுள்ளார் என்பதால், சீனியரான இவருக்கே மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த ஆட்சியில் இவர் தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர் நேரு மற்றும் மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் சங்கீதாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக புகார் உள்ளதால், இவருக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி மறுக்கப்படும் என்று அ.தி.மு.க.,வினரே கூறுகின்றனர்.
மற்றவர்களில் அமுதா, காஞ்சனா, மலர்விழி ஆகியோர் இரண்டாவது முறையாக மாவட்ட கவுன்சிலர்களாகியுள்ளனர். இவர்களில் மலர்விழி மணப்பாறை அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் வெங்காடச்சலத்தின் மனைவி ஆவார். வெங்கடாச்சலமும் கடந்த ஆட்சியில் தி.மு.க., அமைச்சர் நேருவுடன் நெருக்கமாக இருந்தார் என்ற புகார் உள்ளதால், அவருடைய மனைவிக்கும் வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது.



மீதியுள்ள அமுதா, காஞ்சனா ஆகிய இருவரில் காஞ்சனாவுக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவராக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அமுதாவும் போட்டியில் உள்ளார். அதேசமயம் அ.தி.மு.க., மாவட்ட தலைமையிலிருந்து அனுப்பப்பட்டுள்ள மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்வுக்கான பட்டியலில் காஞ்சனா மற்றும் ராஜாத்தி ஆகியோரின் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இதில் காஞ்சனாவே ரேஸில் முந்துகிறார்.
அ.தி.மு.க.,வை பொறுத்தவரை புதிய முகங்களான முன்னாள் எம்.எல்.ஏ., சின்னச்சாமி மனைவி மாலதி, ரீனா, ருக்மணி, சுலோச்சனா, விஜயா, ஆனந்தி ஆகியோரில் யாருக்கு வேண்டுமானாலும் திடீரென "யோகம்' அடிக்கவும் வாய்ப்புள்ளது. மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவியை பொறுத்தவரை முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த ராஜ்மோகன், ரெட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. நான்காவது முறையாக மாவட்ட கவுன்சிலராக ஆகியிருக்கும், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் நெடுமாறன், துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை என்பதால், மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக