வெள்ளி, 16 டிசம்பர், 2011

மார்கழித் திங்கள் அல்லவா?

நம்நாட்டுக்கணிதமேதைகள் ஒன்பது என்னும் எண்ணுக்கு ‘மூலாங்கம்’என்று பெயரிட்டு வழங்குவார்கள்.மூலம் என்றால் வேர் அங்கம் என்பது எண்ணிக்கையின் பெயர். எண்ணிக்கைகளுள் வேர்போன்றது என்பது இந்த சொல்லின் பெயர். மற்ற எண்களுக்கு இல்லாத மகிமை இந்த எண்ணுக்கு உண்டு. இந்த எண்ணின் பெருக்கலினால் கிடைக்கும் எண்களை மேலும் கீழுமாய் வைத்துக்கூட்டினால் ஒன்பது என்னும் மூலாதார எண் வந்துவிடும்.அதனால் நவம் எனும் ஒன்பதிற்கு சிறப்பு அதிகம் என்று தெரிகிறது.


தமிழ்மாதங்கள் பன்னிரண்டில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது மார்கழிமாதம். எண்களில் ஒன்பதிற்கு எப்போதுமே பெரும் சிறப்பு உண்டு. நவராத்திரி நவரத்தினம் நவக்ரஹங்கள் இப்படி பலப்பல. மும்மதங்களுக்கும சிறப்பு இறைவழிபாட்டு மாதமாகும்.



மாதங்களில் நான் மார்கழி என்றார் க்ருஷ்ணபகவான்.கண்ணன் மேல் கொண்ட பக்தியில் அவருக்கு தாசனான கண்ணதாசனும் மாதங்களில் அவள் மார்கழி என்று பெண்ணை சிறப்பித்தார்.




திருவரங்கத் திருநகரத்திற்கும் அருகே உள்ள ஆனைக்கா நகருக்கும் மார்கழியில் மக்கள் வெள்ளமெனத் திரண்டு வருவார்கள். இவ்விடங்களில்
திருப்பாவையும் திருவெம்பாவையும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
ஊரே விழாக்கோலம் கொண்டுவிடும்.

மார்கழிமாதத்தில் மட்டும் திருவரங்கம் கோயிலில் விஸ்வரூப தரிசனம் கிடையாது.

மார்கழியில் மட்டும் அனந்தசயனத்திலிருக்கும் பெருமாளுக்குத் துயில் எழுப்ப வேண்டி அதிகாலை முன்றரை மணிக்கே திருப்பள்ளியெழுச்சிப்பாடல்களாக ஆண்டாள் பாசுரங்களைப்பாடுவார்கள்.

மார்கழி உற்சவக்காலத்தில்அரையர் சேவையில் நாலாயிரதிவ்யப்ரபந்தப்பாடல்கள் அபிநநயத்துடன் அரங்கேற அதை அரங்கன் செவிமடுத்துக்கேட்பது கண்கொள்ளாகாட்சியாகும். தமிழுக்குப் பெருமையும் ஆகும்.

உற்சவதினத்தின் எட்டாம் நாள் அரங்கர் குதிரைவாகனத்தில் கோயிலின் கிழக்குப்பகுதியில் இருக்கும் மணல் வெளிக்கு வருகை தருவார். அங்கு நடைபெறும் நிகழ்வுக்கு வேடுபரி என்று பெயர். அப்போது முத்தரையர் இன மக்களுக்கு கோயிலில் மரியாதை செய்யப்படுகிறது. வருடத்தின் ஒவ்வொரு உற்சவ காலங்களிலும் இதுபோல ஒவ்வொரு சாதியினருக்கும் ஸ்ரீரங்கம் கோயிலில் மரியாதை செய்யப்படுகிறது.


மார்கழிமாதத்தில்மட்டுமே கோயிலில் சம்பாரதோசையும், செல்வரப்பமும் கூடுதல் பிரசாதங்களாய் கிடைக்கும்.

இதைப்பெற்றுக்கொள்ள பக்தர்கள் ஆவலுடன் காத்துநிற்பார்கள். இவைகளின் மணமும் சுவையும் அலாதியானது.


மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாளாம் இன்று இப்படி முதல்வரியோடு திருப்பாவை பாடிய ஆண்டாளின் இன்னொரு பாடலைப்பார்க்கலாமா?





’கற்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ,


திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ


மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமே


விருப்புற்று கேட்கின்றேன் சொல்லாழி வெண் சங்கே!’


கற்பூரம் என்றால் மகா விஷ்ணுவுக்கு உகந்த பச்சை கற்பூரம்.

கமலப்பூஎன்றால் கமலப்பூ தான்.கமலம் என்றால் தாமரை.

பவளச் செவ்வாய் தித்திப்பாக இருக்குமோ? என்று சங்கிடம்சந்தேகம் கேட்கிறாள்.

மாதவனின் வாய்ச்சுவைச் பற்றியும், வாசனை பற்றியும் ஆசைஆசையாக கேட்கிறேன், சொல்லேன் வெண்சங்கே என்று சங்கிடம் கேட்கிறாள் ஆண்டாள்!

இதைவிட சுவையான ஒரு காதல் பாட்டை எந்தக் கவிஞர் தரமுடியும்?

ஆண்டாளின் திருவாய்மொழியில் நட்சத்திர அந்தஸ்து கொண்டபாடல் இது.

திருப்பாவை முப்பதும் பாடும் போது ஆண்டாள் சிறுமியாய் இருந்திருக்கவேண்டும் செல்வச்சிறுமீர்காள் என்பாள் தனது தோழிகளை ஆனால் கற்பூரம் நாறுமோ பாடலின்போது அவள் பருவ மங்கையாக இருந்திருக்கவேண்டும் அந்தப்பருவத்தில் மனத்தில் தோன்றுவதை அந்த காலத்தில் ஒரு பெண் இப்படி துணிவோடு கேட்கிறாள் என்றால் ஆண்டாள் எப்படிப்பட்ட புரட்சிப்பெண்ணாக இருந்திருப்பாள்?!


'ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே! ' என்று எல்லோரும் வாழ்த்தியிருந்தும் அவளுடைய நாச்சியார் திருமொழி பரவலாகக் கொண்டு செல்லப்படவில்லை.நாச்சியார் திருமொழியில் மொத்தம் நூற்று நாற்பத்து மூன்று பாடல்கள்.அதைக் குறிப்பிட்டு வாழ்த்தியபோது திருப்பாவை என்ற ஒன்றை அவள் செய்ததே மறந்துவிட்டது பரவசப்பட்ட பாவலருக்கு.அதனால் தான் 143 மட்டுமே அவள் செய்தது என்று சொல்லிவிட்டார்.



ஏழாம் திருமொழியில் 'கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பவளச்செவ்வாய் தான் தித்தித்திருக்குமோ என்கிறாள்.

அடுத்து,



'உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்

கண்படை கொள்ளில் கடல் வண்ணன் கைத்தலத்தே

பெண்படையருன் மேல் பெரும் பூசல் சாத்துகின்றார் '



என்று காதலன் கையிலிருக்கும் பொருளிடம் அவன் அணுக்கத்துக்குப் பொறாமை தெரிவித்துப் பாடுவதில் 'வாயமுதம் ' என்கிற பதத்தில் ஒலிக்கிற வேட்கையை
கொள்கிறாள் ஆண்டாள்

மானிடவர் கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே! என்று துணிந்து பாடிய ஆண்டாள் அந்த நாளிலேயே தோன்றிய ஒரு பெண் நவீனகவிஞர்!

காதல் என்று வந்து விட்டால் கடவுளாவது, புனிதமாவது! காதல் தானே பெரிய புனிதம்!


கதைகள் எப்போதும் சுவாரசியமானவைதான்.

ஆனால் ஆண்டாள் விஷயத்தில் கதையைவிட அவளது பாடல்கள் ரொம்ப சுவாரசியமானது,சுவையானது!


ஒவ்வொரு இலக்கியத்தின் பின்னும் அதை எழுதியவன் மறைந்து நிற்கிறான் என்கிறார் ஹட்ஸன்.( ...behind the every book that is writer lies the Personality of man who wrote it.... =Hudson .."An introduction to the study of literature" அவ்வாறே ஆண்டாளின் ஒவ்வொரு பாடலுக்குப்பின்னும் அவளது மனநிலை மறைந்திருக்கும்.!

அந்தக் காலத்துக்குச் சற்றும் ஒத்துவராத அதி நவீன சங்கதிகளை மட்டும் தான் அவள் தன் பாடல்களுக்குக் கருப்பொருளாகத் தேர்ந்தெடுத்திருக்கிறாள்.

அதற்கு சாட்சி இந்தப்பாடல்.

ஆண்டாளுக்கு, அவளது காதலனான மாலவன் உதட்டில் முத்தமிட வேண்டும் என்று ஒரு ஆசை வந்துவிட்டது. அதுவும் உதட்டில்.


'செய்ய வாய் ஐயோ என்னைசிந்தை கவர்ந்ததுவே' என்று அமலனாதிபிரானே அலறி இருக்கும்போது ஆண்டாள் எம்மாத்திரம்?

யாரிடம் கேட்கலாம்? சட்டென்று அவளுக்கொரு யோசனை உண்டானது. அட,என் காதலன் ஒரு சங்கு வைத்திருக்கிறானே!


அதை வைத்து தானே எப்போதும் வாயில் வைத்து ஊதுகிறான்!அந்தச் சங்கிடம் கேட்டால் அவனது உதட்டின் சுவை தெரிந்திருக்குமே!(புல்லாங்குழலும் தான் அவன் திருவாயில் படுகிறது கையிலேயே இருக்கிறது ஆனால் கோதை அதனை ஏன் கேட்கவில்லை? அதைப்பிறகு பார்க்கலாம்!

{சரி பெரியபிராட்டியிடம் கேட்கலாமா என நினைக்கிறாள். திருப்பாவையிலேயே "மைத்தடங்கண்ணினாய் நீ உன் மணாளனை எத்தனைபோதும் துயிலெழ ஒட்டாய் காண்" என்று விரட்டியவள் ஆண்டாள்.இப்போதும் அவளிடம்போய்"என் பிரியக்காதலனின்உன் அருமைக்கணவனின் சிவந்த அதரசுவை எப்ப்டியம்மா இருக்கும்?" எனக்கேட்டால் சக்களத்தி சண்டைக்கு வரமாட்டாள் என்பது என்ன நிச்சயம்?}



அதனால் சங்கிடம் கேட்டுவிடுவதே நல்லது எதுக்கு வம்பு என நினைக்கிறாள்.

புல்லாங்குழலை ஏன் கேட்கவில்லை தெரியுமா



பணர் மருதம்சாய்த்து ஈர்த்தான் கரத்தில் இருந்ததாம் சங்கு.




அதனால் புல்லாங்குழல் பிறகுதான்.புல் லாங் கா இருந்தாலும் சிக்கென்ற சங்கு மூர்த்தி சிறிது ஆனால் கீர்த்தி பெரிது!

சக்கரமானது பகைவரை அழிப்பதற்காக அவ்வப்போது பகவானின் கையை விட்டு நீங்கி, தன் செயலை முடித்து, மீண்டு வந்து பகவானின் கையைச் சேரும். இப்படி, கண நாழிகை நேரமேனும் பகவானை விட்டு நீங்கியிருக்கும்படி நேர்கிறது சக்கரத்துக்கு. ஆனால், சங்கின் நிலை அப்படி அல்ல. அது, பகவானின் கையை விட்டு எப்போதும் நீங்காதது. எந்த நேரமும் பகவானின் கையிலேயே இருக்கும். 'அகலகில்லேன் நிறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பன்' என்று நம்மாழ்வார் பாடியபடி, பரந்தாமன் மார்பிலிருந்து அகலாமல் எப்படி மகாலட்சுமி உறைகிறாளோ அப்படி, ஒரு நொடிப்பொழுதும் பகவானின் கரத்தை விட்டு நீங்காத வரம் பெற்றது வெண்சங்கம்.




அந்தப் பாஞ்சஜன்யப் பெருஞ் சங்கம், இன்னொரு பேறும் பெற்றது. எதிரிகளைக் கலங்கடிக்க, இந்த சங்கத்தினை தன் வாயில் வைத்து ஊதி, பேரொலி எழச் செய்வான் கண்ணன். இப்படி, கண்ணனின் திருப் பவளச் செவ்வாயில் படும் பேற்றினைப் பெற்றது, வெண்சங்கம்.






உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாயமுதம் கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே என,

ஊனும் உறக்கமும் இந்த சங்குக்காரருக்கு அவன் இதழ் மீதே இருப்பதால் சங்கே ...ஐயா சங்கையாவே... பெரியவர்!

ஆண்டாள் புத்திசாலிப்பெண் அல்லவா அதனால்தான், பெரிதினும் பெரிது கேட்டிருக்கிறாள்!

(மார்கழியில் மேலும் ஆண்டாளை வாரணம் ஆயிரம் சூழ கொண்டுவருவோம்!)

thanks: http://shylajan.blogspot.com/2011/12/blog-post_16.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக