வெள்ளி, 28 அக்டோபர், 2011

ஜெ.,யின் தொகுதி பொறுப்பாளர் யார்?அ.தி.மு.க.,வில் "எகிறும்' எதிர்பார்ப்பு -தினமலர்

.
திருச்சி:தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஸ்ரீரங்கம் தொகுதியின் பொறுப்பாளராக இருந்த பரஞ்ஜோதி, திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.,வாகி விட்டதால், அத்தொகுதியின் புதிய பொறுப்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு, அ.தி.மு.க.,வினரிடையே ஏற்பட்டுள்ளது.கடந்த பொதுத்தேர்தலில், ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, தமிழக முதல்வராக இருப்பதால், தன் தொகுதியான ஸ்ரீரங்கம் தொகுதிக்கு, முன்னாள் எம்.எல்.ஏ.,வான பரஞ்ஜோதியை பொறுப்பாளராக நியமித்தார். எம்.எல்.ஏ., அலுவலகத்தை திறந்துவைத்து மக்களிடம் மனுக்களை பெற்றார்.





ஜெயலலிதாவின் அலுவலகம் என்பதால், கிட்டதட்ட, முதல்வரின் தனிப்பிரிவு போலவே ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ., அலுவலகம் செயல்படுகிறது. இங்கு பெறப்படும் மனுக்கள், ஆன்-லைனில் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.இந்த அலுவலகத்தில் பெறப்படும் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தப்படுகிறது.தொகுதி மக்கள் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் உள்ள மக்கள் இங்கு மனு கொடுக்க குவிகின்றனர். சென்னைக்கு சென்று முதல்வரிடம் நேரிலோ அல்லது முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு கொடுக்க விரும்புபவர்கள், இங்கேயே தங்களது காரியத்தை முடித்து கொண்டு உரிய நிவாரணத்தை அடைகின்றனர்.





இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக, ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளர் பரஞ்ஜோதி அறிவிக்கப்பட்டார்.
தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வாகவும் பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில், அவர் வகித்து வந்த தொகுதி பொறுப்பாளர் பதவி மீது கண் வைத்து, கட்சியினர் சிலர் காய் நகர்த்தி வருகின்றனர்.முதல்வரிடம் நேரடியாக மட்டுமல்லாமல், அடிக்கடி பேசும் வாய்ப்பு கிட்டுவதோடு, "முதல்வரின் பி.ஏ.,' என்ற அந்தஸ்தும் கட்சியினரிடையே கிட்டும் என்று நினைப்பதால், போட்டி மிக பலமாகவே இருக்கிறது."ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளர் பதவியை கைப்பற்றி, ஜெயலலிதாவின் வலதுகரம் போல விளங்கப்போகிறவர் யார்?' என்ற எதிர்பார்ப்பு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க.,வினரிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.





யாருக்கு அந்த வாய்ப்பு?முதல்வர் ஜெயலலிதாவை பொறுத்தவரை ஆன்மிக, ஜோதிட விஷயங்களில் மிகுந்த ஈடுபாடும், நம்பிக்கையும் கொண்டவர்.
"ஸ்ரீரங்கம் தொகுதியில் தான் போட்டியிட வேண்டும்; அவரது பூத் ஏஜன்ட்டாக உடையார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே இருக்க வேண்டும்' என்ற ஜோதிட வழிகாட்டுதல்படி செயல்பட்டு வெற்றி பெற்றார்.ஜோதிடப்படி, ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளராக, அதே தொகுதியில் முத்தரையர் இனத்தைச் சேர்ந்த பரஞ்ஜோதி நியமிக்கப்பட்டதை போல, மீண்டும் அதே தொகுதியைச் சேர்ந்த முத்தரையர் இனத்தவரே பொறுப்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு அதிகம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக